திராவிட மரபைச் சார்ந்த பச்சைத் தமிழர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 17, 2023

திராவிட மரபைச் சார்ந்த பச்சைத் தமிழர்

காசு.நாகராசன்

“இந்த வார்த்தைகளை இப்படியே எழுதணுமா? கொஞ்சம் மாற்றிப் போடலாமா?” என்று கேட்டேன் - எதை? எப்படித் தொடங்கலாமானு கேட்கறீங்க? என்று என்னைத் திருப்பிக் கேட்டார் இயக்குநர். “இல்ல. சுற்றறிக்கையின் முதல் சொற்றொடரை கொஞ்சம் மாற்றிப் போடலாமா? இப்படியே போட்டால் அது சமூகத்தில் பதற்றத்தையும் அரசுக்கு எதிரான குரல்களையும் எழுப்பக் கூடும். எனவே, அதை கொஞ்சம் மாற்றி எழுதினால் ஓரளவிற்கு சமாதானமாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து அய்யா!” என்று நான் கொஞ்சம் பணிவாகவே மீண்டும் அழுத்தமாகவே எனது கருத்தைப் பதிவு செய்தேன்.

“இருக்கட்டும் யோசிப்போம் இப்போதைக்கு இப்படியே எழுதுங்கள்”. இவை நான் சொன்னதல்ல, கனம் முதலமைச்சர் சொன்ன சொற்கள். அதனால், அதை நமது வசதிக்கு மாற்றக் கூடாது” என்று இயக்குநர் உறுதிபட சொல்லிய பின் நான் மேலும் வலியுறுத்தவில்லை. அப்படியே எழுதினேன் நாங்கள் இந்த சுற்றறிக்கையை எழுதி ஒழுங்குபடுத்தி தட்டச்சு செய்வதற்குள்ளாக. இந்து, தினமணி, சுதேசமித்ரன் நாளேடுகளின் அலுவலகங்களில் இருந்து தொலைபேசிகள் வந்தன. கல்வி இலாகா மூலமாக ஒரு முக்கிய செய்தியை இன்றே பதிவு செய்ய வேண்டுமென, முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து சொல்லியிருக்கிறார்கள். செய்தி சுற்றறிக்கையை நாங்கள் எப்போது? எங்கே வந்து பெற்றுக்கொள்ள வேண்டும்? என்பதே பத்திரிகை அலுவலக தொலைபேசிகளில் வந்த செய்திகள், “பொறுங்கள் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறோம். பணி முடிந்தவுடன் நாங்களே தகவல் சொல்கிறோம்” என் பதில் சொன்னேன். ஒரு வழியாக சுற்றறிக்கை தயாராகி விட்டது. இயக்குநரும் படித்துப் பார்த்தார். சம்மதம் சொன்னார். பத்திரிகைகளுக்கு செய்திகள் போயின. மறுநாள் காலை திட்டமிட்டபடி எல்லா பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தனர். அதைக் கண்டு நாடே பதறியது. அனைத்துக் கட்சியினரும் கண்டனங்களைப் பதிவு செய்தார்கள். பெரும் எதிர்ப்பு கிளம்பியது. நொடியில் பற்றிவிட்ட பெரும் நெருப்பாய் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணா போன்றோர் கொதித்துப் போன நிலையில் கடுங்கோபங் கொண்டு போராட்டங்களைத் தொடங்கினார்கள். அது என்ன செய்தி? அப்படி என்ன அந்த சுற்றறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது?

கல்வித்துறையில் புதிய திட்டம் கொண்டு வருவதாக ராஜாஜி முடிவு செய்த குலக்கல்வித் திட்ட சுற்றறிக்கைத் தான் அது.

கல்வித் துறை இயக்குநர் கோவிந்தராஜூலு மற்றும் துணை இயக்குநர் நெ.து.சுந்தரவடிவேலு ஆகியோர் தான் ராஜாஜியின் அறிவுறுத்தல் படி இந்த சுற்றறிக்கையை தயாரித்தார்கள். 1953ஆம் ஆண்டு வழக்கமான கோடை விடுமுறைக் காலம். சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் சி.இராஜகோபால ஆச்சாரியார் கல்வித்துறை இயக்குநர் வழியாக இந்த சுற்றறிக்கையை வெளியிட்டார்.

கல்வித்துறை அமைச்சருக்கோ, செயலாளருக்கோ கூடத் தெரியாமல் இயக்குநர் வழியாக அனுப்பிய அந்த சுற்றறிக்கை இப்படித் தொடங்கியது. “பிள்ளைகள் பெற்றோர் தொழிலைச் செய்வது தப்பில்லை”. இந்தச் சொற்றொடரோடு தொடங்கி ஒரு நேரம் படிப்பு ஒரு நேரம் குலத்தொழில் செய்ய வேண்டும் என்று குழந்தைகளை வலியுறுத்தியது அந்த அறிக்கை. இதை சீர்திருத்தம் என்றும் புதிய திட்டம் என்றும் அறிவித்தார்கள். இப்போது சொல்கிறார்களே ‘புதிய கல்விக் கொள்கை’ என்று - இது புதிது அல்ல உண்மையில் பழையது தான் - அதாவது 1953இல் சி.இராஜகோபால ஆச்சாரியார் கொண்டு வந்த கல்விச் சீர்த்தம் தான் - இப்போது மோடி கொண்டு வந்திருக்கிற * தேசியக் கல்விக் கொள்கையும். இந்தியா முழுவதும் எதிர்க்காத நீட் தேர்வை, இந்தியா முழுவதும் எதிர்க்காத புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு மட்டும் எதிர்த்து நிற்பதன் எதார்த்தம் இப்போது புரியும். இன்றைய எதிர்ப்பின் தொடக்கப் புள்ளி 53லேயே தொடங்கிவிட்டது. இன்றைய எதிர்ப்பின் தடுப்பூசியை 53லேயே தமிழர்கள் போட்டுக் கொண்டனர்.

