அமைச்சர் க.பொன்முடியிடம் அமலாக்கத்துறையின் நள்ளிரவு விசாரணை ஜனநாயகத்துக்கு அச்சமூட்டும் அப்பட்டமான மனித உரிமை மீறல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 20, 2023

அமைச்சர் க.பொன்முடியிடம் அமலாக்கத்துறையின் நள்ளிரவு விசாரணை ஜனநாயகத்துக்கு அச்சமூட்டும் அப்பட்டமான மனித உரிமை மீறல்!

மனித உரிமை செயற்பாட்டாளர்கள்  கடும் கண்டனம்!

சென்னை, ஜூலை 20 - தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சரும், தி.மு.க. துணை பொதுச் செய லாளருமான க.பொன்முடி அவர்களை அமலாக்கத் துறையினர் நள்ளிரவில் விசாரணை செய்தது குறித்து மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட் டாளர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்கள்.

சன் டி.வி. நியூஸ் தொலைக் காட்சியில் ‘டிவிட்டர்' பதிவாக அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

இந்து என்.ராம்

ஒன்றிய அரசு எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து அவர்களை தனது விசாரணை முகமைகளை தவறாக பயன் படுத்தி விசாரணைக்கு உட் படுத்துவது புதிய மோசமான நிலையை எட்டியுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றாக கூடி, பெங்களூருவில் மாநாடு நடத்தும் அதே சமயத்தில் தி.மு.க அமைச்சர் க.பொன்முடிமீது ஒன்றிய அரசு அமலாக்கத்துறையை ஏவி விட்டிருப்பது என்பது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரு வேறு நிகழ்வுகளாக கருத முடியாது. 

மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் 

அமலாக்கத்துறையினரால் அமைச்சர் க.பொன்முடி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டது மனித உரிமை மீறலா என்பதை அறிந்து கொள்வதற்கு முன்னர் மனித உரிமை என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கவுரவத் துடன் ஒருவர் நடத்தப்படுவது மிக முக்கியம். அரசியல் மற்றும் பொதுவான உரிமைகள் சார்ந்த சட்டத்தின் கீழ் இவை வருகின்றன. ஒவ்வொருவருக்கும் உரிய கவுரவம் அளிக்கப்பட வேண்டும். பொன்முடி அவர்களிடம் விசாரணை நடத்தப்படும்போது நள்ளிரவாகி விட்டது. அவ்வாறு அந்த நேரத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்படா விட்டால் ஒன்றும் வானம் இடிந்து விழப்போவதில்லை. 

அவரை துன்புறுத்த வேண்டும் என்கிற நோக்கம் அப்பட்டமாகத் தெரிகிறது. விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்துவது. அந்த காலத்தில் சி.பி.அய். விசாரணை என்றால் பனிக்கட்டிகளின் மீது படுக்க வைத்து விசாரணை செய்வார்கள் என்று சொல் வார்கள். இதுவும் கிட்டத்தட்ட அப்படித்தான். யாராக இருந்தாலும் நள்ளிரவில் விசாரணை செய்தால் என்ன சொல்லப்போகிறார்கள்..? அவர்களை மறுநாள் அழைத்து விசாரணை நடத்தலாம்.  அந்த வகையில் மனித உரிமை மீறல் அப்பட்டமாக இதில் இருந்தும் அமலாக்கத்துறை இதில் ஈடுபடுகிறது. 

அமலாக்கத்துறை மட்டுமல்ல, மாநில காவல் துறையும் இப்படி செய்துள்ளதை நாம் பார்க்கிறோம். இவற்றை தடுப்பதற்காகத்தான் 1963இல் சட்டம் இயற்றப்பட்டது. 

அகில இந்திய சட்டம், மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் அவற்றின் கீழ்தான் மாநில மனித உரிமைகள் ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இது அய்.நா. சபையின் டிக்ளரேஷனாகவும் உள்ளது. அதாவது இண்டர்நேஷனல் ஹியூமன் ரைட்ஸ் டிக்ளரேஷன். அது ஒட்டு மொத்த உலகத்துக்கும் தரப்பட்டிருக்கி றது. ஆனால்,இந்தியாவுக்கு மட்டும் அதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.

