பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 27, 2023

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

90இல் 80 ஆண்டுகள் - சாதனைகள் பாரீர்!

செந்துறை முகாமின் செழிப்பும் - சிறப்பும்! - வி.சி.வில்வம்


மே மாதம் தொடங்கி தமிழ்நாடெங்கும் பெரியாரியப் பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்று வருகின்றன! அதில் ஆறாவது ஊராக அரியலூர் மாவட்டம் செந்துறையில் 24.06.2023 அன்று பயிற்சிப் பட்டறை நடைபெற்றது!

90 இல் 80 என்றால் என்ன?

"தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்", எனும் தலைப்பில் அற்புதமான தொகுப்பு ஒன்றைப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் வழங்கினார்.

ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறித்துத் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி எழுதிய கவிதையோடு தொடங்கினார். மாணவர்கள் சிலாகித்துக் கேட்டதோடு, ஆசிரியர் அவர்களை எளிய முறையிலும், இலக்கிய முறையிலும் புரிந்து கொள்ள அது பயன்பட்டது!

90 இல் 80 என்றால் என்ன? அந்த 80 ஆண்டுகளைப் பொது வாழ்வில் எப்படி செலவழித்தார், ஆசிரியரின் தொடக்கம் எப்போது ஏற்பட்டது என்பது குறித்தெல்லாம் மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் அழகுற அடுக்கிக் கொடுத்தார் துரை.சந்திரசேகரன்.

பெரியாரின் நம்பிக்கை வென்றது!

1943 ஆசிரியரின் பொது வாழ்க்கை தொடக்கம். இன்றைய ஆசிரியராக இருக்கக்கூடிய அன்றைய அந்தச் சிறுவருக்கு வயது 10. இன்றைய ஆசிரியரின் ஆசிரியர் திராவிடமணி அவர்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டது!

அவர் பெறாத விருதுகள் இல்லை, கால் பதிக்காத தமிழ்மண் இல்லை, அவர்தம் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளாத இந்தியத் தலைவர்கள் இல்லை, பல்வேறு உலக நாடுகளில் மேலை நாட்டினர் வியக்கும் வண்ணம் எண்ணற்ற சொற்பொழிவுகளைத் தந்த சொக்கத் தங்கம்!

விடுதலை நாளிதழை தொடர்ந்து நடத்தும் பொருட்டு ஆசிரியர் அவர்களுக்குப் பெரியார் எழுதிய இரண்டு வரவேற்பு அறிக்கைகளும் அற்புதமானவை! பெரியாரின் அந்த நம்பிக்கைகளை 60 ஆண்டுகளாகப் பொய்த்துப் போகாமல் பெருமை சேர்த்தவர் தான் ஆசிரியர்! இந்த விடுதலை என்பது செய்திப் பத்திரிகை அல்ல; கருத்துப் பத்திரிகை! ஒரு இலக்கு நோக்கிப் பயணிக்கும் தமிழ்ச் சமூகத்தின் கருவூலம். வணிக நோக்கமின்றி நடத்தி அத னால் நட்டம் ஏற்படும் நிலையிலும், கொள்கை இலாபத்தை அதிகம் பெற்றுத் தந்தவர் நம் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்!

நூறாண்டு கால வரலாறு!

தமிழர்கள் கல்வி பெறவும், வேலை வாய்ப்பை அடை யவும் இட ஒதுக்கீடு மிக முக்கியம். காரணம் அவ்விரண்டும் நமக்கு மறுக்கப்பட்டவை! அந்த இட ஒதுக்கீட்டைத் தமிழர்களுக்குக் கிடைக்க உருவாக்கப்பட்டதே திராவிட இயக்கம். இது 100 ஆண்டுகள் பழமையானது. அந்த இயக்கத்தின் பல்வேறு தலைவர்களில் இன்று நம்முடன் இருப்பவர் தான் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. அவர்கள் இந்த இட ஒதுக்கீட்டிற்கு செய்த அளப்பரிய சாதனைகள் பல! அதுவும் தமிழ்நாடிற்கு 69 விழுக்காட்டை பாதுகாத்த தந்த சாதனை அவருடையது! முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரசிம்மராவ், குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா போன்ற மூன்று பார்ப்பனர்கள் சேர்ந்து ஆண்ட போதே, அசராமல் சரித்திரம் படைத்தவர் நம் ஆசிரியர்!

சமூக ஆரோக்கியமே முக்கியம்!

"பெரியார் குறித்துப் பேசா நாட்கள் பிறவா நாட்களே," என்பது ஆசிரியரின் கருத்து. கன்னியாகுமரி தொடங்கி, சென்னை வரை, தமிழ்நாடு முழுக்க எத்தனை முறைப் பயணம் செய்திருப்பார் என்பதில் கணக்கே இல்லை. அந்தளவிற்கு இந்தச் சமூகத்திற்கான உழைப்பு அவரு டையது! எவ்வளவு காலம் ஓடிக் கொண்டிருப்பது... திடீரென உடல்நலக் குறைவு. ஆம்! மாரடைப்பு ஏற்பட்டு இதய அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதன் பின் ஓய்வு எடுத்தாரா? அதுதான் இல்லை! அதைவிடப் பன்மடங்கு உழைத்தார்! உழைத்துக் கொண்டே இருக்கிறார்! சமூகத் திற்கு ஆரோக்கியம் வேண்டும் என்கிற கொள்கை இருப்ப தால், தன்நலன் பாராதவர் ஆசிரியர்! தமிழ்நாடு முழுவதும் இருபதிற்கும் மேற்பட்ட போராட்டங்களை முன்னெடுத்தவர், 52 முறை சிறை சென்றவர்!