1953இல் கல்வி இலாக்கா வழியாக - இராஜாஜி நுழைக்க முயன்ற குலக்கல்வித் திட்டத்தை திராவிடர் கழகத்தின் சார்பில் - தந்தை பெரியாரும் திராவிட முன்னேற்றக் - கழகத்தின் சார்பில் பேரறிஞர் - அண்ணாவும் இந்த புதிய திட்டம் என்கிற குலக்கல்வியை எதிர்த்தது வியப்பில்லை அது இயல்பு.

ஆனால், அன்றைக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராசர் இந்த அறிவிப்பு வருகிற போது விருது நகரிலே இருந்தார். பத்திரிகை செய்தியைப் பார்த்துப் பதறிப்போனார். அன்று மாலை விருது நகரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்திலேயே, இந்தப் பைத்தியக்காரத் திட்டத்தை ஒழித்து விட்டுத் தான் வேறு வேலை என்று முழங்கினார்.

இராஜாஜி என்றழைக்கப்பட்ட ராஜகோபால ஆச்சாரி தலைமையிலான காங்கிரசு அரசின் குலக் கல்வியை அதே காங்கிரசுக் கட்சியின் தலைவர், கட்சிப் பொதுக் கூட்டத்திலேயே பகிரங்கமாக எதிர்த்துப் பேசிய வரலாறு தமிழ் நாட்டுக்குரியது. அவ்வளவு தூரம் இந்த மண்ணை சமூகநீதியின் கோட்பாட்டில் பக்குவப் படுத்தியிருக்கிறார் பெரியார். “காங்கிரசையும் காந்தியாரையும் ஒழிப்பதே என் வேலை” என்று 1925இல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் அறிவித்து விட்டு வெளியேறிய பெரியார். அப்படியே 1953இல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் காமராசரை ஆதரித்து அணி திரட்டினார்.

காங்கிரசுக்குள்ளேயே ராஜாஜியின் குலக்கல்வியை எதிர்த்து காமராசர் குரல் எழுப்ப, இன்னொரு மூத்த தலைவர் வி.கே.ராமசாமி முதலியார் காங்கிரஸ் கட்சியில் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக கட்சியினரிடமே கையெழுத்து இயக்கம் நடத்தினார். வெளியே குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டங்களை நடத்திய பெரியார். காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய காமராசர், வி.கே.ராமசாமி முதலியார் ஆகியோரது போராட்டங்களுக்கும் ஆதரவு திரட்டி, முதலமைச்சர் ராஜகோபால ஆச்சாரியாருக்கு எதிரான வியூகங்களை வடிவமைத்தார். காங்கிரஸ் கட்சிக்குள் நுழைந்து பெரியார் நடத்திய இந்த கொரில்லா யுத்தம் ராஜாஜியால் எதிர்பார்க்கப்படாத ஒன்று. பிரிந்து நின்ற பெரியாரும் அண்ணாவும் ஒரு புறம் இரட்டைக் குழல் துப்பாக்கியாக குலக்கல்வி எதிர்ப்புப் பெரு நெருப்பை மூட்டி ராஜாஜி அரசை நிலைகுலையச் செய்தனர். கடும் எதிர்ப்பில் ஓராண்டு கூட தாக்குப்பிடிக்க முடியாத இராஜகோபால ஆச்சாரியார் 1954 மார்ச் மாதம் பதவியை விட்டுவிட்டு புறமுதுகு காட்டி ஓடினார். ஆச்சாரியார் தோற்று ஓடிய களத்திற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதலமைச்சராக காமராசரைத் தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சியினரிடையே பெரியார் பெரும் பணியாற்றினார். 1954 ஏப்ரல் 13 அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக காமராசர் பொறுப்பேற்றார்.

அந்த ஆண்டு தேர்தலில் அன்றைய வடஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டு காமராசர் பெரும் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தல் களத்திலும் பெரியாரும் அண்ணாவும் காமராசருக்கு ஆதரவாக மக்களைச் சந்தித்தனர். சனாதனத்தை வீழ்த்தி, சமூக நீதியைப் பாதுகாக்க தமிழ்நாடு எந்த விலையும் கொடுக்கும் என்கிற வரலாற்றின் நாயகனாக காமராசர் இன்றும் பெரியார் தொண்டர்களால் கொண்டாடப்படுகிறார். அண்ணாவின் தம்பிகளால் ஆராதிக்கப்படுகிறார். ஆம் பச்சைத் தமிழரும் திராவிட மரபைச் சார்ந்தவர் என்பதை யார் தான் மறுக்க முடியும்!


No comments:

Post a Comment