புரட்சிக் கவிஞர் பிறந்த புதுச்சேரி மண்ணில் புத்தொளி வீசியது பகுத்தறிவுப் பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 26, 2023

புரட்சிக் கவிஞர் பிறந்த புதுச்சேரி மண்ணில் புத்தொளி வீசியது பகுத்தறிவுப் பயிற்சிப் பட்டறை


புதுச்சேரி, ஜூலை 26 - புதுச்சேரியில் பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய பகுத்தறிவுப் பயிற்சிப் பட்டறை  23.7.2023 ஞாயிறு அன்று புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் மிகச் சிறப்பாக தொடங்கியது. காலை 9 மணிக்கே பயிற்சியாளர்கள் வரத் தொடங்கினர். காலையிலே முப்பதற்கும் மேற்பட்ட பதிவுகளை தாண்டி பயிற்சியாளர்கள் தங்களைப் பதிவு செய்து கொண்டனர்.

பகுத்தறிவுப் பயிற்சியின் தொடக்க விழா சரியாக 9.30 மணிக்கு மொழி வாழ்த்துடன் தொடங்கியது. புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் நெ.நடராசன் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று பயிற்சிப் பட்டறையின் நோக்கம் பற்றி விரிவாக விளக்கினார். தமிழ்நாடு மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவர் ஆடிட்டர்.கு.இரஞ்சித்குமார் அனைவரையும் வரவேற்றார்.

புதுச்சேரி திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வே. அன்பரசன் முன்னிலை வகித்து உரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகத் தின் தலைவர். சிவ. வீரமணி, பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் வி. மோகன் ஆகியோர் தொடக்கவுரை நிகழ்த்தினர்.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் இளவரசி சங்கர் நிகழ்ச்சிகளை நெறியாளுகை செய்தார்.

படத்திறப்பு

முதல் நிகழ்ச்சியாக படத்திறப்பு. திராவிடர் கழக செயலவைத் தலைவர். சு.அறிவுக்கரசு மறைந்த சுய மரியாதைச் சுடரொளி மு.ந. நடராசன் படத்தைத் திறந்துவைத்து மாலையணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். அவரின் சிறப்பானச் செயல்பாடு களையும், விருந்தோம்பல் உள்ளிட்ட நற்பண்புகளை யும் நினைவு கூர்ந்தார். அவரின் பிள்ளைகள் அனை வரையும் பெரியார் வழியில் பகுத்தறிவுப் பாதையில் பயணிக்க வைத்தமைக்கு பெரிதும் பாராட்டிப் பேசினார். 

தொடர்ந்து, பண்பாட்டுப் படையெடுப்பு என்ற தலைப்பில் அய்ம்பது மணித்துளிகள் அற்புதமான உரையை தெளிவாக வழங்கினார். பயிற்சியாளர்களின் கேள்விகளுக்கு சிறப்பான முறையில் விளக்கம் அளித்தும் அவர்களைப் பெரிதும் உற்சாகப்படுத்தும் வகையில் பரிசுகளையும் வழங்கிப் பாராட்டினார். 

வகுப்பு நிறைவுற்றதும் இடைவேளை அனை வருக்கும் சிற்றுண்டி உடன் தேநீர் வழங்கப்பட்டது.

"நாத்திகமும் மருத்துவமும்"

இரண்டாவது பயிற்சி வகுப்பில் "நாத்திகமும் மருத்துவமும்" என்ற தலைப்பில் மருத்துவர் இரா. கவுதமன் உரை நிகழ்த்தினார். மிகவும் எளிமையான நகைச்சுவை உணர்வோடுதொடங்கிய அவரின் கலந் துரையாடல் பயிற்சியாளர்களைச் சிறப்பாக மாணவர் களைப் பெரிதும் உற்சாகப் படுத்தும் வகையில் அமைந்தது.

