“பிரதமர் பதவி வேண்டாம் என்றவர்” - குடியரசுத் தலைவர் சஞ்சீவ(ரெட்டி) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 15, 2023

“பிரதமர் பதவி வேண்டாம் என்றவர்” - குடியரசுத் தலைவர் சஞ்சீவ(ரெட்டி)

(18.8.1977 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் காமராசர் படத்தைத் திறந்து வைத்து குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ (ரெட்டி) ஆற்றிய உரையிலிருந்துர்

எனக்கு தமிழ்நாடு மிகவும் நெருக்கமான, அறிமுகமான மாநிலம், மறைந்த காமராசர் அவர்களோடு 35 ஆண்டு கால தொடர்பு எனக்கு உண்டு. நான் ஆந்திர மாநில காங்கிரஸ் செயலாளராக இருந்தபோது, காமராசர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்தார், நான் அவரைவிட 10 ஆண்டுகள் அரசியலுக்கு இளையவன்.அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆன சில மாதங்களுக்குப் பிறகு நான் ஆந்திர முதலமைச்சரானேன். அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியவுடன் நானும் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினேன்.

நேருவுக்குப் பிறகு யார் என்ற கேள்விக்குறி இந்திய அரசியலிலும், ஏன் உலக நாடுகளிலேயே பெரும் பிரச்சினை. யாக எழுந்தபோது, அந்த பிரச்சினைக்கு வால்பகதூரை ஒருமனதாக பிரதமர் ஆக்கியதன் மூலம் தீர்வு கண்டவர் காமராசர் அந்தப் பணியில் நானும் காமராசர் அவர்களுக்கு ஒத்துழைத்தேன். நான் ஒரு உண்மையைக் கூற விரும்பு கிறேன். அந்த நேரத்தில் மிகப் பெரும்பாலானவர்கள், நீங்களே பிரதமராக இருங்கள் என்று காமராசரிடம் வலியுறுத்தினர். நானும் காமராசரிடம் அதையே வலியுறுத்தினேன்.

தென்னகத்திலேயிருந்து இனிமேல் ஒருவர் பிரதமராவதற்கு வாய்ப்புக் கிட்டவா போகிறது? எனவே நீங்களே பிரதமராக இருங்கள் என்று சொன்னேன். அதற்கு காமராசர் “வேண்டாம் அப்படியானால் நமது வேலை எல்லாம் போய்விடும்“ என்றார். பிரதமர் பதவி தானாக வந்தும் ஏற்க மறுத்த பக்குவத்தைப் பெற்ற தலைவர் காமராசர்.

காமராசர் சொன்னால்தான் நான் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவேன் என்று அன்று இந்திராகாந்தி சொன்னார். மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் காமராசர், தனக்கு என்று எந்தச் சொத்தையும் அவர் சேர்த்து வைத்துக் கொள்ளவில்லை.

கட்சிப் பணம் ஒவ்வொரு பைசாவையும் வங்கியில் போட்டு முறையான கணக்கு வைத்திருந்த தலைவர்.

நான் அவரோடு பழகிய 35 ஆண்டு கால பழக்கங்களைச் சொன்னால் பல மணி நேரமாகும். எனவே நான் அவைகளை விவரிக்க விரும்பவில்லை.

அவர் இறப்பதற்கு முந்தைய ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மூன்று முறை நான் அவரை சந்தித்தேன். (அப்போது அவசர நிலை அமலில் இருந்த காலம்). அவர் மகிழ்ச்சியின்றி காணப்பட்டார். அவர் மன நிம்மதியின்றியே காலமானார். பலர் பலவிதமாகச் சொல்லலாம். ஆனால் நான் அவருடனே நேரில் பழகியவன். 1940ஆம் ஆண்டிலும், 1942ஆம் ஆண்டிலும் நாங்கள் ஒன்றாகவே சிறையிலிருந்தோம்.

நான் குடியரகத் தலைவர் பதவி ஏற்ற பிறகு கலந்து கொள்ளுகிற முதல் நிகழ்ச்சி இந்த காமராசர் படத்திறப்பு நிகழ்ச்சிதான் என்பதிலே மிகுந்த பெருமை அடைகிறேன். இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment