இந்த சிலைக்குப் பின்னால், புகழ் பாடுகிற தமிழினத்தின் புது வரலாற்றைப் பார்க்கிறோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 21, 2023

இந்த சிலைக்குப் பின்னால், புகழ் பாடுகிற தமிழினத்தின் புது வரலாற்றைப் பார்க்கிறோம்!

 என் தமிழினத்தை இரண்டாந்தரமாக்கும் எந்த சமயத்தையும், கடவுளையும் நான் ஏற்கமாட்டேன்!

கலைஞர் சிலை திறப்பு விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் இன உணர்ச்சி முழக்கம்

‘‘சிலைகளைவிட அதற்குப் பின்னாலே இருக்கிற சிந்தனைகள்தான் முக்கியம். கலைஞர் அவர்களை இங்கே சிலையாக மட்டும் பார்க்கவில்லை; சிலைக்குப் பின்னாலே இருக்கிற ஒரு புகழ் பாடுகிற தமிழினத்தின் வரலாற்றை - ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்ந்து ஓய்ந்ததற்குப்பிறகு மீண்டும் எழுச்சி பெற்று வருகிற ஒரு புது வரலாற்றைப் பார்க்கிறோம்'' என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் 21.9.1975 அன்று தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் சிலையை திறந்து வைத்து உரையாற்றுகையில் குறிப்பிட்டார்கள்.

கலைஞரின் உருவச் சிலையைத் திறந்து வைத்து குன்றக்குடி அடிகளார் பேசும் போது குறிப்பிட்டதாவது:

இந்த நாளில் தமிழகத்தின் வரலாற்றில் மிக முக்கிய மான நிகழ்ச்சியில் நாம் அனைவரும் மிக உணர்ச்சி வசப்பட்டு கிளர்ந்து எழுந்து நிற்கின்ற இந்தப்பேரவையில், நம்முடைய தலை முறையின் மிகச்சிறந்த தமிழ்த் தலைமகனாக விளங்குகின்ற கலைஞர் அவர்களுடைய சிலையைத் திறந்து வைக்கவும் உரிய வாய்ப்பளித்த திராவிடர் கழகத்திற்கு என் நன்றி, வாழ்த்து, பாராட்டுகள்.

என்னை இந்தச் சிலையைத் திறந்து வைக்குமாறு கோரிக்கை வைத்த போது வேறு யாரையாவது அழைக்க லாமே என்று நான் பரிந்துரை செய்தேன்.

ஆனால், நண்பர் வீரமணி அவர்கள் நீண்ட நெடுங் காலமாக மதத்தில் தீண்டாமை அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நீங்கள் அனுஷ்டிக்கும் மதத்தில் இன வழிப்பட்ட அடிமையில்லை என்று வற்புறுத்தினார்.

ஏற்கமாட்டேன்

நான் அந்த வகையில் இன்று வாழும் தமிழினத்திற்கும் - எதிர்காலத் தமிழினத்திற்கும் சொல்லுகிறேன் - என் தமிழினத்தை இரண்டாந்தரமாக்கும் எந்த சமயத்தையும், கடவுள் நம்பிக்கையையும் நான் ஏற்கமாட்டேன்.

சிலைகள் அமைப்பது மட்டுமல்ல; சிலைகளுக்குப் பின்னாலே இருக்கிற சிந்தனைகள் நமக்கு முக்கியமானது.

சிலைகளை விட அதற்குப் பின்னாலே இருக்கிற சிந்த னைகள் முக்கியம் என்று சொல்லுகிற பொழுது கலைஞர் அவர்களை இங்கே சிலையாக மட்டும் பார்க்கவில்லை - சிலைக்குப் பின்னாலே இருக்கிற ஒரு புகழ் பாடுகின்ற தமிழினத்தின் வரலாற்றை - ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு - ஆய்ந்து ஓய்ந்ததற்குப் பிறகு மீண்டும் எழுச்சி பெற்று வருகிற ஒரு வரலாற்றைப் பார்க்கிறோம்.

அந்த வரலாற்றை இந்தச் சிலை நமக்குச் சொன்னால் சிலை பயன்பாடு பெறுகிறது.

ஜாதிகள் இல்லையென்று பேசிய அப்பரடிகளைக் கூடத்தான் கோயிலிலே சிலையாக வைத்தார்கள். ஆனால் கொள்கைக்கு குழிதோண்டி வைத்து விட்டு சிலையை வைத்து நாட்டிலே கண்ணைக் கட்டினார்கள்.