அமைச்சர் பொன்முடியை பொறுத்தவரை அவர் மீது நேரடியான குற்றச்சாட்டு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அவர் மகன் மீதான விசாரணைகள் இருக்கின்றன. ஆனால், பொன்முடி மீது எந்த விசாரணையும் இருப்பதாக தெரியவில்லை. ஏன் அவர் கைது செய்யப்படுகிறார்..? எதற்கு விசாரணை செய்யப்படுகிறார் என்பதெல்லாம் தெரியவில்லை. இது ஒரு முக்கியமான விஷயம், உச்சநீதிமன்றம் இதில் தெரிவித்த அரஸ்ட் டைரக்டரி இருக்கிறது. அதன்படி ஒருவரை விசாரணைக்கு அழைக்கும்போது ஏன், எதற்கு என்ற காரணத்தை அவருக்கு தெரிவிக்க வேண்டும். அந்த காலத்தில் சி.பி.அய். தான் மிரட் டலுக்கு பயன்படும். இப்போது இரண்டு சட்டங்கள். ஒன்றிய என்.அய்.ஏ. இன்னொன்று இ.டி. அந்த இ.டி. இன்றைக்கு புதிய சி.பி.சி.ஆக புதிய மறு அவதாரம் எடுத்திருக்கிறது. 

மனித உரிமைகள் பற்றி அதில் எதுவும் எதிர்பார்க்க முடியாது என்பதைத் தான் சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்து வந்த சம்பவங்கள் வெளிக்காட்டுகின்றன. அகில இந்திய அளவில் மற்ற சம்பவங்கள் அதை உணர்த்தி உள்ளன. தற்போது தமிழ்நாட்டின் கதவுகளை அவை தட்டியுள்ளன.

ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி பாலசந்திரன்

அமலாக்கத்துறை என்பது ஒன்றிய அரசின் ஒரு நிறுவனம். ஒன்றிய அரசின் அதிகாரம் பற்றியோ, அம லாக்கத் துறை அதிகாரம் பற்றியோ யாரும் பழித்துப் பேசக்கூடாது என்ற விஷயம் எவ்வளவு முக் கியமோ அந்த அளவுக்கு அவை மனித உரிமைகளை மதித்து நடக்க வேண்டும் என்பதும் முக்கியமானது. அதை நமது அரசியல் அமைப்பு சட்டமும் உறுதி செய்திருக்கிறது. நான் கேள் விப்பட்ட வரையில் பத்திரிகை செய்திகளில் பார்த்த வரையில் அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்கு சென்றவர்கள் நாள்முழுவதும் அங்கு சோதனை நடத்தி யிருக்கிறார்கள். அது அவர்களின் உரிமை. அதற்கு பின் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பொன்முடி அவர்கள் தக்க பதிலை அளித்தார் என்று பத்திரிகை செய்திகள் வந்திருக்கின்றன. அதை மறுதலித்து அமலாக்கத்துறையினரிடமிருந்து எந்த செய்தியும் வரவில்லை. அதன் பிறகு அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு கண்ணியமாக அழைத்து சென்றிருக்கிறார்கள். 

அவர் தனது சொந்த காரில்தான் சென்றிருக்கிறார். ஆனால், அதன் பிறகு காலை 4 மணி வரை அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. பொன்முடி அவர்கள் 70 வயதுக்கும் மேற்பட்ட சீனியர் சிட்டிசன். அவரிடம் மறுபடியும் நாளை மாலை 4 மணிக்கு வாருங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

நான் எழுப்பும் கேள்வி என்னவென்றால், இந்த வழக்கு எத்தனை ஆண்டுகளுக்கு முந்தையது என்பது எல்லோருக்கும் தெரியும். நீங்கள் இந்த வழக்கில் உங்களுக்கு தேவையான எல்லா ஆதா ரங்களையும் திரட்டுங்கள். அது உங்கள் கடமை. ஆனால், இப்படி தொடர்ந்து 12 மணி நேரம் விசாரணை நடத்துவதன் மூலம் நீங்கள் என்ன சாதித்தீர்கள்..?

இதில் மனித உரிமை அப்பட்டமாக மீறப்பட்டிருக் கிறது என்பது உங்களுக்கு தெரியவில்லையா..? அவருக்கு உரிய அளவுக்கு உணவு கொடுக்கப்பட வில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதில் உள்ள உண்மை எனக்கு சரியாக தெரியவில்லை. அதை பொன்முடி அவர்கள் சொல்லவேண்டும். அவ்வாறு உணவு சரியாக அளிக்கப்படவில்லை என்றால் அது தவறு. 

