11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்து மலேசிய நாட்டுப் பிரதமர் டத்தோ சிறீ அன்வர் இப்ராகிம் அறிவிப்பு! திராவிடர் கழகத் தலைவர் உள்பட தமிழ்நாட்டுத் தலைவர்கள், கல்வியாளர்கள் - ஆய்வாளர்கள் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 23, 2023

11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்து மலேசிய நாட்டுப் பிரதமர் டத்தோ சிறீ அன்வர் இப்ராகிம் அறிவிப்பு! திராவிடர் கழகத் தலைவர் உள்பட தமிழ்நாட்டுத் தலைவர்கள், கல்வியாளர்கள் - ஆய்வாளர்கள் பங்கேற்பு

 தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ஒரு மில்லியன் வெள்ளி!

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு 2 மில்லியன் வெள்ளி!!

மலேசிய பல்கலையில் இந்தியவியல் துறைக்கு 2 மில்லியன் வெள்ளி!!!

கோலாலம்பூர், ஜூலை 23 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் (22.7.2023) மாலை 4 மணியளவில், மாநாட்டின் முறையான தொடக்க விழா நடைபெற்றது. மலேசிய நாட்டுப் பிரதமர் டத்தோ சிறீ அன்வர் இப்ராகிம் மாநாட்டைத் தொடங்கி வைத்தும், மாநாட்டு மலரினை வெளியிட்டும் சிறப்புரை ஆற்றினார்.

மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பேராசிரியர் டத்தோ சிறீ மாரிமுத்து வரவேற்புரையாற்றினார். தாபா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், மேனாள் அமைச் சரும், ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவருமான டத்தோ சிறீ சரவணன் வெகுசிறப்பாக விழா ஏற்பாடுகள் குறித்துப் பேசினார்.

இன்னாள் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ சிறீ சிவக்குமார், மலேசியாவில் நடைபெற்று வரும் தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதுபற்றி அரசு கவனம் செலுத்திடும் எனக் குறிப்பிட்டுப் பேசினார்.

பிரதமர் டத்தோ சிறீ அன்வர் இப்ராகிம் அவர்கள் உரையாற்றுகையில், தமிழ் வளர்ச்சிக்கு தமது அரசு அக்கறை காட்டி வருவதன் அடையாளமாக மலேயா பல்கலைக் கழக இந்தியவியல் துறை வளர்ச்சிக்கு இரண்டு மில்லியன் வெள்ளியும், மாநாட்டு ஏற்பாட்டிற்கு இரண்டு மில்லியன் வெள்ளியும், தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ஒரு மில்லியன் வெள்ளியும் (வெள்ளி - மலேசியன் ரிங்கர்டு - இந்திய ரூபாயில் ஏறக்குறைய 20 ரூபாய் மதிப்புடையது) வழங்கிடும் என பலத்த கரவொலியிடையே அறிவித்தார்.

தமிழ் மாணவர்களுக்குப் பாராட்டு

தமிழ்ப் பள்ளியில் படித்து, தமிழ் பாடத்திலும், அனைத்துப் பாடங்களிலும் முதன்மை மதிப்பெண் பெற்ற தமிழ் மாணவர்களுக்கு பிரதமர் தங்கப் பதக்கத் தினை அணிவித்துப் பாராட்டினார். 

கலை நிகழ்ச்சி

தொடக்க விழாவில் ''சங்கத் தமிழே நீ வாழ்க!'' எனத் தொடங்கிடும் தமிழ்நாட்டுக் கவிஞர் சுகதேவ் எழுதிய பாடல் இசையுடன் ஒலிக்கப்பட்டு, மாணவியர் நடன மாடினர். மேலும், மூன்று பண்பாடுகளை உள்ளடக்கிய மலேசியாவின் ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்டிடும் வகையில், தமிழ், மலாய், சீன வாரிசு பெண் மாணவியர் நடனமாடினர்.

தொடக்க விழா அரங்கில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு மேனாள் அமைச்சர் வைகைச் செல்வன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் சி.மகேந்திரன், இந்திய மார்க்சிஸ்ட் கட்சி மதுக்கூர் இராமலிங்கம், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி (சி.பி.எம்.), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் செந்திலதிபன், 'நக்கீரன்' கோபால், தமிழ்த் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் மற்றும் கல்வியாளர்கள், ஆய் £ளர்கள் பலர் பங்கேற்றனர்.

தொடக்கவுரையில் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம், வருகை தந்த தமிழ்நாட்டுத் தலைவர்களை வரவேற்பதாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

தொடக்க விழாவிற்கு முன்பும், பின்னரும் மாநாட்டின் இதர அரங்கில் நிகழ்வுகள் நடைபெற்றன.

23.07.2023 - நிறைவு நாளில் பல ஆய்வரங்க நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் பேராளர்களாக முதல் முறையாகப் பங்கேற்கும் தமிழ் ஆர்வலர்கள் மிகப் பலர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மலேசியாவில் நடைபெறும் 4 ஆவது மாநாடு முதலில் நடைபெற்ற மூன்று மாநாடுகளைவிட தமிழ் மொழி வளர்ச்சிக்கு அரசுகள் முன்னெடுக்கும் நடவடிக்கையினை வலியுறுத்திடும் வகையில் இருந்தது.

No comments:

Post a Comment