ஒரே நாடு - ஒரே குடும்ப அட்டை திட்டம் நிறுத்தி வைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 17, 2023

ஒரே நாடு - ஒரே குடும்ப அட்டை திட்டம் நிறுத்தி வைப்பு

சென்னை, ஜூலை 17- மகளிர் உரிமைத் திட்டத்துக்கான விண்ணப்பப் பணிகள் நடைபெறும் நிலையில், எங்கு வேண்டுமானாலும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் வரும் செப்.15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. ஒரு கோடி பெண்களை இலக்காக கொண்டு தொடங்கப்படும் இத்திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எனப் பெயரிட்டு அதற்காக ரூ.7,000 கோடி நிதியையும் ஒதுக்கி, தகுதிகளையும், வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. 

நியாயவிலைக் கடைகளில் முகாம் நடத்தி பயனாளி களிடம் இருந்து விண்ணப்பத்தை பெற்று, அங்கேயே ஆதார் எண்ணை சரிபார்த்து அடுத்த பணிகளை மேற் கொள்ள திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி யுள்ளன.

இதற்காக பள்ளிக்கல்வித்துறையின் எண்ணும் எழுத் தும் தன்னார்வலர்களையும், வருவாய்த்துறை அலுவலர் களையும் நியமித்துள்ளது அரசு. மேலும், ஆதார் எண்ணை சரிபார்க்க பயோமெட்ரிக் கருவி பயன்படுத்தப் படுகிறது. தமிழ்நாட்டில் எந்த நியாயவிலைக்கடையிலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்துக்காக, ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பயோமெட்ரிக் கருவிகள், மகளிர் உரிமைத் திட்ட ஆதார் சரிபார்ப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதனால், மகளிர் உரிமைத் தொகைக்கான பணிகள் முடியும்வரை, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டையின் கீழ், எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், குடும்ப அட்டை இணைக்கப்பட்ட கடையில் மட்டுமே இனி பொருட்கள் வாங்க முடியும். அத்துடன், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக குடும்ப அட்டையில் இருந்து திருமணமான பெண்களை பிரித்து தனி அட்டைக்கு விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதால், புதிய அட்டை வழங்கும் நடைமுறையும் குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment