ஒன்றிய அரசின் அச்சுறுத்தல்களைக் கண்டு அஞ்சாது- தந்தை பெரியார் மண் - திராவிட மண்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 17, 2023

ஒன்றிய அரசின் அச்சுறுத்தல்களைக் கண்டு அஞ்சாது- தந்தை பெரியார் மண் - திராவிட மண்!

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தனிப்பட்டவர்மீதானதல்ல!

பி.ஜே.பி. ஆட்சியின் திரிசூலங்கள்தான் சி.பி.அய். - அய்.டி. துறை - அமலாக்கத் துறை

பா.ஜ.க.வின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்து நடைபெற்ற கூட்டத்தில் தமிழர் தலைவர் 


கோவை, ஜூன் 17 அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தனிப்பட்டவர்மீதானதல்ல! பி.ஜே.பி. ஆட்சியின் திரி சூலங்கள்தான் சி.பி.அய். - அய்.டி. துறை - அமலாக்கத் துறை. ஒன்றிய அரசின் அச்சுறுத்தல்களைக் கண்டு அஞ்சாது- தந்தை பெரியார் மண் - திராவிட மண்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

பா.ஜ.க.வின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்து மாபெரும் கண்டனக் கூட்டம்

நேற்று (16.6.2023) மாலை தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பா.ஜ.க. வின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்து கோவையில் நடைபெற்ற மாபெரும் கண்டனக் கூட்டத்தில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

இங்கே கூடியிருக்கின்ற கூட்டம்,  பெருந்திரளாக மக்கள் சேர்ந்திருக்கிற இந்தக் கூட்டம் மிகப்பெரிய ஒரு  பாடத்தைக் கற்பிக்கிறது; என்னவென்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது அபாண்டமான ஒரு பழியைப் போட்டு, அதை மிரட்டி விடலாம் என்று நினைத்தால், ஒருக்காலும் அது நடக்காது; தமிழ்நாடு, வடநாட்டுப் பகுதியல்ல என்பதற்கு அடையாளம்தான் இந்த மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம். அமைதி யாக எப்பொழுதும் பேசக்கூடிய நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர், இந்தியாவினுடைய முதலமைச்சர்களில் முதல் முதலமைச்சர் என்று சிறப்பாக பெயரெடுத்திருக்கக் கூடிய ‘திராவிட மாடல்' ஆட்சியினுடைய முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாகக் கொடுத்த அறிக்கையை நீங்கள் இங்கே சிறப்பாக தலைப்பாகப் போட்டு சுவரொட்டியாக ஒட்டியிருக்கிறீர்கள்.

‘‘சீண்டிப் பார்க்காதீர்கள்!'' என்று அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். அவர்கள் சீண்ட சீண்ட அவர் களுடைய சங்கதிகள் அத்தனையையும் தோண்டித் தோண்டி கொடுப்பதற்கு இந்தக் கூட்டணி தயாராக இருக்கும்.

எல்லா இடங்களுக்கும் போய் மக்களிடம் சொல்லக்கூடிய ஆற்றலும், சிறப்பும் எப்பொழுதும் இங்கே இருக்கும்.

நண்பர்களே, இது வெறும் ஒரு செந்தில்பாலாஜி என்ற அமைச்சருக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று தனித்துப் பார்க்காதீர்கள்!

எதிர்ப்பிலேயே வளர்ந்த இயக்கம்; 

நெருப்பாற்றில் நீந்தி நீந்தி 

வளர்ந்த  இயக்கம்!

இது அச்சுறுத்தல் என்ற அளவிலே, நம்மை அச்சுறுத்திப் பார்க்கலாம்; அமைச்சர்களை அச்சுறுத்திப் பார்க்கலாம்; திராவிட முன்னேற்றக் கழகத்தை அச்சுறுத்திப் பார்க்கலாம் என்றெல்லாம் அவர்கள் தப்புக் கணக்குப் போடுகிறார்கள்.

நண்பர்களே, மாறாக நீங்கள்தான் அச்சப்பட்ட வர்கள், இந்த இயக்கம் எதிர்ப்பிலேயே வளர்ந்த இயக்கம்; நெருப்பாற்றில் நீந்தி நீந்தி வளர்ந்த  இயக்கம்.

அன்றைக்குக் கரம் கொடுத்தவர்கள்தான் - இன்றைக்கும் - என்றைக்கும் 

நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்!

இங்கே எனக்குமுன் உரையாற்றிய சகோதரர் டி.ஆர்.பாலு அவர்கள் சொன்னார்களே, நெருக்கடி காலத்தில் நம்முடைய முதலமைச்சர் அவர்களைத் தாக்கி, ரத்தம் சொட்ட சொட்ட இரவில் சிறைக் கொட்ட கையில் தள்ளப்பட்டார்; அவர் விழுந்தது எங்களுடைய அறையில் என்மீது விழுந்தார்.  அந்த நேரத்தில் கரம் கொடுத்தவர்கள்தான் - இன்றைக்கும் - என்றைக்கும் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். எனவே, யாரும் பூச்சாண்டி காட்டிவிட முடியாது.

இன்றைக்கு ஒன்றிய அமைப்புகள் சிலவற்றை ஒரு கருவியாக, ஒரு வாய்ப்பாகக் கருதிக் கொண் டிருக்கிறார்களே தவிர வேறு கிடையாது.

அமலாக்கத் துறை வழக்கு - அதற்குமேல் விசாரணை - செந்தில்பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு - மனிதநேயத்தையே தூக்கி எறிந்துவிட்டு நடந்துகொள் கிறீர்களே என்று சொன்னால் நண்பர்களே, உலகத்தில் வேறு எங்காவது இதுபோன்று கேள்விப்பட்டதுண்டா?

பாசிச ஆட்சிக்கு 2024 ஆம் ஆண்டு முற்றுப்புள்ளி!

