சென்னை கிண்டியில் கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 16, 2023

சென்னை கிண்டியில் கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை,ஜூன்16 - சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் நேற்று (15.6.2023) மாலை கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அமைச்சர் பெருமக்கள், மேனாள், இந்நாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை உயர் அலுவலர்கள் உள்பட பலரும் திறப்பு விழாவில் பங்கேற்றனர்.

சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.240 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன. இங்கு இதயம், நரம்பு, இரைப்பை, சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்ட உயர் சிகிச்சைகளுக்கு மருத் துவம் பார்க்கப்படுகிறது. மருத்துவ உபகர ணங்கள் அனைத்தும் நிறுவப்பட்டுள்ளது. 

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

'ஒரு மனிதரின் வாழ்க்கை என்பதை அவரது மரணத்துக்குப் பிறகு இருந்து, கணக்கிட வேண்டும்' என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

அந்தவகையில் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, நிறைவுற்றதற்குப் பின்னாலும் தமிழ்ச் சமுதாயத்துக்காகப் பயன்பட்டுக் கொண்டு இருக்கும் மாபெரும் தலைவர் தான் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.

இந்த கிண்டி பகுதி, சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்டது. சைதாப் பேட்டை என்பது, கலைஞர் அவர்கள் நின்று, வென்ற தொகுதி. "சைதாப்பேட்டை வேட்பாளர் - திருவாளர் 11 லட்சம்" என்று அறிஞர் அண்ணா அவர்கள் 1967-ஆம் ஆண்டு தேர்தலுக்கு அறிவிப்பு செய்தார்கள்.

எனவே, இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இப்போதும் இருந்து ஒரு மாபெரும் மருத்துவமனையை வாங்கிக் கொடுத்திருக்கிறார் தலைவர் கலைஞர் அவர்கள். இந்த வளாகத்துக்கு 'கிங் இன்ஸ்டிடியூட்' என்று பெயர். இதுவும் பொருத்தமானதுதான்.

கலைஞர் என்றாலே ‘கிங்’ தான். அவர் வாழ்ந்த காலம் முழுவதும் கிங்-ஆகவும் கிங் மேக்கராகவும் இருந்தவர். அந்த வகையில் கிங் ஆராய்ச்சி வளாகத்துக்கு இதனை விடப் பொருத்தமான பெயரும் இருக்க முடியாது. பொருத்தமான இடமும் இருக்க முடியாது.

பதினைந்தே மாதத்தில் ... மறுபடியும் சொல்கிறேன்... பதினைந்தே மாதத்தில்... மறுபடியும் சொல்கிறேன்...பதினைந்தே மாதத்தில் இந்த மருத்துவமனையைக் கட்டி இருக்கிறோம். இதுதான் மிக முக்கியமான சாதனை!

2015-ஆம் ஆண்டு அறிவித்துவிட்டு 2023-ஆம் ஆண்டுவரை இரண்டாவது செங்கல்லைக்கூட எடுத்து வைக்காத அலட்சியத்தோடு ஒரு செங்கல் கதை உங்களுக்கு தெரியும்,  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கும் நிலையில், அடிக்கல் நாட்டிய 15 மாதத்தில் இந்த மாபெரும் மருத்துவமனையை நாம் கட்டி எழுப்பி இருக்கிறோம்.

மக்களுக்கு உண்மையான சேவை நோக்கத்தோடு திட்டங்களைத் தீட்டுபவர் களுக்கும் மக்களை ஏமாற்றுவதற்காக திட்டங்களை அறிவிப்பவர்களுக்குமான வேறுபாட்டை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

2021-ஆம் ஆண்டு மே 7-ஆம் நாள் திமுக அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது. ஜூன் 3 அன்று முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் பிறந்தநாளை யொட்டி தி.மு.க. அரசு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் மிக முக்கியமானது, "தென்சென்னையில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை’’ அமைக்கப்படும் என்பதாகும்.

மருத்துவமனைக்கான 4.89 ஏக்கர் நிலம் சென்னை கிண்டி, கிங் மருத்துவ வளாகத்தில் இருந்து தேர்வு செய்யப் பட்டது. 500 படுக்கைகள் என்ற எண் ணிக்கையை பின்னர் ஆயிரம் என உயர்த்தினோம். 2022, மார்ச் 21 அன்று நான் அடிக்கல் நாட்டினேன். இது 2023 ஜூன் மாதம். அதாவது மொத்தம் 15 மாதத்திற்குள் இந்த மருத்துவமனை கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

ஆறு தளங்கள் கொண்ட இந்த மருத்துவமனை வளாகம், மூன்று தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

A -  புற நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் நிர்வாகக் கட்டடம், 

B  -  அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, 

C - எக்ஸ்ரே மற்றும் உள்நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு என அமைக்கப்பட்டுள்ளது.

அடித்தளம் - மருந்துகள் சேமிப்பு அறை 

தரைத்தளம் - அவசர சிகிச்சை பிரிவு

முதல் தளம் - அறுவை சிகிச்சை வார்டுகள்

2வது தளம் - பொது வார்டு, அறுவை சிகிச்சை அரங்குகள்

3வது தளம் - புற்றுநோய் மருத்துவச் சிகிச்சை பிரிவு

4வது தளம் - தனி அறைகள், ரத்த வங்கி

5வது தளம் - மயக்க மருந்தியல் பிரிவு 

6வது தளம் - தொடர் சிகிச்சைக்கான வார்டுகள்.

