நாதுராம் கோட்சே குறித்த புத்தகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 16, 2023

நாதுராம் கோட்சே குறித்த புத்தகம்

சுரபி ராமச்சந்திரன்

கோட்சேயின் குருநாதரான  சாவர்க்கரின் பிறந்த நாளன்று இந்தியாவின் புதிய  நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்திருக்கும்  இந்தச் சூழலில் நாதுராம் கோட்சே குறித்த இப்புத்தகம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

 பத்திரிகையாளர் திரேந்திர கே.ஜா எழுதி, தமிழில் இ.பா.சிந்தன் மொழிபெயர்த்துள்ளார்.  நாதுராம் கோட்சே உருவான வரலாறு மட்டுமின்றி காந்தியார் படுகொலையின் பின்னணியில்  உள்ள சூழ்ச்சி களையும் சதித் திட்டங்களையும்  ஆதாரப் பூர்வமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது இப்புத்தகம்.

'ராமச்சந்திரா'  என்பது தான் அவனது பெயர். கோட்சே என்பது அவனது குடும்பப் பெயர். மராட்டிய மாநிலத்தில் பூனா மாவட்டத்தில் சித்பவன் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவன். அவனுக்கு முன் னால் பிறந்த மூன்று ஆண் குழந்தைகள் தொடர்ந்து இறந்து போனதால், அது துர்தேவதைகளின் கோபம் என்று நம்பிய அவனது குடும்பத்தினர், அந்த துர்தேவதைகளை ஏமாற்ற நான்காவதாகப் பிறந்த ராமச்சந்திராவுக்கு மூக்குத்தி அணிவித்து பெண் பிள்ளையைப் போல வளர்த்தார்கள். 'நாது' என்றால் மூக்குத்தி அணிந்தவர் என்று பொருள். பெண் பிள்ளையைப் போல வளர்க்கப்பட்டதால் சிறு வயது முதல் பாலுணர்வு குறித்த குழப்பம் கொண்டவனாக இருந்தான். பெண்களை கண்டாலே வெறுத்து விலகினான். ஆண்களின் துணை தான் அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது. கடைசி வரை திருமணம் செய்துகொள்ளவுமில்லை. 

அவனது தந்தை வினாயக்ராவ் கோட்சே ஆங்கிலேய அரசாங்கத்தின் அஞ்சல் துறையில் பணியாற்றி வந்தார். பணியிட மாற்றத்தால் அவரது குடும்பம் ரத்தினகிரிக்கு வந்திருந்த காலக் கட்டத்தில் தான், அங்கு வீட்டுக் காவலில் சிறை வைக்கப் பட்டிருந்த சாவர்க்கரைச் சந்திக்கும் வாய்ப்பு கோட் சேவுக்குக் கிடைத்தது. ஆரம்ப காலத்தில் காந்தியாரின் தலைமையிலான விடுதலைப் போராட்டத்தில் கோட்சேவுக்கு ஈர்ப்பும் ஈடுபாடும் இருந்தது. சாவர்க்கரின் தொடர்பாலும் அவரது தொடர்ச்சியான மூளைச் சலவையாலும் அது முளையிலேயே கிள்ளியெறியப் பட்டது. சாவர்க்கரை கோட்சே தனது சித்தாந்த குருவாக முழுமையாக ஏற்றுக் கொண்டான். சாவர்க்கர் இல்லாமல், அவர் குறித்து எழுதாமல் கோட்சேயின் வரலாறு முழுமையடையாது. 

சாவர்க்கரும் சித்பவன் பார்ப்பனர் தான். திலகரின் சீடராக இருந்தவர். 1906இல் லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார். லண்டனில் இருக்கும் போது அங்கிருந்த இளைஞர்களுக்கு ஆங்கிலேய  எதிர்ப்புணர்வை ஊட்டியதோடு அவர்களை வன் முறை நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டினார்.  சாவர்க்கரின் தனித்துவமான சாமர்த்தியம் என்ன வென்றால், மற்றவர்களை வன்முறைக்குத் தூண்டி விட்டு காரியம் முடிந்த பிறகு தனக்கு எந்தப் பிரச்சினையும் வந்துவிடாமலும், எதிலும் மாட்டிக் கொள்ளாமலும் தப்பித்து விடுவது தான். நேரடி யாகவும் வெளிப்படையாகவும் அவர் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பின்னால் மறைந் திருந்து மூளையாகச் செயல்படுவதையே தனது பாணியாகக் கொண்டிருந்தார்.

