தாழ்த்தப்பட்ட மக்களுக்கு - நீதிக்கட்சி ஆட்சி செய்தது என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 17, 2023

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு - நீதிக்கட்சி ஆட்சி செய்தது என்ன?

‘பள்ளர்’, ‘பறையர்’ என்று இழிவாக உள்ள பெயரை மாற்றி ‘ஆதி திராவிடர்’ என்ற பெயரை எங்கள் சமூகத்திற்கு இட்டு அழைக்க வேண்டும் என்று எம்.சி.இராஜா 20.02.1922 சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.

அத்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. அதன் அடிப்படையில் இனி இச்சமூகத்தினரை ‘ஆதித் திராவிடர்கள்’ என்றே அனைத்து ஆவணங்களிலும் பதியவேண்டும் என்று அரசாணை எண் 217 சட்டம் (பொது) நாள் 25.03.1922இல் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

ஆதிதிராவிடர் பிள்ளைகளைப் பொதுப் பள்ளிகளில் கட்டாயமாகச் சேர்க்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. GO.No87 கல்வி நாள் 6.1.1923.

அரசு மானியம் பெறும் பள்ளிகளில் ஆதிதிராவிடர் பிள்ளைகளைச் சேர்க்க மறுத்தால் அரசு மானியம் இரத்துச் செய்யப்படும் என அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. G.O.No. 88. கல்வி நாள் 16.1.1923.

திருச்சி மாவட்ட நிர்வாகம் (District Board) ஆதிதிராவிடர் பிள்ளைகளை தனி இடத்தில் தங்கி படிக்க அனுமதி கோரியதை அரசு ஏற்க மறுத்து, ஆதிதிராவிடப் பிள்ளைகளையும், மற்ற ஜாதிப் பிள்ளைகளையும் ஒன்றாகத்தான் படிக்க வைக்க வேண்டும் என்று ஆணைப்பிறப்பித்தது. G.O.No. 2015  கல்வி நாள் 11.2.1924.

தொடக்கப் பள்ளிகளுக்குக் கட்டடங்கள் கட்டத் தொடங்கும் போதே ஆதிதிராவிடர் பிள்ளைகள் அணுக முடியுமா? ஏனெனில் கோவில், அக்கிரகாரம், போன்ற இடங்களில் ஆதி திராவிடர் பிள்ளைகளை மற்ற ஜாதியினர் அனுமதிக்க மறுப்பார்கள் என்பதால் அதை ஆய்ந்து பார்த்து ஆதிதிராவிடர் பிள்ளைகள் வருவதற்குத் தடையில்லாத இடத்தில் பள்ளிக் கட்டடங்களைக் கட்ட அரசு ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. G.O.No. 2333, 27-11-1922.

இந்தியாவிலேயே முதன் முதலாக ஆதிதிராவிட மாணவர்கள் இலவசமாகத் தங்கி படிக்க. ஆதி திராவிடர் மாணவர் விடுதி திறக்கப்பட்டது. G.O.No.2563  நாள் 24.10.1923.

இதைக் கட்டுவதற்கான பணம் முழுவதையும் ஆதிதிராவிடர் தலைவர் எம்.சி.ராஜா அவர்களிடமே கொடுத்து கட்டுவித்தார்கள்.

1931க்குள் ஆதிதிராவிட மாணவர்களுக்கு மூன்று விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன.  (T.G.Boag ICS. Madras presidency 1881-1931-132)

ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 1243. நாள் 5.7.1922)

ஆதிதிராவிட மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதத் தேர்வுக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 1241 சட்டம் (கல்வி) நாள் 17.10.1922)

ஆதிதிராவிட மாணவர்களின் கல்வி நிலையைப் பற்றிய விவரத்தை அரசுக்கு அளிக்கவேண்டும் என்று அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 859 நாள் 22.06.1923) 

ஆதிதிராவிட வகுப்பு மாணவர்களுக்கு நான்காம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்கிட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 1568 சட்டம் (கல்வி) நாள் 06.11.1923)

ஆதிதிராவிட மாணவர்களுக்கு சில பள்ளிகளில் தனி வகுப்பறைகள் இருந்ததை அரசு கண்டித்தது. ஆதி திராவிட மாணவர்களை அதிக எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்களுக்கு அதிக அளவில் அரசின் பண உதவி அளிக்கப்படும் என்று அரசாணைப் பிறக்கப்பட்டது. (அரசாணை எண் 205 கல்வி நாள் 11.02.1924)

மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 866 (பொது) சுகாதாரம் நாள் 17.06.1922)

சிதம்பரத்தில், சாமி சகஜானந்தம் ஆதித் திராவிடப் பிள்ளைகளுக்கென 1916இல் ஒரு பள்ளியைத் தொடங்கினார். ஆங்கில அரசிடம் நிலம் கேட்டார். அவர்கள் கொடுக்கவில்லை. அவர் திண்ணைப் பள்ளி மாதிரி நடத்தினார். பனகல் அரசர் தான் 50 ஏக்கர் நிலம் கொடுத்து அதை நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தி அங்கீகாரம் கொடுத்து, ஆண்டு தோறும் அரசின் நிதியுதவி கிடைக்கவும் வழி செய்தார்.

No comments:

Post a Comment