கழகத் தோழர்களின் சிந்தனைக்கும் - கவனத்துக்கும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 25, 2023

கழகத் தோழர்களின் சிந்தனைக்கும் - கவனத்துக்கும்!

தோழர் வி.சி.வில்வம் எழுதிய கீழ்க்கண்ட கடிதத்தை ஒருமுறைக்கு இருமுறை படியுங்கள், தோழர்களே!

திருநாகேஸ்வரத்தில் 17.06.2023 அன்று பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. அதன் விரிவான செய்தி 19.06.2023 'விடுதலை'யில் வெளி வந்தது.

நிகழ்ச்சிக்கு நன்கொடை அளித்த அனைவருக்கும் "விடுதலை" செய்தியைப் பகிர்ந்திருக்கிறார்கள் தோழர்கள்! தவிர இந்த நிகழ்ச்சி குறித்தும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது எனவும் தோழர்கள் கருத்து தெரிவித்தனர்!

இதில் சுகமான சங்கடம் என்னவென்றால், கோழிப் பண்ணை வைத்திருக்கும் அப்துல் ரகுமான் என்பவர், "இந்த நிகழ்ச்சிக்காக என்னிடமும் கேட்டிருக்கலாமே, நானும் 10 கிலோ கோழிக்கறி தந்திருப்பேனே", என அன்புடன் கோபம் கொண்டுள்ளார்.

அதேபோல திருநெல்வேலியில் இருந்து வந்து திருநாகேஸ்வரத்தில் ஸ்ரீ முருகவிலாஸ் எனும் பெயரில் கடலைமிட்டாய் தயாரிக்கும் நண்பர் சரவணன், "நான் பக்கத்திலேயே இருக்கிறேன், என்னிடம் கேட்டால் பிள்ளைகளுக்குத் தர மாட்டேனா'' என உரிமையோடு கேட்டுச் சென்றுள்ளார்!

திருவிடைமருதூரில் வசிக்கும் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பி.இராதாகிருஷ்ணன் அவர்கள், "நிகழ்ச்சி சிறப்பாக நடந்ததாக அறிந்தேன். எனது நன்கொடையாக ரூ 5 ஆயிரம் வைத்துக் கொள்ளுங்கள்'' என்றாராம். நிகழ்ச்சி முடிந்துவிட்டதே என்றதற்கு அடுத்தடுத்துப் பயன்படும் என்று கூறியிருக்கிறார்!

ஆக ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றதற்குப் பிற்பாடு ஏற்படுகிற நிறைவு இது! சுவையான காபி குடித்துவிட்டு, ஓரிரு மணி நேரத்திற்கு வேறெதுவும் சாப்பிடமாட்டார்கள். காரணம் காபியின் சுவை நாக்கை விட்டு போய்விடும் என்பதால்!

அதேபோல ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தால், அந்த இனிய நினைவுகள் நெஞ்சில் நிழலாடிக் கொண்டே இருக்க வேண்டும்! பொது மக்கள் ஆதரவோடு, அந்த நிறைவில் இருக்கிறார்கள் திருநாகேஸ் வரம் தோழர்கள் - என்பதுதான் தோழர் வி.சி.வில்வம் கடிதம்.

நமது தோழர்கள் ஓடி ஓடி உழைக்கிறார்கள்; மக்களிடம் நன்கொடை திரட்டி அம்மக்களின் எதிர்காலம் சிறக்க பகுத்தறிவுப் பயிற்சி, நன்னடத்தைக்கான ஊக்கம் முற்போக்குச் சிந்தனைகளை விதைக்கிறார்கள்.

பயிற்சிப் பட்டறை என்பது நமது இயக்கத்திற்கே உரிய தனி செப்பேடு!

நமது தலைவர் ஆசிரியர் போன்றவர்கள் மாணவர் பருவத்தில் ஈரோட்டில் தந்தை பெரியாரால் ஏற்பாடு செய்யப் பட்ட சுயமரியாதை, பகுத்தறிவு பயிற்சிகளில் பங்குகொண்டு, அதன் விளைச்சலாக 90 வயதிலும் வீர உலா வருகிறார்.

ஈரோடு - கழகப் பொதுக் குழுவுக்குப் பிறகு, கழகச் செயற்பாடுகள் புது உத்வேகம் எடுத்துள்ளன மகிழ்ச்சிக்குரியது. கழகத்தின் பல்வேறு பணிகளும் பாய்ச்சல் வேகத்தில் நடந்துகொண்டுள்ளன.

அதேநேரத்தில், நம்மைச் சுற்றியுள்ள நமது ஆதரவாளர் களை அடையாளம் காண வேண்டாமா? உதவிக் கரம் நீட்டத் தயாராக உள்ள தக்கார்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டாமா?

மக்களோடு மக்களாக அன் றாடம் பழகக்கூடியவர்கள் தானே நாம்.

தோழர் வில்வத்தின் கடிதம் இதனைத்தான் உணர்த்துகிறது.

அடையாளம் காண்போம்,  ஆதரவாளர்களின் எண்ணிக் கையையும் பெருக்கு வோம் - அதன் நல்விளைவு வாய்க்கால் வழியோடி மக்களை, இளைஞர்களைச் செழுமைப்படுத்துமே!

 -  மயிலாடன்


No comments:

Post a Comment