திருப்பாதிரிப்புலியூரின் திருஞானசம்பந்தர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 29, 2023

திருப்பாதிரிப்புலியூரின் திருஞானசம்பந்தர்!

பொ. நாகராஜன் பெரியாரிய ஆய்வாளர்

இன்றிலிருந்து எழுபத்து ஒன்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்று வரலாற்று பக்கங்களை மீண்டும் ஒரு முறை புரட்டிப் பார்க்கிறேன்! 

கடலூரின் திருப்பாதிரிப்புலியூரில் தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு 1944ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள் நடைபெற இருந்தது. மாநாட்டில் கலந்து கொண்டு தொண்டர்களை உற்சாகப்படுத்த, தந்தை பெரியார் முதல் நாள் இரவே கடலூருக்கு வந்து சத்திரம் ஒன்றில் தங்கியிருந்தார். மாநாட்டில் அறிஞர் அண்ணாவும் உரையாற்ற இருந்ததால், இயக்கத் தோழர்கள் பம்பரமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்!

கடலூரைச் சேர்ந்த 11 வயது சிறுவனும் தனது ஆசிரியரும் வழிகாட்டியுமான திராவிட இயக்கத் தொண்டருடன் இரவு முழுவதும் மாநாட்டு பந்தலில் வேலை செய்தார். கொடிகளை கட்டுவதிலும் தோரணங்களை தொங்க விடுவதிலும் ஆர்வமாக செயலாற்றினார். சிறுவன் என்பதால் களைத்துப் போனார். ஆனால், மறுநாள் தந்தை பெரியாரை சந்திக்கும் வாய்ப்பு தனக்கு கிட்ட உள்ளதை அறிந்து அந்த களைப்பையும் களைந்தெறிந்தார்!

அந்த கடலூர் சிறுவனுக்கு ஜூலை 29ஆம் நாள் 1944ஆம் ஆண்டு ஒரு புதிய விடியலைத் தந்தது போல் இருந்தது . தரணி போற்றும் தந்தை பெரியாரை நேரில் சந்திக்கப் போகிறோம் என்ற ஆவல், அவருக்கு ஒருபுறம் ஆனந்தமாகவும் ஒருபுறம் அச்சமாகவும் இருந்தது!

தந்தை பெரியார் தங்கியிருந்த கடலூர் சத்திரத்திற்கு அந்த சிறுவனை அழைத்துச் சென்றார்கள். பெரியாரை நேரில் சந்தித்த சிறுவன் ஒருவித சொல்லவொண்ணாத உணர்ச்சி நிலையில் இருந்தார். பெரியாருக்கு தனது வணக்கத்தைச் சொன்னார். சிறுவனை கூட்டிச் சென்றவர் பெரியாரிடம், " அய்யா....இந்தப் பையன் நமது கழகத்தில் ஈடுபாடு உள்ளவன். நமது மேடையில் நன்றாகப் பேசுகிறான்!" என்று அறிமுகம் செய்து வைத்தார். சிறுவனுக்கோ மகிழ்ச்சியின் காரணமாக பேச்சு வரவில்லை! 

மீண்டும் பெரியாரை வணங்கி விடைபெற்றார்!

ஏமாற்றமடைந்த சிறுவனுக்கு பெரியாருடன் பேசுகின்ற அரிய வாய்ப்பு அன்று மதியமே கிடைத்தது. மாநாட்டின் மதிய இடைவேளையில், மதிய உணவுக்கு கடலூர் முதுநகர் பிரமுகர் இல்லத்தில் நடந்த விருந்தில் சிறுவனும் கலந்து கொண்டார். அப்போது பெரியாரை மீண்டும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது!  

பெரியார் பேசினார், " நீ என்ன படிக்கிறாய்? " .. என்று கேட்டார்.

" அய்ந்தாம் வகுப்பு " என அந்த சிறுவன் பதிலளித்தார். " நன்றாகப் படி!" ...என தட்டிக் கொடுத்தார்! பின்னர் மாநாட்டில் பெரியார் சிறப்பானதொரு உரையை நிகழ்த்தினார். அங்கு 11 வயது சிறுவனுக்கும் மாநாட்டில் உரையாற்றுகின்ற அபூர்வமான வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாநாட்டில் அருமையான உரை ஒன்றை நிகழ்த்தினார்.

பெரியார் பேசிய பின்னர் மாநாட்டில் பேசிய அண்ணா, அந்த சிறுவனின் பேச்சாற்றலை வியந்து பாராட்டினார். அண்ணாவின் பேச்சு இன்றும் அதற்கு சாட்சியாக விளங்குகிறது!

" இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை இந்தக் கால ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தராக ஆக்கியிருப்பார்கள்! இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் பெரியாரின் பகுத்தறிவுப் பால்தான் என்று தெரிகிறது! "....என மிகவும் வியந்து, புகழ்ந்து பேசினார், அண்ணா!

அண்ணாவின் அந்த திருஞான சம்பந்தர் உவமை தந்தை பெரியாரை பலமாக சிரிக்கச் செய்தது. மாநாட்டில் தொண்டர்களோ ஆர்ப்பரித்து கையொலி எழுப்பி அதிரச் செய்தார்கள்!

அந்த சிறுவன்....

திருப்பாதிரிப்புலியூரின் திருஞான சம்பந்தரோ......திரு திருவென முழித்தார்! 

எழுபத்து ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா குறிப்பிட்ட அந்த திருஞான சம்பந்தர்..... திருப்பாதிரிப்புலியூரின் திருஞான சம்பந்தர் வேறு யாருமல்ல! ... நமது மதிப்பிற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அய்யா அவர்கள் தான்! 

ஆமாம்! பெரியாரின் பகுத்தறிவு பால் அருந்தியதால் அவர் பால் என்றென்றும் உண்மையாக வாழ்பவர் ஆசிரியர் வீரமணி அய்யா!

No comments:

Post a Comment