இடைத் தரகர்கள் அலுவலகங்களில் நுழையத் தடை : தமிழ்நாடு அரசு ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 7, 2023

இடைத் தரகர்கள் அலுவலகங்களில் நுழையத் தடை : தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை, ஜூலை 7 தாலுகா, ஆர்.டி.ஓ. மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள், தற்காலிக ஊழியர்கள் நுழைய அனுமதிக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறையின் கீழ் 581 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சமீப காலங்களாக ஆவண எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்களின் அத்துமீறல் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், அலுவலக நிமித்தமாக சார்பதிவாளரால் அழைக்கப் பட்டால் மட்டுமே அலுவலகத்திற்குள் பத்திர எழுத் தர்கள் நுழைய வேண்டும். இதை மீறி சார்பதிவாளர் அலுவலகங்களுக்குள் பத்திரம் எழுதுபவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் செயல்பாடோ, நடமாட்டமோ கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.

விதிமுறைகளை மீறுபவர்களது உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, இதை கண்காணிக்க தவறும் சார்பதிவாளர்கள் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்கள், வருவாய் கோட்ட அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு பல்வேறு சேவைகளை பெற செல்லும் மக்களிடம் அங்குள்ள இடைத்தரகர்கள் பணம் பெற்று செயல்படுவதாகவும், தற்காலிக பணியாளர்கள் என்ற பெயரில் சிலர் பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்று சட்டத்திற்கு புறம்பான வழியில் பணிகளை செய்து தருவதாகவும் அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுபோன்ற தரகர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்களால் ஏமாற்றம் அடைந்த மக்கள் பலர், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார்களை அனுப்பினர். 

அதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- தாலுகா அலுவலகங்கள், வருவாய் கோட்ட அலுவலகங்கள் (ஆர்.டி.ஓ.), மாவட்ட ஆட்சியரின் அலுவலகங்களுக்குள் இடைத்தரகர்கள், தற்காலிக ஊழியர்கள் போன்ற தனிப்பட்ட நபர்கள் யாரும் உள்ளே நுழைந்து பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என்பது பற்றி ஏற்கெனவே கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

அந்த அறிவுரைகளை மிக கண்டிப்புடன் நீங்கள் பின்பற்றுவதோடு, அதுபற்றி கீழ்நிலை பணியாளர்களுக்கு நீங்கள் தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment