உங்களுக்குப் "பேய்" காட்டப் போகிறேன்! பரபரப்பாக மாறிய பட்டுக்கோட்டை பயிற்சி முகாம்! - வி.சி.வில்வம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 30, 2023

உங்களுக்குப் "பேய்" காட்டப் போகிறேன்! பரபரப்பாக மாறிய பட்டுக்கோட்டை பயிற்சி முகாம்! - வி.சி.வில்வம்

பட்டுக்கோட்டை, ஜூலை 30 தமிழ்நாடு முழுவதும் நடந்து வரும் பயிற்சிப் பட்டறையின் தொடர்ச்சியாக, நேற்று  (29.07.2023) சனிக்கிழமை, பட்டுக்கோட்டை எம்.என்.வி. திருமண மண்டபத்தில் காலை வகுப்புகள் தொடங்கின.

வகுப்புவாதமும்; வகுப்புரிமையும்!

தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான கா.அண்ணாதுரை அவர்கள் பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்துப் பேசும்போது, "நாம் பேசுவதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் இன்றைக்கும் நானம் ஆசைப்படுவோம். ஆனால் 'நான் சொல்வதை ஏற்காதீர்கள், சிந்தியுங்கள்' என்று அன்றே சொன்னவர் பெரியார்.‌ உலகிலேயே இப்படியான தலைவரை நாம் பார்க்க முடியாது!

6, 7 ஆம் வகுப்புப் படிக்கும் போதே எனக்குப் பெரியார் சிந்தனைகள் அறிமுகம் ஆகிவிட்டது. இன்றைய பயிற்சி வகுப்பில் பல்வேறு தலைப்புகளில் சிறப்பான வகுப்புகளை எடுக்க  இருக்கிறார்கள். நீங்கள் மருத்துவராக, பொறியாளராக, வழக்குரைஞராக வர வேண்டும் என்பது தான் இந்த இயக்கத் தின் கொள்கை!

வகுப்புவாதம் இருந்த நாட்டில் வகுப்புரிமையை ஏற்படுத் திய இயக்கமல்லவா நம்  இயக்கம்! இங்கே அறிவு மற்றும் அறிவியல் தொடர்பான செய்திகள் மட்டுமே  கிடைக்கும்", எனக் கூறி நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற வகுப்பில் "பேய் ஆடுதல், சாமி ஆடுதல், அறிவியல் விளக்கம்", எனும் தலைப்பில் மருத்துவர் இரா.கவுதமன் ஒரு வகுப்பினை எடுத்தார். அப்போது அவர் பேசியதாவது:

உங்களில் பேயைப் பார்த்தவர்கள் எத்தனைப் பேர்?

உங்களில் எத்தனைப் பேர் பேயைப் பார்த்துள்ளீர்கள்? யார், யார் பரிசுத்த ஆவி பார்த்துள்ளீர்கள்? குக்கரில் விசில் வரும் போது பெரும் சத்தத்துடன் ஆவி வருமே, அதுதான் பரிசுத்த ஆவி! பேய் ஆடுவதிலும், சாமி ஆடுவதிலும் நம்மவர்களை மிஞ்ச முடியாது. பார்ப்பனர் வீடுகளில் எந்த ஆணோ, பெண்ணோ பேய் ஆடி, சாமி ஆடி பார்த் துள்ளீர்களா? அதேபோல மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், சென்னை கபாலீஸ்வரர் கோயில் போன்ற பெரிய கோயில்களில் பேய் ஆடியோ, சாமி ஆடியோ பார்த்துள்ளீர்களா?

யாருக்கெல்லாம் பேய் பிடிக்கும்? சாமி வரும்?

ஒரு மருத்துவர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், பொறியாளர்கள், வழக்குரைஞர்கள் சாமி ஆடியோ, பேய் ஆடியோ பார்த்துள்ளீர்களா? குறைந்தபட்சம் பெண்களைப் பிடிக்கும் பேய், ஆண்களைப் பிடிப்பதில்லை. பேய் மற்றும் சாமி வந்து ஆடும் ஆண்களைப் பார்ப்பது அரிதிலும், அரிது. ஆக இந்தப் பேயும், சாமியும் எல்லோரிடத் திலும் வர வேண்டியது தானே? ஏன் ஆள் பார்த்து வருகிறது?

