2024 மக்களவைத் தேர்தல்: தி.மு.க.வின் வெற்றி-‘இந்தியா'வின் வெற்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 24, 2023

2024 மக்களவைத் தேர்தல்: தி.மு.க.வின் வெற்றி-‘இந்தியா'வின் வெற்றி!

முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஜூலை 24- வரும் மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றிக்கு கடுமையாகப் பாடுபட வேண்டும் என்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி யுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று (23.7.2023) எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 

திமுக தமிழ்நாட்டை 6 ஆவது முறையாக ஆளும் இயக்கமாக மட்டுமின்றி, இந்திய வரலாற்றின் முக்கிய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத இயக்கமாகவும் செயலாற்றி வருகிறது.

நாட்டின் பன்முகத் தன்மையைச் சிதைத்து, ஜனநாயகத்தை வேரறுக்கும் சூழல் நிலவுகிறது. அவற்றை எதிர்கொண்டு, ஜனநாயகத்தை மீட்பதில் திமுக முனைப்புடன் செயல்படுகிறது.

விரைவில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.

மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் திமுக பொறுப்பாளரை நியமிக்கும் பணி நிறை வடைந்து, பூத் கமிட்டிகளும் முறையாக அமைக்கப்பட்டு, தி.மு.க. தலைமைக் கழகத் தால் ஆய்வு செய்யப்பட்டு, உறுதி செய்யப் பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் சந்திப்பதைவிட, மண்டலந்தோறும் சந்திப்பது பயன்தரும் என்பதால், முதல் கட்டமாக, திருச்சி கருமண்டபம் ராம்ஜி நகரில், டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் டெல்டா மாவட்டங்களில் உள்ள 12,645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பணி தேர்தல் நாளன்று மட்டும் முடிந்து விடு வதில்லை. அரசுக்கும், கட்சிக்கும், வாக்காளர் களுக்கும் பாலமாகச் செயல்படும் பொறுப்பும் அவர்களிடம் உள்ளது.வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புஉள்ளிட்ட பணிகளும் உள்ளன.புதிய வாக்காளர்களை சேர்ப்பதுடன், இறந்த வாக் காளர்கள் பெயரில் யாரும் வாக்களிக்காமல் பார்த்துக்கொள்வதும் முக்கியமாகும்.

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில், திமுக ஆதரவு வாக்காளர்கள் பலரின் பெயர் கள் நீக்கப்பட்டு, போலி வாக்காளர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு முன்பும், தேர்தல் நாளன்றும் செய்ய வேண்டிய கடமைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட நிலையில், திமுகவுக்கு அவப்பெயரை உருவாக்கும் வகையில், எங்கோ நடக்கும் நிகழ்வுகளை, வெட்டி, ஒட்டி திமுக ஆட்சியில் நடைபெற்றது போல பரப்புவோரின் சதிச் செயல்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சமூக வலைதளங்களில் முறையாக இயங்கத் தயாராகும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

கட்சியினர் நடமாடும் ஊடகமாக மாற வேண்டும். மக்கள் பிரச்சினைகளையும், தேவைகளையும் அறிந்தவர்கள் நீங்கள்தான். இந்தப் பயிற்சிக் கூட்டத்தின் நிறைவாக பொதுச்செயலாளர் தலைமை உரை யாற்றுகிறார். நான் சிறப்புரை ஆற்று கிறேன். கூட்டத்தில் பங்கேற்பதுடன் உங்கள் பணி முடிவதில்லை. உங்கள் வாக்குச் சாவடிக்கு உட்பட்டதெருக்களில் பிரச்சாரம் மேற்கொண்டு, அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பும் உங்களுக்கு உள்ளது.

மக்களவைத் தேர்தல் உரிய நேரத் திலோ அல்லது முன்கூட்டியோ வரலாம். முன்கூட்டியே வந்தாலும்கூட, அதை சந்திக்க வலிமையுடன் இருக்க வேண்டும். திமுக மீது அவதூறு பரப்புவோர், ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். எனவே, ஆட்சியின் சாதனைகளையும், அவற்றால் மக்கள் அடைந்துள்ள பயன் களையும் பொதுமக்களிடம் கொண்டு செல்ல இந்த பயிற்சிப்பாசறை உங்களுக்கு வழிகாட்டும். இதில் பங்கேற்று, கட்சியின் வெற்றிக்கு கடுமையாகப் பாடுபட வேண்டும்.

இந்தியாவின் வெற்றி நம் கையில் என்பதால், அவதூறுகளைப் பரப்பவும், நெருக்கடிகளை உருவாக்கவும் அரசியல் எதிரிகள் தொடர்ந்து செயல்படுவர். ஆனால், சவால்களை வென்று, சாதனை படைத்திடும் ஆற்றல் கட்சியினருக்கு உண்டு. 

-இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவித் துள்ளார்.


No comments:

Post a Comment