ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 8, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: குற்றங்களைத் தடுக்கத்தான் 'என் கவுன்ட்டர்' என்று சாமியார் முதலமைச்சர் கூறுகிறாரே? சட்டப்படி இது சரியா?

- ப.தருமன், கிருஷ்ணகிரி

பதில் 1: சட்டப்படியும், நியாயப்படியும், மனித உரிமை அடிப்படைப் படியும் தவறு, தவறு! இவர்மீது இதற்காகவே சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்; எடுக்க வேண்டும்.

கேள்வி 2: வட இந்தியாவில் பா.ஜ.க. தலைவர்கள் தி.மு.க.விற்கு வாக்களிக்காதீர்கள் என்கிறார்களே? அவர்கள் இங்கு வந்து வாக்களிக்கப் போகிறார்களா?

- ம.அருள்செல்வன், திருத்தணி

பதில் 2: தி.மு.க. குறித்து எவ்வளவு தூரம் பா.ஜ.க. அரண்டு போயுள்ளது என்பதற்கு இதைவிட நல்ல சான்று வேண்டுமா?

கேள்வி 3: ஜூலை பிறந்தாலே மேகதாது பிரச்சினை வந்துவிடுகிறதே?

- அ.சோமசுந்தரம், மதுரை

பதில் 3: அரசியல் செய்வதற்கு அதுவும் ஒரு சீசன் போலும்! "காவிரி போச்சு - மேகதாது வந்தது டும்; டும்!"

கேள்வி 4: "மாட்டிறைச்சி சாப்பிடுவது உணவுச் சங்கிலியில் ஓர் அங்கம். அதை ஏன் மதத்தோடு சேர்க்கிறார்கள்? இது மிகவும் தவறானது" என்று பா.ஜ.க. அரசிற்கு ஆலோசனை கூறுவதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நியமிக்கப்பட்ட ராம் மாதவ் கூறியுள்ளாரே?

- வே.வெங்கடாசலம், மாமல்லபுரம்

பதில் 4: அப்படியா? அவர்களின் வேளைக்கொரு வித்தையும், ஆளுக்கொரு பேச்சும், அவதாரங்களும் என்பது நாமும், நாடும் அறிந்ததுதானே!

கேள்வி 5: திடீரென ரஷ்யாவில் புரட்சிப்படை என்ற பெயரில் தாக்குதல் நடத்திய வாக்னார்(கூலி ராணுவம்) போல் தற்போது 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் இருந்து பிறகு வெளியேற்றப்படும் அக்னிபாத் வீரர்கள் மாறமாட்டார்கள் என்று ஒன்றிய அரசு உத்தரவாதம் கொடுக்குமா?

- அ.கிருஷ்ணன், மதுராந்தகம்

பதில் 5: மில்லியன் டாலர் கேள்வி! இது, அருமை!

கேள்வி 6: பொது சிவில் சட்டம் என்றால் என்ன என்றே தெரியாமல் பொதுமக்கள் கருத்து தெரிவியுங்கள் என்கிறாரே மோடி?

- சி.பச்சையப்பன், காஞ்சி

பதில் 6: வித்தைகளில் அதுதான் தலைசிறந்த வித்தை!

கேள்வி 7: உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் பேசும் பொருளாகி உள்ளதே? 

- கா.சுப்பிரமணியன், விருதாச்சலம்

பதில் 7: அப்படியா, மகிழ்ச்சிதான்! நான் சினிமா பார்ப்பது மிக அபூர்வம், அரிது. என்றாலும் கொள்கை உள்ளத்தோடு வரும் படங்கள் வெற்றி பெற்று சமூக மாற்றத்திற்கான கருவிகளாக மிளிர்ந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன் - அடைவோம்!

கேள்வி 8: மணிப்பூரில் இருந்து இடம் பெயர்ந்த மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்க மறுத்து விட்டதே ஒன்றிய அரசு?

- மே.தாமரைசெல்வி, கரூர்

பதில் 8: ஆம்; உள்நாட்டிலேயே அகதிகள் - என்னே விசித்திர சாதனை!

கேள்வி 9: போலிச்செய்திகளை பரப்புவதை கண் காணிக்கத் தனிப்படை அமைத்த கருநாடகம் போல் தமிழ்நாட்டில் செய்தால் சங்கிகளின் தொல்லை நீங்குமே - செய்யுமா தமிழ்நாடு காவல்துறை?

- மா.அரசு, நெல்லை

பதில் 9: நிச்சயம் செய்வார்கள் என்று நம்புகிறோம்.

கேள்வி 10: "புலிவாலைப் பிடித்த நாயர்" கதையாகி விட்டதே அமலாக்கத் துறைக்கு?

- ச.சந்திரன், வேலூர்

பதில் 10: உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் - அமலாக்கத்துறை விரும்பிய, வேண்டுகோளை ஏற்க மறுத்து வருகின்றனவே! என்ன செய்வது!


No comments:

Post a Comment