பக்தி ஒழுக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்க்கிறதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 14, 2023

பக்தி ஒழுக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்க்கிறதா?

வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று முடிந்துள்ள காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை பிரிவு அர்ச்சகர்களிடையே பிரசாத தோசையை யாருக்கு கொடுப்பது என்பதில் மோதல் முற்றியது. 'இறைவனுக்கு படைத்த பிரசாத தோசை'யை யாருக்குமே தராமல் கடைசியில் கீழேயே வீசி விட்டனராம். இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது.  இந்தக் கோயிலில் அத்தி மரத்தில் செய்யப்பட்ட சிலை என்று கூறி அதற்கு 'அத்தி வரதர்' என்ற பெயர் வைத்து 40ஆண்டுக்கு ஒருமுறை குளத்திலிருந்து வெளியே எடுத்து காசு பார்ப்பார்கள். 

வரதராஜ பெருமாள் கோயிலில், பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி மிகவும் பிரசித்தி பெற்றதாம். இது மட்டுமல்லாமல் தோசையும் வடையும் நைவேத்தியம் செய்யப்படு கின்றன. பிரசாத இட்லி மிளகாய் சேர்க்காமல் மிளகும், நெய்யும் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. பெருமாளுக்கு இரண்டு இட்லிகளையும் நைவேத்தியம் செய்த பிறகு, ஓர் இட்லி கோயில் கைங்கர்யம் செய்பவர்களுக்கும், மற்றொரு இட்லி கட்டளைதாரருக்கும் கொடுக்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தோசையும் வடையும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. சமையல் குறிப்பைக் கல்வெட்டாக கோயிலில் வைத்துள்ளனர். மேலும் இந்த சமையல் குறிப்பைப் போல் பொதுமக்கள் யாரும் செய்யக்கூடாது என்றும் அப்படிச்செய்தால் தரித்திரம் என்றும் கதை விட்டுள்ளனர். அந்தக்குறிப்பில் தோசைக்குத் தேவையான பொருள்கள், எப்படிச் செய்ய வேண்டும், அதை யார் யாருக்கு எப்படிப் பகிர வேண்டும் என்பதுபோன்ற தகவல்களைக் குறிப்பிட்டிருப்பதுடன், அதற்குத் தேவையான தானம் கருவூலத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், சமஸ்கிருதமும், தமிழும் கலந்த மொழியில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா 10 நாள்கள் நடைபெற்றது.  அப்போது 'சாமி'க்கு நைய்வேத்திய நித்தியபடி செய்த தோசை, வடை, இட்லியை வழங்கும்போது வடகலை பிரிவினர் வேத பாராயணம் பாடிக்கொண்டு வந்தனர். அப்போது வடகலை மற்றும் தென்கலை பிரிவு அர்ச்சகர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு அடிதடி ஏற்பட்டது.

இந்த நிலையில் கோயிலில் வரதராஜப் பெரு மாளுக்குப் படைக்கப்பட்ட பிரசாத தோசையை யாருக்குக் கொடுப்பது என்பது தொடர்பாக அர்ச்சகர்களிடையே மோதல் ஏற்பட்டது. வடகலை, தென்கலை பிரிவு அர்ச்சகர்கள் ஒருவருக்கொருவர் கத்தி சண்டை போட்டுக்கொண்டனர். ஒருவரை ஒருவர் தள்ளி விட்டனர். இந்த தள்ளுமுள்ளு சண்டையில் அர்ச்சகர் ஒருவரின் கையில் இருந்த பிரசாத தோசை யாருக்கும் கிடைக்காமல் கீழே விழுந்து விட்டது.  கூட்டத்தினர் அதை மிதித்துக் கொண்டு சென்றனர்  வேத பாராயணம் செய்வது தொடங்கி, பிரசாத தோசையை யாருக்குக் கொடுப்பது என்பது வரை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அர்ச்சகர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் பக்தர்களிடையே முகச் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே போன்று பாட்டு யாருடைய மடத்தின் முன்பு நின்று பாடுவது என்ற தகராறில் 'சாமி' சிலையை வடகலையினர் தூக்கிக் கொண்டு ஓடிவிட 'சாமி'வரும் என்று எதிர்பார்த்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது குறிப் பிடத்தக்கது.

காஞ்சிபுரத்தில் அனேகமாக ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கலாட்டா நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.

காஞ்சிபுரம் யானைக்கு வடகலை, நாமம் போடுவதா? தென் கலை நாமம் போடுவதா என்ற சண்டை, இலண்டன் பிரிவு கவுன்சில் வரை சென்று சிரிப்பாய்ச் சிரிக்கவில்லையா!

இந்த இலட்சணத்தில் பக்தியும், மதமும் ஒழுக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்ப்பதாகப் பித்தலாட்டப் பிரச்சாரம் வேறு! வெட்கக்கேடு!

No comments:

Post a Comment