இரண்டு பாகங்களாகப் பிரிக்கவேண்டும்; திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமை இந்தியாவிற்கே இப்பொழுது கிடைத்து - இதுவரையில் பாசிசத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்ற ஓர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து - 2024 ஆம் ஆண்டில் நடை பெறப் போகின்ற தேர்தலில், மீண்டும் காவி வர முடியாது; மீண்டும் காவிகளுக்கு வேலையில்லை என்பதை மிகத் தெளிவாகக் காட்டக்கூடிய வியூகம் வகுக்கக் கூடிய ஆற்றல் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை யில் அமைந்த கூட்டணிக்கே உண்டு - இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய ஆற்றல் உண்டு. இதை அவர்கள் நினைக்கின்ற காரணத்தினால்தான், ‘‘எப்படியாவது இவர்களை மிரட்டவேண்டாமா? எப்படியாவது இவர் களை திசை திருப்ப வேண்டாமா? எப்படியாவது அவ தூறு வழக்குகளைப் போடவேண்டாமா? எப்படியாவது இவர்கள்மீது எதை வேண்டுமானாலும் வீசியெறிய லாமா?'' என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் பைத்தியக்காரர்கள்; திராவிட இயக்கத் தினுடைய வரலாற்றை - தமிழ்நாட்டினுடைய வர லாற்றை- பெரியார் மண்ணினுடைய வரலாற்றை - சமூகநீதியினுடைய வரலாற்றைப்பற்றி தெரியாதவர்கள்.

இந்த இயக்கம் எதிர்நீச்சல் அடித்த இயக்கம்; கொங்கு மண்டலத்திலிருந்துதான் பெரியார் வந்தார். பெரியார் மண்ணே கொங்கு மண்டலம்.

கொங்கு மண்டலத்தை இந்த இயக்கத்தின் தங்கு மண்டலமாக மாற்றிய இளைஞரை நோக்கி 

குறி வைக்கிறார்கள்!

எனவேதான் கொங்கு மண்டலம்  - அது எப் பொழுதும் இந்த இயக்கத்திற்குத் தங்கு மண்டல மாக இருக்கும் என்று காட்டி - இடையில் கொஞ்சம் சரிந்தபொழுது - அதை சரி செய்தார் செந்தில் பாலாஜி என்ற ஓர் இளைஞர். அமைச்சர் என்கிற காரணத்தினால்தான் இன்றைக்கு அவர் குறி வைக்கப்படுகிறார் என்பது மட்டுமல்ல, அதைத் தாண்டி திராவிட முன்னேற்றக் கழகம் இவ்வளவு வலிமையோடு வந்துவிட்டதே - திராவிட முன் னேற்றக் கழகத் தலைவரைத்தானே இந்தியாவே எதிர்பார்க்கிறது என்பதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இன்றைக்கு 16 ஆம் தேதி - வருகிற 23 ஆம் தேதி அடுத்த திட்டம் - வியூகத்தை நம்முடைய தலைவர்தான், நம்முடைய முதலமைச்சர்தான் கொடுக்கவிருக்கிறார்; ‘திராவிட மாடல்' ஆட்சியினுடைய தன்மை - தமிழ்நாட்டிலே மட்டுமல்ல இந்தியா முழுவதும் 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒப்பற்ற வீச்சுதான் - அந்தத் திராவிடக் கொள்கை உணர்வுதான் என்று காட்டுவதற்குத் தயாராக இருக்கிறார் என்றவுடன், அதைத் திசை திருப்பத் தான் செந்தில்பாலாஜி கைது என்பது.

ஒரு தனி நபருக்கு இழைக்கப்பட்ட கொடுமையாகப் பார்க்கக் கூடாது!

மனிதநேயம் அங்கே மறுக்கப்பட்டு இருக்கிறது; அதேநேரத்தில், ஓர் அரசியல் சதி இதன் பின்னணியில் இருக்கிறது. அதை ஒரு சாதாரண நிகழ்வாக - ஒரு தனி நபருக்கு இழைக்கப்பட்ட கொடுமையாக நீங்கள் நினைக்கக் கூடாது.

தி.மு.க. கூட்டணிக்கு இடங்கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் செந்தில்பாலாஜி கைது!

தொடர்ந்து ஜனநாயகத்தை அழிப்பதற்கு அவர்கள் செய்த வேலைகளைப் பட்டியல் போட்டு இங்கே தலை வர்கள் சொன்னார்கள். காங்கிரஸ் தலைவர் சொன்னார், அருமைச் சகோதரர் வைகோ அவர்கள் சுட்டிக்காட்டி னார். எழுச்சித் தமிழர் சிறப்பாகச் சொன்னார் - இதிலே ஒரு பின்னணி இருக்கிறது - அந்தப் பின்னணி தி.மு.க.வை அழிக்கவேண்டும்; அதன் தலைமையில் இருக்கிற கூட்டணிக்கு இடங்கொடுக்கக் கூடாது. அந்தக் கூட்டணிதான் இந்தியாவையே மாற்றப் போகிறது; இந்தியாவினுடைய எதிர்காலத்தையே நிர்ணயிக்கப் போகிறது. ஆகவே, அந்த வாய்ப்பைக் கொடுக் காமல், அவர்களை மிரட்டவேண்டும் என்பதற்காகத்தான் செந்தில்பாலாஜி கைது என்பது.

அவர்கள் என்னதான் அச்சுறுத்தினாலும், அதைத் தாங்கக் கூடிய அளவிற்கு இந்த இயக்கம் பக்குவப்பட்ட இயக்கமாகும்.

நண்பர்களே, அமலாக்கத் துறை எப்படியெல்லாம் பயன்படுகிறது என்பதைப் பாருங்கள்.

ஹிந்துத்துவாவின் திரிசூலம்!

ஹிந்துத்துவாவைப் பேசக்கூடியவர்கள் திரிசூலத்தை வைத்திருப்பார்கள். அந்தத் திரிசூலத்தில் இருக்கும் மூன்றில் - ஒன்று வருவாய்த் துறை; இன்னொன்று அமலாக்கத் துறை; மற்றொன்று சி.பி.அய்.

