“வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை “மனுதர்மம்” மறுத்த இடத்தில் மனிதநேயத்துடன் போராடிய - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 17, 2023

“வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை “மனுதர்மம்” மறுத்த இடத்தில் மனிதநேயத்துடன் போராடிய

“வைக்கம் போராளி” டாக்டர் எம்பெருமாள் நாயுடு

நாயுடு மருத்துவமனை. எங்கே இருக்கிறது அது என்று நம் வாசகர்கள் சிலருக்கு கேட்கத் தோன்றும். நாகர்கோயிலையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோட்டார் என்னும் சிற்றூரில் உள்ள மருத்துவமனை அது. சுதந்திரப் போராட்டம், சமூகநீதிப் போராட்டம் - இவ்விரண்டையும் மவுனமாக நினைவூட்டிக் கொண்டே இருக்கும் இந்த மருத்துவமனைக்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது. கேரள மாநில வைக்கம் என்னும் நகரத்தில், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அங்குள்ள கோயில்களில் அனமதி மறுக்கப்பட்டிருந்தது பலருக்குத் தெரிந்த விவரம். அதைச் சார்ந்த ஒரு தெரியாத பெயர் எம்.எம்பெருமாள் நாயுடு. எல்லா ஜாதியினருக்கும் அந்த உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் அவர். இளைய தலைமுறையினர் அவரைப் பற் தெரிந்து கொள்ள வேண்டும். மூத்த தலைமுறையினரால் அறியப்பட்டவர் என்பதை மறுப்பதற்கில்லை. கோட்டாரில் உள்ள அந்த நாயுடு மருத்துவமனை அவரால் நிறுவப்பட்டது.

பாறையுடனா மோதல்?

வைக்கம் போராட்டத்தில் வாழ்விணையர் நாகம்மையாருடன் தந்தை பெரியார் கலந்துகொண்டதுபோல் தன் மனைவி திருமலை அம்மாளுடன் அதில் இணைந்து போராடியவர் எம்பெருமாள் நாயுடு. காந்தியாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். ஜே.யு.சுகானா என்னும் பெண்மணி எம்பெருமாள் நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். ‘அரிஜன்’ என்னும் வார இதழில் நாயுடுவின் போராட்டம் பற்றி காந்தியார் எழுதியுள்ளதை அந்த வரலாற்றில் சுகானா கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“தடுப்புகளை உடைத்துக்கொண்டு சத்தியாகிரகிகள் ஆவேசமாகச் சென்றபோது உயர்ஜாதி இந்துக்கள் அவர்களின் கண்களில் சுண்ணாம்பு கரைசலை பீய்ச்சி அடித்தார்கள். காந்திதாஸ் முத்துசாமி என்ற தொண்டரின் கண்களில் சுண்ணாம்பு படர்ந்தது. தெருக்களில் மழைநீர் தேங்கியிருந்தது. இடுப்பளவு ஆழ மழை நீரில் அவர் எம்பெருமாள் நாயுடுவுடன் நின்றபடி முழக்கங்கள் எழுப்பி அந்த நிலையிலும் போராடிக் கொண்டிருந்தார். வைக்கம் அரசருக்கு எதிராக குரலெழுப்பினார் நாயுடு.

“நீங்கள் பாறையோடு மோதிக் கொண்டிருக்கிறீர்கள். உடையப் போவது உங்கள் சிரம்தான்! நீங்களும் உங்கள் கொத்தடிமைகளும் கைக்கூலிகளும் வீழ்ச்சியடையப் போவது உறுதி!” - என்று இடியோசை போல் முழங்கினார் அவர்.”

நினைவூட்டும் நூல்

சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அந்த மாவட்டத்தைச் சார்ந்த பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாடு மறந்த நாயகர்கள் என்றால் மிகையாகாது. காலவெள்ளத்தில் கரைந்து போனவர்கள் சேகு தம்பி பாவலர், காசி பண்டாரம், சிவ முத்துக்கருப்புப் பிள்ளை, முத்துசாமி அடவியார், சிவதாணுப் பிள்ளை, தேரூர் சிவன் பிள்ளை, பெருமாள் பணிக்கர், இரணியல் சுப்பிரமணியன், சாத்து அய்யர், ஜி.ராமச்சந்திரன், காந்திராமன் போன்ற பலர். இவர்களையெல்லாம் நினைவு கூர்ந்துள்ளார் சுகானா தனது நூலில். நேஷனல் புக்டிரஸ்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல் தன்னலம் கருதாமல் போராடிய தியாகிகளை நமக்கு அடையாளம் காட்டியுள்ளது.

மனித நேயம்

எம்பெருமாள் நாயுடுவின் மூதாதையர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவருடைய தந்தை மீனாட்சி நாயுடு திருவிதாங்கூர் அரண்மனையில் பணிபுரிந்த கலைஞர். எம்பெருமாள் நாயுடு 1880ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் நாளன்று பிறந்தவர். நாகர்கோயில் ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் பயின்று மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துப் படித்து அறுவை சிகிச்சை நிபுணரானார். இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்ற காலக்கட்டத்தில்தான் அவர் இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தால் கவரப்பட்டார். மருத்துவக் கல்வியில் மேலும் பல பட்டங்களைப் பெற்ற பின் கோட்டாரில் ஒரு சிறிய கட்டடத்தில் ஒரு மருத்துவமனையை நிறுவினார். 1914ஆம் ஆண்டில் அது செயல்படத் துவங்கியது. நவீன மருத்துவ வசதிகள் வழங்கிய முதல் தனியார் மருத்துவமனையாக அது விளங்கியது. தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கினார் அவர். அவருடைய மருத்துவச் சீட்டிலேயே பிதி HF (Harijan Free)  - ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவம்‘ என்ற பொருள் புரியும்படி இரண்டு எழுத்துகள் அச்சிடப்பட்டிருந்தனவாம்.

வளர்ச்சியும் புகழும்

ஜாலியன்வாலாபாக் படுகொலையைக் கண்டித்து பேரணி நடத்தியவர் எம்பெருமாள். எனவே, 1920ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் காந்தியாரை அவர் சந்திப்பதற்கு முன்பே சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் முக்கிய தலைவராக அவர் பிரபலமடைந்திருந்தார். 1920இல் நாகர்கோயிலில் இந்திய தேசிய காங்கிரஸின் (அய்என்ஸி) ஒரு கிளையை அமைத்தார். அவரே அதன் தலைவராகப் பொறுப்பேற்றார். லாலா லஜ்பதிராய், சரோஜினி நாயுடு, நேரு போன்ற பல பிரமுகர்களும் தலைவர்களும் அந்த மய்யத்திற்கு அவருடைய அழைப்பை ஏற்று வருகை தந்துள்ளனர்.

திருவிதாங்கூரில் காந்தியாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் எம்பெருமாள். அவரைப் பற்றி அக்கறையுடன் பலரிடம் காந்தியார் விசாரிப்பது வழக்கம். அவருடன் பரப்புரைப் பயணங்களின் போதெல்லாம் உடனிருந்தவர் எம்பெருமாள். அவருடைய பாதிப்பால் உந்துதல் அடைந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர். அவர்களுள் ஒருவர் காந்திகிராம் அமைப்பை நிறுவிய ஜி.ராமச்சந்திரன்.

பழ.அதியமானின் நூல்

1924 மார்ச் மாதம் வைக்கம் போராட்டம் துவங்கியபோது எம்பெருமாள் நாயுடு தன் துணைவியார் திருமலை அம்மாளுடன் அங்கு சென்றார். காந்திதாஸ் முத்துசாமி, முத்துக்கருப்பப் பிள்ளை உள்பட பலர் அவர்களுடன் சென்றனர். “வைக்கம் போராட்டம்“ என்னும் நூலின் ஆசிரியர் பழ.அதியமான் ‘சுதேசமித்திரன்’ தமிழ் நாளிதழில் அதைப் பற்றி வந்த செய்தியை தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

“வைக்கம் போராட்டத்தில் நான்கு பேருடைய பங்கு மகத்தானது. அந்த நால்வர் - தந்தை பெரியார், எம்பெருமாள் நாயுடு, கொச்சு கோவிந்தன் மற்றும் அச்சுதமேனன். பெரியார் கைது செய்யப்பட்டு நான்கு மாதங்கள் சிறையில் அவதிப்பட்டார். நாயுடுவின் துணைவியாரும் கன்னியாகுமரியைச் சேர்ந்த வேறு சில தொண்டர்களும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பெரியார், எம்பெருமாள் நாயுடு, கோவை அய்யாமுத்து கவுண்டர் - மூவருக்கும் திருவிதாங்கூரில் பொதுக்கூட்டங்களில் உரையாற்ற தடை விதிக்கப்பட்டது. இதையும் ‘சுதேசமித்திரன்’ குறிப்பிட்டிருந்ததை பழ.அதியமான் தன் நூலில் சுட்டிக் காட்டியுள்ளார்.

வீரமங்கை திருமலை அம்மாள்

எம்பெருமாள் நாயுடுவின் வாழ்க்கைச் சரித்திர நூலில் அதன் ஆசிரியர் சுகானா குறிப்பிட்டுள்ள மற்றொரு நிகழ்வு இது. திருமலை அம்மாள் தொண்டர்கள் பலருடன் வைக்கம் மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் போராடியபடி சென்றபோது ஒரு காவல்துறை அதிகாரி அவர்களை விரட்டியடித்துள்ளார். “ஏன் வீணாக உங்கள் உடம்பை வதைத்துக்கொண்டு அவதிப்படுகிறீர்கள்?” என்று அவர் கேட்டபோது வெகுண்டெழுந்த திருமலை அம்மாள் - தெருவில் போய்க் கொண்டிருந்த ஒரு நாயைச் சுட்டிக்காட்டி - “நாயைக்கூட அனுமதிக்கிறீர்கள். மனிதர்களைத் தடுக்கிறீர்கள். இது மனித உரிமைக்கு எதிரான செயல் அல்லவா?” என்று கேட்டார். “எதையும் சந்திக்க நாங்கள் தயார். எங்களை அடித்து நொறுக்குங்கள். குண்டுகளால் எங்கள் உடல்களைத் துளைத்தெடுங்கள். எங்கள் போராட்டம் நாங்கள் சாகும்வரை ஓயாது!” என்ற சூளுரைத்தாராம் எம்பெருமாள் நாயுடுவின் துணைவியார்.

தொடர் போராட்டங்கள்

வைக்கம் நகரத்திலிருந்து திரும்பி வந்த பிறகும் எம்பெருமாள் நாயுடுவின் போராட்டம் தொடர்ந்தது. எல்லா ஜாதியினரும் சமூகத்தினரும் கோயிலைச் சுற்றியுள்ள எல்லா வீதிகளிலும் நடக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் 1924 நவம்பர் மாதம் சுசீந்திரத்தில் அவர் ஒரு பெரிய போராட்டம் நடத்தினார். அந்தச் சமயத்தில் காந்தியார் நான்கு முறை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்து நாயுடுவைச் சந்தித்துள்ளார். அவரை வரவேற்று பல பொதுக்கூட்டங்களில் உரையாற்ற வைத்துள்ளார் நாயுடு. முதலில் எல்லா சமூகத்தினரும் வீதிகளைப் பயன்படுத்த அனுமதி கிடைத்தது.

1925 மார்ச் 16ஆம் நாள் ‘தி இந்து’ நாளிதழ் - “வைக்கம் போராட்டம் எம்பெருமாள் நாயுடுவின் போராட்டங்களாலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தது. முழுமையான வெற்றி 1936இல்தான் கிடைத்தது. நவம்பர் 12ஆம் நாளன்று திருவிதாங்கூர் சமஸ்தானம் அனைத்து ஜாதியினரும் கோயிலுக்குள் நுழைய அனுமதி வழங்கிற்று. முழு வெற்றி கிடைத்த பின் 1937 ஜனவரி மாதம் லட்சுமிபாய் உயர்நிலைப் பள்ளியில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் எம்பெருமாள் நாயுடு. அதில் கலந்துகொண்டு உரையாற்றினார் காந்தியார்.

நம் நாடு சுதந்திரமடைந்த பிறகு பட்டம் தாணுப் பிள்ளையின் தலைமையில் திருவிதாங்கூரில் அரசு அமைந்தது. அமைச்சரவையில் எம்பெருமாள் நாயுடுவுக்கு இடமளிக்க முன்வந்தனர். அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். பத்து ஏக்கர் நிலத்தை அவருக்கு பரிசாக அளிக்க அரசு முடிவு செய்தது. அவர் அதையும் நிராகரித்துவிட்டார்.

1958 - அக்டோபர் 21ஆம் நாளன்று எம்பெருமாள் நாயுடு மறைந்தார். நாகர்கோயிலில் அவருக்கு சிலை எழுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அது நிறைவேறவில்லை. அந்த மனிதநேயம் மிகுந்த மருத்துவரின் நினைவாகவும் அந்தப் போராட்ட வீரரின் மவுனக் குரலாகவும் நிலைத்துள்ளது கோட்டாரில் அவர் நிறுவிய அந்த நாயுடு மருத்துவமனை மட்டும்தான்.

நன்றி: ‘தி இந்து’ நாளிதழ் - 9.6.2023

மொழியாக்கம்: எம்.ஆர்.மனோகர்

No comments:

Post a Comment