‘‘ஆளுநரை வெளியேற்று! ஆளுநரை டிஸ்மிஸ் செய்!'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 2, 2023

‘‘ஆளுநரை வெளியேற்று! ஆளுநரை டிஸ்மிஸ் செய்!''

 ‘‘ஆளுநரை வெளியேற்று! ஆளுநரை டிஸ்மிஸ் செய்!'' என்கிற கோரிக்கை- தமிழ்நாடு முழுக்க உள்ள மக்களின் கோரிக்கையாக வரும்!  அதற்கான இயக்கத்தை கட்டுவோம்!
குற்றாலம், ஜூலை 2 ''ஆளுநரை வெளியேற்று! ஆளுநரை டிஸ்மிஸ் செய் என்கிற கோரிக்கை - தமிழ்நாடு முழுக்க உள்ள மக்களின் கோரிக்கையாக வரும் - அதற்கான இயக்கத்தை கட்டுவோம்'' என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்கக் குற்றாலத்திற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு நேற்று (1.7.2023) பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

குற்றாலத்தில், திராவிடர் கழகத்தின் சார்பில், 44 ஆவது ஆண்டு பெரியாரியல் பயிற்சி முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏராளமான பட்டதாரி இளைஞர்கள், இருபால் இளைஞர்கள் மற்றும் மாண வர்கள் முகாமில் கலந்துகொண்டுள்ளனர். கடந்த நான்கு நாள்களாக இப்பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஏராளமான மாணவர்கள் இந்த இயக்கத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள்!

'திராவிட மாடல்' ஆட்சி, பகுத்தறிவு, சமூகநீதி இவற்றையெல்லாம் மய்யப்படுத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பயிற்சி முகாம் ஓர் அரிய வாய்ப்பு. ஏராளமான மாணவர்கள் இந்த இயக்கத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள்.

44 ஆம் ஆண்டு பயிற்சி முகாமில் கலந்துகொள்ள வந்திருக்கிறேன்; இங்கே வரும்பொழுது செய்தியாளர்கள் நண்பர்களை சந்திப்பது வழக்கம்.

செய்தியாளர்: தமிழ்நாடு ஆளுநர், அமைச்சர் செந்தில்பாலாஜியை நீக்கி அறிவிப்பு வெளியிட்டு பிறகு திரும்பப் பெற்றது குறித்து தங்கள் கருத்து என்ன?

முழுக்க முழுக்க ஒரு போட்டி அரசாங்கத்தையே நடத்துகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழர் தலைவர்: ஏற்கெனவே நான் என்னுடைய அறிக்கையில் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

இதுவரை எத்தனையோ ஆளுநர்கள் தமிழ்நாட் டிற்கு வந்திருந்தாலும்கூட,  - 'திராவிட மாடல்' ஆட்சி இங்கே சிறப்பாக நடைபெறக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு அனுப்பப்பட்டவராக இருக்கிறார் இந்த ஆளுநர்.

ஏனென்றால், அவர் வந்த நாள் முதல் இந்த நாள் வரை முழுக்க முழுக்க ஒரு போட்டி அரசாங்கத்தையே நடத்துகிறார்.

அவர் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு விரோதமாக - அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மாகவே நடந்துகொள்கிறார்.

அரசமைப்புச் சட்டத்தில், அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதைப்பற்றிக்கூட புரிந்து கொள்ளாமல், ஆளுநர் ஆட்சி நடப்பதாக நினைத்துக் கொண்டு அவர் இஷ்டப்படி நடந்துகொள்கிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் - அவர்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை உடனுக்குடன் பரிசீலித்து அனுப்பவேண்டும் என்று மற்ற மாநிலங்களில் நடைபெறுவதைப்போல இங்கு நடக்காமல், திட்டமிட்டே இவர் வேண்டுமென்றே 13 மசோதாக்களை கையிலே வைத்திருப்பது மட்டுமல்ல - அண்மையில் நடைபெற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு - மற்றவை எல்லாம் உங்களுக்குத் தெரியும்.

வழக்குத் தொடர்ந்து நடைபெறுகிறது - அவருடைய ரிமாண்டை நீட்டித்திருக்கிறார்கள்; மருத்துவமனையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது - அதனை அனுமதித்திருக்கிறது உயர்நீதிமன்றம்.

இரண்டாண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால்தான் பதவியைப் பறிக்க முடியும்!

இந்தச் சூழ்நிலையில், ஒருவர்மீது வழக்குப் போடுவதினாலேயே அவர் குற்றவாளி ஆகிவிட முடியாது. தீர்ப்பு வரவேண்டும்; அந்தத் தீர்ப்பில் இரண்டாண்டுகளுக்குமேல் தண்டனை கொடுத்தால் தான், ஒருவரின் பதவியைப் பறிக்க முடியும். மற்ற மாநிலங்களில் இதுபோன்று நடந்திருக்கிறது. ஆனால், அமைச்சர்  செந்தில்பாலாஜி பிரச்சினையில் அப்படி யில்லை. 

முதலமைச்சரின் பரிந்துரையில் கையெழுத்துப் போடுவதுதான் ஆளுநருடைய வேலை!

யாரை அமைச்சராகப் போடுவது என்பது முதல மைச்சருடைய தனி உரிமை; ஆங்கிலத்தில் அதற்கு இருக்கின்ற சொல் Prerogative - ''It is a Prerogative of the Chief Minister of any State. To whom he should appoint Minister and advice of the Chief Minister'' என்ற வார்த்தைதான் அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது.

முதலமைச்சருடைய அறிவுரைப்படி, அவர் யாரைப் பரிந்துரை செய்கிறாரோ, அதில் கையெழுத்துப் போடவேண்டியதுதான் ஒரு ஆளுநருடைய வேலை.

அரசமைப்புச் சட்டத்தின் 163 ஆவது பிரிவில் மிகத் தெளிவாக இருக்கிறது.

இராஜகோபாலாச்சாரியார், இலாகா இல்லாத அமைச்சராக இருந்திருக்கிறார்!

அமைச்சர் செந்தில்பாலாஜியை இலாகா இல் லாத அமைச்சர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் நியமித்திருக்கிறார். இலாகா இல்லாத அமைச்சர் களை நியமிப்பது என்பது  காலங்காலமாக இருந் திருக்கிறது. ஏன்? கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜ கோபாலாச்சாரியார், இலாகா இல்லாத அமைச்சராக இருந்திருக்கிறார்.

இலாகா இல்லாத அமைச்சர் என்று சொன்னால், அவருக்கு வேலை இல்லை என்று அர்த்தம் இல்லை. எந்த இலாகாவில் என்ன செய்யவேண்டுமோ அதை செய்வதற்குப் பரிபூரண சுதந்திரம் அவருக்கு  உண்டு.

அப்படி இருக்கக்கூடிய சூழலில், அமைச்சர் செந்தில்பாலாஜியை மாற்றுவதற்கோ, நீக்குவதற்கோ ஆளுநருக்கு எந்த உரிமையும் கிடையாது.

அதுகுறித்து நான் எழுதிய அறிக்கையில், அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின்கீழ் நீங்கள் சொல்கிறீர்கள்? என்று கேட்டிருந்தேன்.

நீதிமன்றத்திற்குப் போய் நீதியை நிலைநாட்டுவோம் என்றார் முதலமைச்சர்

ஆளுநரின் அறிவிப்பைக் கண்டித்து, நீதிமன்றத் திற்குப் போய் நாங்கள் நீதியை நிலைநாட்டுவோம் என்று முதலமைச்சர் சொல்லிவிட்டார்.

மக்கள் மன்றம் கொதித்தெழுந்துவிட்டது; அதே நேரத்தில் நீதிமன்றத்திற்குப் போனால் என்னாகும்? ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் இந்த ஆளுநர் கண்டிக்கப்பட்டு இருக்கிறார், பேரறிவாளன் வழக்கில்.

''உங்களுடைய எல்லையைத் தாண்டி நீங்கள் நடந்துகொள்கிறீர்கள்; உங்கள் அதிகார எல்லையை நீங்கள் மீறுகிறீர்கள்'' என்று தெளிவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆளுநருடைய நிலைப்பாடு, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது!

ஆகவே, ஆளுநருடைய நிலைப்பாடு, அரச மைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. 

அதைவிட வேடிக்கை என்னவென்றால், தமிழ் நாட்டுத் தலைவர்கள் - ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அத்துணைத் தலைவர்களும் ஆளுநரைக் கண்டித்து அறிக்கைகளைக் கொடுத்தவுடன், ஆளுநர் உணர்ந்தாரோ என்னவோ - அதனுடைய ஆபத்தை உள்துறை அமைச்சர் தெரிந்துகொண்டிருக்கின்றார்.

உச்சநீதிமன்றத்திற்கு வழக்குப் போனால், அது யார் யாரையெல்லாம் பாதிக்கும் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டதினால், நான்கு மணிநேரத்தில் தமிழ் நாட்டு ஆளுநரின் அறிவிப்புத் திரும்பப் பெறப்பட்டது.

இதுபோன்று முன்யோசனையற்ற, தெளிவற்ற நிலையில் அறிவிப்பை வெளியிட்ட ஆளுநர், இப்பொழுது என்ன சொல்கிறார், இந்திய அரசு வழக்குரைஞருடன் ஆலோசனை செய்யவிருக்கிறேன் என்கிறார்.

சட்ட ஆலோசனை கேட்ட பிறகு, செய்வதுதான் மிகவும் முக்கியம். ''வண்டிக்கு முன்னால் குதிரையைக் கட்டுவதா? குதிரைக்கு முன்னால் வண்டியைக் கட்டுவதா?'' ''ஆத்திரக்காரனுக்கு அறிவு மட்டு!''

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்புகிறார்!

தமிழ்நாட்டு ஆளுநர் எல்லாவற்றிலும் ஆத்திரமாக இருக்கிறார்; வள்ளலாரை சனாதனி என்று சொல்கிறார். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்புகிறார். 

திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுகிறார். ஆரிய - திராவிடத்திற்கு விளக்கம் சொல்கிறார்.

இவர் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார் - போட்டி அரசு நடத்தவேண்டும்? என்று துடிக்கிறார்.

ஆகவே, தமிழ்நாடு முழுக்க வைக்கவேண்டிய கோரிக்கை தமிழ்நாடு ஆளுநர் உடனே ராஜினாமா செய்யவேண்டும்; அவருக்கு ஜனநாயக உணர்வு இருந்தால், ராஜினாமா செய்வார், நான் தவறு செய்து விட்டேன் என்று.

அப்படி அவர் செய்வதற்குத் தயாராக இல்லை யென்றால், அவரை டிஸ்மிஸ் செய்யவேண்டும். 

 தமிழ்நாடு முழுக்க உள்ள மக்களின் கோரிக்கையாக வரும்

''ஆளுநரை வெளியேற்று! ஆளுநரை டிஸ்மிஸ் செய்'' என்கிற கோரிக்கை - தமிழ்நாடு முழுக்க உள்ள மக்களின் கோரிக்கையாக வரும் - அதற்கான இயக்கத்தை கட்டுவோம்!

இதுதான் இப்பொழுது மிகவும் முக்கியம்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  செய்தி யாளர்களிடம் கூறினார்.

No comments:

Post a Comment