அந்தத் திரிசூலத்தை வைத்து நீங்கள் எவ்வளவுதான் ஆடினாலும் - அது மற்ற இடங்களில் வேண்டுமானாலும் பயன்பட்டு இருக்கலாம்; ஆனால், இது பெரியார் மண் - சமூகநீதி மண் - இது தமிழ் மண் - இது திராவிடப் பேரியக்கம் இருக்கின்ற மண்.

வண்ணங்கள் முக்கியமல்ல - 

எங்கள் எண்ணங்கள் உறுதியாவை

எங்கள் மத்தியில் வண்ணங்கள் முக்கியமல்ல - எங்கள் எண்ணங்கள் உறுதியானவை. அனைவரும் ஒன்றுபட்டு இருக்கக்கூடிய மண் என்பதைக் காட்டுகின்ற வகையிலேதான் இன்றைக்கு அனைவரும் ஒன்றுபட்டு இருக்கிறோம்.

கருநாடகத் தேர்தலின்போது என்ன நடந்தது? 

40 சதவிகித கமிஷனால்...

மிகப்பெரிய அளவிற்கு டேரா போட்டார்கள்; ரோடு ஷோ நடத்தினார்கள்; பூக்களைத் தூவினார்கள்; மலர் மாரி பொழிந்தார்கள் என்றெல்லாம் காட்சிகளாகக் காட்டினார்கள். ஆனால், மக்கள் மலர் மாரி பொழிந் தார்களே தவிர, ஓட்டு மாரி பொழியவில்லை. 40 சதவிகித கமிஷன் ஆட்சி பா.ஜ.க. ஆட்சி என்று மக்களிடம் எடுத்துச் சொன்னவுடன், பா.ஜ.க. மிகப்பெரிய தோல்வியடைந்தது. அதே நிலைதான் இந்தியா முழுவதும் வரப் போகிறது.

அதனைச் செய்வதற்கு யார் காரணமாக அமையப் போகிறார்கள்?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அதற்குக் கட்டியம் கூறுகிறது; வழிகாட்டுகிறது; திட்ட மிடுகிறது; வியூகம் வகுக்கிறது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்பதற்காகத்தான் - இந்த ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்குவதற்காக தலைமைச் செயலகத்திற்கு உள்ளேயே சோதனைக்கு என்று செல்லுகிறார்கள்.

10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட வழக்கு!

செந்தில்பாலாஜி மீது என்ன வழக்கு? 10 ஆண்டு களுக்கு முன் போடப்பட்ட வழக்கு. அவர் இப்பொழுது வேறொரு ஆட்சியின் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார். தலைமைச் செயலகத்தின் உள்ளே நுழைகிறீர்களே, எந்த அடிப்படையில்? தயவு செய்து சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?

மக்களைக் குழப்பவேண்டும்; விவரம் தெரியாத மக்கள் - விவரம் தெரிந்தே அலட்சியமாக இருக்கின்ற மக்கள் - அவர்கள் மத்தியில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஓர் அவப்பெயரை உண்டாக்கவேண்டும் - அவதூறை உண்டாக்கவேண்டும் என்பதற்காக தலைமைச் செயலகத்திற்குள் போனார்கள்; என்ன எடுத்தார்கள் என்பது வேறு பிரச்சினை; என்ன கொண்டு வந்தார்கள்?

செந்தில்பாலாஜி அவர்கள் 10 ஆண்டுகளுக்குமுன் அமைச்சராக இருந்த காலம் போய் - அந்த அமைச் சரவையே போய் - அந்த அமைச்சர் அறையும் போய் - இப்பொழுது நாங்கள் தோண்டுகிறோம், நோண்டு கிறோம் என்று சொன்னால், எதற்காக?

நண்பர்களே, இங்கேதான் நீங்கள் கவனமாகக் கவனிக்கவேண்டும்; அதுதான் ஆரியத்தினுடைய சூழ்ச்சி - ஆர்.எஸ்.எஸ்.சினுடைய வியூகம் எப்படி யென்றால், நண்பர்களே அங்கே என்ன எடுத்தார்கள் என்பது முக்கியமல்ல; ஊடகங்களில் அந்தச் செய்தி வரவேண்டும்.

அப்பாவி மக்களிடம் புரளியைப் பரப்பவேண்டும் என்பதற்காகத்தான்...

பாருங்கள், தலைமைச் செயலகத்திற்குள் போய்விட் டார்கள்; ஒரே ஊழல், ஒரே ஊழல் என்று சொல்லி, மிகப்பெரிய ஒரு புரளியைக் கிளப்பவேண்டும். அதை அப்பாவி மக்களிடம் பரப்பவேண்டும்.

தலைமைச் செயலகத்திற்குள் அவர்கள் உள்ளே போன நேரத்தில், அந்தச் செய்தி ஊடகங்களில் வந்த நேரத்தில், நாங்கள் ஆராய்ச்சியாளர்கள் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம்  - சென்னை பெரியார் திடலில்.

ஓய்வு பெற்ற பல்கலைக் கழகத் துணைவேந்தர் உள்பட அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இருந்தார்கள்.

பல்கலைக் கழக துணை வேந்தராக இருந்தவர்களுக்கே தெரியவில்லை! 

அப்பொழுது நான் ஒரே ஒரு கேள்வி கேட்டேன் - ‘‘இப்பொழுது ஒரு செய்தி வந்திருக்கிறதே - தலைமைச் செயலகத்திற்குள் அமலாக்கத் துறை சென்று, என்னமோ எடுத்தார்கள் என்று. நீங்கள் எல்லாம் விவரம் தெரிந்த வர்கள் - அந்த வழக்கு எப்பொழுது நடந்தது? எதற்காக இப்பொழுது தலைமைச் செயலகத்திற்குள் சென்றார்கள்? என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டேன்.

