இந்திய வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்துகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 17, 2023

இந்திய வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்துகள்

ஓடிசா ரயில் விபத்து இந்திய ரயில்வே வரலாற்றிலேயே மிக மோசமான விபத்துகளில் ஒன்று என்பது புள்ளி விவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.

பெங்களூரிலிருந்து கவுரா நோக்கிச் சென்ற கவுரா விரைவு ரயிலும், மேற்கு வங்க மாநிலம் ஷாலிமாரிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயிலும், ரயில் பாதையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது 2.6.2023 அன்று மோதி விபத்துக்குள்ளானதில் 288 பயணிகள் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அந்த வகையில், இந்தியாவில் இதுவரை நடைபெற்ற மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக இந்த விபத்து மாறியுள்ளது.

இந்தியாவில் இதற்கு முன்பு நடைபெற்ற மோசமான ரயில் விபத்துகளின் விவரம்:

1964 டிசம்பர் 23: ராமேசுவரம் புயலில் பாம்பன் சென்ற தனுஷ்கோடி பயணிகள் ரயில் அடித்துக் கொல்லப்பட்டதில் 126 பயணிகள் உயிரிழந்தனர்.

1981 ஜூன் 6: பீகாரில் பாக்மதி ஆற்றில் ரயில் கவிழ்ந்த விபத்தில் 750க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதுவே, இந்தியாவில் நடைபெற்ற மிக மோசமான ரயில் விபத்தாகக் கருதப்படுகிறது. 

1995 ஆகஸ்ட் 20: உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் அருகே புருஷோத்தம் விரைவு ரயில், ரயில் பாதையில் நின்றுகொண்டிருந்த விரைவு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 305 பேர் உயிரிழந்தனர். 

1998 நவம்பர் 26: பஞ்சாப் மாநிலம் கன்னா பகுதியில் ரயில் பாதையில் தடம்புரண்ட ஃபிரான்டியர் பொற்கோயில் ரயிலின் 3 பெட்டிகள் மீது ஜம்மு தாவி சியல்டா விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 212 பேர் உயிரிழந்தனர்.

1999 ஆகஸ்ட் 12: வடகிழக்கு ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட கட்டிஹார் மண்டலத்தில் ரயில் பாதையில் நின்றுகொண்டிருந்த அவ்தா அசாம் விரைவு ரயில் மீது பிரம்மபுத்ரா ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் ஏராளமான ராணுவ, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 285 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயமடைந்தனர்.

2002 செப்டம்பர் 9: பீகாரின் ரஃபிகஞ்ச் பகுதியில் தாவ் ஆற்றுப் பாலத்தில் தடம் புரண்டிருந்த ரயில் பெட்டிகள் மீது ரஃபிகஞ்ச் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 140 பயணிகள் உயிரிழந்தனர்.

2010 மே 28: மேற்கு வங்க மாநிலம் ஜர்கிராம் அருகே ரயில் பாதையில் தடம்புரண்ட ஞானேஸ்வரி ரயில் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதிய விபத்தில் 148 பயணிகள் உயிரிழந்தனர்.

2016 நவம்பர் 20: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் ரயில் பாதையில் தடம்புரண்டிருந்த இந்தூர் ராஜேந்திரா நகர் விரைவு ரயில் பெட்டிகள் மீது புக்ரியான் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 150 பேர் உயிரிழந்தனர். 260 பேர் காயமடைந்தனர்.

No comments:

Post a Comment