பிரதமர் சென்று மக்களிடையே நம்பிக்கை ஊட்டினாரா? மக்களின் கண்ணீரில் காவிகள் நீந்துகிறார்களா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 22, 2023

பிரதமர் சென்று மக்களிடையே நம்பிக்கை ஊட்டினாரா? மக்களின் கண்ணீரில் காவிகள் நீந்துகிறார்களா?

 *  மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது! எரிகிறது!!

* மதவாத சக்திகளே இந்தக் கொடுமைக்குப் பின்னணி!

ஒரு மாநிலத்தில்  உள்நாட்டுப் போர் போன்று எரியும் நிலையில் ‘இரட்டை என்ஜின் ஆட்சி' கவனம் தீவிரமாக வேண்டாமா?

இந்தியாவின் ஒரு மாநிலமான மணிப்பூரில் உள்நாட்டுப் போர் போல பற்றி எரியும் ஒரு காலகட்டத்தில், அதுகுறித்து எதையும் பொறுப்போடு பேசாமலும், கண்டுகொள்ளாமலும் தனி விமானத்தில் அமெரிக்கப் பயணத்தை மேற் கொண்டுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த காவி ஆட்சியை வீழ்த்திட வெகுமக்கள் ஒன்று திரண்டு போராடுவது முக்கியம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

மணிப்பூர் தீப்பற்றி எரிந்து சாம்பலாகிறது

பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பன்முகத்தன் மையுடன் ஒற்றுமையாக வாழ்ந்த சமூகங்களின் ஒருமித்த ஒற்றுமை வன்முறைத் தீயில் அழிந்து வருகிறது! மெய்தேயி, குகி மற்றும் நாகோ சமூகத்தினர் பழைய பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டு மீண்டும் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற கனவும் தற்போது எரிந்து சாம்பலாகி வருகிறது. ஒருமித்த சமூக நம்பிக்கை குறைந்துள்ள நிலையில், நம்பிக்கையின்மை தான் எங்கும் நிறைந்திருக்கிறது. உண்மை என்னவெனில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு சமூகங்களுக்குள் எழுந்த ஜாதிப் பிரச்சினை கடந்த ஒன்றரை மாதங்களாக நீடித்து வருகிறது. தொடர்ந்து பதற்றமும் நிலவிவருகிறது. 

பிரச்சினை என்ன?

மெய்தேயி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே நடந்து வரும் சண்டையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், 390 பேர் காயமடைந்துள்ளனர். இருப்பினும் இந்த வன்முறைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதுதான் வேதனை! ‘ஏழு சகோதரிகள்' என்று வருணிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் உள்ள மெய்தேயி சமூகத்தினர் அவர்களை பழங்குடியின மக்களாக அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கைதான். இப் பொழுதுள்ள முக்கிய பிரச்சினை. 

கடந்த மே மாதம் 3 ஆம் தேதியிலிருந்து 6 ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கர வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இந்த வன்முறையின் தொடர்ச்சியாக மெய்தேயி மக்கள் குகி மக்களையும், குகி மக்கள் மெய்தேயி மக்களையும் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர். 

இந்த வன்முறையில் தனது சகோதரனை இழந்த ராணுவவீரர் ஒருவர் கூறும் போது "எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எங்கள் வாழ்க்கையே பறிபோய் விடும் நிலைதான் காணப்படுகிறது. அது நடக்கும் போது நாங்கள் இறந்துவிடுவோம். பழங்குடியின மக்களுக்குத் தேவையான உதவிகளை ஒன்றிய அரசு வழங்கவில்லை. இப்போது நடக்கும் வன்முறைகள் ஒரு உள்நோட்டுப் போர் தான். அரசுக்கு எதிராகப் பொதுமக்கள் போர் தொடுத்துள்ளனர். கோரிக்கைகளை ஏற்கும் வரை, உயிரிழந்த உடல்களை பிணக் கிடங்கிலிருந்து யாரும் வாங்க மாட்டார்கள்," என்கிறார் அவர் .

வன்முறை முடிவது எப்போது?

மணிப்பூர் இப்போது இரண்டு பிரிவுகளாக உடைந்து கிடக்கிறது. இதில் ஒரு பிரிவு மெய்தேயி மக்கள். மற்றொரு பிரிவு குகி மக்கள். தற்போதைய வன்முறைகள் ஒரு நாளிலோ அல்லது இரண்டு முதல் நான்கு நாள் களிலோ முடிந்துவிடும் வன்முறை அல்ல. பல வாரங்களாக - மாதக்கணக்கில் நீடிக்கும் நிலையில், இந்த வன்முறைகளில் வீடுகள், விவசாய நிலங்கள், வணிக வளாகங்கள் என ஏராளமான சொத்துகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. எங்கு தவறு நடந்தது என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. 