‘‘தெரியாதுங்க, அவர் ஊழல் செய்திருக்கிறார் என்பதற்காகத்தானே நடவடிக்கை எடுக்கிறார்கள்'' என்று சொன்னார்கள்.

‘‘10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் அது'' என்றேன்.

‘‘அப்படியா? எங்களுக்குத் தெரியாதே'' என்றார்கள்.

அதற்குக் காரணம் என்னவென்றால், இப்பொழுது அமலாக்கத் துறையினர் தலைமைச் செயலகத்திற்குள் சென்றால், இது தி.மு.க. ஆட்சியில் நடந்தது- தி.மு.க. ஆட்சியில் இப்படி நடக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் அங்கே சென்றனர்.

அதேநேரத்தில், பக்கத்தில் உள்ள கருநாடக மாநிலத் தில் 40 சதவிகித கமிஷனால்தான் உங்கள் ஆட்சியை இழந்துவிட்டு, இங்கே  வந்து இப்படி செய்கிறீர்கள்.

மனதளவில் தனி நபர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்குவது; ஓர் இழிவை உண்டாக்குவது. 

அதற்கு முன்பு கலைஞர் ஆட்சியில் இருக்கும் பொழுதும் என்ன சொன்னார்கள்? ‘‘ஊழல், ஊழல்'' என்றுதானே சொன்னார்கள். பிறகு இன்றைக்கு என்ன சூழல்?

எதையும் அவர்கள் செய்வார்கள் என்பதற்கு உதாரணம் - நாம், நம்முடைய இயக்கத்தை ஆதரிக் கிறோம்; தாய்க்கழகம் தி.மு.க.வை ஆதரிக்கிறது; கூட்டணியில் இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள் நண்பர்களே, சுருக்கமாக  ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன்.

THE CROOKED TIMBER OF NEW  INDIA

இதோ என் கையில் இருக்கும் இந்தப் புத்தகத்தைப் பாருங்கள்-

THE CROOKED TIMBER OF NEW  INDIA

Essays on a Republic in Crisis

இந்தியக் குடியரசு மிகப்பெரிய ஓர் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறது என்பதை விளக்கி ஒருவர் புத்தகம் எழுதியிருக்கிறார். அண்மையில் வெளிவந்திருக் கின்ற புத்தகம் இது. இந்தப் புத்தகத்தை எழுதியது  Parakala  Prabhakar என்பவர். இவர் லண்டனில் படித்தவர்; ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். மிகப்பெரிய பொருளாதார ஆய்வாளர் அவர். அவர் எழுதிய  புத்தகத்தின் முன்னுரையில் உள்ள கருத்தை மட்டும் சொல்கிறேன்.

மோடியினுடைய 10 ஆண்டுகால ஆட்சி எப்படி நடந்துகொண்டிருக்கிறது? என்னென்ன அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுபற்றி பல செய்திகள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. பல செய்திகளை சொல்லவேண்டாம் - நமக்கு சம்பந்தப்பட்ட விஷயத்தை மட்டும் சொல்கிறேன்.

அறிவார்ந்த மக்கள் இருக்கின்ற பகுதி கொங்கு மண்டலம் - குறிப்பாக கோவை. இங்கே நீங்கள் வெள்ளம்போல் திரண்டு வந்திருக்கிறீர்கள்; இங்கே வராதவர்களும்கூட இணையத்தின்மூலம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் இந்த செய்தி பதிவு செய்யப்படவேண்டும் என்பதற்காக உங்களுக்குச் சுட்டிக் காட்டுகிறேன்.

துணை சபாநாயகரே இல்லாமலே 

நான்காண்டுகளை ஓட்டிவிட்டார்கள்!

கடந்த 4 ஆண்டுகளாக துணை சபாநாயகர் இருக் கின்றாரா மக்களவையில்? இங்கே இந்நாள், மேநாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் இருக்கிறீர்கள். துணை சபாநாயகரே இல்லாமல் 5 ஆண்டுகள் அவகாசமுடைய ஒன்றிய ஆட்சி முடியப் போகிறது.

சபாநாயகர் இருக்கிறார்; துணை சபாநாயகரை ஏன் போடவில்லை? முறைப்படி, மரபுப்படி அந்தப் பதவியை எதிர்க்கட்சிக்குக் கொடுக்கவேண்டும் என்பதால்தான். இதன்படி எதிர்க்கட்சியை நாங்கள் அங்கீகரிக்கமாட் டோம்; ஒப்புக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள்.

ஜனநாயகத்தையே கொச்சைப்படுத்தியிருக்கிறார் கள். நாடாளுமன்றம் என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டது அல்லவா!

நாடாளுமன்றத் தேர்தலும் இப்பொழுது வரப் போகிறது; இதுவரையில் துணை சபாநாயகரே கிடை யாது. காரணம், தனக்கு முழு அதிகாரம் வந்துவிட்டது என்றவுடன் இதுபோன்ற செயல்களை அவர்கள் செய்கிறார்கள்.

அந்தப் புத்தகத்தின் அறிமுக உரையில், 24 ஆம் பக்கத்தில் உள்ளவற்றை உங்களுக்குச் சொல்கிறேன்.

‘‘In the pursuit of absolute power, opposition leaders, and their associates are raided by tax authorities, summoned by enforcement agencies for long, humiliating hours of questioning and are even jailed without any trial. Raids and investigations stop once those leaders join the ruling party. Owners of media outlets who do not tow the government’s line are served tax notices and investigated for alleged financial irregularities. They are spared when their publications tone down criticism of the government. Reputed think tanks are raided by tax authorities in a bid to cow them down. Compliant officers are appointed to head the investigating agencies. Those who show any inclination to act independently are removed from their positions. In New India we have seen an inconvenient head of the Central Bureau of Investigation (CBI) removed in a midnight coup. Misuse of investigating agencies today is at an unprecedented level. The Enforcement Directorate (ED), especially, has become an instrument to terrorize and silence the opposition.''

