மாமன்னன் பேசும் அரசியல்.. இவர்கள்தான் உண்மையான மாமன்னர்கள்.. மனிதனே, மனிதனுக்கு மனிதன் சரிசமமாக உட்காரு... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 8, 2023

மாமன்னன் பேசும் அரசியல்.. இவர்கள்தான் உண்மையான மாமன்னர்கள்.. மனிதனே, மனிதனுக்கு மனிதன் சரிசமமாக உட்காரு...

இத்திரைப்படத்தில்  உயர்ஜாதி ஆதிக்க மனப்பான்மை கொண்டு காலம் காலமாக தான் அனுபவித்து வரும் பதவியை தனக்குப்  பிறகும் தனது வாரிசுகளே அனுபவிக்க  வேண்டும் என்ற ஆதிக்க மனப்பான்மையில் இருக்கும் ஒரு சனாதன மனித மிருகம். எந்த உயர் பதவிக்கு சென்றாலும்  நீ எனக்கு கீழே உள்ளவன். கீழ்ஜாதிக்காரன் நீ  காலாமாக எனக்கு அடிமை என்று,

இன்று வரை சங்கர மடத்திற்கு சென்றால், கோவிலுக்கு சென்றால்  பார்ப்பான் எப்படி, அவன் சார்ந்த ஜாதியினரை தவிர்த்து மற்றவர்கள் அனைவரையும் நிற்க வைக்கிறானோ , அதே போன்று பார்ப்பானுக்கு கீழே இருப்பவன் தனக்கு கீழே உள்ளவனை அந்த சனாதனாத்தின் படிநிலை மனப்பான்மையில்  நிற்க வைக்க வேண்டும். அது காலம் காலமாக இந்த அடிமை முறை தொடர வேண்டும் என்று நினைக்கின்ற, சனாதன தர்மத்தை காக்கத் துடிக்கின்ற காட்டுமிராண்டிக்கும் -

"இந்தப் பூமியில் மனிதர்களாக பிறக்கின்ற அனைவரும் சரிசமம்" என்று சமத்துவத்தை நிலை நிறுத்த நினைக்கின்ற மனிதனுக்கும் - இடையே நடக்கின்ற  போராட்டங்களே இத்திரைப் படம்.

சமீபத்தில் ஆசிரியர்  அவர்கள் முப் பெரும் விழாவிற்கு திருப்பத்தூர் வருகை தந்து நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு நள்ளிரவில் சோலையார்பேட்டை இரயில் நிலையத்திற்கு வழி அனுப்பச் சென்றோம். தொடர் வண்டி சற்று தாமதமாக வந்ததால் அங்கே ஆசியரிடம் உரையாடிக் கொண்டிருந்தோம்.

அவர் உட்கார்ந்து கொண்டு இருந்தார் - நாங்கள் நின்று கொண்டிருந்தோம்.

அப்போது ஆசிரியர் அவர்கள் எங்களைப் பார்த்து  உட்காருங்கள், உட்காருங்கள் என்று சுமார் பத்து முறையாவது சொல்லியிருப்பார்.  நாங்கள் நின்று கொண்டேயிருந்தோம். பிறகு  அவரின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக நாங்களும் அருகில் இருந்த நாற்காலியில்  உட்கார்ந்தோம்.

அப்போது எனக்கு அவ்வளவு சரியாக புரியவில்லை உட்காருங்கள், உட்காருங்கள் என்று ஆசிரியர் அவர்கள் ஏன் அடிக்கடி சொல்லுகிறார் என்று.

இத்திரைப்படத்தில்  கதைநாயகனும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த சட்ட மன்ற உறுப்பினரான அவரது  தந்தையும், அவர்களை விட உயர் வகுப்பை சார்ந்த , அவர்கள் சார்ந்திருக்கின்ற இயக்கத்தின் மாவட்ட செயலாளரை சந்திப்பதாக காட்சி.