சுமார் 30 லட்சம் பேர் வாழும் மணிப்பூரில், பெரும்பான்மையானோர் மெய்தேயி பள்ளத்தாக்கில் தான் வசித்து வருகின்றனர். ஆனால், குகி சமூகத்தினர் பல ஆண்டுகளுக்கு முன்னரே மலைப்பகுதியில் உள்ள நான்கு மாவட்டங்களில் குடியேறி வசித்து வருகின்றனர்.

மதவாத சக்திகள் ஊடுருவிவிட்டன

இந்த வன்முறைச் சம்பவங்களின்போது, அதிக எண்ணிக்கையில் உள்ள ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே குடியேறிய மற்றொரு சமூகத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் இதற்குமுன் இதுபோல் வன்முறைகள் நடந்ததற்கான எந்தவித வரலாறும் இல்லை என மணிப்பூரில் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான பிரையோரஞ்சன் சிங் கூறுகிறார். ‘‘உண்மையைச் சொல்லப்போனால் குகி மற்றும் நாகா சமூகத்தினருடன் இணைந்து வாழ்ந்த மெய்தேயி மக்கள்தான் குகி மக்களுக்கு மாநில நிர்வாகத்தில் கூட ஒரு வலுவான இடத்தை அளித்தனர்.

இங்கே ஹிந்துவாக இருக்கும் மக்களின் வரலாறே வேறு விதமாக இருக்கிறது. மணிப்பூர் மக்கள் ஒருபோதும் மத வேறுபாடுகளைப் பெரிதுபடுத்துபவராக இருந்ததில்லை. இத்தனை ஆண்டுகளாக மதவாதத்தால் பெரிதும் ஈர்க்கப்படாத மணிப்பூர் மக்கள் உள்ளத்தில் தற்போதைய ஆட்சியாளர்களும், சில அமைப்புகளும் மதவாதத்தைத் திணித்துவிட்டனர். அதனால், தற்போதைய வன்முறைகளில் இருதரப்பிலும் உயிரிழப்பு களும், பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பிடங்களை இழந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட் டுள்ளனர். வெளிமாநிலங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களில் மெய்தேயி சமூகத்தினரும், குகி சமூகத் தினரும் அடங்குவர்.

250 சர்ச்சுகள் எரிப்பு!

ஒரு கோவில் எரிக்கப்பட்டது என்றால், பல சர்ச்சுகள் எரிக்கப்படுகின்றன.  அரசின் புள்ளி விவரங்களின்படி, ஜூன் மாதம் முதல் வாரத்தில் மட்டும் 250 சர்ச்சுகளும், இரண்டாயிரம் வீடுகளும் தாக்கப்பட்டுள்ளன.

குகி சமூகத்தினர் விரக்தியின் விளிம்புக்கே சென்றுவிட்ட நிலையில், அரசு மீதிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர்.  சர்ச்சுகளின் மீதான தாக்கு தலைத் தடுக்க அரசு தவறிவிட்டது. கிறிஸ்தவர்களின் நலன் களைக் காக்கத் தவறிய அரசு, அவர்களின் சொத்துகள் அழிந்து வருவதை வேடிக்கைப் பார்க்கிறது; ஹிந்துக் களைத் திருப்திப்படுத்தவே சர்ச்சுகளுக்குத் தீ வைக்கப் பட்டதாக பாதிரியார் ஹாக்கிப் தோங்கோ என்பவர் கூறுவதிலிருந்தே பி.ஜே.பி.யின் மதத் திருவிளையாடல் அம்பலமாகிவிட்டது.

கிறிஸ்தவ மக்களின் கோரிக்கை

குகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மியான்மா நாட்டின் சின் மாகாணத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்றும், அவர்கள் வந்தேறியர்கள் என்றும் தவறான தகவல் பெரும்பான்மை சமூகத்தினரிடம் பரப்பப்படு கிறது. மணிப்பூரில் சிறுபான்மை சமூகமாக வசித்துவரும் குகி இன மக்கள், தங்கள் பகுதிகளுக்கென்று தனிப்பட்ட அரசு தேவை என்பதை வலியுறுத்துகின்றனர். ஆனால், அதற்கு ஒன்றிய அரசு மறுப்புத் தெரிவித்துவிட்டது. மாநில அரசோ இந்த வன்முறைகள் குறித்து கவனமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குகி மாணவர் அமைப்பின் செயலாளரான மாங் கோன்சே கூறியுள்ளார்.