அதுபோல தமிழர்கள் நம் உயிரினும் இனிய கொள் கைகளை மதித்துப் போற்றிப் பாராட்டுவதன் மூலம் தான் கலைஞர் அவர்களின் பணிக்கு - அய்யா அவர்கள் நமக்கிட்ட பணிக்கு நாம் துணையாக இருக்க முடியும்.

ஆண்டவனை இல்லையென்று சொன்னால் எல்லோரையும் இழுப்பது கடினமாக இருக்கும் என்று சொல்லி ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று கோடானு கோடித் தம்பிகளுக்குச்  சொல்லி அணிவகுத்து நிறுத்தியது அ,ண்ணா அவர்கள்; இல்லையென்று சொன்னால், சிலர் ஒதுங்கிவிடுவார்கள் போல் தெரிகிறது; எனவேதான் இதைத் திருமூலர், மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்பு சொன்னதாகச் சொல்வார்கள். ஆனால் நாட்டு மேடையில் இன்று ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்று சொன்னது யாரென்று கேட்டால் திரு மூலர் என்று சொல்லத் தெரியாது; அண்ணா சொன்னார் என்று தான் சொல்வார்கள்.

நம்முடைய கலைஞர் இன்னும் ஒருபடி மேலே வளர்ந்தார். காரணம் இவர் ஏழைகளோடு தொடர்புடை யவர்.

‘ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறோம்', இதை யார் ஆட்சேபிக்க முடியும்? ரொம்ப ஆத்திகரால் கூட ஆட்சேபிப்பது சிரமம்.

‘ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறோம்' என்ற ஒரு வார்த்தை அது சிலபேரை வேறு முகாமுக்குள் போகாமல் திருப்பிக்கொண்டு நம்மிடம் வருகிறது. உள்ளே கொண்டு வந்து விட்ட பிறகு எந்தப் பாடத்தை வேண்டுமானாலும் சொல்லிக் கொடுத்து விடலாம்.

பெரியார் தந்த எழுச்சி

நீண்டகாலமாக ஒருமை உணர்ச்சி குலைந்து போன தமிழினத்தில் ஒரு எழுச்சியைக் கொண்டுவந்து பெரியார் எதிர்த்துக் கேட்டார்கள். அண்ணா அவர்கள் அதைத் தொடர்ந்து பாதுகாத்தார்கள். நம்முடைய கலைஞர் அதை மேலும் தொடர்ந்து பாதுகாக்கிறார்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள் நம்முடைய இன்னாள் பின்னணி வரலாற்றை நன்றாக நினைவூட்டி எழுச்சி பெற வைத்தார்.

 அந்த எழுச்சி பெறுவதற்குப் பின்னணியில் நின்ற சிறுமைகளைச் சுட்டிக் காட்டி அந்தப் பெருமைகள் நம் வாழ்வுக்குப் பயன்படுமா என்று அய்யா அவர்கள் சிந்திக்க வைத்தார்கள்.

பெருமையையும் எண்ணிப்பார்த்தோம் - பேரறிஞர் அண்ணாஅவர்கள்மூலம். அந்தப் பெருமையில் மண்டிக்கிடந்த காளான்களையும், நம்மாலே பார்க்க முடிந்தது. அப்படிப்பட்ட காளான்களை அகற்றி விட்டு ஒரு புதிய இனவழிப்பட்ட பாதையை அமைக்க வேண்டுமென்று சொன்னால் நம்முடைய நோக்கில் - இந்த அமைப்பில், நம்முடைய தலைமுறையில் கலைஞர் அவர்கள் ஆட்சியின் தலைமையை ஏற்றிருக் கிறார்கள், இப்படிப் பொறுப்பேற்கிறபோது அந்தக் காலத்திலே பள்ளிக்கூடத்திலே போய் கேட்டால் ‘இவனுக்குப் படிப்பு வருமா?' என்று கேட்பார்கள்.

