கடவுளை நம்பியவர்களின் கதி இவ்வளவுதான்! அமர்நாத் பனி சிவலிங்கம் வழிபடச் சென்றவர்கள் வழியில் அவதி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 13, 2023

கடவுளை நம்பியவர்களின் கதி இவ்வளவுதான்! அமர்நாத் பனி சிவலிங்கம் வழிபடச் சென்றவர்கள் வழியில் அவதி!

சிறீநகர், ஜூலை 13 அமர்நாத் பனிலிங்கத்தைக் காண தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் கொண்ட குழு அமர்நாத் சென்றது. இவர்கள் கடந்த 7 ஆம் தேதி காஷ்மீரில் உள்ள பால்டால் பகுதிக்குச் சென்றனர். பின்னர் அங்கிருந்து 14 கி.மீ. தூரமுள்ள அமர்நாத் கோவிலுக்குச் சென்று மலைச்சாலையில் நடந்து சென்று பனி லிங்கத்தைப் பார்த்தனர். அன்றிரவு கோவிலில் தங்கி மீண்டும் மறுநாள் நடந்தே பால்டால் பகுதிக்கு வந்தனர். அங்கிருந்து சிறீநகருக்கு புறப்பட்டபோது நிலச்சரிவு ஏற்பட்டு சாலை துண்டானது. இதையடுத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த குழுவினர் மேற்கொண்டு பயணம் செய்ய பாதுகாப்புப் படையினர் அனுமதிக்கவில்லை.

பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் யாரும் இங்கிருந்து செல்ல முடியாது என அவர்களை அங்கேயே தங்க அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மணிக்காம்ப் என்ற முகாம் பகுதியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். கடந்த 4 நாள் களாக அப்பகுதியில் போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் இருப்பதாக அவர்கள் காட்சிப் பதிவை வெளியிட்டு தமிழ்நாடு அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என தெரிவித் துள்ளனர். 

இந்தக் குழுவில் தேனி மாவட்டம் சின்ன மனூரைச் சேர்ந்த செந்தில்குமார், ராஜாங்கம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி, செல்வி, தஞ்சாவூரைச் சேர்ந்த கண்ணன் நெய் வேலியைச் சேர்ந்த சரவணன், சண்முகராஜ், நிரஞ் சன், சகுந்தலா, மணி என 21 பேர் சிக்கியுள்ளனர்.

இதுகுறித்து சின்னமனூரைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர் வெளியிட்டுள்ள காட்சிப் பதிவில், சிறீநகருக்கும், காஷ்மீருக்கும் இடையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சி.ஆர்.பி.எப். வீரர்கள் எங்களை காப்பாற்றி முகாமில் தங்க வைத்துள்ளனர். கடந்த ஒன்றாம் தேதி தேனி மாவட்டத்தில் இருந்து வந்த நாங்கள், 9 ஆம் தேதி ஊர் திரும்ப வேண்டிய நிலையில், 4 நாள்களாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். இங்கு நாள் ஒன்றுக்கு நபருக்கு ரூ.300 செலவாகிறது. சுகாதாரமான தண்ணீர், உணவு கிடைக்கவில்லை. வயதான பலர் இங்கு எங்களுடன் உள்ளதால் எப்போது சொந்த ஊருக்குச் செல்வோம் என்ற ஏக்கம் நிலவி வருகிறது. தமிழ்நாடுஅரசு எங்களை ரயில் மூலம் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை அச்சத்துடனேயே உள்ளோம். எனவே, உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் என்றனர். இதனிடையே தங்கள் உறவினர்களை எப்போது காண்போம் என்ற ஏக்கத்தில் அவர்களது குடும்பத்தினரும், கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இசுலாமிய ஆடுமேய்ப்பவர் கண்டுபிடித்த லிங்க வடிவிலான பனிக்கட்டியை கடவுள் என்று நம்பி கும்பிடச் சென்றனர். ஆனால், அங்கு நிலச் சரிவு ஏற்பட்ட பிறகு தமிழ்நாடு அரசு எங்களைக் காப்பாற்றவேண்டும் என்று முறையிடுகின்றனார். லிங்கத்தை கும்பிடச் சென்றவர்கள், லிங்கத்தை நம்பாமல் தமிழ்நாடு அரசை நம்புகின்றனர். கடவுள் சக்தி அவ்வளவுதானா?

No comments:

Post a Comment