1909-ஆம் ஆண்டில் நடந்த இருவேறு ஆங்கிலேய அதிகாரிகளின்  கொலை வழக்குகளில் சிக்கி மரண தண்டனை விதிக் கப்பட்ட மதன்லால் திங் காரா, ஆனந்த் கன் கேரே ஆகிய இரு வரும்  இவரது சீடர்கள் தான். இதில் ஒரு வழக்கில், இவர் கொலையாளிக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்ததற்கான ஆதாரம் சிக்கியதால், அக்குற்றத்திற்குத்  தண்டனையாக அந்தமான் சிறைக்கு 1911 ஆம் ஆண்டு அனுப்பப் பட்டார். சிறைக்குச் சென்ற இரண்டாவது மாதத்திற்குள்ளாகவே தனது முதல் மன்னிப்புக் கடிதத்தை அவர் எழுதத் தொடங்கி விட்டார். அதன் பிறகு 1937இல் அவர் முழுமையாக விடுதலை அடையும் வரை அவர் எழுதுவதை நிறுத்தவேயில்லை. சிறையில் நடந்த கொடுமைகளையும்  சித்திரவதைகளையும் எதிர்த்து சிறைக் கைதிகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்க அழைத்த போதும் அதில் கலந்து கொள்ள சாவர்க்கர் மறுத்து விட்டார். சிறை அதிகாரிகளின் செல்லப் பிள் ளையாக மாறி நற்சான்றிதழ் பெற்று 1921 ஆம் ஆண்டு  நிபந்தனைகளின் அடிப்படையில் அந்த மானிலிருந்து  பம்பாயின் ரத்தினகிரிக்கு மாற்றப்பட்டார்.

விடுதலைக்கு பிறகு சாவர்க்கர் சுதந்திரப் போராட் டத்தின் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை.  ஆங்கிலேயரை எதிர்த்துத் தப்பித் தவறி கூட ஒரு வார்த்தை கூட பேசிவிடக் கூடாது என்பதிலும், அவர்களின் கோபத்திற்கு ஆளாகிவிடக் கூடாது  என்பதிலும் மிகக் கவனமாக இருந்தார்.தனது ஆங்கிலேய எதிர்ப்பை முஸ்லீம் எதிர்ப்பாக மாற்றிக் கொண்டார். இந்துக்கள் அனைவரும் ஒரே தேசிய இனம் என்றும், ஒரே கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் என்றும், இந்த நாடு இந்துக்களுக்கு மட்டுமே உரிமையான இந்துராஷ்டிரம் என்றும் கலாச்சார தேசியத்தின் அடிப்படையிலான  அரசியல் அணி திரட்டலுக்கான விதையைத் தூவினார். மராட்டியத்தை ஆண்ட சித்பவன் பார்ப்பனர்களான பேஷ்வாக்களின் ஆட்சிக் கால பழம்பெருமையை மீட்டெடுத்து அவர்களின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதை தனது லட்சியக் கனவாகக் கொண்டிருந்தார். RSSன் இலட்சியமும் அதுவே. RSSன் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவர் என்று கூறப்பட்டாலும்  பி.எஸ்.மூஞ்சேவும், சாவர்க்கரின் மூத்த சகோதரர் பாபாராவும் அதன் முக்கிய தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் விளங்கினர்.

கோட்சேயின் குடும்பம் சாங்கிலி என்ற ஊருக்கு மாறிய போது, அங்கு மகாராஷ்டிராவின் RSS தலை வரான ''காக்கா'  என்று  அழைக்கப்பட்ட காசிநாத் பாஸ்கர லிமயே (கே.பி. லிமயே) யின் தொடர்பு கோட்சேயை தீவிர RSS செயல்பாட் டாளனாக மாற் றியது. கோட்சே 'இந்துராஷ்டிர தளம்' என்ற அமைப்பை உருவாக்கினான். இந்து ராஷ்டிர தளத்திற் கும் கே.பி.லிமயே தான் மகாராஷ்டிரா மாநிலத் தலைவராக இருந்தார். RSSம்,  இந்து மகாசபையும் வெளிப்படையாக செய்ய முடியாத வன்முறைகளை மறைமுகமாக அரங்கேற்றுவதற்கான ரகசிய நோக்கம் கொண்டதாக இந்த அமைப்பு இருந்தது.

