காமராசர் 121 ஆம் ஆண்டு விழாப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 23, 2023

காமராசர் 121 ஆம் ஆண்டு விழாப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை

 ஜாதியற்ற சமூகம் - தீண்டாமையற்ற சமூகம் - பேதமற்ற சமூகம் - பெண்ணடிமையை நீக்கிய சமூகம் - மூடநம்பிக்கையை ஒழித்த சமூகம் - அறிவியல் மனப்பான்மை பெருகிய சமூகத்தை உருவாக்கவேண்டும்

கொள்கை ரீதியாக இருக்கக்கூடியவர்கள் அத்துணை பேரும் ஒன்றிணைந்து ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும்!

விருதுநகர், ஜூலை 23   மேடையில் அமர்ந்திருக்கின்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள், கொள்கை ரீதியாக இருக்கக்கூடியவர்கள் அத்துணை பேரும் ஒன் றிணைந்து ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும்; ஜாதியற்ற சமூகம், தீண்டாமையற்ற சமூகம், பேதமற்ற சமூகம், பெண்ணடிமையை நீக்கிய சமூகம், மூடநம் பிக்கையை ஒழித்த சமூகம், அறிவியல் மனப்பான்மை பெருகிய சமூகம் - இவற்றை உருவாக்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

விருதுநகரில் முப்பெரும் விழா!

கடந்த 1.7.2023 அன்று மாலை  விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், விருதுநகர் மொழிப்போர் வீரர் சங்கரலிங்கனார் திடலில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  சிறப்புரையாற்றினார்.

21.7.2023 அன்று ‘விடுதலை'யில் வெளிவந்த அவரது சிறப்புரையின் தொடர்ச்சி வருமாறு:

பெரியார் அவர்களை ஈரோட்டில் கைது செய்தபொழுது, அன்னை நாகம்மையார் அவர்கள் ஓர் அறிக்கை கொடுத்தார்.

1924 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் ‘நாடார் கள் மித்திரன்' வெளிவந்தது. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த செய்தி - ‘நவசக்தி'யில் வெளிவந்த செய்தியை எடுத்துப் போட்டிருக்கிறார்கள்.

என்றைக்குத் தெரியுமா? 1924 ஆம் ஆண்டு - நாம் யாரும் பிறக்காத காலத்தில்.

வைக்கம் நூற்றாண்டு விழாவின் முத்தாய்ப்பான செய்தி - பெரியாரின் பங்களிப்பு என்ன? ஏன் அவர் வைக்கம் வீரர்? என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தார்?

அன்னை நாகம்மையாரின் அறிக்கை!

அன்னை நாகம்மையார் எழுதுகிறார்:

‘‘என் கணவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இந்த மாதம் முதல் தேதி திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையானார். இன்று காலை 10 மணிக்கு (11.9.1924) மறுபடியும் ராஜதுரோகக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். இரண்டு வருடத் திற்குக் குறைவில்லாத காலம் தண்டனைக் கிடைக் கக்கூடிய பாக்கியம் தமக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்லி, என்னிடம் விடைபெற்று புறப்பட்டு விட்டார். அவர் திரும்பத் திரும்ப தேச ஊழியத் தைப் பொருட்டு, சிறைக்குப் போகவேண்டிய பாக்கியமே பெறவேண்டும் என்றும், அதற்காக அவர் ஆயுள் வளரவேண்டும் என்றும், கட வுளையும், மகாத்மா காந்தியையும் பிரார்த்திக்கி றேன். அவர் பாக்கியை வைத்துவிட்டுப் போவதாக, நினைத்துக் கொண்டு போகிற, வைக்கம் சத் தியாக்கிரகம் விஷயத்தில் வேண்டிய முயற்சிகள் எடுத்து, சரிவர அகிம்சா தர்மத்துடன் நடத்தி, அதனை அணுகூலமான முடிவிற்குக் கொண்டுவர வேண்டுமாய், என் கணவரிடம் அபிமானமும், அன்பும் கொண்ட தலைவர்களையும், தொண்டர் களையும் பக்தியோடு பிரார்த்தித்துக் கொள்கிறேன்'' என்று எழுதுகிறார்.