மூன்றாவது பயிற்சி வகுப்பில் அறிவியல் ஆர்வலர். மருத்துவர். கணேஷ் வேலுச்சாமி "அறிவியல் மனப் பான்மையை வளர்ப்போம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதுவரை பலர் அறிந்திருக்காத அறிவியல் தொடர்பான பல்வேறு செய்திகளையும், மருத்துவத்தையும் இணைத்து பேசிய அவரின் உரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நண்பகல் உணவு இடைவேளை நெருங்கும் நேரத்தில் பயிலிகளை உற்சாகப்படுத்தும் விதமாக நிகழ்ச்சியை கொண்டு சென்றது பாராட்டும் வகையில் அமைந்தது. தொடர்ந்து பல்வேறு பயிற்சியாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கமளித்து தன்னுரையை நிறைவு செய்தார்.

காலையில் தொடங்கிய நிகழ்ச்சிகள் மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற எழுபத்தெட்டு(78) பயிற்சி யாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பார்வை யாளர்களுக்கும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கறிகாய் மற்றும் புலால் உணவு வழங்கப்பட்டது.

"பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்!"

நண்பகல் உணவுக்கு பிறகு நான்காவது பயிற்சி வகுப்பு தொடங்கியது. திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ. மதிவதனி "பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

குறும்படத்தை திரையில் காட்டி விளக்கமளித்து பேசியது பெண் பயிற்சியாளர்களை மேலும் உற்சாகப் படுத்தியது. பயிற்சியாளர்களின் கேள்விகளுக்கு தெளி வான விளக்கமளித்து அவர்களை பாராட்டிப் பரிசும் வழங்கினார்.

அய்ந்தாவது பயிற்சி வகுப்பு மருத்துவம், பில்லி சூனியம் - ஆன்மா நரகம் என்ற தலைப்பில் மருத்துவர் இரா. கவுதமன் உரை நிகழ்த்தினார். மக்களிடம் மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகள் பில்லி, பேய், சூனியம், பிசாசு போன்ற முட்டாள்தனமான பயத்தைப் போக்கு கின்ற வகையில் அவரது உரை அமைந்தது. பயிலிகள் எழுப்பிய வினாக்களுக்கு அறிவுப்பூர்வமாக விளக்க மளித்து தன்னுடைய உரையை நிறைவு செய்தார்.

பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள்

நிறைவுப் பயிற்சி வகுப்பில் திராவிடர் கழகத் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள் என்ற தலைப்பில் உரையாற்றி னார். தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் உலக மயமாக்கப்பட்டு வருதல் மற்றும் காலத்திற்கேற்ப  தந்தை பெரியார் அவர்களின் தொலைநோக்கு பார்வை எவ்வாறெல்லாம்இருந்து என்பதை எடுத் துரைத்து மாணவர்கள் மத்தியில் மிகச் சிறப்பாக உரை நிகழ்த்தினார். இறுதியாக மாணவர்கள் அய்யங்களுக்கு பதில் அளித்து தன்னுடைய உரையை நிறைவு செய்தார்.

பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சான்றிதழ் வழங்கும் மாலை நிகழ்ச்சியில் புதுவை மாநில மேனாள் அமைச்சர் தோழர் இரா. விசுவநாதன், புதுச்சேரி மேனாள் காவல்துறை கண்காணிப்பாளர் வீர. பாலகிருஷ்ணன் வருகை தந்து மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்கள். 

காலம் கடந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரியாரைக் கையிலெடுத்துள்ளோம் என வருத்தம் தெரி‌வித்த தோழர் இரா. விசுவநாதன், மண்ணிற்கு ஏற்ற மார்க்சியம் தேவை. அந்த வகையில் அவர் அமைச்சராக இருந்த பொழுது புதுச்சேரி மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்து இட ஒதுக்கீடு வழங்கியது பற்றியும் அதற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழங்கிய ஆலோசனைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். தந்தை பெரியாரின் கருத்துகளை திராவிடர் கழகம் இன்றைய காலகட்டத்தில் சிறப்பாக எடுத்து செல்கிறது. அதிலும் குறிப்பாக இந்த பயிற்சி வகுப்பு மிகவும் பயனுள்ள பாராட்டத்தக்க வகையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது என தனது பாராட்டை தெரிவித்தார். 