வயது முதிர்ந்த ஒருவரிடம் இத்தனை மணி நேரம் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது..? பழங்குடியின மக்களுக்கு உதவி செய்த பாதர் சேன் என்பவரை நக்சலைட்டுகளுக்கு உதவியாக செயல்பட்டார் என்று பிணை இல்லாத வகையில் என்.அய்.ஏ. கைது செய்தது. 80 வயதுக்கு மேற்பட்ட அவர் நீர் அருந்த ஸ்ட்ரா கேட்டபோது அளிக்க மறுத்த பாரம்பரியம் கொண்டதுதான் இந்த ஒன்றிய அரசு நிறுவனங்கள். பின்னாளின் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக இருந்த மின்னஞ்சல் என்பது இடைச்செருகல் என்பதை அமெரிக்க கணினி நிறுவன வல்லுநர்கள் கண்டறிந்து உண்மையை வெளியிட்டனர். 

ஒருவருடைய குற்றம் அல்லது குற்றமற்ற தன்மை என்பதை உறுதி செய்ய வேண்டியது நீதிமன்றம். யாராக இருந்தாலும் அவர்களை நடத்தப்பட வேண்டிய முறைகள் பற்றி விதிகள் உள்ளன. அந்த விதிமுறைகளை முற்றிலுமாக புறக்கணித்து அமலாக்கத்துறை தொடர்ந்து செயலாற்றி வரு கிறது. செந்தில்பாலாஜி விவகாரத்தில் அதுதான் நடந்தது. இன்று பொன்முடி விவகாரத்திலும் அதுதான் நடந்திருக்கிறது என்ற அச்சம் மேலிடுகிறது. ஒன்றை மட்டும் நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இவையெல்லாம் செந்தில்பாலாஜி அல்லது பொன்முடி ஆகிய தனி மனிதர்களின் மேல் நடத்தப்படும் தாக்குதல்கள் அல்ல. இவை ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் என்பது தெளிவு. இது நாட்டுக்கு நல்லதல்ல. நாட்டு மக்களுக்கு நல்லதல்ல. ஜனநாயக உரிமை பெற்ற நாட்டில் உள்ள எவருக்குமே நல்லதல்ல. 

 2014, 2019 ஆகியஆண்டுகளில் பா.ஜ.க. இந்த நாட்டு வாக்காளர்களின் 50 சதவிகித ஆதரவை பெறவில்லை. 30 முதல் 35 விழுக்காடு ஆதரவை மட்டுமே பெற்றார்கள். எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்காததால் இவர்கள் ஆட்சிக்கு வர முடிந்தது. 2019ல் ஆட்சிக்கு வந்த பின் இனி என்றும் தங்கள் ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்கள். அதனால் தங்கள் தோழமை கட்சிகள் மேல் பாராமுகமாக இருந்தார்கள். இன்று வரை அவர்களெண்ணம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க வேண்டும், தோழமைக்கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. இதற்கு உதாரணம் அ.தி.மு. கவை பாருங்கள்.சிவசேனாவை பாருங்கள். உங்களுக்கே தெரியும். 

ஆனால், இன்று அவர்களுக்கு அச்சம் மேலிட்டு விட்டது. 36 பேர் தங்கள் கூட்டணியில் இருக்கிறார்கள் 46 பேர் இருக்கிறார்கள் என்று தெரிவித்து வருகிறார்கள். அதில் எத்தனை பேர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்கள் என்று கார்கே கேட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உணர்ந்த காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை, கொள்கை அளவில் வேறுபட்டாலும் தங்களுக்குள் ஒற்றுமையாக இருப்பது பற்றி தெரிவித்துள்ளது. அதனால் நாட்டுக்கு நல்லது நடக்கும் என நம்புவோம். 

மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி டிபேன் 

என்போர்ஸ்மெண்ட் நடவடிக்கை பற்றி நான் பேசுவதற்கு முன்னர் நான் தெரிவிக்க வேண்டியது என்னவென்றால் அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு 72 வயது. ஒரு மூத்த குடிமகன் அவர். இரண்டாவது அவர்மேல் நடந்த வழக்கு விழுப்புரத்திலிருந்து  வேலூருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து அவர் அதிலிருந்து விடுதலையும் பெறுகிறார். அதன் பின்னர் இன்னொரு வழக்கில் அவர்மீது சிறப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு அதில் அவர் விடுவிக்கப்படுகிறார். ஆனால், அவர்மீது மேல்முறையீடு செய்யப்பட்டு விடுதலை செய்யப்படுகிறார். இதன் பின்னணியில்தான் பி.எல்.ஏ. சட்டத்தைப் பயன்படுத்தி என்போர்ஸ்மெண்ட் அதிகாரிகள் வந்துள்ளதாக நான் பார்க்கிறேன். அவர்கள் முறையாக தேடுதல் நடத்த உரிமை உண்டு. பி.எம்.எல்.ஏ சட்டத்தின் படி அவர்கள் 3 முதல் 7 ஆண்டுகள்வரை சிறை தண்டனை அளிப்பதாகும். 