இதுபோன்று இந்தியாவில் உள்ள வேறு எந்த இயக்கத்திலாவது உண்டா? எந்த இடத்திலாவது ஒரு தலைவருடைய துணைவியார் இதுபோன்ற ஓர் அறிக்கை எழுதியிருக்கிறார் என்று வரலாற்றில் இருக்கிறதா?

தியாகம் என்பது கொள்கைக்காக, லட்சியத்திற்காகத்தான்!

இதுதான் திராவிட இயக்கத்தினுடைய அடித்தள மாகும். தியாகம் என்பது எங்களுக்கு மானியம் பெறு வதற்காக அல்ல; தியாகம் என்பது பொருளுக்காக, பெருமைக்காக அல்ல - கொள்கைக்காக, லட்சியத்திற் காகத்தான்!

ஆகவேதான், வைக்கம் நூற்றாண்டு விழாவை இப்பொழுது கொண்டாடுகிறோம் என்றால், நல்ல வாய்ப்பாக கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்' ஆட்சி நடைபெறுகிறது. இரு ஆட்சிகளும் வருணாசிரம தர்மத் திற்கு எதிராக, மனுதர்மத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்திருக் கின்றன.

அன்றைக்குக் குலக்கல்வித் திட்டம் - இன்றைக்கு ‘நீட்' தேர்வு, ‘நெக்ஸ்ட்' தேர்வு என்று வருகின்றன. ஏனென்றால், நம்முடைய தலைமுறையினர் தலை யெடுக்கக் கூடாது என்பதற்காகத்தான். இதைச் சொல் வதற்கு எங்களைவிட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?

நாங்கள் என்ன ஜொலிக்கின்ற ஸ்டார்களா? அப்படி இருந்தால், வேடிக்கைப் பார்ப்பதற்காக வருவார்கள். 

நாங்கள் அறிவு சொல்லிக் கொடுக்கக் கூடிய வாத்தியார்கள் ஆயிற்றே! நாங்கள் வகுப்புக்கு வருகி றோம் என்றால், பிள்ளைகளுக்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.   

அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி

பெரியாருடைய கணக்கெடுப்பு எப்படிப்பட்டது என்றால், தளபதி அழகிரிசாமி அந்தக் காலத்தில் சொல்வார், ‘‘ஈட்டி எட்டிய வரையில் பாயும்; பணம் பாதாளம் வரையிலும் பாயும்; எங்கள் பெரியார் ராமசாமி அவர்களுடைய சுயமரியாதைக் கருத்துகள் அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையும் பாய்ந்து, அதற்கு அப்பாலும் பாயும்'' என்பார்.

அதுபோன்று இன்றைக்குத் தந்தை பெரியாருடைய கொள்கைகள் எல்லா இடங்களுக்கும் போய்ச் சேரக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன.

இந்தியாவே, ‘திராவிட மாடல்' ஆட்சியைப் பார்த்து வியக்கிறது. இந்த நிலையில், ‘திராவிட மாடல்' ஆட்சியைப் பார்த்து ஏன் ஆத்திரப்படுகிறார்கள்; ஏன் கோபப்படுகிறார்கள்?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சி - மற்ற மாநிலங்களில் அரசியல் சடுகுடு - குதிரை பேரம் நடத்தி, வெற்றி பெற்று வரும் கட்சிகளிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பி.ஜே.பி. ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது.

அவர்களுடைய வித்தைகள்  தமிழ்நாட்டில் நடக்காது!

ஆனால், அவர்களுடைய வித்தைகள் தமிழ்நாட்டில் நடக்காது; நம்முடைய கூட்டணியில் உள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினரையாவது அசைக்க முடியுமா? முடியவே முடியாது. மக்களும் ஏமாறத் தயாராக இல்லை.