புதுச்சேரி காவல்துறையின் மேனாள் கண்காணிப் பாளர் வீர.பாலகிருஷ்ணன் பேசுகின்ற பொழுது நான் காலையிலிருந்து இந்த நிகழ்ச்சியை முழுமையாகப் பார்த்து வருகிறேன். மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது. பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை எனவே பயிற்சியில் பங்கேற்றமைக்கு நன்றி தெரி வித்துக் கொள்கிறேன். அவர் பணியில் இருந்த காலத்தில் கழகத்தின் மீது அவருக்கு இருந்த பார்வை மற்றும் அவரது குடும்பத்தில் பெரியாரின் வாழ்வியலை ஏற்றுக்கொண்டது பற்றியும் விரிவாக விளக்கினார்.

பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைத்துப் பயிற்சியாளர்களின் குறிப்பேடுகள் சேகரிக்கப்பட்டு அதில் சிறப்பாக குறிப்பெடுத்த மூன்று நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

முதல் பரிசு: பூ .மா. ப்ரீத்தி விஜயகுமார், இரண்டாம் பரிசு: விஜய விவேஷ்குமார்,  மூன்றாம் பரிசு: பி. ஜீவா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

அனைத்துப் பயிற்சியாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பயிலிகள் சார்பில் ம.கரிகாலன் மற்றும் ஜெ.வாசுகி பாலமுருகன் ஆகியோர் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனுபவம் பற்றி எடுத்துக் கூறினர். இறுதியாக அனைவரும் சேர்ந்து குழு ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகக் காப்பாளர். 

இரா. சடகோபன் செயலாளர். கி.அறிவழகன் துணைத் தலைவர். மு.குப்புசாமி பொதுக்குழு உறுப்பினர். லோ.பழனி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர்.கோ.மு தமிழ்ச்செல்வன் செயலாளர். ஆ. சிவராசன் இளை ஞரணித் தலைவர். தி.இராசா தொழிலாளரணித் தலைவர். வீர.இளங்கோவன் செயலாளர் கே.குமார், பகுத்தறிவாளர் கழகத்தின் மேனாள் அமைப்பாளர்கள் கே.வி.இராசன்,கோ.கிருஷ்ணராசு, திராவிட மாணவர் கழகத் தலைவர். ப.இராகப்பிரியா, புதுச்சேரி நகராட்சி வடக்கு தலைவர். சு. கிருஷ்ணசாமி புதுச்சேரி நகராட்சி தெற்கு தலைவர். மு.ஆறுமுகம் செயலாளர். களஞ்சியம் வெங்கடேசன் உழவர்கரை நகராட்சி கிழக்கு செயலாளர்.கா.நா. முத்துவேல், அரியாங்குப்பம் கொம் யூன் தலைவர். வ.இளங்கோவன், செயலாளர் இரா.ஆதிநாராயணன், பாகூர் கொம்யூன் தலைவர். இராம.சேகர், பாகூர் பெ.தாமோதரன், நெட்டப்பாக்கம் கொம்யூன் தலைவர். தெ. தமிழ் நிலவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் தஞ்சை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் பாவலர்.பொன்னரசு,ஜே. பெரியார் கண் ணன், கோபு. பழனிவேல், புதுச்சேரி சமூக நீதிப் பேரவை து.கீதநாதன், கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர். எல்லை சிவக்குமார், சிந்தனையாளர் பேரவையின் தலைவர் புதுவை கோ.செல்வம்,ஜெனோ மாறன் பில்டர்ஸ் நிர்வாக இயக்குநர்.ச.தங்க மணிமாறன், கலைமாமணி வி. பி.மாணிக்கம், மணி.கோவிந்தராஜ்,கோகுல் காந்திநாத், இரா.வீராசாமி, இர.சாம்பசிவம் சார்வாகன் ஜீவன் மற்றும் பல்வேறு சமூக அமைப்பு களைச் சேர்ந்த தோழர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

புரட்சிக் கவிஞர் பிறந்த புதுச்சேரி மண்ணில் புத்தொளி வீசியது பகுத்தறிவாளர் கழகத்தின் பயிற்சிப் பட்டறை. 150 நபர்கள் பங்கேற்பு, முழு நேரப் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் 78 நபர்கள். பகுத்தறிவாளர் கழகத்தில் 13 நபர்கள் தங்களை புதிய உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.

சிறந்த முறையில் குறிப்பெடுத்த மூன்று பயிற்சியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment