ஒன்றிய அரசுக்குத் தமிழர் தலைவர் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 12, 2023

ஒன்றிய அரசுக்குத் தமிழர் தலைவர் கண்டனம்

 அமலாக்கத் துறை தலைமை அதிகாரி - 3 ஆம் முறையாக பதவி நீடிப்பு - ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரியான குட்டு!

‘‘வணிகர் மீதான குற்ற வழக்கை அமலாக்கத் துறை விசாரிக்கும்!''

ஒன்றிய அரசின் இம்முடிவுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு!

மாநில அரசு உரிமைப் பறிப்பு - வணிகர்களை மிரட்டுதல் - 

ஒரே கல்லால் இரண்டு காய்களை அடிப்பதா?

வணிகர்கள்மீது குற்றங்களை மாநில அரசே விசாரித்து வந்த நிலையில், இனி ஒன்றிய அரசின் அமலாக்கத் துறையே விசாரிக்கும் என்ற ஒன்றிய அரசின் முடிவுக்கு தமிழ்நாடு அரசின் அமைச்சர் தங்கம்தென்னரசு டில்லியில் நடைபெற்ற கூட்டத்திலேயே எதிர்ப்புத் தெரி வித்துள்ளார். ஒரே கல்லால் இரண்டு காய்களை அடிப்பதுபோல, மாநில உரிமைகளைப் பறித்தல், வணி கர்களை மிரட்டல் என்ற யுக்தியைப் பயன்படுத்தும் ஒன்றிய பி.ஜே.பி. அரசைக் கண்டித்து  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

உச்சநீதிமன்றத்தின் நேற்றைய (11.7.2023) தீர்ப்பு ஒன்று மிக முக்கியமான ஜனநாயகப் பாதுகாப்பை அடிநாதமாகக் கொண்டதாகும்.

எதேச்சதிகாரத்தின்மீது 

விழுந்த குட்டு!

உச்சநீதிமன்றம், அமலாக்கத் துறையின் தலைமை அதிகாரிக்கு, பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். அரசு - சிறிதும் கூச்சநாச்சமின்றி - மூன்றாவது முறையாக பதவி நீடிப்பு (One year extension)  கொடுக்கும் அந்த ஒன்றிய அரசின் ஆணை செல்லாது; அவர் 31.7.2023 வரைதான் பதவியில் நீடிக்கவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது! ஒன்றிய அரசின் எதேச்சதி காரத்தின்மீது விழுந்த சரியான குட்டு ஆகும் இது!

எதற்கெடுத்தாலும் - எதிர்க்கட்சித் தலைவர்கள் - அமைச்சர்கள் - சட்டமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தி அடி பணிய வைக்க ஒரு மின்னல் வேகத் தாக்குதல் செய்து பாய வைக்கும் (பிளிட்ஸ்கிர்க் என்று இரண்டாம் உலகப் போரில் ஒரு தாக்குதல் முறை உள்ளதை நினைவூட்டும் வகையில்) ஆயுதமாகவே அமலாக்கத் துறை பயன்படுத்தப்பட்டு வருவது பாரறிந்த செய்தியாகும்.

ஒன்றிய அரசு பயன்படுத்தும் 

திரிசூலங்கள்!

தேர்தல் ஆணையம், சி.பி.அய்., வருமான வரித் துறை போன்ற முக்கியத் துறைகள் திரிசூலங்களாகவே, அரசியல் எதிரிகள்மீது பாய்வதும், அவர்கள் அக்கட்சி களை விட்டு வெளியேறி ஆளும் பா.ஜ.க. கூட்டணிக்கு மாறிவிட்டால் நடவடிக்கைகள் காணாமற்போவதும் கண்கூடாக நடப்பது அல்லவா?

மூன்றாவது முறையாக இந்த மிஸ்ரா என்பவருக்கு (உயர்ஜாதி பார்ப்பனருக்கு) பதவி நீடிப்பு அதுவும் உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பினை மதிக்காமல், அதற்கு எதிராகவே தரப்பட்டுள்ளது!

இதனையே உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி, இப்படி ஓர் அதிரடித் தீர்ப்பை வெளியிட்டுள்ளது!

குறைந்த அளவு அரசு - நிறைந்த அரசு ஆளுமை என்பது இதுதானோ?

இதற்கு சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் ஆணைய உறுப்பினருக்கு 7 ஆவது முறை தீர்ந்து, 8 ஆவது முறை பதவி நீடிப்பு என்பதாக ஒன்றிய மோடி அரசு பதவி நியமனத்தை நீட்டி குறிப்பிட்டவருக்குத் தந்தபோது, நீதிபதிகள், ‘‘அவர் என்ன அவ்வளவு இன்றியமை யாதவரா? ஏன் ஒருவருக்கே இத்தனை முறை தொடர் பதவி நீடிப்புகள்?'' என்று சுட்டிக்காட்டி, கண்டித்துக் கூறவில்லையா? ‘‘அவர் இல்லையானால் அந்த அமைப்பே இயங்காதா?'' என்று சொடுக்கிக் கேட்டனர்!

பல அதிகாரிகள் பிரதமர் மோடி அவர்கள் குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது, அவருடன் இருந்த அதிகாரிகளான,  அவர்களையே, ஆங்காங்கு  நியமனப்படுத்துகிறார்கள்; குறிப்பிட்ட அந்த அதிகாரி வேறு ஒரு பதவியிலிருந்து உடனே அதில் இராஜினாமா; அதை உடனடியாக ஒப்புக்கொண்டு, உடனே புதிய பதவி நியமனம் - இப்படி பல ‘திருக்கூத்துகள்!'

அவர் பிரதமர் பதவியேற்க (2014 இல்) முதல் முறைவந்தபோது கூறியது, ‘‘குறைந்த அளவு அரசாங்கம், நிறைந்த அரசு ஆளுமை', (‘Minimum Government Maximum Governance') என்று வாக்குறுதி கொடுத்தாரே, அது இதுதானா?

ஒன்றிய நிதியமைச்சர் அறிவிப்பு -  தமிழ்நாடு அமைச்சர் 

தங்கம் தென்னரசு எதிர்ப்பு!

மற்றொரு அதிர்ச்சிக்குரிய செய்தி, நேற்று (11.7.2023) டில்லியில் நடைபெற்ற 50 ஆவது ஜி.எஸ்.டி. கலந்தாய்வுக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், ‘‘வணிகர்கள் மீதான குற்ற வழக்குகள் மாநில அரசு சட்டங்கள்கீழ் பதிவு செய்து விசாரணைக்கு வருவதை இனி ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை விசாரணை யின்கீழ் வரும் பண மோசடி சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வகையில், இது மாற்றப்படுகிறது'' என்று அறிவித் துள்ளதை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அக்கூட்டத்திலேயே அதனை எதிர்த்து, ‘‘இது ஏற்கத்தக்கதல்ல; தமிழ்நாட்டு சிறு வணிகர்கள் மிகவும் தொல்லைக்குட்படுத்தப்பட்டு அவதிப்படுத்திடும் ஆபத்து உள்ளது'' என்பதைக் கூறி, கண்டித்து ஒப்புக் கொள்ள மறுத்துள்ளார்!

ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்த குஜராத் முதலமைச்சர்தானே நரேந்திர மோடி!

பல வழக்குகள் அமலாக்கத் துறையின் அதீத நடவடிக்கைகள் உயர்நீதிமன்றங்களில், உச்சநீதி மன்றத்தில் வழக்காக உள்ள நிலையில், இனி வணிகர்களும் அந்த வட்டத்தின்கீழ் கொண்டு வரப்படுவது - மோடி அரசின் ‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்' - மாநில உரிமையையும் பறித்தல், வணிகர் களையும் மிரட்டல் வளையத்திற்குள் கொணர்வது என்ற நடவடிக்கையேயாகும்.

இது வன்மையான கண்டனத்திற்குரியது!

பிரதமர் மோடி, முன்பு குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அன்றைய டில்லி ஒன்றிய அரசு, 

ஜி.எஸ்.டி.யைக் கொண்டு வந்தபோது கடுமையாக எதிர்த்து, ‘‘இதனை அனுமதிக்கவே மாட்டேன்'' என்று முழங்கியவர் அல்லவா?

இப்போது இப்படியா?

என்ன நியாயம்?


கி.வீரமணி 

தலைவர்,

திராவிடர் கழகம்

12.7.2023


No comments:

Post a Comment