தென்மாநிலங்களில் கருநாடகாவில்தான் ஓர் அரசியல் பரிசோதனைக் கூடம் பி.ஜே.பி.,க்கு. தலையில் குல்லா வைக்காதே - பசுமாட்டிற்குத்தான் பாதுகாப்பு என்றெல்லாம் சொன்னார்கள். அதைக் கேட்டு மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்றவுடன், மறுபடியும் எங்கள் ஆட்சிதான் கருநாடகாவில் வரும். இத்தனை ஆயிரம் கோடி ரூபாய்களை அள்ளிக் கொடுக்க விருக்கிறோம் கருநாடக மாநிலத்திற்கு என்றெல்லாம் சொன்னார்கள்.

முக்கியமாக, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சரும் கருநாடகாவிலேயே முகாம் அடித்தார்கள். அவர்கள்மீது மலர்மாரி பொழிந்தார்கள். ஆனால், பூக்கள் விழுந்தனவே ஒழிய, வாக்குகள் விழுந்ததா? இன்றைக்குக் கருநாடகம்தான் எடுத்துக்காட்டு!

பா.ஜ.க.விற்குத் தென்னிந்தியாவில்  கதவு மூடப்பட்டு விட்டது!

நம்முடைய ‘திராவிட மாடல்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கருநாடகா தேர்தல் முடிவு குறித்து என்ன சொன்னார் என்றால், ‘‘பா.ஜ.க.விற்குத் தென்னிந்தியாவில் கதவு மூடப்பட்டு விட்டது'' என்றார்.

ராகுல்காந்தி அவர்கள் என்ன சொன்னார் தெரியுமா? ‘‘இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும், தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சி ஏற்படும் என்கிற கனவு பலிக்காது; அது பெரியார் பூமி - அது பகுத்தறிவு பூமி - திராவிட பூமி'' என்று நேருக்கு நேர் சொன்னார்.

ஆளுநர் என்கிற ஓர் ஆளை அனுப்பி, அவர்மூலம் ஏதாவது விஷமத்தனத்தை செய்யலாமா? என்று நினைத்தார்கள். அந்த ஆளுநரும் அரைவேக்காட்டுத் தனமாக ஏதேதோ செய்து, இப்பொழுது மாட்டிக் கொண்டிருக்கின்றார்.

மக்கள் அறிந்துகொள்ளவேண்டும் 

என்பதற்காக சொல்கிறேன்!

இதோ என் கைகளில் இருப்பது அரசமைப்புச் சட்டம் - சட்டம் படித்தவன் நான் - சட்டம் தெரிந்தவன் என்கிற முறையில் நான் சொல்கிறேன், 69 சதவிகித சட்டத்தை செய்து கொடுத்தவன் சொல்கிறேன் - இதை நான் ஆணவத்தோடு சொல்லவில்லை - மக்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக அடக்கத்தோடு சொல்கிறேன்.

அரசமைப்புச் சட்டத்தில், பஞ்சாயத்து உறுப்பி னரிலிருந்து, இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும்பொழுது அரசமைப்புச் சட்டத்தின்மீது தான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

அப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட ஆளுநர், அரசமைப்புச் சட்டப்படிதானே நடக்க வேண்டுமே தவிர, சட்டத்திற்கு விரோதமாக நடக்க முடியாது.

முதலமைச்சருக்கு உதவுவதற்கு, அறிவுரை சொல்லி, அறிவுறுத்தக் கூடிய அளவிற்கு, அமைச்சர்களை நியமிக்க முடியும்! யாருக்கு இந்த அதிகாரம்? முதல மைச்சருக்கு மட்டும்தான் அந்த அதிகாரம் உண்டு.

குடியரசுத் தலைவர் ஒன்றிய அமைச்சரை நேரிடையாக நியமிக்க முடியுமா?

ஒன்றியத்தில், பிரதமருக்கு மட்டும்தான் அந்த அதி காரம் உண்டு. குடியரசுத் தலைவர் ஒன்றிய அமைச்சரை நேரிடையாக நியமிக்க முடியுமா? என்றால், முடியவே முடியாது.

இங்கே அசோக்குமார் மிக அழகாக சொன்னார் - அமைச்சர் செந்தில்பாலாஜி தவறு செய்தாரா? இல்லையா? என்று முடிவு கொடுக்கவேண்டியது,தீர்ப்புக் கொடுக்கவேண்டியது சட்டமன்றம் அல்ல - நீதிமன்றம் தான்.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் முதன்மை நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் இருக்கிறது. தேவைப்பட்டால், உச்சநீதிமன்றத்திற்கும் செல்வார்கள்.

வழக்கு விசாரிக்கப்பட்டு, அந்த வழக்கின் முடிவில் தண்டிக்கப்பட்டால்தான், அவருடைய அமைச்சர் பதவி பறிபோகும் சட்டப்படி. அதனை முடிவு செய்ய வேண்டியது யார் என்றால், முதலமைச்சர்தான். ஆளுநருக்கு ஒரு வேலையும் கிடையாது.

ஆளுநர் 13 மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் மசோதாவையும் கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.  அதைக் கண்டித்து பிரச்சாரக் கூட்டங்களில் வலியுறுத்திய பிறகுதான், அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

‘நீட்’ தேர்வினால் நம்முடைய பிள்ளைகள் தற்கொலைக்கு ஆளாகிவருகின்றனர்

தி.மு.க. ஆட்சிக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக - ‘நீட்' தேர்விலிருந்து விலக்குக் கோரும் மசோதாவிற்கு ஒப்புதல் கிடைக்காமல் இருக்கிறது. ‘நீட்' தேர்வினால் நம்முடைய பிள்ளைகள் தற்கொலைக்கு ஆளாகிவருகின்றனர்.

மனிதநேயமே அவர்களுக்குக் கிடையாது. ஆகவே, இந்த சூழலில் நண்பர்களே, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஓர் உத்தரவு போடுகிறார், இரவு 7 மணிக்கு. இரவு 11 மணிக்கு அந்த உத்தரவைத் திரும்பப் பெறுகிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.

தானே கக்கியதை, தானே சாப்பிடுகிறார் - இதைவிட அசிங்கம் வேறு உண்டா? இதைவிட வேறு கேவலம் உண்டா?

இவ்வளவுக்கும் அய்.பி.எஸ். அதிகாரியாக இருந்தவர். காரணம் பார்ப்பன ஆணவம். 

குழந்தைப் பருவத்திலேயே சட்டத்திற்கு விரோதமாக இருந்திருக்கிறார் ஆளுநர்!

நான் குழந்தைத் திருமணம் செய்துகொண்டேன் என்று சொல்கிறார் அவர். இதுவே சட்டத்திற்கு விரோதம். இப்பொழுது மட்டும் அவர் சட்டத்திற்கு விரோதமாக நடக்கவில்லை; குழந்தைப் பருவத்தி லேயே சட்டத்திற்கு விரோதமாக இருந்திருக்கிறார் என்பதற்கு அவருடைய வாக்குமூலம் ஒன்றே போதுமானது.

இன்றைக்கு பெரியார் நூற்றாண்டாக இருக்கட்டும் - கலைஞர் நூற்றாண்டாக இருக்கட்டும் - காமராசர் நூற்றாண்டாக இருக்கட்டும் - வைக்கம் நூற்றாண்டாக இருக்கட்டும் - இவை எல்லாமே மனித உரிமைப் போருக்கான அடையாளங்களாகும்.