ஒரு தலைப்பட்சமான - கதை

பாரதத்தை எடுத்துக் கொண்டால் கூட ஒருதலைப் பட்சமான கதையை நாட்டிலே சொல்லிக் கொண்டிருக் கிறார்கள்,

ஏகலைவன் வேடன் - அவனுக்குச் சொல்லிக் கொடுக்க துரோணர் மறுக்கிறார். ஆனால் அரண்மனை வீட்டுப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார். நான் படித்தபோதுகூட ஏகலைவனின் குரு பக்தி - குரு பக்தி என்கிறார்கள். பிறகு ‘திராவிட நாடு', 'விடுதலை' போன்ற வற்றை என்னைப் போன்றவர்கள் கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் படித்து கொண்டிருக்கிறோம்.

நம்முடைய தலைமுறையில் கலைஞர் அவர்கள் இந்த ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிற பொழுது -

நான் ஏகலைவனைப் பற்றி அன்று எழுதினேன்.ஏகலைவனின் குருபக்தி எனக்குப் புரிகிறது. பாராட்டு வணக்கம். ஆனால் துரோகப் புத்தி படைத்த துரோணாச் சாரியாருக்கு என்ன பாடம்?

ஏகலைவனின் குரு பக்தியோடு துரோணாச்சாரியாரின் துரோகப்புத்தியையும் எடுத்துச் சொன்னால் அல்லவா நாட்டுக்கு உண்மை நிலை புரியும். ஆனால் அது சொல்லித் தரப்படுவதில்லை. எது தேவையோ அது மட்டுமே சொல்லித் தருகிறார்கள்.

இன்றைக்குத் தமிழர்கள் ஏராளமான பேர் படிக்கி றார்கள்- நிறைய கல்விச் சலுகை பெறுகிறார்கள் - உத்தியோக வாய்ப்பை ஏராளமான பேர் பெறுகிறார்கள்,

‘என்ன இருந்தாலும் அவன் வேலைக்கு ஆகுமா?' என்று சிலர் கேட்கிறார்கள்,

அய்யாவும் நானும் 'விடுதலை' பத்திரிகை பற்றி விமர்சனம் செய்து கொண்டிருப்போம். இன்னும் நன்றாகச் செய்யலாம் என்று சொன்னபோது, ‘யாராவது நல்ல ஆளா கப் போடலாம்; செய்வார்கள். மட்டமாகச் செய்தால் கூட பரவாயில்லை. நம்முடைய ஆள் வளர்ந்தால் நமக்குப் பயனுண்டு' என்று சொல்வார்

எழுத்தாளர், கவிஞர்

அப்படியொரு காலமிருந்தது. ஆனால் இவரை விடச்சிறந்தஎழுத்தாளர்யார்இருக்கிறார்என்று கேட்கிற அளவுக்குச் சிறந்த எழுத்தாளராகக் கலைஞ ரைப் பார்க் கிறோம். எழுத்திலே எவ்வளவு சுருக்கு; வாழைப் பழத்திலே, ஊசி ஏற்றுவது போல கேட்கிற வனுக்கும் கோபம் வருவதில்லை - குத்தூசியும் நன்றாக இருக்கிறது. அப்படி எழுதுகிற ஆற்றலையும் பெற்றிருக்கிறார்

ஒரு கவிஞராக இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக பாவேந்தர் பாரதிதாசன் கனவு கண்டதுபோல தமிழறிந்த சான்றோன் மூத்த அமைச்சராக இருக்க வேண்டும் என்கிற கனவு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

என்னுடைய மொழி அறிந்த ஒருவன் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் அந்த மொழிக்குச் சிறப்பு.

எதையெடுத்தாலும் திருக்குறளைச் சொல்லாமல் பேச முடிவதில்லை  - இது திருக்குறளுக்குப் பெருமை!

பாராளுமன்றத்திற்கு அண்ணா போனார். திருக்குறள் பயிலப்பட்டது. பிறகு பாராளுமன்றத்தில் திருக்குறள் பேசப்படுகிறது.

காரணம் - தமிழனின் நிலை உயர்ந்தாலும் தமிழும் உயரும்; தமிழ் உயர்ந்து தமிழன் உயர மாட்டான் - அண்ணா அவர்கள் சொன்னார் - தமிழ் உயர்ந்து தமிழன் உயரமாட்டான்; தமிழன் உயர்ந்தால் தமிழ் உயரும் என்று!

கலைஞர் அவர்கள் இந்தத் துறையில் மிக வல்ல வராக இருக்கிறார். மிகுந்த சுறுசுறுப்பாக இருக்கிறார்- சோர்வு என்பது இல்லை என்பது நாடறிந்த உண்மை !

செட்டி நாட்டரசர்  சொன்னது போல அவருக்கு ஓயாத பணிகள்.