சாவர்க்கரின் முதற்கட்ட நிதி உதவியோடு கோட்சேயும் ஆப்தேவும் இணைந்து 'அக்ரானி' என்ற பத்திரிகையையும் நடத்தினர். அப்பத்திரிகையின் முகப்புப் பக்கத்தை எப் போதும் சாவர்க்கரின் ஒளிப்படம் தான் அலங்கரித்திருந்தது. காந்தி யாரின் இந்து முஸ்லீம் ஒற்றுமை, மத நல்லிணக்கம், மதசார் பற்ற அரசியல் போன்ற கருத்தாக்கங்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துமகா சபைக்காரர் களுக்கு வேப்பங்கா யாய்க் கசந்தது. அவர் களால் அதை சகித்துக் கொள்ளவே முடிய வில்லை. இந்தியாவின் அனைத்து துன்ப துயரங்களுக்கும் காந்தியார் தான் காரணம் என்றும், காங்கிரஸ் ஒரு இந்து விரோதக் கட்சி என்றும் அவதூறுகளையும் வெறுப் பையும் வன்மத்தையும் கக்கி கோட்சே அப்பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதி வந்தான். கோட்சேயின் எழுத்துக்களின் தெறித்த வன்முறைக் கருத்துகள் மிகக் கொடூர மானவையாக இருந்தன.  அந்த வெறி கடைசியில் காந்தியாரின் படுகொலையில் போய் முடிந்தது.

அந்தக் கொலை குறித்த சதித் திட்டங்கள், அதில் சாவர்க்கரின் பங்கு, காவல்துறை மற்றும் நீதிமன்ற விசாரணைகள் பற்றிய தகவல்களை ஏராளமான ஆதாரங்களுடன் இந்நூல் விவரிக்கிறது. சாவர்க்கர் கடைசியாகவும் மிகத்  தாமதமாகவும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தாலும் இறுதியில் விடுதலை செய்யப்பட்டார். சாவர்க்கருக்கு இதில் நேரடித் தொடர்புக்கான ஆதாரம் நிரூபிக்கப்படவில்லை என்றும், RSS க்கும் கோட்சேவுக்கும் தொடர்பு இல்லை என்றும், RSS இல் இருந்து நீண்ட காலத்துக்கு முன்பே விலகி இந்துமகாசபையில் சேர்ந்து விட்டதாகவும் கதைகள் கட்டப்பட்டன.

ஆனால் உண்மையில், RSS ம் இந்துமகாசபையும் பின்னிப் பிணைந்து மிக நெருக்கமாக இயங்கின. இந்து மகாசபை ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இயங்கியது. ஆனால் RSS ஒரு ரகசிய இயங்குமுறை கொண்ட அமைப்பாக இருந்தது. அதற்கு உறுப்பினர் பதிவேடு, வரவு செலவு விபரங்கள் என வெளிப்படையாக ஒன்றும் கிடையாது.  இன்று RSS காரர்கள் பி.ஜே.பி.யில் பொறுப்புகளில் இருப்பதைப் போல அன்று RSS காரர்கள் இந்து மகாசபையிலும் பணியாற்றினர். சாவர்க்கர் இந்த இரண்டு அமைப்புகளிலும் தனிப் பெரும் செல்வாக்கைச் செலுத்திய ஆளுமையாகத் திகழ்ந்தார். கோட்சேயும் அப்படித்தான் இரண்டு அமைப்புகளிலும் இயங்கினான். 

காந்தியார் கொலைக்குப் பிறகு  RSSன் நாக்பூர் தலைமையகத்தில் விசாரணை புலனாய்வு அமைப்புகள் கைப்பற்றிய சில  ஆவணங்களும், கோட்சே நீதிமன்ற விசாரணைக்கு முன் காவல் துறைக்கு முதலில் அளித்த வாக்குமூலமும் இத்தொடர்புகளை உறுதிப்படுத்தும்  மிக முக்கியமான வரலாற்று ஆவணங்களாகும். ஆனால் அவை புறந்தள்ளப்பட்டதன் இரகசியங்கள் குறித்து ஒரு வலுவான கேள்வியை முன் வைக்கிறது இந்நூல்.