ஆகவே நண்பர்களே, நாங்கள் பாடுபடுவது உங் களுக்காக - உங்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கவேண் டாமா? படித்த பிள்ளைகள் உத்தியோகத்திற்குப் போகவேண்டாமா? இந்த இயக்கம் இல்லையென்றால், இட ஒதுக்கீடு வந்திருக்குமா?

எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டார்களே! நீட் தேர்வு கொண்டு வந்ததின் நோக்கம் என்ன? நம்முடைய பிள்ளைகள் டாக்டர்களாக வரக்கூடாது என்பதற்காகத்தானே!

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு  இன்டர்வியூ மார்க்150!

1952-1953 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இரண்டு, மூன்று மருத்துவக் கல்லூரிகள்தான் இருந்தன. இராஜ கோபாலாச்சாரியார் பதவிக்கு வந்தவுடன், இண்டர்வியூ மார்க் 150 என்றிருந்தது.

முதல் தலைமுறையா? அடித்தளத்தில் இருக்கின்ற வரா? முகச்சவரம் செய்கின்றவரா? மலம் எடுப்பவரா? துப்புரவுத் தொழில் செய்கின்றவரா? விவசாயியா? இந்தத் தலைமுறையில் இருந்து டாக்டர்கள் வர வேண்டும் என்கிற நோக்கத்தோடுதான் நீதிக்கட்சி உருவாக்கிற்று.

ஒழுக்கசீலர் ஓமந்தூரார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், காமராசர் போன்று இன உணர்வாளர். பெரியாரிடத்தில் மிகுந்த மரியாதை கொண்டவர். அப்படிப்பட்ட ஓமந்தூரார் முதலமைச் சராக இருந்த காலத்தில், மருத்துவக் கல்லூரிக்கு 150 மார்க் வைத்திருந்தார்.

இந்த 150 மார்க்தான் நம்முடைய பிள்ளைகளை ஓரளவுக்குக் கை தூக்கிவிட்டது. 

டாக்டர் படிப்பிற்கு இன்டர்வியூ மார்க் 150 என்று இருந்ததை ராஜகோபாலாச்சாரியார் பதவிக்கு வந்ததும், 50 மார்க்காகக் குறைத்தார்.

பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்கு வந்தார். ராஜகோபாலாச்சாரியார் மூடிய பள்ளிகளை எல்லாம் காமராசர் திறந்தார். ஆச்சாரியார் என்னென்ன பிழைகள் செய்தாரோ அவைகளை எல்லாம் இவர் மாற்றினார். மெடிக்கல் காலேஜில் அப்பொழுது கமிட்டி உண்டு. அந்தக் கமிட்டி ஒவ்வொரு மாணவரையும் பார்த்து ‘இன்டர்வியூ மார்க்” போடுவார்கள்.

டாக்டர்கள் படிப்புக்குத் தேர்வு எழுதுவது மட்டுமல்ல; அதற்கு ஒரு கமிட்டி உண்டு. அதேபோல எஞ்சினியரிங் கல்லூரிக்கு ஒரு கமிட்டி உண்டு. அந்தக் கமிட்டியினர் மாணவர்களை நேர்காணல் செய்து மார்க் போடுவார்கள். அதற்கு ‘இன்டர்வியூ மார்க்‘ என்று பெயர். இன்றைக்கு இருக்கின்ற நுழைவுத் தேர்வுகள் எல்லாம் அன்றைக்குக் கிடையாது. அந்த இன்டர்வியூ கமிட்டியில் பெரிய, பெரிய டாக்டர்கள் எல்லாம் இருந்தார்கள். அதற்கு 150 மார்க் வைத்திருந்தார்கள். ஒவ்வொரு மாணவரையும் அந்தக் கமிட்டியினர் விசாரிப்பார்கள். அந்த மாண வருடைய குடும்பச் சூழல் என்ன? அந்த மாணவருடைய தந்தையார் படித்தவரா... இல்லையா? அல்லது கிராமத் தில் இருந்து வந்திருக்கின்றாரா? இந்தச் செய்திகளை யெல்லாம் தெரிந்துகொண்டு அதற்கு மார்க் போடு வார்கள்.

50 மார்க்காகக் குறைத்த ராஜகோபாலாச்சாரியார்!

அப்படி டாக்டர் படிப்பிற்கு இன்டர்வியூ மார்க் 150 என்று இருந்ததைத்தான் ராஜகோபாலாச்சாரியார் 50 மார்க்காகக் குறைத்தார்.

இந்த மாணவர் முதல் தலைமுறையாக படித்தவரா? முடி திருத்தும் சமுதாயத்தைச் சார்ந்தவரா? அல்லது துணி வெளுக்கக் கூடிய சமுதாயத்தைச் சார்ந்தவரா? என்று பார்த்து அதற்கெல்லாம் அந்தக் கமிட்டியினர் மார்க் போடுவார்கள். அடித்தளத்து மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்படியாகத்தான் இன்டர்வியூ மார்க் போடு வார்கள். அதனால் பல சமூகமாற்றம் ஏற்பட, சமூகநீதி கிடைத்திட வாய்ப்பு ஏற்பட்டது. ராஜகோபாலாச்சாரியார் குலக்கல்வி திட்டம் கொண்டுவந்த மாதிரியே இந்த இன்டர்வியூ மார்க்கையும் குறைத்தார். அவருடைய வர்ணாசிரமப் பார்வையினால்தான் 150 மார்க் என்று இருந்ததை 50 மார்க்காகக் குறைத்தார்.

இதைக் கண்டித்து ‘விடுதலை’யில் நாங்கள் தொடர்ந்து எழுதினோம். நமது கிராமப் பிள்ளைகள் படிக்க வேண்டுமென்றால், நமது ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் வர வேண்டும் என்றால், ராஜகோபாலாச்சாரியார் குறைத்த இன்டர்வியூ மார்க்கை மீண்டும் 150 ஆக உயர்த்த வேண்டும் என்று எழுதினோம்.

இன்டர்வியூ மார்க் 50 என்றிருந்ததை  மீண்டும் 150 ஆக ஆக்கினார் காமராசர்!

காமராசர் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனே உத்தரவு போட்டார். இன்டர்வியூ மார்க் 50 என்றிருந்ததை மீண்டும் 150 ஆக ஆக்கினார். உடனே செய்தியாளர்கள் கேட்டார்கள். செய்தியாளர்களாக அன்றைக்கு இருந் தவர்கள் எல்லாம் யார்? ராஜகோபாலாச்சாரியார்தான் ஆட்சியிலே இருக்க வேண்டுமென்று நினைத்த உயர் ஜாதிக்காரர்கள்தான் அப்பொழுது செய்தியாளர்கள். பிரபல ஆங்கிலப் பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர் காமராசரைப் பார்த்துக் கேள்வி கேட்டார். “இன்டர்வியூ மார்க் 150 என்று இருந்ததை ராஜாஜி அவர்கள் 50 மார்க்காகக் குறைத்துவிட்டுப் போனார். நீங்கள் ஆட் சிக்கு வந்தவுடன் ராஜாஜி குறைத்த 50 மார்க்கை 150 என்று ஆக்கியிருக்கின்றீர்களே... அதற்குக் காரணம் என்னவென்று சொல்ல முடியுமா?” என்று கேட்டார்கள்.

காமராசர் பதவிக்கு வந்து ஒரு வாரம் ஆகிறது. வேறு ஏதாவது அவர் பதில் சொன்னால் அதை வைத்துப் பெரிதாக்கி விடலாம் என்று உயர்ஜாதிக்கார செய்தி யாளர்கள் நினைத்தனர். இப்படிக் கேள்வி கேட்டவுடனே காமராசர் அவர்கள் அழகாகப் பதில் சொன்னார். “ராஜாஜி எந்தக் காரணத்திற்காக 150 மார்க்கை 50 ஆகக் குறைத்தாரோ அதே காரணத்திற்காகத்தான் 50அய் 150 ஆக ஆக்கியிருக்கின்றேன் - போங்கள்’’ என்று பதில் சொன்னார்.