‘‘ஒவ்வொருவரும் எல்லா இடங்களிலும் பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. ஏதோ ஒரு இடத்தில் அவர் ஒரு சிறுபான்மை சமூகத் தினராக இருப்பார். இது மணிப்பூர் என்பதால், நீங்கள் ஒரு பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால், நீங்கள் மணிப்பூருக்குள் மட்டும் அடங்கும் சமூகம் கிடையாது. அதனால், வேறு பல இடங்களில் நீங்களும், நாங்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை எதிர்கொள்ளும் நிலை இருக்கலாம்'' என அவர் கூறுகிறார்.

‘‘மணிப்பூரில் முன்னெப்போதும் மத ரீதியான கலவரங்கள் நிகழ்ந்ததில்லை. ஆனால், இப்போது மட்டும் அதுபோன்ற வன்முறைகள் இடம்பெற என்ன காரணமென்றால், ஏதோ ஒரு சக்தி இரு சமூகத்தினரையும் மத ரீதியாகத் தூண்டிவிட்டிருக்க வேண்டும்'' என்கிறார் காங்கிரஸ் கட்சியின் மணிப்பூர் மாநில முக்கியத் தலைவர்களில் ஒருவரான தேவபிரதா சிங்.

எல்லா வகையிலும் 

துண்டிக்கப்பட்ட மணிப்பூர்

சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகள் சூறையாடப் பட்டுள்ளன. சர்ச்சுகள் தாக்கப்படும்போது பாதுகாப்புப் படையினர் வேடிக்கை பார்க்கின்றனர். அதைத் தடுக்க வரும் மக்களை மிருகங்களைப்போல் சுடுகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர்களை மக்கள் நெருங்க விடாமல் பாதுகாப்புப் படைகள் அத்துமீறி அவர்களை வீட்டுக் காவலில் வைக்கிறது.

இணையம் இல்லை, தொலைப்பேசி இல்லை, செய்தி நிறுவனங்கள் அனைத்தும் மவுனம் காக்கின்றன.

பரந்துபட்ட இந்தியாவில் ஒரு மாநிலமே தீக்கிரை யாகிறது.

கண்டுகொள்ளாத பிரதமர் மோடி

பல கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்தும் பிரதமர் மோடி அவர்களை சந்திக்கத் தயாராக இல்லை.

இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம்பற்றி எரியும்போது, அதுபற்றி ஒரு வார்த்தையையும் கூறாமல், அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டு விட்டார்.

‘இரட்டை என்ஜின் ஆட்சி' என்று பிரமாதமாக தோள் தட்டுகிறாரே பிரதமர் மோடி, மணிப்பூரிலும், இந்தியாவிலும் ஆட்சியில் இருப்பது பி.ஜே.பி.தானே - இந்த இரட்டை என்ஜின் ஆட்சி தடம்புரண்டு அல்லவா குப்புற வீழ்ந்துள்ளது!

முதலமைச்சரின் எச்சரிக்கை முத்தாய்ப்பானது

தமிழ்நாடு முதலமைச்சர் அண்மையில் குறிப்பிட் டுள்ளதுபோல், பி.ஜே.பி. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவே அழிந்துவிடும். ஓர் இருண்ட காலத்தில் நாடு பயணிக்கிறது.

மத நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை என்பது தனி மனிதரைச் சார்ந்தது. அதை அரசியல்படுத்துவது, அராஜகத்தில்தான் முடியும் என்பதற்கு மணிப்பூர் முக்கியமான எடுத்துக்காட்டு!

வெகுமக்கள் கிளர்ந்தெழட்டும்!

சாதனைகளை செய்ய சக்தியில்லாத ஒன்றிய அரசும், அதன் பரிவாரங்களும் மதத் தீயில் குளிர்காயலாம் என்று நினைத்தால், அதனை முறியடிக்கவேண்டியது வெகுமக்களின் முக்கியமான கடமையாகும்.

குளிரிலும், வெய்யிலிலும் ஆண்டு கணக்கில் விவசாயிகள் தலைநகரான டில்லியில் போராட்டம் நடத்தியபோது, அதனைப் பொருட்படுத்தாத ஜனநாயக விரோத கல் மன அரசை அப்புறப்படுத்திட, இந்தியாவில் வெகுமக்கள் திரண்டெழ மாட்டார்களா? அரசியல் மாச்சரியங்களை மறந்து கையிணைத்துப் போராட்டம் வெடிக்க ஒன்றிய அரசே காரணமாகலாமா?

நாட்டில் அமைதி திரும்பட்டும்!

உள்நாட்டிலேயே புதுவகை அகதிகளாக மக்கள் ஆகும் நிலையைத் தடுக்கவேண்டும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

22.6.2023


No comments:

Post a Comment