ஆளுநர் 'தனி அரசியல் நடத்துவதை' எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக சட்டப் பரிகாரம் தேட முன்வர வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 11, 2023

ஆளுநர் 'தனி அரசியல் நடத்துவதை' எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக சட்டப் பரிகாரம் தேட முன்வர வேண்டும்

 பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா மரபின்படி 

ஆளுநருக்குப் பட்டம் - பதக்கம் வழங்குவதுதான் வேலை 

தனியே பேருரையாற்றுவது அவரது வேலையல்ல

பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா மரபின்படி, ஆளுநருக்குப் பட்டம் - பதக்கம் வழங்குவதுதான் வேலையே தவிர, தனியே பேருரையாற்றுவது அவரது வேலையல்ல; ஆளுநர் பொறுப்பை உணராது தமிழ்நாடு சட்டமன்றம் மாற்றி இயற்றி அனுப்பிய மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார்  ஆளுநர் திரு. ஆர்.என். ரவி. அவர் 'தனி அரசியல் நடத்துவதை' எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக சட்டப் பரிகாரம் தேட முன்வர வேண்டும்   என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

தனியே சட்டம் இயற்றும் உரிமை - வாய்ப்பு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை, சட்டமன்ற, நாடாளுமன்றங்களுக்கே உண்டு.  ஜனநாயகக் குடியரசில்  - சட்டப்படி.

ஆளுநர் ஆட்சியில் வேண்டுமானால் தனியே அவர் ஆளுமை சட்டம் போடலாம் - அதுகூட நிரந்தர உரிமை கிடையாது என்பது அரசமைப்புச் சட்டத்திலும், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளாலும் மிகவும் தெளிவுபடுத்தப் பட்டிருக்கும் ஒன்றாகும்.

அந்த அடிப்படையில்தான் சில பல்கலைக் கழகங்களுக்கு (அரசு நடத்தும் கல்வி அமைப் புகளுக்கு) அந்தந்த மாநில ஆளுநர்களை வேந்தர்களாக  (Chancellor)  மாநில அரசுதான் நியமித்திருக்கும் வாய்ப்பை தந்தது. அதுவும் அந்த நபர் ஆளுநராக இருப்பதால் மட்டுமே கிடைக்கும்  (ex-officio) வாய்ப்பாகும்!

அவ்வாய்ப்பை அவர்களுக்குத் தந்த அமைப்பான அரசுக்கு அதனை மாற்றும் உரிமையை எவரும் மறுக்க முடியாது. கேள்வி கேட்கவும் முடியாது.

இந்தியாவில் உள்ள எல்லா மாநில அரசு பல்கலைக் கழகங்களிலும் ஆளுநரே வேந்தர் என்ற பொத்தாம் பொதுச்சட்டம் ஏதும் கிடையாது.

அதிகார போதையில் ஆளுநர்

இந்தப் பின்னணியை அறவே மறந்துவிட்டு அல்லது தனது அதிகார போதையில், ஆளுநர் பொறுப்பை உணராது தமிழ்நாடு சட்டமன்றம் மாற்றி இயற்றி அனுப்பிய மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு அரசியல் சித்து விளையாட்டுக் காட்டுகிறார் ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி.

தானடித்த மூப்பாக துணைவேந்தர்களை நியமனம் செய்வது - அவர்களை அடிக்கடி அழைத்து (உயர்கல்வித் துறைக்கே தெரியாமல்)ஆலோசனை என்ற பெயரில், ஒரு போட்டி அரசு நடத்துவது என்ற வேண்டாத வேலை களிலும், விதண்டாவாதம்  செய்யும் - வீண் விவகாரங்களில் ஈடுபட்டு, தி.மு.க. ஆட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் போல், பணியாளர்களை சட்ட  ஆட்சியியல் விரோதமாக நடக்கத் தூண்டுகிறார்!

பல்கலைக் கழகங்கள் தமிழ்நாட்டில் பல  உண்டு என்றாலும், ஒவ்வொன்றும் தனித்தனிச் சட்ட விதிகள்படி நடத்தப்பட வேண்டியவை யாகும்.

துணைவேந்தர்கள் நியமனங்களின் போது, தேடுதல் கமிட்டி(Search Committee)  என்ற மூவர் கொண்ட ஒரு குழு அதன் சட்ட விதிகள்படி மூன்று பேர்களைத் தரும், அதில் ஒருவர் நியமிக்கப்படுவார் என்பதுதான் நடைமுறை (அதில்கூட Seniority  என்று 1, 2, 3 வரிசை கிடையாது). மூவருக்கும் சம தகுதி, அதில் ஒருவருக்கு இறுதி நியமனம் - இதுதான் நடைமுறை - சட்டப்படி.

அந்தந்த பல்கலைக் கழக 

விதிப்படிதான் நியமனம் என்பதே சரியானது

இந்த மூன்று பேர் பரிந்துரையின்படி  - மற்ற மூன்று தேடல் குழுவில், ஒன்றிய அரசின் மானியக் குழுவின் பிரதிநிதி அமைய வேண்டும். பின்னால் - இப்போது வந்த புதிய சட்ட விதி - அது முந்தைய எல்லா பல்கலைக் கழக தனிச் சட்டங்களுக்கும், விதிகளுக்கும், நடைமுறைகளுக்கும் பொருந்தாது.

 அந்தந்த பல்கலைக் கழக விதிப்படி துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படுவது தான் சரி.

இங்கே பாரதியார் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் நியமனம் - காலதாமதமாக கொண்டு வந்து ஆளுநர் இந்தப் பழைய சட்ட விரோதமான சட்டத்தையே மாற்றுங்கள் என்று வற்புறுத்தி அதுவரை நியமனத்தைக் கிடப்பில் போட்டு கோவை பல்கலைக் கழக நிர்வாகம் முழு வீச்சில் நடைபெறாமலிருக்க முட்டுக் கட்டை செய்தார்.

இவற்றால் கல்வியாளர்களின் வன்மையான கண்டனத்திற்குக்கூட அவர் ஆளானார்.

அரசியல் விஷமத்தனம் 

செய்கிறார் ஆளுநர்!

பல்கலைக் கழக பட்டமளிப்புப் பேருரைகளை நிகழ்த்த யாரை அழைப்பது என்பது அந்தந்த பல்கலைக் கழகங்களின் ஆட்சிமன்றக் குழுவின் ஏகபோக முறை; அதில் இந்த ஆளுநர் தலையிட்டு, இன் னின்னாரைத்தான் அழைக்கவேண்டுமென்ற  அடாவடி நிபந்தனைகள். பட்டமளிப்பு விழா மரபின்படி, ஆளுநருக்கு பட்டம் - பதக்கம் வழங்குவதுதான் வேலையே தவிர, தனியே பேருரையாற்றுவது அவரது வேலையல்ல; தனியாக கூடுதலாக அவரையே பட்டமளிப்பு விழா உரையாற்ற அந்த ஆட்சிமன்றக் குழு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இதனையெல்லாம் புறக்கணித்துவிட்டு, தமிழ்நாடு ஆளுநர் - மாணவர்கள் நலனுக்கு எதிராக, வேலை வாய்ப்புக்குத் தேவைப்படும் பட்டச் சான்றிதழ்களை பெற முடியாதபடி ‘நந்தி'போல தடுத்துக்கொண்டு அரசியல் விஷமத்தனம் செய்கிறார்!

நாளும் சம்பந்தமில்லா அடாவடியான உளறுதலை தொடர்ந்த வண்ணம் உள்ளார்!

ஆணவத்தின் உச்சத்தில் நுனிக் கொம்பர் ஆகிறார்!

முதலமைச்சர் கூற்றை வரவேற்கிறோம்

இதனை தமிழ்நாடு அரசு அளவு கடந்த பொறுமையுடன் கண்காணித்து சகித்து வருகிறது; மக்கள் கடலின் பொங்கும் ஆத் திரமோ நாளும் பெருகிய வண்ணம் உள்ளது.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், சட்டப்படி வழக்குப் போடுவது குறித்து யோசித்து வருவதாகக் கூறியுள்ளார்.

நாம் அதை வரவேற்கிறோம்!

தாமதிக்காமல் சட்டப் போராட்டக் களத்தில் களமாட உடனே இறங்கியாக வேண்டும்; முந்தைய தீர்ப்புகள் நமக்கு கதவுகளை அகலமாகத் திறந்து விட்டுள்ள நிலையில், வழக்குப் போடுவதை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

நியாயம் நம் பக்கம்!

நீதி, நேர்மை நமக்குக் கிடைத்திடும், அவசியம்!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

11.6.2023





No comments:

Post a Comment