அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியிலிருந்தும் அர்ச்சகர்களை தமிழ்நாடு அரசு விரைவாக நியமனம் செய்க! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 29, 2023

அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியிலிருந்தும் அர்ச்சகர்களை தமிழ்நாடு அரசு விரைவாக நியமனம் செய்க!

 அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை: 

சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் வரவேற்கத்தக்கத் தீர்ப்பு

அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராகத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பு அளித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசுப்  பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினர்களிலிருந்தும் கோவில் களில் உடனடியாக அர்ச்சகர்களை நியமனம் செய்ய வேண்டும்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

‘‘பார்ப்பனர்களைப்பற்றியே அதிகம் பேசு கிறீர்களே, இப்போதெல்லாம் அவர்கள் திருந்திவிட்டார்கள்; மாறிவிட்டார்கள்'' என்று சில அரைவேக்காட்டு, முழுக்கால் சட்டை அணிந்துள்ள, 69 சதவிகித இட ஒதுக்கீட்டால் பணியில் சேர்ந்து, கைநிறைய சம்பளம் வாங்கும், ‘‘சுயநல வாழ்வையே சொகுசு வாழ்க்கையாக'' அனுபவித்துவரும் விபீடணத் தமிழர்கள் - ‘அண்ணாமலை பிராண்டுகள்' பேசிவருவது கண்கூடு.

அவர்களுக்கு சிலர் எதார்த்தமான நடப்பு களைச் சுட்டிக்காட்டிடுவதும், ‘‘திருந்தாத ஜென் மங்களே, நீங்கள் இருந்தென்ன லாபம்?'' என்று கேள்வி கேட்டு, சொடுக்குவதற்கும், அன்றாட வாழ்க்கையில் ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஒன்றே, ஒன்று இதோ:

தந்தை பெரியாரின் 

இறுதிப் போர் வென்றது!

‘‘ஜாதி அடிப்படையில் கோவில் கருவறைக் குள் பார்ப்பனர்களே பூசை செய்ய உரிமை பெற்றவர்கள்; காரணம், பிறவி அடிப்படையில் பாரம்பரிய (Hereditary Rights)  உரிமை அர்ச்சக ர்களுக்கு உண்டு'' என்று கூறி, வர்ணதர்மத்தின் உயிர்நாடியான பேதம் விதைக்கும் சனாதன ஹிந்து மனுதர்மத்தினைக் காட்டி, கோவில் கட்டிய பக்தனைக்கூட உள்ளே விட மறுப்பது, மனித உரிமை மறுக்கும் அநியாயம் அல்லவா? ‘‘தமிழில் பூஜை (அது முன்பு ‘பூ+செய்'தான்) செய்தால் ‘சாமி தீட்டாகிவிடும்'' என்றெல்லாம் வைத்துக்கொண்டு, ஜாதியின் உயிர்நிலை - ஹிந்துக் கோவிலின் கர்ப்பக்கிரகத்தில் தீண் டாமை என்பதை எதிர்த்துப் பெரியார் தொடுத்த இறுதிப் போர் வென்றது - 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட போராட்ட வரலாறு அது.

இன்றைய நூற்றாண்டு விழா நாயகரான கலைஞர் அவர்கள் அன்றைய முதலமைச்சராக இருந்தபோது, இதற்கென தனிச் சட்டம் இயற்றினார்.  பார்ப்பனர்கள், சங்கராச்சாரியார்கள், இராஜகோபாலாச்சாரியார், மடத்து ஜீயர்கள் முதலியவர்கள் ஓரணியில் நின்று உச்சநீதி மன்றத்தில் நேரடியாக வழக்குத் தொடுத்து தோற்றனர்; என்றாலும்கூட, இந்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தைச் செயல் படுத்த முடியாத அளவுக்குக் குறுக்கீடுகளை சன்னமான சட்டப் பிரச்சினையாக்கி, வினை யாற்றுவதில் இன்றளவும் பார்ப்பனர்கள் மாறவே இல்லை!

முத்தமிழறிஞர் கலைஞர் முதல் 

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரை

எல்லா கட்டங்களிலும் தமிழ்நாடு தி.மு.க. அரசு கலைஞர் ஆட்சி முதல் இன்றுள்ள முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்,  முதலமைச் சராக ஆட்சிபுரியும் காலகட்டத்திலும், அவர் ஜாதி - தீண்டாமை ஒழிப்பிற்கு முன்னுரிமை கொடுத்து, அர்ச்சகர் நியமனங்களை அற நிலையத் துறை அறங்காவலர்கள்மூலம் செய்துள்ள நிலையிலும், இன்னும் பார்ப்பனர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளைத் தேடி குறுக்கு சால் ஓட்டுவதில் சளைக்கவே இல்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தின் 

வரவேற்கத்தக்க தீர்ப்பு

‘சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றினாலும், எத்தியோப்பியன் தன் நிறத்தை மாற்றினாலும் கூட, பார்ப்பனர் தங்களது ஆதிக்கப் புத்தியை ஒருபோதும் கைவிடமாட்டார்கள்' என்று டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் கூறியது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா?

ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அவர்கள் தனது தீர்ப்பில், உச்சநீதி மன்றம் இப்பிரச்சினையில் அளித்துள்ள பல தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி, ‘‘பாரம்பரிய அர்ச்சகர் நியமன முறை சட்டப்படி ரத்தாகி விட்டது; ஆகமம் படித்துத் தகுதியுள்ள எவரும் அர்ச்சகர் பணிக்கு உரிமை உடையவரே ஆவர்'' என்று கொடுத்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சுக்கு, மேல் முறையீடு செய்து, அங்கும் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் கங்காப்பூர்வாலா, ஜஸ்டிஸ் பி.டி. ஆதி கேசவலு ஆகியோரின் முதல் அமர்வு நேற்று (28.7.2023) அளித்த தீர்ப்பில், இதில் ஜாதிப்படி உரிமை கோர முடியாது என்று ஓங்கி மண்டை யிலடிப்பது போலக் கூறிவிட்டனர். என்றாலும், ‘விடாக் கொண்டர்களாக' பார்ப்பனர்கள் தங்களது ஆதிக்க மனப்பான்மையை மாற்றிடத் தயாராகவே இல்லை என்பதைத்தானே இந்தப் பிரச்சினையில் 54 ஆண்டுகால வரலாறு துல்லியமாய் காட்டுகிறது, இல்லையா?

பயிற்சி பெற்ற அனைத்து ஜாதிகளைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்க!

‘‘கல்வி, உத்தியோகங்களில்  ஜாதி அடிப் படையா? தகுதி திறமை என்னாவது?'' என்று பெருங்கூச்சல் போட்ட பார்ப்பனர்கள், தாங்கள் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பாரம்பரிய ஜாதி அடிப்படையில் அனுபவித்துவரும் அர்ச்சகர் பணி தங்களுக்கே நீடிக்கவேண்டும் என்பதற்காக ‘‘அங்கே பிறவி அடிப்படை தேவை; தகுதி- திறமை தேவையில்லை'' என்கின்றனர்.

என்னே இரட்டை நாக்கு!

முரண்பட்டபோக்கு!!

புரிந்துகொள்ளுங்கள்!

தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் விரைவாக அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்களையும் அர்ச்சகர்களாக நியமிக்கவேண்டும். இனியும் காலதாமதம் தேவையில்லை.


கி.வீரமணி 

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

29.7.2023


No comments:

Post a Comment