மூடப்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் கதவுகளை நம் பிள்ளைகளுக்காக முதலமைச்சர் காமராசர் அவர்கள் திறந்துவிட்டார்.

என்ன தகுதி திறமை வேண்டும்? என்று முதலமைச்சர் காமராசர் கேட்டார்.

மக்களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக அப்படியே சொல்கிறேன்,

உன் தகுதியும் தெரியும், உனக்கு சொல்லிக் கொடுத்தானே அவனுடைய தகுதியும் தெரியும்!

‘‘பறையனை டாக்டராக்கினேன், அவர் ஊசி போட்டு எந்த நோயாளி செத்துப் போனான்?

தாழ்த்தப்பட்டவனை எஞ்ஜினியராக்கினேன், அவன் கட்டிய பாலம் எந்தப் பாலம் இடிந்து போயிருக்கிறது என்று சொல் பார்க்கலாம்? உன் தகுதியும் தெரியும், உனக்கு சொல்லிக் கொடுத் தானே அவனுடைய தகுதியும் தெரியும்'' போ என்றார்.

அப்படி காமராசர் பேசிய தகுதி திறமை தானே இன்றைக்கு நீட் தேர்வு. ஆகவேதான், இது ஒரு தொடர்ச்சியான போராட்டம் - தேவாசுரப் போராட்டம் - ஓர் இனப் போராட்டம் - ஒரு சமூகநீதிப் போராட்டம்.

ஆகவே, பெரியாராக இருந்தாலும், அண்ணாவாக இருந்தாலும், கலைஞராக இருந்தாலும் இந்த நாட்டைப் பொறுத்தவரையில், இந்த மண்ணைப் பொறுத்த வரையில், வருணாசிரமத்தை ஒழித்து, அதன்மூலம் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் நம்முடைய போராட்டம்.

மூன்றாந்தர அரசு அல்ல - நாலாந்தர அரசு: முதலமைச்சர் கலைஞர்!

முதலமைச்சராக கலைஞர் இருந்தபொழுது, சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்த ஹண்டே எழுந்து,‘‘இது ஒரு மூன்றாந்தர அரசு'' என்று ஆங்கிலத்தில் பேசுகிறார்.

தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஆத்திரப்பட்டு கோபமாக எழுந்தனர்.

உடனே முதலமைச்சர் கலைஞர் அவர்கள், கையைத் தூக்கி, நான் பதில் சொல்கிறேன், நீங்கள் எல்லோரும் அமைதியாக இருங்கள் என்றார்.

முதலமைச்சர் எழுந்தால், எதிர்க்கட்சித் தலைவர் அமர்ந்துவிட வேண்டும், அதுதான் மரபு.

‘‘மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஹண்டே அவர்கள், என்னுடைய அரசைப் பார்த்து ‘‘மூன்றாந்தர அரசு'' என்றார்; நான் சொல்கிறேன், இது மூன்றாந்தர அரசுகூட அல்ல; நாலாந்தர அரசாகும். நாலாந்தர மக்களான சூத்திர மக்களுக்காக - சூத்திரர்களின் நலனுக்காக - சூத்திரர்களை வாழ வைப்பதிற்காக - ஒடுக்கப்பட்ட மக்களை வாழவைப்பதற்காக இருக்கின்ற அரசு'' என்றார்.

முழுக்க முழுக்க சமூகநீதியை நோக்கிப் பயணப்பட்டு, சமூக அநீதியை வேரறுத்தனவாகும்!