உங்கள் பின்னால் நிற்கும் பேய்!

உங்கள் வீட்டில் விளக்குகள் அணைத்து வைக்கப் பட்டுள்ளது. மாடியில் இருந்த நள்ளிரவில் தனியாக கீழே இறங்கி வருகிறீர்கள். திடீரென பின்னால் யாரோ நிற்பது போல உணர்கிறீர்கள். திரும்பிப் பார்த்தால் ஏதோ ஒரு உருவம் நிற்பது போல சந்தேகம் வருகிறது. உடனே விளக்கை எரிய வைத்தால், எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லை. சிந்தனை முழுக்கப் பேய் குறித்த எண்ணம், அதுவும் இருட்டில் தான் வரும் என்கிற நம்பிக்கை. 

திரைப்படங்களின் மூலம் நிறைய பேய்களைப் பார்த்துவிட்டீர்கள். திடீரென பலத்த காற்று வீசும், ஜன்னல் கதவுகள் திறந்து, திறந்து மூடும், திரைச் சீலைகள் மேலும் கீழும் ஆடும். அப்போதுதான் வெள்ளை சேலை அணிந்து ஒரு பெண் பேய் வீட்டிற்குள் வரும். நம் மனதில் வடிவமைத்து வைத்திருக்கிற பேயும் இப்படித்தானே இருக்கிறது.

ஆட்டுக்கறியும்; அக்காரவடிசலும்!

நமது சாமிக்கு ஆட்டுக்கறி, கோழிக்கறி, சுருட்டு, பட்டை சாராயம் வைத்துப் படையல் செய்கிறார்கள். அவாள் ஆத்து சாமிக்கு அக்காரவடிசல், லட்டு, ஜாங்கிரி, வெண் பொங்கல் வைக்கிறார்கள். பெரியார் தான் கேட்டார், "அதென்ன கடவுள்களில் சைவக் கடவுள்? அசைவக் கடவுள்? இப்படி பிரித்தது யார்? சிலர் சொல்கிறார்கள், எந்தெந்தக் கடவுளுக்கு என்னென்ன பிடிக்குமோ, அதைத்தான் படைக்க வேண்டும் என்கிறார்கள். மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் பன்றியும் ஒன்று. அப்படியென்றால் வராகக் (பன்றி) கடவுளுக்குப் பிடித்ததைப் படைப்பார்களா?

மனிதனை முடக்கும் மனநோய்!

நவீன மருத்துவத்தின் தந்தை என அழைக்கக் கூடிய "ஹிப்போகிரட்டீஸ்" எனும் கிரேக்க மருத்துவர் தான் இந்த மனநோய் குறித்து ஆராய்ச்சிகள் செய்தார். அந்த நோய்க்கு "ஹிஸ்டீரியா" எனப் பெயர். மனஅழுத்தம், உணர்ச்சிப் பெருக்கு, நரம்புத்  தளர்ச்சி போன்றவை எல்லாம் இந்த நோயில் அடங்கும். முன்னொரு காலத்தில் ஓடி, ஆடி திரிந்த ஒரு சிறுமியை, சைக்கிள் ஓட்டி, கடைகளுக்குப் போய் வந்து, வீதியில் விளையாண்டு மகிழ்ந்த சிறுமியைத் திடீரென ஒரு அறைக்குள் அடைத்து விடுவார்கள். தனி தட்டு, தனிக் குவளை அங்கு வைக்கப்படும். யாரோடும் பேச அனுமதிக்க மாட்டார்கள். வீட்டிற்குள்ளேயே அந்தச் சிறுமி புறக்கணிக்கப் படுவார்.

சிறுமி உடலுக்குள் புகுந்த பேய்!