சமூக நீதிக்கான கி.வீரமணி விருது!

பல விருதுகளை இவர் பெற்றாலும், இவர் பெயரிலேயே விருதுகளும் வழங்கப்படுகின்றன! அமெரிக்காவில் இயங்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், "சமூகநீதிக்கான கி.வீரமணி விருது," பலருக்கும் வழங்கப்பட்டு வருகிறது! அந்தளவிற்குப் பல்வேறு பெருமைகளை, சிறப்புகளை உடையவரே ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எனக் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் பேசினார்.

தலைப்பும் வகுப்பும்!

நிகழ்ச்சித் தொடக்கத்தில் அரியலூர் மாவட்டச் செயலா ளர் பொன்.செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார்.‌ மாவட் டத் தலைவர் விடுதலை நீலமேகம் தலைமை வகித்தார். தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச்செல்வன், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் தொடக்கவுரை ஆற்றினர்!

தொடர்ந்து தந்தை பெரியார் ஓர் அறிமுகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள் எனும் தலைப்புகளில் துரை.சந்திரசேகரன், சமூக நீதி வரலாறு எனும் தலைப்பில் சு.அறிவுக்கரசு, பெரியார் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி எனும் தலைப்பில் வழக்குரைஞர் சு.குமாரதேவன், கடவுள் மறுப்புத் தத்துவ விளக்கம் எனும் தலைப்பில் க.அன்பழகன், சமூக ஊடகங்களில் நமது பங்கு எனும் தலைப்பில் மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம் ஆகியோர் உரையாற்றினர். பயிற்சிப் பட்டறையின் நோக்கம் குறித்தும், திராவிடர் கழகம் குறித்தும் மாநில ஒருங்கிணைப்பாளரும், பெரியாரியப் பயிற்சிப் பட்டறையின் பொறுப்பாளருமான இரா.ஜெயக்குமார் பேசினார்.

நிகழ்வில் 112 மாணவர்கள் கலந்து கொண்டனர். இது வரை நடைபெற்ற பயிற்சி முகாம்களில் இந்த எண்ணிக் கையே அதிகம். அரியலூர், ஆண்டிமடம், செந்துறை, ஜெயங்கொண்டம், விளாங்குடி கைகாட்டி ஆகிய பகுதி களில் இருந்து இந்த மாணவர்கள் திரண்டனர்.

மணிகண்டன் என்கிற நமது இயக்கத் தோழர் 30 பேரை வாகனத்தின் மூலம் அழைத்து வந்து சாதனைப் படைத்தார். அதேபோன்று கவரப்பாளையத்தைச் சேர்ந்த ப.கோபால் 23 மாணவர்களை அழைத்து வந்தார். இதில் மின் பணியாளர்கள் (எலக்ட்ரீசியன்) 6 பேர். ஆக 90 விழுக்காடு மாணவர்கள் இந்தக் கருத்திற்கே புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

வகுப்புகளை நன்கு கவனித்து குறிப்பெடுத்த செ.வான்மதி, வீ.பூமணி, சி.கலைவாணன் ஆகியோருக்குப் பரிசு வழங்கப்பட்டது. மூவருமே விளாங்குடி கைகாட்டி என்பது கூடுதல் சிறப்பு!

நிகழ்வில் பங்கற்றோர்!

மாவட்டத் துணைத் தலைவர் இரா.திலீபன், மாவட்டப் பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா.இராஜேந்திரன், மாவட்டத் தொழிலாளரணி அமைப்பாளர் சி. கருப்புசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க. செந்தில், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் மு.இராசா, ஆண்டிமடம் ஒன்றியத் தலைவர் இரா.தமிழரசன், ஒன்றியச் செயலாளர் தியாக.முருகன், ஒன்றியத் துணைச் செயலாளர் பன்னீர் செல்வம், நகர அமைப்பாளர் பட்டுச்சாமி, ஜெயங்கொண்டம் ஆ.ஜெயராமன், செந்துறை ஒன்றியத் தலைவர் மு.முத்தமிழ்ச் செல்வன், செந்துறை ஒன்றிய அமைப்பாளர் சோ.க.சேகர், வை.சுந்தர வடிவேல், எஸ்.ஆர்.எம் சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் இரா.இன்பத் தமிழன், ஒன்றியச் செயலாளர் இராசா, செல்வகுமார், அரியலூர் ஒன்றியத் தலைவர் சி.சிவக்கொழுந்து, திருமானூர் ஒன்றியச் செயலாளர் பெ.கோபிநாதன், மாவட்ட மாணவர் கழக தலைவர் த.சிவமணி, மு.தமிழ்ப்புலி, செ.ரகுபதி, ப.சுந்தர மூர்த்தி, ப.சித்திரக்கண்ணன், வை. கலையரசன், கவரப் பாளையம் கோபால், பூ.கலைமணி குழுமூர் சுப்பராயன், அரியலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் விளாங்குடி க.மணிகண்டன், கமலக்கண்ணன், விஜய் சரத்குமார், பிரகாஷ், ஆகியோர் பங்கேற்றனர்.

சுயமரியாதை வாழ்வு!

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிவக்குமார் என்பவர் சுமதி என்கிற பெண்ணை இணையராக ஏற்றுக் கொண்டார். சுமதி அவர்களின் கணவர் 7 ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் இறந்து போனார். ஒரு குழந்தை இருக்கின்ற நிலையில் சிவக்குமார் மறுமணம் செய்து கொண்டார். இருவருமே ஆன்மீகவாதியாக இருந்த நிலையில், செந்துறை பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்று, சுயமரியாதை வாழ்வு வாழ அணியமாகி விட்டனர்! 


No comments:

Post a Comment