ஒருவரை கைது செய்யும்போது விதி 41ஏ-இன் கீழ் தகவல் அளித்த பின்னர்தான் கைது செய்ய வேண்டும். ஒருவரது இல்லத்தை அய்.டி துறையினர் சோதனை செய்யும்போது எஸ்டா பிளிஷ் செய்த விதிகளை கடைபிடிக்கிறார்கள். அவர்கள் காலை முதல் மாலை வரையில் சோதனை நடத்துவார்கள். இரவில் சோதனை நடத்திய சரித்திரம் கிடையாது. 

ஆனால், ஜுடிசியல் கஸ்டடி என்றால் கூட காலை முதல் மாலை வரை விசாரிக்கலாம். அதில் கூட இரவில் விசாரணை செய்வது கிடையாது. ஆனால், இ.டி அதிகாரிகள் இரவு 8.45 மணிக்கு சம்மன் அளித்து, அதிகாலை 4 மணி வரை விசாரணை செய்திருக்கிறீர்கள். நீங்கள் விசாரணை நடத்தினீர்களா என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால், உள்ளே போனவர் 4மணிக்குத்தான் வெளியே வருகிறார். 

இரவில் விசாரணை செய்ய உங்களுக்கு என்ன அவசியம் வந்தது..? இது முற்றிலும் மனித உரிமை மீறல் என்பதை பதிவு செய்கிறேன். உங்களுக்கு காலை முதல் மாலை வரை நீங்கள் விசாரணை செய்யுங்கள். ஆனால், அதை முறையாக விசாரிக்க வேண்டும். நள்ளிரவில் முறைதவறி விசாரிப்பது மனித உரிமை மீறல் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

சி.சி.டி.வி. கேமரா உள்ளதா என இ.டி அலுவ லகத்தில் தெரியவில்லை. ஒன்றிய அரசின் என்.அய்.ஏ., சி.பி.சி., இ.டி., நார்கோடிக்ஸ் ஆகிய சி.சி.டி.வி முகமை அலுவலகங்களில் கேமரா இருக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. பொன்முடி விசாரணையை வெளியிட நீங்கள் தயாராக இருக்கிறீர்களா..? பொன்முடி தனது வழக்குரைஞர் மூலம் அதன் பதிவுகளை கேட்டால் இ.டி அதை தர தயாராக இருக்கிறார்களா..? 

அது பற்றி மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம் கேள்வி கேட்பதுடன் அது பற்றி நீதிமன்றத்திலும் வழக்கு பதிய உள்ளார்கள். இது பொன்முடிக்கான ஒரு சட்டமாக நான் சொல்லவில்லை. சாதாரணமான மக்களுக்கும் உரிய சட்டமாக இருப்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். யாருக்கு நடந்தாலும் இது அப்பட்டமான மனித உரிமை மீறல் தான்.

இ.டி. அலுவலகத்தில் சி.சி.டி.வி கேமரா இல்லை யென்றால் அங்கு விசாரணைக்கு அழைத்து செல்லக்கூடாது என்ற நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு உறுதியாக எடுக்க வேண்டும். 

தமிழ்நாட்டு அரசு உயர் அதிகாரிகள் இ.டி அலுவலகத்துக்கு சென்று கேமரா இருப்பதை சோதனை செய்ய வேண்டும். கேமரா இல்லாத அறைக்கு விசாரணைக்கு பொன்முடியை அழைத்து சென்றது தவறு. மீண்டும் அவரை  விசாரணைக்கு அழைத்திருப்பதும் தவறு. விசாரணை குறித்து நீதிமன்றம் தெரிவித்த விதிகளை கடைப்பிடித்துள் ளீர்களா என்பதை எங்களுக்கு சொல்லுங்கள். ஆனால் அதை சொல்வதற்கே உங்களால் இயலவில்லை என்றால் உங்கள் மேல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நீங்கள் இழந்து விட்டீர்கள். இது அப்பட்டமான மனித உரிமை மீறல்.

-இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: 'முரசொலி' 19.7.2023 


No comments:

Post a Comment