அந்த இடத்தில் மாவட்ட செயலாளர் உள்பட  அவர்கள் சமூகத்தை சார்ந்த பல நபர்கள்  உட்கார்ந்து கொண்டிருக்கும் நிலையில்  அருகே அமர நாற்காலி இருந்தும், சட்ட மன்ற உறுப்பினராக உள்ள தனது தந்தையை உட்கார வைக்காமல் நிற்க வைத்து பேசிக் கொண்டிருப்பான் அந்த மாவட்ட செயலாளர்.

அப்போது கதாநாயன் தனது  தந்தையை பார்த்து  அருகில் இருக்கும் நாற்காலியை காட்டி உட்காரும்படி  சொல்வான்.அப்படி அவன் மகன்  பலமுறை உட்கார சொல்லியும் அவனது தந்தை  உட்காராமல் நின்று கொண் டேயிருப்பார். அப்போது  அந்த உயர் வகுப்பை சார்ந்த மாவட்டச் செயலாளர் கதை நாயகனை பார்த்து  தம்பி நீ உட்கார சொன்னாலும் அவர் உட்கார மாட்டார். இது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம் இதை மாற்ற முடியாது. இங்கே இது இப்படித் தான் என்பான்.

அப்போது நாயகன் திருப்பிக் கேட்பான் அந்த உயர் ஜாதிக்காரனைப் பார்த்து, அவர் உட்காராமல் நிற்கிறார்,

சரி, இது நாள் வரையில் என் தந்தையை நீ உட்காரச் சொன்னாயா? என்று. ஒரு வருக்கு  சரிசமமாக உட்காருவது என்பது எவ்வளவு முக்கியமானது. அது எவ்வளவு பெரிய அரசியல் என்று இத்திரைப்படம்  உணர்த்தியது.

அந்த வகையில் திராவிடர் கழகத்தின் முதன்மையான கொள்கையான, “எனக்கு மேலேயும் யாரும் இல்லை; எனக்கு கீழேயும் யாரும் இல்லை” என்ற தந்தை பெரியாரின் கொள்கையை சொன்னால் மட்டும் போதாது. செயலிலும்  நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலையில்தான் ஆசிரியர் அவர்கள் எங்களைப் பார்த்து உட்காருங்கள், உட்காருங்கள் என்ற சொன்னார் என்று அவரின் சமத்துவ அரசியல் புரிந்தது.

எந்த நிலையிலும் நாம் அனைவரும் இங்கே சரிசமம் என்று உணர்த்திய,

எந்த நிலையிலும் தன்  கொள்கையை மறக்காத  ஆசிரியர் அவர்களும்

அவருக்கும் - நமக்கும் அறிவுலக ஆசானாக திகழ்கின்ற

தந்தை பெரியார் அவர்களுமே நமக்கு மாமன்னர்கள்

இத்திரைப்படத்தில் வரும் இயக்கத்தின் பெயர்  “சமூக நீதி சமத்துவ மக்கள் இயக்கம்" முதலமைச்சர் இருக்கை எதிரில் உள்ள மேசையின் மீது தந்தை பெரியார் படம்.

இத்திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அவர்களுக்கும், இப் படத்தை தயாரித்த உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும்  இப் படத்தின் மாமன்னன் வடிவேலு அவர்களுக்கும் கம்யூனிஸ்ட் தோழராக வரும் கீர்த்தி சுரேஷ்  மற்றும் பல கலைஞர்களுக்கும் பாராட்டுகள்.

சமூக நீதியையும் சமத்துவத்தையும் போதிக்கின்ற இத் திரைப்படத்தை அனைவரும் காண்போம்.

சரி சமமாக உட்காருவோம்!!

சமத்துவத்தை பாதுகாப்போம்!!

- பெ. கலைவாணன்

மாவட்ட செயலாளர், திருப்பத்தூர்

No comments:

Post a Comment