தன்னைத் தனிமையில் வைத்திருப்பதையும், அனை வரும் ஒதுங்கி இருப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாத அந்தச் சிறுமி, தனக்குள்ளே அழுது புலம்பி, அமைதி நிலைக்குப் போய்விடுவார். யாரிடமும் பேசாமல் "உம்மென்று" இருப்பதைப் பார்க்கும் பெற்றோர் ஏதோ நடந்திருக்கிறது என பூசாரியை அழைத்து வருவர். அவர் வந்து, சிறுமிக்குப் பேய் பிடித்திருப்பதாகக் கதைக் கட்டுவார். பேயை தானே விரட்டுவதாகவும், அதற்குத் தேவையான பொருட்கள் எனவும் ஒரு பட்டியல் கொடுப்பார். இறந்து போன யாராவது ஒருவர் பெயரை சொல்லி, அவரின் ஆவிதான் சிறுமியின் உடலில் புகுந்துள்ளது எனக் கிளைக் கதை எழுதுவார். அந்த ஆவியை வெளியேற்றுகிறேன் எனச் சிறுமியை வேப்பி லையால் அடித்துத் துன்புறுத்துவார்கள்.

இயேசு வருகிறார்!

நான் சிறுவனாக இருந்த போதே இயேசு வருகிறார் என்று சொன்னார்கள். எனக்கு 73 வயது முடிந்துவிட்டது. இன்னும் இயேசு வரவில்லை. இந்நிலையில் எழுப்புதல் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். குருடர் பார்க்கிறார், செவிடர் கேட்கிறார், முடவர் நடக்கிறார் எனக் கூறி, எல்லோரையும் தன்வயப்படுத்த நினைக்கிறார்கள். இதற்குப் பெயர் "ஹிப்னாடிசம்".ஆக சாமி ஆடுதல் மற்றும் பேய் பிடித்தல் தொடர்பான அனைத்து விசயங்களும் விதவிதமான மனநோய்கள்! இந்த மனநோய்க்கு பகுத்தறிவு ஒன்றுதான் மாமருந்து," என மருத்துவர் இரா.கவுதமன் கூறினார்.

வகுப்பும், தலைப்பும்!

தொடர்ந்து 'தந்தை பெரியார் ஓர் அறிமுகம்' என்கிற தலைப்பில் மாநில கிராமப் பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், 'சமூக ஊடகங்களில் தடம் பதித்த திராவிட இயக்கம்' எனும் தலைப்பில் மாநில தகவல் தொழில் நுட்பக்குழு ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், சமூக ஊடகங்களில் நமது பங்கு என்கிற தலைப்பில் மாநில பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, 'பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்புகள்' எனும் தலைப்பில் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், பட்டுக் கோட்டை கழக மாவட்ட அமைப்பாளர் சோம.நீலகண்டன் "மந்திரமா? தந்திரமா?" எனும்  மூடநம்பிக்கை செயல் விளக்கம், 'தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்' என்கிற தலைப்பில் தலைமைக் கழகப் பேச்சாளர் பூவை.புலிகேசி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் சாதனைகள் எனும் தலைப்பில் முனைவர் அதிரடி க.அன்பழகன்  ஆகியோர் வகுப்பெடுத்தனர்.

தொடக்க நிகழ்ச்சி!

முன்னதாக நடைபெற்ற தொடக்க நிகழ்வில் நகரத் தலைவர் சிற்பி.வை.சேகர் வரவேற்புரையாற்ற, மாவட்டத் தலைவர் பெ.வீரையன் தலைமை வகித்தார். மாவட்டப் பகுத்தறிவாளர் தலைவரும், திமுக கலை இலக்கிய அணி மாவட்ட கழக தலைவருமான ஆ.இரத்தினசபாபதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்லதம்பி, மாவட்டப் ப.க. செயலாளர் இரா.காமராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் அ.காளிதாசன், மாவட்டப் ப.க. அமைப்பாளர் மாணிக்க. சந்திரன், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் அ.அண்ணாதுரை, மாவட்டத் தொழிலாளரணி அமைப்பாளர் முத்து.துரைராசன், பகுத்தறிவாளர் கழக இரா.அழகிரி சுப்பையராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பரிசளிப்பும், பாராட்டும்!

திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல், தஞ்சை மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு, தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வே.இராஜவேல் ஆகியோர் இயக்கப் பாடல்களைப் பாடினார்.

இறுதியாகப் பயிற்சிப் பட்டறையின் நோக்கங்கள் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளரும், பெரியார் பயிற்சிப் பட்டறை யின் பொறுப்பாளருமான இரா.ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். வகுப்பில் சிறப்பாகக் குறிப்பெடுத்த பள்ளி கொண்டான் சிவசிறீ சர்மிளா, கொள்ளுக்காடு, அபினேஷ் முதல் பரிசினையும், துவரங்குறிச்சி ஜெயசிறீ, துவரங்குறிச்சி கோபிகா இரண்டாம் பரிசினையும், மறவக்காடு அரிஹரன், சிவக்கொல்லை ருத்திரேசுவரன் மூன்றாம் பரிசினையும் வென்றனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப் பட்டு, குழுப் படம் எடுக்கப்பட்டது. இன்றைய நாளின் (29.7.2023) புத்தக விற்பனை ரூ 4800. பயிற்சிப் பட்டறையில் 186 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பெண்கள் 97, ஆண்கள் 89.

பங்களிப்பும், பங்கேற்பும்!

மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களை குயின் சிட்டி லயன் சங்கத் தலைவர் பண்ணவயல் ஆர்.சுந்தர்பாபு அவர்களும்,  மதியம் சிக்கன் பிரியாணியை ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் அவர்களும் வழங்கி சிறப்பு செய்தனர்!

மாவட்ட ப.க. புரவலர் என்.கே.ஆர்.நாராயணன், மாவட்ட ஆசிரியரணித் தலைவர் என்.நடராஜன், மாவட்ட ப.க. அமைப் பாளர் வீர.முருகேசன், மாவட்ட ஆசிரியரணி செயலாளர் வள்ளுவப் பெரியார், சேது ஒன்றியத் தலைவர் சி.ஜெகநாதன், மதுக்கூர் ஒன்றியத் தலைவர் பெ. அண்ணா துரை, பட்டுக் கோட்டை ஒன்றியச் செயலாளர் சி.ரெங்கசாமி, மதுக்கூர் ஒன்றிய ப.க. தலைவர் மா.சிவஞானம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தொ.சமரன், தலைமைக் கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன், ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் ஆர்.கே.ஆசைப்பாண்டி, மதுக்கூர் ஒன்றிய ப.க. செயலாளர் கருப்பூர் முருகேசன், மாவட்ட ஆசிரியரணி அமைப்பாளர் வீ.வீரமணி, மதுக்கூர் ஒன்றிய ப.க தலைவர் திருமேனி, வீரக் குறிச்சி ஆர்.ஆனந்தன், நாட்டுச் சாலை வி.சவுந்தர்ராஜன், தஞ்சாவூர் ஆசிரியர் பொ.ராஜு, மணமேல்குடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் யோவான் குமார், மாவட்ட மாணவரணி சே.இங்கர்சால், சித.திருவேங்கடம்,  சேதுபாவா சத்திரம் ஒன்றிய இளைஞரணி தலைவர் சு.விஜி,  மதுக்கூர் ஒன்றியப் பொறுப்பாளர் அத்தி வெட்டி வை.ஆடலரசு, பகுத்தறிவாளர் கழகம் பி. பட்டா பிராமன், மேனாள் மாவட்ட ப.க. தலைவர் வீ.ஆத்மநாதன், அத்திவெட்டி சி.செல்லையன், சே.வளர்மதி, புத்தக விற்பனையாளர் சாந்தகுமார் ஆகியோர் நிகழ்வில் பங்கு பெற்றனர்.


No comments:

Post a Comment