குளிர்சாதன வகுப்பு பெட்டிகளின் கட்டணம் 25 சதவீதம் வரை குறைப்பு: ரயில்வே அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 10, 2023

குளிர்சாதன வகுப்பு பெட்டிகளின் கட்டணம் 25 சதவீதம் வரை குறைப்பு: ரயில்வே அறிவிப்பு

புதுடில்லி, ஜூலை 10 - 9 ரயிலில் 50 சதவீதம் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள குளிர்சாதன வசதி பெட்டிகளுக்கு 25 சதவீதம் வரை பயணக் கட்டணம் குறைக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 24 மாநிலங்களில் 46 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றில் சில ரயில்களுக்கு போதிய வரவேற்பு இல்லை. எனவே வந்தே பாரத் உட்பட குளிர்சாதன வசதி ரயில் பெட்டிகளின் பயணக் கட்டணத்தை குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

இதுதொடர்பாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

குளிர்சாதன வசதி வகுப்பு பெட்டிகளை பயணிகள் பயன்படுத்துவதை மேம்படுத்தும் நோக்கில், அவைகளுக்கான தள்ளுபடி கட்டணத் திட்டங்களை அறிமுகப்படுத்த ரயில்வே மண்டலங்களின் முதன்மை தலைமை வணிக மேலாளர்களுக்கு அதிகாரம் வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், குளிர்சாதன வசதி சேர் கார் மற்றும் எக்ஸிகுடிவ் வகுப்பு உட்பட குளிர்சாதன வசதி பெட்டிகள் கொண்ட அனைத்து ரயில்களுக்கும் கட்டண சலுகை பொருந்தும்.

பயணச் சீட்டின் அடிப்படை கட்டணத்தில் இருந்து அதிகபட்சம் 25 சதவீதம் தள்ளுபடி வழங்கலாம். இதுதவிர, முன்பதிவு கட்டணம், அதிவிரைவு ரயில்களுக் கான கூடுதல் கட்டணம், ஜிஎஸ்டி போன்ற பிற கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது. கடந்த 30 நாட்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான பயணிகள் எண்ணிக்கை கொண்ட வகுப்புகளில் 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். இந்த தள்ளுபடியின் அளவு, பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து நிர்ணயிக்கப்படும். இந்த தள்ளுபடி உடனடியாக அமலுக்கு வரும். இருப் பினும், ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் திருப்பித் தர மாட்டாது. விடுமுறை அல்லது விழாக் கால சிறப்பு ரயில்களில் இந்த திட்டம் பொருத்தாது. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாத புள்ளிவிவரங்களின்படி, போபால்-இந்தூர் இடையேயான வந்தே பாரத் ரயிலில் 29 சதவீத பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர்.

இதே போல நாக்பூர்-பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் சராசரி எண்ணிக்கை 55 சதவீதம் மட்டுமே.

எனவே இந்த குளிர்சாதன வசதி பயணக் கட்டண சலுகை குறைவான பயணிகள் எண்ணிக்கை கொண்ட வந்தே பாரத் ரயில்களில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment