கடவுள் சக்தி இதுதானோ! சதுரகிரிமலையில் காட்டுத்தீ! பக்தர்கள் பீதி - ஓட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 19, 2023

கடவுள் சக்தி இதுதானோ! சதுரகிரிமலையில் காட்டுத்தீ! பக்தர்கள் பீதி - ஓட்டம்!

வத்திராயிருப்பு, ஜூலை 19 - சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நேற்று முன்னாள் (17.7.2023) இரவு ஏற்பட்ட காட்டு தீ சுமார் 20 மணி நேர போராட்டத்துக்குப் பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மலையில் தங்க வைக்கப்பட்டிருந்த பக்தர்கள் நேற்று (18.7.2023) வனத்துறையினரின் உதவி யுடன் பாதுகாப்பாக தரை இறங்கினர்.

சிறீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில்  சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு வழிபாட்டிற்காக ஜூலை 15 முதல் 18-ஆம் தேதி வரை பக்தர்கள் வழிபட வனத்துறை அனுமதி வழங்கியது. 

மலையேறி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் வழிபாடு செய்துவிட்டு பிற்பகலுக்கு மேல் மலை இறங்கத் தொடங்கினர். அப்போது மாலை 6 மணிக்கு மேல் சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தவசிப்பாறை 5ஆவது பீட் பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

கடந்த இரு மாதங்களாக மழை இல்லாததால் வனப்பகுதி வறண்டு காணப்பட்டதாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும் காட்டுத்தீ வேகமாக பரவியது. இதையடுத்து பக்தர்கள் மலையில் இருந்து இறங்க தடை விதித்த வனத் துறையினர் கோயிலில் உள்ள மண்டபங்களில் அவர்களை தங்க வைத்தனர். நேற்று முன்னாள் இரவு முதல் சுமார் 30-க்கும் மேற் பட்ட வனத்துறையினர் காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவில் சதுரகிரி கோயிலை சுற்றியுள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ திடீரென பரவிக் கொண்டு இருந்தது.

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது வனப்பகுதியில் காட்டுத்தீ எரிவது தெரிந்தது. சுமார் 20 மணி நேர போராட்டத்துக்குப் பின் நேற்று காலை மலைப் பாதையில் எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீ கட்டுக்குள் வந்தது. அதன் பின் பக்தர்கள் சிறிது சிறிதாக தரையிறங்க அனுமதிக் கப்பட்டனர்.

வனப்பகுதியில் காட்டுத் தீ தொடர்ந்து எறிந்து வருவதால், நேற்று சதுரகிரி செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து சதுரகிரி செல்வதற்காக வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயிலிலேயே சாமி கும்பிட்டு விட்டு திரும்பி சென்றனர். தொடர்ந்து காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment