இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் (1859 ஜூலை 7) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 7, 2023

இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் (1859 ஜூலை 7)

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் இந்திய ஒடுக்கப்பட்டோர் அரசியல் வரலாற்றில் பாபா சாகேப் அம்பேத்கருக்கு, முன்னோடியாகவும், நீதிக்கட்சியில் ஒடுக்கப்பட்டவர் முகமாகவும் இருந்தார். 1893-இல் ”பறையன்’ எனும் இதழை இரட்டைமலை சீனிவாசன் துவக்கினார். தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கான தனிப் பள்ளி துவங்கப்பட்டதில் இந்த இதழின் பங்கு முக்கியமானது. இந்த இதழ் 1900 வரை 7 ஆண்டுகள் நிற்காமல் வெளியானது. இந்த இதழ் மிகப்பெரிய விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டது.

1900-இல் தென்னாப்பிரிக்கா சென்ற அவர் அங்கு நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் பங்கு கொண்டார். பின்னர் 1920-இல் தாயகம் திரும்பி நீதிக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் அரசியலில் தவிர்க்க முடியாதவராக உருவெடுத்தார். பொதுச்சாலைகள், பொதுக் கிணறுகள், கோவில்களில் பிற சமூகத்தினர் பயன் படுத்துவது போன்று தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உரிமை கிடைக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 8, 1924இல் அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் தீர்மானம் கொண்டுவந்து அதை நடைமுறைப் படுத்தியவரும் இவர் தான். இவரின் மகத்தான பணிகளைப் பாராட்டி அன்றைய பிரிட்டிஷ் அரசு 1926 பிப்ரவரி 20-ஆம் நாள் ராவ் சாஹிப் பட்டத்தை இவருக்கு வழங்கிச் சிறப்பித்தது.

1930-ஆம் ஆண்டு லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் இரட்டைமலை சீனிவாசன். இந்தியாவில் இருந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்  அண்ணல்  அம்பேத்கர்,  சர் ஏ.டி.பன்னீர்செல்வம், சர்.ஏ. ராமசாமி முதலியார் போன்றோர் ஆவார்கள். மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அய்ந்தாம் ஜார்ஜ் மன்னருடன் கை குலுக்கிய போது, தான் கை குலுக்க மறுத்து தன் கையை எடுத்து பின்னால் கட்டிக் கொண்டார் சீனிவாசன்.

ஏன் என ஆங்கில மன்னர் கேட்ட போது, ”நான் தீண்டப்படாதவன், என்னைத் தொட்டால் உங்களுக்குத் தீட்டுப்பட்டுவிடும்" என்று தன் நாட்டிலுள்ள சமூக சீர்கேடுகளை உலக அரங்கில் வெளிப்படுத்தினார். தாத்தா இரட்டைமலை சீனிவாசன் செய்த இந்தச் செயலை பார்த்து அதிர்ந்த ஜார்ஜ் மன்னர் அவரை அருகில் அழைத்து கை குலுக்கினார். அப்போது தாழ்த்தப் பட்ட மக்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை ஜார்ஜ் மன்னரிடம் வைத்து அதை வென்று காட்டியவர் இரட்டைமலை சீனிவாசனார்.

அரசாங்கத்தின் செயல்பாடுகள் பலவற்றிலும் இரட்டைமலை சீனிவாசனின் தலையீடு இருந்தது. அதன் எதிரொலியாக பல பிரச்னைகளுக்கு தீர்வுகளும் கிடைத்தன. இப்படி பல விஷயங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான குரலாக ஒலித்த இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்  (ஜூலை 7).  இன்று


No comments:

Post a Comment