உயிரற்ற உடலோடு உடலுறவு கொள்வது பரிகாரமாம் - கடுமையான தண்டனைக்கு சட்டமியற்ற உயர்நீதிமன்றம் அறிவுரை - பாணன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 10, 2023

உயிரற்ற உடலோடு உடலுறவு கொள்வது பரிகாரமாம் - கடுமையான தண்டனைக்கு சட்டமியற்ற உயர்நீதிமன்றம் அறிவுரை - பாணன்



எரியும் சிதையிலிருந்து சிறுமி பிணத்தை இழுத்துப்போட்டு பாலியல் வன்கொடுமை

நெக்ரோபிலியா

ரங்கராஜு வாஜபேயி ஸ்s கருநாடகா மாநிலம் வழக்கில் கருநாடக உயர்நீதிமன்றம் கூறுகையில், “நெக்ரோஃபிலியா” என்பது மரணம் மற்றும் இறந்தவர்கள் மீதான ஈர்ப்பு மற்றும் அதிலும் குறிப்பாக, சடலங்களின் மீதான ஈர்ப்பு என்று குறிப்பிட்டது. 

இந்தியாவில் நெக்ரோபிலியா 

ஒரு குற்றமா?

இன்றுவரை, அய்.பி.சி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் குற்றங்களின் கீழ் “நெக்ரோபிலியா” ஒரு குறிப்பிட்ட குற்றமாக பட்டியலிடப்படவில்லை, ஆனால் நீதிமன்றம் 297 இன் கீழ் சட்டம் கொண்டுவரலாம் எனக் குறிப்பிட்டது. மனித சடலத்திற்கு அவமதிப்பு என்ற 297ஆவது பிரிவில் சட்டம் கொண்டு வரலாம் எனக் கூறியது இந்தியாவில் பிணங்களோடு உடலுறவு கொள்வது சடங்காகவும் பரிகாரமாகவும் கருத்தப்படுகிறது. சாஸ்திரங்களிலும் உள்ளதாக சாமியார்கள் கூறுவார்கள்

இடுகாட்டில் இறந்த பெண்ணின் உடலோடு இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமை

இறந்துபோன வயதுக்கு வராத சிறுமிகளின் உடலை சிதையிலிருந்து இழுத்துப் போட்டு பாலியல் ரீதியில் அந்த உடலோடு தொடர்பு கொள்ளும் கொடூரம் ஒன்றும் உத்தரப்பிரதேசம், அரியானா, மத்தியப்பிரதேசம் போன்ற பகுதிகளில் நடக்கிறது. 

2015ஆம் ஆண்டு குடும்பத்தகராற்றில் தற்கொலை செய்துகொண்ட கர்ப்பிணிப் பெண்ணின் உடலோடு சில சாமியார்களும் அவர்களோடு வந்தவர்களும் பாலியல் உறவு கொண்ட செய்தி வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

அதே காசியாபாத்தில் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதே போன்று ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஆனால் இதை மனநலம் பாதிக்கப்பட்ட சில நபர்கள் இவ்வாறு செய்தனர் என்று செய்திவந்தது. 

அரியானா மாநிலத்தில் சில நபர்கள் இறந்த வயதுக்கு வராத சிறுமியின் உடலை எரியும் சிதையிலிருந்து இழுத்து வெளியே போட்டு பாலியல் ரீதியான உறவு கொண்டனர் என்ற செய்தி 02.05.2023 அன்று வெளிவந்தது. ஊர்மக்கள் அவ்வாறு செய்த 5 பேரைப்பிடித்து காவல்துறையிடம் கொடுத்தனர். 

ஏன் இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்று பார்த்தால்... 

திருமணமாகாத, குழந்தைப்பேறு இல்லாத, மற்றும் அதிக நாள் பாலியல் ரீதியில் உல்லாசமாக இருக்க சாஸ்திரங்களில் இறந்துபோன கர்ப்பிணிப்பெண், வயதுக்கு வராத சிறுமி, திருமணமாகாத பெண் போன்றோர்கள் இறந்த பிறகு அவர்களின் உடலோடு உறவு கொண்டால் திருமணம் நடக்கும், குழந்தை பேறு உண்டாகும், நீண்ட நாள் பாலியல் ரீதியில் உல்லாசமாக வாழலாம் என்று சாமியார்கள் கூறுவதை வைத்து சுடுகாடுகளில் சாமியார்களோடு பெரும் செல்வந்தர்கள் சுற்றித்திரிவார்கள். அவர்களுக்கு இவ்வாறு இறந்துபோன பெண்களின் விவரம் கிடைத்தால், அந்த இடத்திற்குச் சென்று இடுகாட்டை பராமரிக்கும் நபர்களுக்கு பெரும் தொகை கொடுத்து இவ்வாறு செய்வது அடிக்கடி நடக்கும் ஒரு கொடூரம்.. அவ்வப்போது இது செய்தியாக வெளிவருகிறது. 

