தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளிடம் உறுதிமொழி பத்திரம் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் புதிய திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 26, 2023

தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளிடம் உறுதிமொழி பத்திரம் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் புதிய திட்டம்

சென்னை, ஜூலை 26 - சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் கடுமையாக அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மது போதையில் வாகன ஓட்டுபவர்களிடம் ரூ.10 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்படுகிறது.

தற்போது அபராதத் தொகையை வசூலிப்பதில் காட்டும் வேகத்தைவிட, விழிப்புணர்வு பிரசாரத்தின் வேகத்தை அதிகரிக்கும்படி காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படை யில் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று (25.7.2023) முதல் தீவிரமாக தொடங்கப்பட்டது.

வருகிற 31ஆம் தேதி வரையில் மெரினா உழைப்பாளர் சிலை சந்திப்பு, மயிலாப்பூர் லஸ் சந்திப்பு, நந்தனம் சிக்னல் சந்திப்பு, சென்டிரல் லைட் பாயிண்ட் சந்திப்பு, அண்ணா நகர் ரவுண்டானா சந்திப்பு ஆகிய இடங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற இருக்கிறது.

சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி நன்கு பயிற்சி பெற்ற 120 பள்ளி மாணவ-மாணவிகள் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். இந்த புதிய விழிப்புணர்வு பிரச்சாரத் தின் தொடக்க விழா, சென்னை வேப்பேரி ஈ.வெ.ரா. சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை சந்திப்பில் நேற்று காலை (25.7.2023) நடைபெற்றது. இதில், சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்துகொண்டு இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

இந்த விழா நடைபெற்ற போது, அந்த வழியாக 'தலைக்கவசம்' அணியாமல் வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச 'தலைக்கவசம்' வழங்கப்பட்டது. 'இனிமேல் தலைக்கவசம் அணிவேன்' என்ற உறுதிமொழி பத்திரம் அவர்களிடம் எழுதி வாங்கப்பட்டது. பின்னால் அமர்ந்து 'தலைக்கவசம்' அணியாமல் வந்த பெண்கள் உள்ளிட்டோருக்கும் இலவச 'தலைக்கவசம்' கிடைத்தது. அப்போது வானக ஓட்டிகளிடம் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளுக்கு காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் நற்சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கபில்குமார் சி ஷரத்கர், இணை ஆனையர் மயில் வாகனன், உதவி ஆணையர் கிறிஸ்டோபர், ஆய்வாளர் பாண்டிவேலு, டேனியல் ராஜ் உள்ளிட்டோரும், போக்குவரத்து காவல் மேற்பார்வை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment