நமக்கெதுக்கு வம்பு - எடக்கன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 10, 2023

நமக்கெதுக்கு வம்பு - எடக்கன்

முதுகுத் தண்டுவட பாதிப்பு உள்ள நண்பர் ஒருவர் பல்வேறு இடங்களில் கை மருத்துவம் பார்த்து குணம் ஆகாததால் நடக்க முடியாத சூழலில் ஆங்கில மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அவரது உடல் நிலையைப் பார்த்த உடனேயே முதுகுத் தண்டுவடத்தில் என்புருக்கி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மிகவும் தாமதமாக வந்துள்ளீர்கள். ஆகவே, அறுவைச் சிகிச்சை மட்டுமே இதற்குத் தீர்வு என்று கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். சுமார் மூன்று ஆண்டுகளாக படுத்த படுக்கையாக. ஊன்று கோல் உதவி இன்றி தனியாக நடக்க முடியாமல் இருக்கிறார். 

சமீபத்தில் அவரைச்சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, சுமார் 7 மாதமாக முதுகுவலி என்று கூறி பிரபல ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன் என்றார். அவர்கள் ஒன்றுமே சொல்லாமல் வெறும் மருந்து மற்றும் முதுகைத் தேய்த்து விட்டார்கள். தேய்க்கும்போது வலி போகிறது, பிறகு வலி வந்துவிடுகிறது. முன்னமே ஆங்கில மருத்துவத்திடம் சென்றிருந்தால் எனக்கு இந்த நிலை வந்திருக்காது என்று புலம்பித்தள்ளினார்.  

ஆயுர்வேதம், சித்த மருத்துவம் எல்லாம் ஒருவகை மருத்துவம் தான். அதைக் குறை சொல்ல முடியாது. ஆனால் ஒரு நோய்க்கு நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் உள்ளதே என்று பார்த்து அதற்கு வேற்று மருத்துவத்தை பரிந்துரைத்திருக்கவேண்டாமா என்பதுதான் எனது கேள்வியாக இருந்தது. 

முதுகுவலி உள்ள நபருக்கு மாசக்கணக்காக சிகிச்சை அளித்த அந்த மருத்துவமனையை நடத்தும் நபர் தனது பெயருக்கு முன்னால் தன்வந்திரி என்று பட்டப்பெயர் சேர்த்துக்கொண்டுள்ளார். 

யார் இந்த  தன்வந்திரி - தன்வந்திரி என்பவர் தேவலோகத்தில் தேவர்களுக்கு மருத்துவம் பார்த்தவராம். ஆகையால், இங்குள்ள சில ஆங்கிலம் அல்லாத மருத்துவ முறையினர் தங்களது நிறுவனத்தின் பெயரிலும் தங்களது பெயரிலும் தன்வந்திரி என்று சேர்த்துக் கொள்கின்றனர். தேவர்களுக்கு எதுக்கு மருத்துவர்?  பிணியும் சாவும் இல்லாத வாழ்க்கைக்காகத் தானே தேவாமிர்தம் சாப்பிட்டு விட்டு வாழ்கிறார்கள் என்கிறார்கள். நோயும் சாவும் இல்லாதவனுக்கு எதுக்கு மருத்துவர் என்று யாரும் கேட்பதில்லை. இருந்தாலும் நமக்கு எதுக்கு வம்பு. 

நீண்ட நாள் நோய் தீரவில்லை என்றால் சரியான மருத்துவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். இதனால் உங்கள் குடும்ப தன்வந்திரி கோபப்பட்டாலும் பரவாயில்லை.


No comments:

Post a Comment