 காசியாபாத்தில் கல்லறையில் இருந்த கர்ப்பவதி உடலோடு பாலியல் வல்லுறவு

தமிழ்நாட்டில் கூட சமீபத்தில் ஒரு அகோரி சாமியார் பிணத்தின் மீது அமர்ந்து பூஜைகள் செய்தார் என்ற செய்தி வெளியானது. இவ்வாறு நடக்கும் நிகழ்வு தமிழ்நாட்டிலும் அடிக்கடி செய்தியாக வருகிறது. மக்கள் கூட்டம் இருக்கும்போதே பிணத்தின் மீதமர்ந்து பூஜை செய்பவர்கள் தனிமையில் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்பது பெரும் கேள்வியாகும்.

நெக்ரோபிலியாவை 

தடை செய்த நாடுகள்?

நெக்ரோபிலியாவைத் தண்டிக்கும் எந்தவொரு குறிப்பிட்ட விதியும் இந்தியாவில் இல்லை என்றாலும், ஆஸ்திரேலியாவில் பாலியல் குற்றச் சட்டம், 2003, பிரிவு 70 இன் கீழ் நெக்ரோபிலியா, குற்றம் என சட்டம் இயற்றி உள்ளது. இதற்கு 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இது தவிர, கனடா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவும் பல்வேறு சட்டங்களின் கீழ் நெக்ரோபிலியாவைத் தடை செய்கின்றன.

கருநாடக நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்தது என்ன?

அய்பிசி 377ஆவது பிரிவின் கீழ் விதிகளை திருத்தியமைக்க வேண்டிய நேரம் இது என நீதிமன்றம் வலியுறுத்தியது. அதே நேரம் புதிய விதியை இயற்றலாம் எனவும் பரிந்துரைத்தது. அதில் நெக்ரோபிலியா குற்றத்திற்கு அபராதத்துடன், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கலாம் என பரிந்துரைத்தது.

கருநாடக உயர் நீதிமன்றத்தில் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்தது.

மே 30 அன்று கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பெண்ணின் சடலத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமாகாது. இந்திய தண்டனைச் சட்டம் 376ஆவது பிரிவின் கீழ் தண்டனை பெறாது. ஏனெனில் அதற்கு சட்டத்தில் எந்த விதியும் இல்லை என்று கூறியது.

மேலும் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் பி.வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் அடங்கிய அமர்வு, இறந்தவர்களின் கண்ணியத்தை காக்க ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தது, அய்பிசி 377ஆவது பிரிவின் கீழ் திருத்தம் செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறியது. மேலும் இது ஒன்றிய அரசு திருத்தம் செய்வதற்கான நேரம் என்றும் கூறியது.

கருநாடக உயர் நீதிமன்றத்திற்கு வந்த வழக்கு என்ன?

ஜூன் 25, 2015 அன்று, 21 வயதான பெண் தனது கம்ப்யூட்டர் வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட ரங்கராஜு அந்த பெண்ணைப் பிடித்து இழுந்து வாயை மூடி, அருகிலுள்ள புதருக்கு இழுத்துச் சென்றார். இதைத் தொடர்ந்து, அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது அய்பிசி பிரிவு 302 கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். பிறகு அவர் அந்த பெண்ணை “பாலியல் வன்கொடுமை” செய்தார்.

காவல்துறையினர் ரங்கராஜு மீது வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அய்பிசி பிரிவு 302 மற்றும் 376 கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சாட்சியங்களை ஆராய்ந்த செஷன்ஸ் நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணை கொலை செய்து பின்னர் அப்பெண்ணின் உடலை “பாலியல் வன்கொடுமை” செய்தார் என்பது சந்கேத்திற்கு இடம் இன்றி நிரூபணம் ஆனதாக தீர்ப்பளித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுங் காவல் சிறைத்தண்டனையும், கொலை குற்றத்திற்கு ரூ. 50,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, ரங்கராஜுக்கு மேலும் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ. 25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்நிலையில் செஷன்ஸ் நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ரங்கராஜு கருநாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

அய்பிசியின் பிரிவு 302இன் கீழ் கொலைக் குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் உடலை “பாலியல் வன்கொடுமை” செய்ததற்காக 376ஆவது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது. உயிரற்ற உடலை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 376ஆவது பிரிவின் கீழ் தண்டனை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியது.

“குற்றம் சாட்டப்பட்டவர் உயிரற்ற உடலில் உடலுறவு கொண்டார்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இருப்பினும், இது பிரிவுகள் 375 (பாலியல் வன் கொடுமை) மற்றும் 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) ஆகியவற்றின் கீழ் குற்றமாகுமா என்பதைப் பார்க்க வேண்டும் என்றனர்.

“இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 மற்றும் 377 பிரிவுகளின் விதிகளை கவனமாகப் படித்தால், இறந்த உடலை மனிதனாகவோ அல்லது நபராகவோ அழைக்க முடியாது என்பது தெளிவா கிறது. இதனால், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375 அல்லது 377 இன் விதிகள் ஈர்க்கப் படாது, ”என்று நீதிமன்றம் கூறியது.

பிரிவு 376 (பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை) கீழ் தண்டனைக் குரிய எந்த குற்றமும் நடக்கவில்லை என்று கூறிய நீதிமன்றம், “இறந்த உடலில் உடலுறவு கொள்வது நெக்ரோபிலியா தவிர வேறில்லை” என்று தெளிவுபடுத்தியது.


No comments:

Post a Comment