துன்பத்தை வெற்றியாக - மாற்றியவர்

நான்கைந்து பிறந்த நாள் விழாவில் அவர் ஏழை களுக்கு நன்மை செய்தபோது - நான் ஒரு கட்டுரையில் எழுதிய போது -

புத்தரின் துறவுக்குக் காரணம் என்ன சொன்னார் களென்றால், துன்பப்படுகிறவர்களையெல்லாம் பார்த் தார், வாழ்க்கை இவ்வளவு துன்பமாக இருக்கிறதே என்று வேண்டாமென்று சொல்லிப்போனார்.

ஆனால் துன்பத்தைக் கண்ட பொழுது துன்பத்தை எதிர்த்து வெற்றி காண முடியாமல் புத்தர் கூட துறந்து தான் போனாரே தவிர, மாற்று காண முயலவில்லை .

ஆனால் அதே துன்பங்களை - அதே மாதிரி நொண்டிகளை - பார்வையிழந்தோரை - தொழுநோய்ப் பிச்சைக்காரர்களை கலைஞர் சந்திக்கிற பொழுது 'அய்யோ இவ்வளவு துன்பமா வாழ்க்கையில்?' என்று துறந்து போகாமல், இந்தத் துன்பத்தையே வெற்றியாக மாற்ற முடியும் என்ற வகையில் செய்திருப்பது இருக் கிறதே - என்னைக்கேட்டால் - துன்பத்தைக் கண்டு துறவியாகப்போவதைவிட துன்பத்தையே மாற்றுகிறவன் சிறந்தவன்.

‘பசியை ஆற்றுகிறவனைவிட பசியை மாற்றுகிறவன் கெட்டிக்காரன்' என்று திருவள்ளுவர் சொன்னார்,

துன்பத்தை சகித்துக்கொண்டு ஓடி ஒதுங்குகிறவனை விட துன்பத்தையே மாற்றுகின்ற களத்தில் இறங்கி துன்பத்தை மாற்றுவேன், ஒரு புது வரலாறு படைப்பேன் என்கிற  வரலாற்றுப் போக்கு இருக்கிறதே அது அவரது வாழ்க்கையில் காண்கின்ற பெரிய மகிழ்ச்சி!

பதவி வந்துவிட்டால், யார் யாரோ பக்கத்தில் வரு வார்கள் அவ்வளவு பெரிய மிட்டாதார்கள், பெரிய மனிதர்கள் வருகிறபோதும்கூட இவ்வளவு பேரையும் தாண்டி எப்படி தொழு நோய்க்காரனின் நினைவுவந்தது; புரியவில்லை? எப்படியோ சமுதாயத்தினுடைய அடித் தளத்து மக்களின் துன்பங்களைப் புரிந்து அதற்கு மாற்றாக திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார்.

பட்டமளிப்பு விழா

 ‘தமிழன் உயர்ந்தால்தான் தமிழ் உயரும். தமிழனிட மிருக்கிற ஜாதி இன மாறுபாடுகளின் அடித்தளத்தைக் கண்டுபிடிக்கவேண்டும். உன்னுடைய மொழி உயர்ந்தது என்று மட்டும் மனப்பால் குடித்துக்கொண் டிருக்காதே - அதை உலக விஞ்ஞான மொழியாக உயர்த்த முயற்சி செய்; அதற்கு நீ தொண்டு செய்; இதுவரை நீ தமிழால் வாழ்ந்திருக்கிறாய்; நீ தமிழுக்கு என்ன செய்தாய் என்று எண்ணிப்பார், அதைச் செய்யத் தவறினால் நாம் நன்றி மறந்தவர்கள்' என்று சுட்டிக்காட்டினார்.

இந்த அடிப்படை உரிமைகள் சாதாரணமானவைகள் என்று நினைக்கவில்லை. இந்த சொற்றொடர்களை எழுதி கல்வெட்டிலே வைத்தால் - அந்த அறிவுரையை உண்மையாகப் பயன்படுத்தினால், தமிழ்நாட்டு மனி தனும் நாளை விண்கலத்தைச் செலுத்துவான் - அப்போது அந்த தூண்டுதலைக் கொடுத்தது - சென்னை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் 1975இல் கலைஞரின் உரையின் விளைவாக இந்த முனைப்பு எழுந்தது என்று நிச்சயம் வரலாறு சிறப்பாகச் சொல்லும்.

ஆகவே - புதிய பார்வை - புதிய எண்ணங்கள் - புதிய சிந்தனை - அதே நேரத்தில் அடிச்சுவடு மாறாமல் அண்ணா இருந்தால் எப்படி கேட்பார் என்று அஞ்சியே காரியங்களைச் செய்கிறார்.

சில இயக்கத் தலைவர்கள் இறந்து போனார்கள், வரலாற்றுப் புத்தகத்தில் தான் அவர்களின் பெயரைப் பார்க்க முடிகிறது. ஆனால் அண்ணா அமரரான பிறகும் அவர் உயிரோடு இருந்தால் எந்த அளவுக்கு உண்மை யோடு இருப்பார்களோ அதுபோன்ற தம்பிகளை அண்ணா அவர்கள் பெற்றது உண்மையிலேயே நற்பேறு. அந்த வகையில் திமுகழகத்தை ஆயிரம் மடங்கு பாராட்ட வேண்டும்

செத்து போனால் சுடுகாடு வரைதான் என்பார்கள். அண்ணா அவர்கள் இருந்தபோது இருந்த துடிப்பைவிட - நம்பிக்கையைவிட மிக அதிகமாக, அதேபோல அய்யா அவர்கள் இறந்து போன பிறகு அவர் ‘ஆன்மா' இருந்தால் கடிந்து கொள்ளுமோ என்று அந்த அடிச்சுவட்டில் முறைபிறழாமல் இவ்வளவு மகத்தான காரியங்களை கலைஞர் செய்து கொண்டிருக்கிறார்.

வளரும் பயிருக்கு மழைபோல - வளரும் மனிதர் களுக்குப் பாராட்டு வேண்டும். தமிழனுக்கு இதிலே தரித்திரப் புத்தி அதிகம்.

என்ன செய்துவிட்டாய் என்று கேட்பார்கள். ஆனால் அண்ணா அவர்கள் சின்ன செய்தியையும் பெரிதாகக் கருதுவார்கள்.

கலைஞரின் கட்டுரையைப் படித்தால் பாராட்டிச் சொல்வார்.

இன உணர்ச்சி பெறுவோம்!

கலைஞர் சிலையைத் திறக்கும் நேரத்தில் சொல் கிறேன் - நாம் தமிழர்கள் என்ற உணர்ச்சியைப் பெற்றே தீரவேண் டும்.

தமிழினத்திலே ஒருவன் இழிவு படக்கூடாது என்பது தான் அய்யா அவர்களின் நோக்கம். அதிலே கலைஞர் அவர்கள் வழியில் நாம் அனைவரும் ஓரினம் என்ற அடிப்படையில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

‘தமிழினம் பெற்றிருக்கின்ற உரிமைகளை நாம் தொடர்ந்து காப்பாற்றுவோம்' என்று சூளுரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எந்தவிதமான கவர்ச்சிகளுக்கும் ஆளாகாமல் நாம் கட்டுப்பாடாக இருக்க வேண்டும்,

காரணம்-ஒன்றைப் பெறுவது என்பது அருமை யானது; பெற்றதைக் காப்பாற்றுவது அதை விட - அருமையானது என்பதைப்புரிந்து கொண்டு நம்முடைய - கலைஞர் அவர்கள் ஆர்வலராக - செயல் வீரராக - சிந்தனையாளராக - எழுத்தாளராக - கவிஞராக - எல்லா வற்றிற்கும் மேலாக தமிழகத்தின் இந்த நூற்றாண்டின் வரலாற்றை புதுப்பித்து எழுதுகின்ற வரலாற்று சிற்பியாக விளங்குகின்றார், அவரது வரலாறு தமிழினத்தின் வரலாறாக - வளங்கொழிக்கும் வரலாறாக - புதுமை செழிக்கும் வரலாறாக - ஏழாயிரம் தலைமுறைகளுக்குப் பிறகும்கூட நினைத்து நினைத்துப் பார்த்துப் பெருமிதம் அடையத் தக்க வரலாறாக இந்த வரலாறு எழுதப்படும் - அவர் எழுதுவார், தொடர்ந்து எழுதுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

யாரும் அவரது காலை இடறி விடாமல் அவர் பின்னாலே அணிவகுத்துச் சென்றாலே போதுமானது.

(‘விடுதலை', 23.9.1975)

(தொடரும்)

No comments:

Post a Comment