இதன் தமிழாக்கம் வருமாறு:

‘‘முழு அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களும், அவர்களைச் சார்ந்த வர்களும் வருமான வரி விதிப்பு அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டு வருகின்றனர். எந்தவித விசா ரணையுமின்றி அமலாக்கத் துறையினர் அவர்களை நேரில் வரச் செய்வது அடிக்கடி நிகழ்கிறது. நீண்ட நேரம் கேள்விகளால் அவர்களைத் துளைத்தெடுத்து அவ மானப்படுத்துவதும் வழக்கமாகி விட்டது. முறைப்படி விசாரணை நடத்தாமல், அவர்களைச் சிறையில் அடைக்கும் அவலமும் நிகழ்ந்து வருகிறது.

அந்தத் தலைவர்கள் ஆளுங்கட்சியில் சேர்ந்ததுமே புலனாய்வுகளும், ரெய்டுகளும் நின்று விடுகின்றன. அரசுக்கு இணங்கி சாதகமாக நடந்துகொள்ளாத ஊடக உரிமையாளர்களுக்கு வருமான வரி விதிப்பு தகவல்கள் அனுப்பப்படுகின்றன. பண பரிவர்த்தனைகள் சார்ந்த முறைகேடுகள் என்ற பெயரில் புலன் விசாரணைகளும் நடைபெறுகின்றன. அரசாங்கத்தை விமர்சிப்பதை அவர்கள் சற்று குறைத்துக் கொண்டால், கெடுபிடிகளும் உடனே தளர்த்தப்படுகின்றன. 

நியாயமான கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர் கள் உடனே சோதனைக்கு ஆளாகிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகளால். வாய் திறக்காதபடி அவர் களை முடக்கிப் போடவே அது நடக்கிறது. இணங்கி ஒத்துழைக்கக் கூடிய அதிகாரிகள் மட்டுமே விசாரணைக் குழுவின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்கள். சுதந்திரமாக செயல்பட முயலும் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டு விடுகிறார்கள்.

எதிர்பார்த்தபடி ஒத்துழைத்து இணங்காத ஒரு மத்தியப் புலனாய்வுத் துறை மேலதிகாரி (சி.பி.அய். தலைமைப் பொறுப்பில் இருந்தவர்), நடு இரவில் திடீரென்று பதவி நீக்கம் செய்யப்பட்டதை அண்மையில் நாம் பார்த்திருக்கிறோம். புலனாய்வுப் பணிகள் சார்ந்த அதிகாரிகளும், அலுவலகங்களும் இன்று தவறாகப் பயன்படுத்தப்பட்டு வரும் அவல நிலையைப் பார்க்க முடிகிறது. முன்பு எப்போதுமே இந்த அளவுக்கு மோசமான நிலை இருந்ததில்லை.

எதிர்ப்பாளர்களை அச்சுறுத்தவும், அவர்களது குரல்வளையை நெறிக்கவும், அமலாக்கத் துறைதான் தற்போது பிரதான கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றே கூறலாம்.''

இதுபோன்ற தகவல்கள் அந்தப் புத்தகத்தில் நிறைய இருக்கின்றன. நேரத்தின் நெருக்கடி கருதி இதை மட்டும் நான் சொன்னேன்.

இந்தப் புத்தகத்தை எழுதியவர் யார் தெரியுமா?

இந்தியாவினுடைய நிதியமைச்சராக இருக்கின்ற நிர்மலா சீதாராமன் அவர்களுடைய கணவர்தான் (பலத்த கரவொலி).

லண்டனில் காதல் செய்து திருமணம் செய்து கொண்டவர்கள். அது ஒன்றும் தவறில்லை; அவர் களுடைய உரிமை அது.

அந்தப் புத்தகம் கிடைக்கவில்லை என்று சொன் னார்கள்; சிங்கப்பூரில் உள்ள நண்பர் ஒருவர், இந்தப் புத்தகத்தை வாங்கி எனக்கு அனுப்பினார்.

அடுத்தபடியாக மோடி - பா.ஜ.க. ஆட்சி வருவ தற்குரிய வாய்ப்புகள் கிடையாது என்று தெரிந்தவுடன், கடைசி வரிகள் இவ்வாறு எழுதப்படுகின்றன.

‘‘அதற்காக யார் யார் ஒரே எண்ணத்தில் இருக் கிறார்களோ, அவர்களையெல்லாம் கூட்டணி சேரவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள்'' என்று எழுதப்பட் டுள்ளது.

23 ஆம் தேதி பீகாருக்குப் போகிறார் 

நம்முடைய முதலமைச்சர்!

நம்முடைய முதலமைச்சர் தளபதி அவர்கள் 23 ஆம் தேதி பீகாருக்குப் போகிறார். அசோகன் ஆண்ட ராஜ்ஜியம் - அசோக ராஜ்ஜியம் மீண்டும் வரவேண்டும். அதுதான் மிகவும் முக்கியம். நம்முடைய முதலமைச்சர் அங்கே சென்றவுடன், அசோக ராஜ்ஜியம் மீண்டும் வரும் - அதிலொன்றும் சந்தேகமேயில்லை.

ஜோதிடர்களை 

நம்பி இருக்கிறார்கள்!

இப்பொழுது அவர்கள் ஜோசியக்காரர்களைப் போய்ப் பார்க்கிறார்கள். அதில் ஒரு ஜோசியக்காரன் என்ன சொன்னான் என்றால், ‘‘2024 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றால் உங்களுக்கு வாய்ப்பே கிடையாது; ஆகவே, 2023 ஆம் ஆண்டே தேர்தலை நடத்துங்கள். வடக்கே அக்டோபரில் தேர்தல் நடத்துங்கள்; தெற்கே நவம்பரில் தேர்தல் நடத்துங்கள்'' என்று சொன்னானாம்!

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஜோதிடர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

நம்முடைய தளபதி மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சராக வரக்கூடிய வாய்ப்பே இல்லை என்று ஜோதிடம் சொன்னார்கள். அப்படி சொன்ன ஜோதிடர்கள் எல்லாம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள்.

ஒரு நடிகரைப் பார்த்து ஒரு ஜோதிடர் சொன்னார், ‘‘இந்த நடிகர் அரசியலுக்கு வந்து கட்சியைத் தொடங்குவார்; அப்படி இல்லையென் றால், நான் என்னுடைய தொழிலையே விட்டு விடுகிறேன்'' என்று சொன்னார்.

இன்னும் அவர் ஜோதிடத் தொழிலைத்தான் செய்துகொண்டிருக்கிறார்.

ஆகவே நண்பர்களே, இந்த அளவிற்கு ஒரு பெரிய சூழ்ச்சி, வியூகம் நடக்கிறது என்று சொன்னால், அது சாதாரணமானதல்ல.

அடுத்து இரண்டு செய்திகள்.

ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் 

வெளிவந்த செய்தி!

நம்முடைய அமைச்சர் செந்தில்பாலாஜிமீது வழக்கு என்று சொல்கின்ற நேரத்தில், ஓர் ஆங்கிலப் பத்திரிகை யில் முதன்முதலில் ஒரு செய்தி வந்தது; பிறகு தமிழ் பத்திரிகைகளிலும் அந்தச் செய்தி வந்தது. அதுபோன்ற செய்திகளை நிறைய பேர் கூர்ந்து படிப்பதில்லை.

அமலாக்கத் துறையினர் தலைமைச் செயலகத் திற்குள் சென்று அமைச்சரின் அறைக்குச் சென்று சோதனை செய்கிறார்கள்; அவர்களோடு இரண்டு வங்கி அதிகாரிகளும் சென்றார்களாம்.

இது அறிவார்ந்தவர்கள் நிறைந்த இடம்; படித்தவர்கள் நிறைய இருக்கிறீர்கள். 

அமலாக்கத் துறையினர் விசாரணைக்கோ, சோதனை செய்வதற்கோ சென்றால், வெளியாட்களை அழைத்துச் செல்வதற்கு எந்தச் சட்டத்தில் இடம் இருக்கிறது? தானடித்த மூப்பாகத்தானே அவர்கள் இதைச் செய்கிறார்கள். எதை வேண்டுமானாலும் செய் வோம், யாரும் எதுவும் கேட்கக்கூடாது என்பதுதானே!

சனாதன பஜனை செய்துகொண்டிருக்கின்றார் தமிழ்நாடு ஆளுநர்

இங்கே ஒரு ஆளுநர் இருக்கிறார் பாருங்கள், மக்களின் வரிப் பணத்தை சம்பளமாகப் பெற்றுக் கொண்டு, சனாதன பஜனை செய்துகொண்டிருக் கின்றவர்; ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நடத்திக் கொண்டிருக்கின்றவர் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றவர். 

அமலாக்கத் துறையினரோடு வங்கி அதிகாரிகள் எந்த அடிப்படையில் சென்றார்கள்?

சில பேர் அதற்கு நொண்டிச் சமாதானம் போன்று ஒரு விளக்கம் சொல்லலாம்.

சாட்சியத்திற்காக வங்கி அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வரவேண்டியதுதான் அவர்களுடைய வேலையே தவிர, அமலாக்கத் துறை சோதனைக்குச் செல்லும் பொழுது, அவர்களை அழைத்துச் செல்வதற்குச் சட்டப்படி இடமுண்டா?

அடுத்தபடியாக நண்பர்களே, மிக முக்கியமான செய்தி! 

நம்முடைய முதலமைச்சர், அமைச்சரவையை மாற்றுகிறார். ஏனென்றால், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்திருக்கிறார்கள்; அவருக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யவேண்டி இருக்கிறது. ஆகவே, அவருடைய இலாகாவை வேறொரு அமைச்சரிடம் கொடுக்கிறார்.

இது முதலமைச்சரின் மிக முக்கியமான பொறுப்பு. இந்திய அரசமைப்புச் சட்டம்தான் - பஞ்சாயத்துத் தலைவரிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் வரையில் அதன்மீதுதான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்.

அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது, அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றியிருக்கின்றோம் என்று ஆளுநருக்குக் கடிதம்மூலம் நம்முடைய முதல மைச்சர் தெரிவிக்கிறார்.

அரசமைப்புச் சட்டம் 163 ஆவது பிரிவு!

அதனைத் திருப்பி அனுப்புகிறார் தமிழ்நாடு ஆளுநர். அடுத்த நாள் இரண்டு பேருக்கு மட்டும் இதில் அனுமதி என்று சொல்கிறார்.

அரசமைப்புச் சட்டம் 163 ஆவது பிரிவு என்ன சொல்லுகிறது தெரியுமா?

There shall be a Council of Ministers with the Chief Minister at the head to aid and advise the Governor in the exercise of his functions, except in so far as he is by or under this Constitution required to exercise his functions or any of them in his discretion.

என்று தெளிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.

சிறையில் இருந்த சில கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யலாமா? வேண்டாமா? என்று பேசப் பட்ட நேரங்களில், அதில்கூட ஆளுநர்தம் கடமையைச் சரியாக செய்யவில்லை என்பதினால்தான், உச்சநீதி மன்றம் அவர் தலையில் குட்டு வைத்து தீர்ப்பு அளித்திருக்கிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், அமைச்சரின் இலாகா மாற்றங்களை ஆளுநர் ஒப்புக்கொள்ளாமல் திருப்பி  அனுப்பியிருக்கிறாராம். இப்பொழுது அவர் இரண்டு பேரை மட்டும் அனுமதித்திருக்கிறாராம்.

இவர் அனுமதிக்கவில்லை என்றால், நம்முடைய முதலமைச்சர் சும்மா இருப்பாரா?

ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்துத் தீர்மானம் போட்ட ஒரே முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர்தான்!

சட்டமன்றத்திலிருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தவுடன், அதைக் கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் போட்ட துணிச்சல் உள்ள ஒரே முதலமைச்சர் இந்தியாவிலேயே நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்; தமிழ்நாடு சட்டமன்றம்தான்.

சட்டமன்றத்திலிருந்து எதிர்க்கட்சித் தலைவர்களோ, உறுப்பினர்களோதான் வெளிநடப்பு செய்வார்கள். ஆனால், ஓர் ஆளுநர் சட்டமன்றத்திலிருந்து வெளி நடப்பு செய்தது - இந்த ஆளுநர் மட்டும்தான்.

இன்றைக்கு ஆளுநர் என்ன சொல்லுகிறார் என்றால், செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர நான் அனுமதி அளிக்கமாட்டேன் என்று.

இவர் அனுமதி கொடுப்பதற்கு என்ன இருக்கிறது? அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்தில் இவர் அனுமதி கொடுப்பதற்கு இடம் இருக்கிறது என்று சொல்லப் பட்டுள்ளது? இதுகுறித்து யாராவது சொல்லட்டுமே!

அண்ணாமலையிலிருந்து யாராவது பதில் சொல்லட்டுமே! ஏனென்றால், சில பேர் குறுக்குச்சால் ஓட்டியே பழக்கப்பட்டவர்கள்.

தண்டிக்கப்பட்டால்தான் 

ஒருவர் குற்றவாளி!

‘‘சார், செந்தில்பாலாஜிமீது குற்றம் இருக்கிறது; அதனால்தான் ஆளுநர் அனுமதி மறுக்கிறார்'' என்று சிலர் சொல்கிறார்கள்.

எப்பொழுது ஒருவர் குற்றவாளி? தண்டிக்கப்பட்டால் தான் அவர் குற்றவாளி.

இது வழக்குரைஞர்களுக்குத் தெரியும். சட்டம் படித்த வர்கள் நிறைய பேர் இங்கே இருக்கிறோம்.

அவர்மீது சொல்லப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப் பட்டால் ஒழிய, அதுவரையில் அவர் எந்தத் தவறும் செய்யாதவர்தான்.

இந்தியக் குற்றவியல் சட்டத்தின் தத்துவமே இதுதான்.

சட்ட முறைப்படி பார்த்தால், நிறைய வாய்ப்புகள் செந்தில்பாலாஜி அவர்களுக்கு இருக்கிறது. ஆகவே தான், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சர் என்று சொன்னார்.

இதை எப்படி குற்றம் என்று சொல்வீர்கள்?

இன்னும் ஒருபடி மேலே போய் பார்க்கவேண்டு மேயானால், தெளிவாக ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன் - இதற்கு முன்னுதாரணம் இருக்கிறதா? என்று சிலர் கேட்கலாம்.

அமித்ஷாவே முன்னுதாரணம்!

அமித்ஷாவே முன்னுதாரணம். அவர்மீது வழக்குப் போட்டபொழுது, குஜராத் மாநில அரசில் அமைச்சராகத்தானே தொடர்ந்திருந்தார். ‘குஜராத் மாடல்', ‘திராவிட மாடலை' சாப்பிடலாம் என்று நினைக்கலாமா?

குஜராத் மாடலிலிருந்தே உதாரணத்தைச் சொல்லியிருக்கிறோம்; இதற்கு என்ன பதில்? தயவு செய்து சிந்திக்க வேண்டாமா?

ஆயிரம் கேள்விகளில் இவை அத்தனையும் வரும்; இவற்றை தனிப்பட்ட முறையில், எழுப்பவேண்டிய இடங்களில், கண்டிப்பாக எழுப்புவோம்; அதிலொன்றும் சந்தேகமேயில்லை.

ஆனால், இவையெல்லாம் சாதாரணம்; அடிப்படை அச்சுறுத்தல், சங்கடங்கள் அத்தனைக்கும் அடிப்படைக் காரணம் ‘திராவிட மாடல்' ஆட்சி இந்தியாவிற்கே வழிகாட்டுவதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்பதுதான்.

அதைத்தான் இங்கே சகோதரர் திருமா அவர்களும், மற்றவர்களும் சொன்னார்கள்.

காரணம் என்ன? இந்தியாவில் உள்ள எந்த முதலமைச்சரையும்விட, நம்முடைய ‘திராவிட மாடல்' ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சராக இருக்கின்ற தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஒன்றைச் சொன்னார்.

கலைஞரிடம் பயிற்சி பெற்றவர் 

நம்முடைய முதலமைச்சர்!

ஏனென்றால், அவர் கலைஞரிடம் பயிற்சி பெற்றவர்; கலைஞர் அவர்கள் தந்தை பெரியாரிடமும், அண்ணா விடமும் பயிற்சி பெற்றவர்.

எங்கள் ஆட்களிடம் நீங்கள் ஆழம் பார்க்கலாம் என்று நினைக்காதீர்கள்; அப்படி நினைத்தீர்களேயானால், நீங்களே கீழே போய்விடுவீர்கள்.

எங்கள்மீது வீசப்படுகின்ற குற்றங்கள், குறைகள் அத்தனையையும் மிகப்பெரிய அளவிற்கு உரங்களாகப் போட்டு, காய்களாக, கனிகளாக, பயிர்களாக அவை வளரும்.

மலத்தைக்கூட நீங்கள் கைகளில் எடுத்துப் போட் டாலும், அது எங்கள் வயலுக்கு உரம்; சாணியை நீங்கள் எடுத்துப் போட்டாலும், அது எங்கள் வயலுக்கு உரம்!

கலைஞரிடம் பயிற்சி பெற்ற நம்முடைய தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2024 ஆம் ஆண்டில் நடைபெறப் போகும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று சொன்னார்.

யாரும் சொல்லாத ஒன்றை நம்முடைய முதலமைச்சர் சொன்னார்; அதனால்தான் ஒன்றிய அரசுக்கு அவர்மீது கோபம்.