காந்தியார் கொலையால் இந்துக்களின் மத்தியில் தான்  மாபெரும் நாயகனாகவும் தலைவனாகவும் உருவெடுத்து விடுவோம் என்ற கோட்சேயின் நம்பிக்கை தகர்ந்து போனது. மதங்கள் கடந்து அனைத்து தரப்பு மக்களும் கோட்சேயின் மீதும், சாவர்க்கர் மீதும், மஹாராட்டிர சித்பவன் பார்ப்பனர்கள் மீதும் RSS மற்றும் இந்துமகா சபை அமைப்புகள் மீதும் கடும்கோபத்தில் கொந்தளித்தனர். RSS உறுப் பினர்களை கண்ட இடங்களிலெல்லாம் தாக்கினர். அவர்களின் வீடுகள் மீதும் தாக்குதல் தொடுத்தனர். RSS-ம், இந்து மகாசபையும் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு சுதாரித்துக் கொண்டன.  கோட்சேவை அவசர அவசரமாகக் கை கழுவி விட்டு காந்தியைப் புகழ்ந்தும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் அறிக்கை விட்டன.  சாவர்க்கரும் கோட்சேயை கண்டு கொள்ளவில்லை. காந்தியார் கொலை வழக்கின் நீதிமன்ற விசாரணை காலம் முழுவதும் சாவர்க்கர் கோட்சேயை நேருக்கு நேர் பார்ப்பதைக் கூட தவிர்த்தார். ஒரு தந்தையின் இடத்தில் இருந்து வழிகாட்டிய தனது சிந்தாந்த குருவின் ஒரு ஆறுதலான தொடுகைக்காகவும் அனுதாபமிக்க பார்வைக்காகவும் அவன் ஏங்காத நாளில்லை. ஆனால் சாவர்க்கர் அவன் பக்கமே திரும்ப வில்லை. அந்தப் புறக்கணிப்பின் வலியை அவனால் தாங்கிக் கொள்ள முடியாமல் மிகுந்த மன வேதனையில் புலம்பி அழுதிருக்கிறான்.

கோட்சேயின் கடைசி விருப்பங்களை  'ஒரு சாகும் மனிதனின் கடிதம்' என்ற பொருள்படும் 'ம்ரித்யூ பத்திரா' என்ற பெயரில் வாக்குமூலமாக அளித்தான். அதில் அகண்ட பாரதத்தின் சிந்துநதியில்  தனது சாம்பலை கரைக்க வேண்டும் என்றும், அது வரை அவனது சாம்பலை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண் டும் என்றும் தனது சகோதரனுக்கு எழுதியிருந்தான்.

1949 நவம்பர் 15 ஆம் தேதி காலையில் அவனும் ஆப்தேயும் தூக்கிலிடப்பட்டு, அடுத்த சில மணி நேரங்களிலேயே இருவரின் உடலும் சிறைக்குள் ளேயே எரிக்கப்பட்டு  அவர்களின் சாம்பல் பஞ்சாபின் காகர் நதியில் ரகசியமாகக் கரைக்கப்பட்டு விட்டது. தூக்கு மேடைக்கு வரும் போது 'அகண்ட பாரதம் வாழ்க' என்று இருவரும் முழக்கமிட்டதாகவும், தூக்கிலிடப் படுவதற்கு முன்பாக பகவத் கீதையின் சுலோகங்கள் சிலவற்றையும், RSS ன் பிரார்த்தனைக் கூட்டங்களில் பாடப்படும் ஒரு சமஸ்கிருதப் பாடலின் சில வரிகளையும் பாடியதாக 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகை மறுநாள் செய்தி வெளியிட்டது. 

கோட்சே நீதிமன்றத்தில் 5 மணி நேரம் வாசித்த நீண்ட அறிக்கை, அவனது இறுதி விருப்ப வாக்கு மூலம், தூக்குமேடை ஏறுவதற்கு முன்பான நடவடிக் கைகள் அனைத்தும் ஒரு திட்டமிட்ட நோக்கம் கொண்டவை. தன்னை எதற்கும் அஞ்சாத தேசப் பற்றாளனாகவும், தியாகியாகவும், இந்துத்துவ தத்து வத்தின் நாயகனாகவும்  வெளிக்காட்டிக் கொள்வதற் காகவும், மரணத்திற்குப் பிறகு தான் அவ்வாறு நினைவு கூரப்படுவதற்காகவும்  பெருமுயற்சி செய்தான். இந்தப் புத்தகம் அழுத்தம் திருத்தமாக சுட்டிக்காட்டும் விஷயம் இது தான். 'கோட்சே ஒரு தனி மனிதனல்ல. சாவர்க்கர் வார்த்தெடுத்த ஒரு மோசமான மனித விரோத சித்தாந்தத்தின் பிரதிநிதி'. இன்று கோட்சேயின் வழித்தோன்றல்கள்  செல்வாக் கோடும் செங்கோலோடும் வலம் வந்து கொண்டி ருக்கிறார்கள்.

கோட்சையைப் பற்றிப் படிக்கப் படிக்க காந்தியார் என்ற ஆளுமையின் மதிப்பு மேலும் பன்மடங்கு உயர்ந்து நம் இதயத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது. இன்று இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் காவி இருளுக்கு காந்தியார் கொள்கைகளே கைவிளக்கு.


No comments:

Post a Comment