காமராசர் ஆட்சியாக இருந்தாலும், கலைஞர் ஆட்சியாக இருந்தாலும், இன்றைய ‘திராவிட மாடல்' அரசின் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களுடைய ஆட்சியாக இருந்தாலும்  - காலங்காலமாக, முழுக்க முழுக்க சமூகநீதியை நோக்கிப் பயணப்பட்டு, சமூக அநீதியை வேரறுத்தனவாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நண்பர்களே, இந்தப் பயணம் இடையறாது நடந்துகொண்டிருக்கிறது.

இந்த நூற்றாண்டு விழாக்கள் எல்லாம் வெறும் விழாவிற்காக மட்டுமல்ல; மீண்டும் நீங்கள் ஏமாந்தால், மறுபடியும் நாடு பழைய கருப்பனாக மாறிவிடும். இப்பொழுதே ஜாதி வெறியை உண்டாக்குகிறார்கள். ஒரு ஜாதிக்கு எதிராக இன்னொரு ஜாதி வெறியைத் தூண்டிவிடுகிறார்கள். ஜாதிப் பெருமையை சொல்லச் சொல்லி கலவரத்தைத் தூண்டுகிறார்கள்.

இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடவேண்டிய கட்டம் இருக்கிறது.

எனவேதான், மீண்டும் உங்களுடைய கல்விக்கு ஆபத்து - உங்களுடைய பிள்ளைகளின் உத்தியோகத் திற்கு ஆபத்து - தெருவில் நடக்கும் உரிமை மறுக்கப் படும் ஆபத்து - சனாதனம், சனாதனம் என்று சொல் கிறார்களே, மீண்டும் சனாதனம் வந்தால் என்னாகும் என்றால், பழைய காலத்து வைக்கம் நிலைதான் வரும்.

சனாதனம் வந்தால் என்னாகும்?

பூணூலை வெளியில் காட்டி பார்ப்பன ஆணவத் திமிர் ஆட்டம் போடும்.

நெற்றியில் சூத்திரன் என்று பச்சை குத்து என்று சொன்னார்கள்; நாங்கள் இல்லையென்றால் என்னாகி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்!

ஆகவேதான், இந்த இயக்கம், திராவிட இயக்கம், மேடையில் அமர்ந்திருக்கின்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள், கொள்கை ரீதியாக இருக்கக்கூடியவர்கள் அத்துணை பேரும் ஒன்றிணைந்து ஒரு புதிய சமு தாயத்தை உருவாக்கவேண்டும்; ஜாதியற்ற சமூகம், தீண்டாமையற்ற சமூகம், பேதமற்ற சமூகம், பெண்ணடிமையை நீக்கிய சமூகம், மூடநம்பிக்கையை ஒழித்த சமூகம், அறிவியல் மனப்பான்மை பெருகிய சமூகம் - இவற்றை உருவாக்கவேண்டும் என்பதற்காகத் தான் இந்தப் பணியை நாங்கள் செய்கிறோம்.

அறிவும், மானமும் உள்ள மக்களாக வாழவேண்டும்!

எனவே, நீங்கள் எப்படிப்பட்டவராக இருந் தாலும் - இங்கே நண்பர்கள் சொன்னதுபோன்று, நீங்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருங்கள் - ஆனால், அறிவும், மானமும் உள்ள மக்களாக வாழவேண்டும். அதுதான் எங்களுடைய வேண்டுகோள்! அதற் காகத்தான் நாங்கள் உழைக்கிறோம்!

சிறப்பாக இந்த ஏற்பாடுகளைச் செய்த தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி அவர்களுக்கும், மாவட்டத் தலைவர் நல்லதம்பி, ஆதவன், மற்ற சுற்றுவட்டார மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், கூட்டணித் தலைவர்கள், பொறுப்பாளர்கள் ஆகிய அத்துணை பேருக்கும் என்னுடைய நன்றியை, பாராட்டை, வாழ்த்தைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்!

வாழ்க காமராசர்!

வாழ்க கலைஞர்!

வீழ்க ஜாதி - தீண்டாமை!

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

No comments:

Post a Comment