ஒன்றிய ஆட்சியின் வன்மம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 2, 2023

ஒன்றிய ஆட்சியின் வன்மம்!

பாஜக நாடாளுமன்ற உறுப்பினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான டில்லி மல்யுத்த வீராங்கனைகள் நீதிகேட்டு நடத்தும் போராட்டத்திற்கு நாடு எங்கும் பிரபலங்களின் ஆதரவு பெருகிக்கொண்டு இருக்கிறது. 

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூசன் மல்யுத்தவீராங்கனைகளை மிரட்டியும், அவர்களை மயக்கியும் பாலியல் வன்கொடுமை செய்ததாக பல மாதங்களாக புகார்கள் தொடர்ந்து வந்தன. ஆனால் அந்தப்புகார்களின்மீது ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இந்த நிலையில் மல்யுத்தவீராங்கனைகளும் ஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட முக்கிய போட்டி களில் பங்கேற்று பதக்கம் வென்ற வீராங்கனைகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குற்ற வாளியான பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூசனை கைது செய்ய வலியுறுத்தி ஜனவரி மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒன்றிய அரசோ கண் துடைப்பிற்காக மேனாள் குத்துச்சண்டை வீரர் மேரி கோம் தலைமையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யக் கூறியது. அவரும் பாதிக்கப்பட்ட யாரையுமே சந்திக்காமல், தானாகவே ஒரு அறிக் கையைத் தயார்செய்து ஒன்றிய அரசிடம் ஒப் படைத்தார். அந்த அறிக்கை இதுவரை வெளியிடப் படவில்லை.  பிஜேபியைச் சேர்ந்தவர்கள் என்றால் அவர்கள் எந்த எல்லைக்குச் சென்று எதைச் செய்தாலும் பிஜேபி ஆட்சியால் காப்பாற்றப்பட்டே தீர்வார்கள்.

இந்த நிலையில் மீண்டும் வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இவர்களின் போராட்டம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த பிரபல மராட்டி மற்றும் ஹிந்தி மொழி திரைப்பட நடிகர் நானாபடேகர் கூறியுள்ளதாவது, “இந்திய மக்கள் கசாப்புக் கடையில் இருக்கும் கோழிகளைப் போன்றவர்கள், மற்ற கோழிகள் அறுக்கப்படும் பொழுது  அதைப் பற்றிக் கவலைப்படாமல் கசாப்பு கடைக்காரன் கொடுக்கும் தீவனத்தை   சந்தோசமாக தின்று கொண்டிருக்கும். அதன் முறை வரும்பொழுது கசாப்பு கடைக்காரன் சுடுதண்ணீரில் தூக்கி போடும் போது மட்டுமே கதறித் துடிக்கும். முதலில் இஸ்லாமியர்கள், பின்னர் விவசாயிகள், இப்பொழுது மல்யுத்த வீராங்கனைகள் (பெண்கள்). மக்கள் இதைப் பற்றி எதையுமே கவலை கொள்ளாமல் தீவனத்தைத் தின்று கொண்டிருக்கிறோம். நமது முறையும் வரும்..."   என்று பொறி தட்டுவது போல் கூறியுள்ளார்.

ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி ஆட்சி, அதிகாரத்துக்கு வந்த நாள் தொட்டு சட்டம், ஒழுங்கு, நேர்மை, கண்ணியம், மதச் சார்பின்மை, சமூகநீதி, பெண்ணுரிமை, இன்னோரன்ன உயர் பண்பாட்டு நிலைப்பாடுகளை யெல்லாம் காலில் போட்டு மிதித்துத் துவம்சம் செய்து வருவது கண் கூடு.

மல்யுத்த வீராங்கனை என்று ஒருவர் இருவர் அல்ல - ஒரு பட்டியலே வருகிறார்கள். இவ்வளவுப் பேர்களும் குறிப்பிட்ட ஒருவர் மீது பாலியல் குற்றம் சுமத்துகின்றனர் என்றால், இதனை அலட்சியப்படுத்த முடியுமா?

 இது போன்ற விடயங்களில் பெண்கள் தானாக முன்வந்து பொய்யாகக் கூறுவார்களா? சற்றுப் பொது அறிவோடு சிந்திக்க வேண்டாமா?

குஜராத்தில்  முசுலிம் பெண்ணை  கர்ப்பிணி என்றுகூடப் பார்க்காமல் கூட்டுப் பாலியல் வன் கொடுமை செய்த கூட்டமாயிற்றே!

மல்யுத்த வீராங்கனைகளுக்கு இந்தப் பிரச் சினையில் நியாயம் கிடைக்கவில்லை என்றால் இந்தியாவின் மானம் கப்பலில் ஏறும் என்பதைவிட விமானத்தில் பறக்கும் என்றுதான் சொல்ல வேண்டும்.

யாருக்கோ வந்த விருந்து என்று கருதாமல் பெண்கள் எல்லாம் வீதிக்கு வந்து போராட வேண்டும். மயிலே மயிலே என்றால் இறகு போடுமா?

No comments:

Post a Comment