எதிர்க்கட்சிகள் அனைவரும் 

ஒற்றுமையாக இருந்தால்....

எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந் தால், 2024 ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுவிடலாம் என்று சொன்னார்.

ஏனென்றால், பா.ஜ.க. இதுவரையில் 40 சதவிகிதத் திற்குமேல் வாக்குகளை பெற்றதுண்டா?  60 சதவிகிதம் மக்கள் அவர்களுக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். இந்த உண்மையை இந்தியா முழுமையும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்; எழுத ஆரம்பித்துவிட்டார்கள். இந்தப் புத்தகத்திலும் அந்த உண்மையை எழுதி யிருக்கிறார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உடைக்க, அவர் பிரதமரா வருவாரா? இவர் பிரதமரா வருவாரா? என்று பிரச்சினையை எழுப்புகின்றார்கள். இவர்களுக்குள் ஒற்றுமை கிடையாது என்றெல்லாம் சொல்கிறார்கள்.

யார் வரக்கூடாது என்பதுதான் 

இந்தக் காலகட்டத்தில் 

மிக முக்கியம்!

ஆனால், நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஓர் அருமையான ஃபார்மூலாவைக் கொடுத்தார்.

‘‘யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதுதான் இந்தக் காலகட்டத்தில் மிக முக்கியம்'' என்றார்.

இவ்வளவு தெளிவாக சொன்ன ஓர் அரசியல் வியூகி நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களைத் தவிர, இந்தியாவிலேயே வேறு யாரும் கிடையாது.

தீயை அணைக்கவேண்டும் என்பதுதான் முதலில் முக்கியம்.  அதற்கு யார் முன்னால், யார் பின்னால் என்பதையெல்லாம் பார்க்கக் கூடாது.

மதவெறித் தீ, ஜாதி வெறித் தீ, பதவி வெறித் தீயை அணைக்கவேண்டும்.

எப்படியாவது ‘திராவிட மாடல்' ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கவேண்டும்; எப்படியாவது மிரட்டவேண்டும்; எப்படியாவது அச்சுறுத்தவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள்தான் ஏமாந்து போவீர்கள்!

தமிழ்நாட்டில் அமைந்திருப்பது 

கொள்கைக் கூட்டணி!

காரணம் என்னவென்றால், தமிழ்நாட்டில் அமைந்திருப்பது கொள்கைக் கூட்டணி; மற்ற மாநிலங்களில் கூட்டணி என்பது தேர்தலின்போது வரும்; தேர்தலுக்கு முன் வரும்; தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்து போகும்.

கூட்டணி வேறு; கொள்கை வேறு என்று இங்கே இருக்கும் ‘புத்திசாலி'கள்கூட பேசுகிறார்கள்.

ஆனால், தி.மு.க. தலைமையில் அமைந்திருக்கும் கூட்டணி என்பது அப்படிப்பட்டதல்ல. கொள்கை முன்னால் - கூட்டணி பின்னால். ஆகவே, கொள்கையால் அமைக்கப்பட்டு இணைக்கப்பட்டு இருக்கின்ற கூட்டணி இது. இதை நீங்கள் என்ன செய்தாலும் அசைக்க முடியாது.

எங்கள் அனைவரையும் நாளைக்கே நீங்கள் சிறைச்சாலையில் அடைத்தாலும், அங்கேயே வியூகங்களை வகுப்போம்; அதற்கும் தயாராக இருக்கிறோம்; என்றைக்கும் தயாராக இருக்கிறோம்.

நாங்கள் வீட்டை விட்டு வெளியே வரும்பொழுது, மீண்டும் வீட்டிற்குப் போவோம் என்று நினைத்துக் கொண்டு வருவதில்லை. எங்கே வேண்டுமானாலும் போவதற்குத் தயாராக இருக்கின்ற கூட்டம்.

அனைவரும் கைகளைத் தூக்கி நின்றோம்!

இங்கே அனைவரும் கைகளைத் தூக்கி நின்றோம் பாருங்கள், அதற்கு அடையாளம் அதுதான். நாங்கள் கைகளைத் தூக்கியது எதற்காக என்றால், நீங்கள் அத்துணைப் பேரும் எழுந்து நின்று கைகளைத் தூக்க முடியாது என்பதற்காகத்தான், உங்கள் சார்பில் நாங்கள் கைகளைத் தூக்கி நின்றோம்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், நிச்சயம் மனிதநேயத்திற்கு விரோதமாக இருப்பவர்களுக்கு முடிவு கட்டுவார்கள்.

நீதி வெல்லும்! இந்த இயக்கம் வெல்லும்! இந்தக் கூட்டணி வெல்லும்!

ஒருபோதும் இங்கே 

காவியின் பாட்சா பலிக்காது!

ஒருபோதும் இங்கே காவியின் பாட்சா பலிக்காது; அந்தப் பருப்பு இங்கு வேகாது, வேகாது, வேகாது என்று தெளிவாகச் சொல்லி, வடக்கேயும் இப்பொழுது உங்கள் பருப்பு வேகாது என்பதால்தான் குறுக்குச்சால் ஓட்டலாம் என்று நினைக்கிறார்கள்; அச்சுறுத்துகிறார்கள், ஏமாந்துவிடாதீர்கள்.

ஆயிரம் செந்தில்பாலாஜியை உருவாக்கக் கூடிய ஆற்றல் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு!

ஒரு செந்தில்பாலாஜி அல்ல - ஆயிரம் செந்தில்பாலாஜியை உருவாக்கக் கூடிய ஆற்றல் திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கத்திற்கு உண்டு. நாங்கள் எப்போதும் அதற்குத் துணை நிற்போம்!

மனிதநேயம் வெல்லும் -

திராவிடம் வெல்லும் -

திராவிடம் வெல்லும், நாளைய வரலாறு அதைச் சொல்லும், சொல்லும்!

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்..

No comments:

Post a Comment