10 அறுவை சிகிச்சை அரங்குகள், உயர்தர ஆய்வகங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், 10 மின் தூக்கிகள், சலவைக் கூடங்கள்,  உணவகங்கள், தீத்தடுப்பு கருவிகள் என நவீன வசதிகளுடன் உலகத்தரத்தில் இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் கலைஞர் அவர்களை- `டாக்டர் கலைஞர்’ என்றுதான் அனைவரும் அழைப்பார்கள். அவர் மெடிக்கல் டாக்டர் அல்ல, சோஷியல் டாக்டர் - சமூக மருத்துவர் அவர். இந்தத் தமிழ்ச் சமுதாயத்தின் நோய்களைத் தீர்த்து குணப்படுத்த வந்த சமூக மருத்துவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

தனது அறிவாற்றலை, சிந்தனைத் திறனை மொழி ஆளுமையை, செயல் வேகத்தை, துணிச்சலை வாழ்நாளின் 95 வயது வரையிலும் தமிழ்ச்சமுதாயத்தின் நன்மைக்காகவே பயன்படுத்தியவர் கலைஞர் அவர்கள். “நான் கோட்டையில் இருந்தாலும் குடிசைகளைப் பற்றியே நினைப்பவன்” என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். மிக மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் சேவையாற்றியவர் தலைவர் கலைஞர் அவர்கள். அவர் பெயரால் அமைந்த நூலகத்தை அடுத்த மாதம் மதுரையில் திறக்க இருக்கிறோம்.

இன்றைய தினம் அவர் பெயரால் மருத்துவமனை திறக்கப்படுகிறது. அவர் பெயரை எந்தத் திட்டத்துக்கும் வைக்க லாம். அந்த வகையில் அனைத்துக்கும் பொருத்தமானவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

பிறந்த நாளை விளிம்பு நிலை மக்களுக்கு திட்டங்களை தொடங்கியவர் கலைஞர் 

முதன்முதலாக ஆட்சிக்கு வந்த நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ஆம் நாள் தனது பிறந்தநாளை விளிம்பு நிலை மக்களுக்கான நாளாக மாற்றி அவர்களுக்கான திட்டங்களைத் தொடங் கும் நாட்களாக அதனைக் கொண்டாடி யவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

1971-ஆம் ஆண்டு ஜூன் 3 இல் ‘பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம்’ தொடங்கினார். 1972-ஆம் ஆண்டு ஜூன் 3-இல் ‘கண்ணொளித் திட்டம்’ தொடங்கினார். 1973-ஆம் ஆண்டு ஜூன் 3-இல் கை ரின்வலீயூன்குப் பதிலாக இலவச சைக்கிள் ரின்வலீ வழங்கும் திட்டத்தை தொடங்கினார். 

தலைவர் கலைஞர் எந்தளவுக்கு ஏழை - எளிய, விளிம்பு நிலை மக்களின் ஏந்தலாக இருந்தார் என்பதற்கு எடுத்துக்காட்டாக இன்னொன்றையும் சொல்ல விரும்பு கிறேன்...

 இந்த மருத்துவமனை என்பது பல்லாண்டுகளுக்கு மக்களைக் காப்பாற்ற இருக்கிறது. நம்மிடம் விட்டால் இது போன்ற மருத்துவமனையை ஆண்டுக்கு ஒன்று கட்டிக்காட்ட முடியும். அத்தகைய மருத்துவக் கட்டமைப்பு உள்ள மாநிலம் நமது தமிழ்நாடு!

மருத்துவக் கட்டமைப்பில் இந்தியா விலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ‘மெடிக்கல் சிட்டி’ என்றுதான் சென்னைக்குப் பெயர். நாட்டிற்கே முன்னோடித் திட்டமாக, ‘கலைஞர் காப் பீட்டுத் திட்டம்' உருவாக்கி இலட்சக் கணக்கான ஏழை எளிய மக்கள் இலவச மாக உயர்சிகிச்சை பெற்று  உயிர்பிழைக்க வழிவகுத்த மனித நேயர்தான் நம் நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞர் அவர்கள்.

அதுமட்டுமல்ல, 1989-ஆம் ஆண்டே டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மை யாரின் பெயரில் ஏழைக் கர்ப்பிணிகளுக்காக மகப்பேறு நிதி உதவித் திட்டத்தைத் தொடங்கியவரும் தாயுள்ளம் கொண்ட தலைவர் கலை ஞர்தான். 

கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத் தில் விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்தார்கள். மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற சிந்தனையை முதன்முதலாக விதைத்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள் தான்.

முன் மாதிரியான 

மருத்துவத் திட்டங்கள்

மா.சு. அவர்கள் சொன்னாரே, இப்போது நாம் ‘மக்களைத் தேடி மருத் துவம்‘, ‘இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48‘ போன்ற நாட்டிற்கே பல முன்மாதிரியான மருத்துவத் திட்டங்களை வகுத்து செயல்படும் திறன் உலகம் முழுவதும் பல சுகாதார ஆர்வலர்களை தமிழ்நாட்டின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. நாட்டிலேயே 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுடன், இந்தக் கல்லூரிகளில் சுமார் 5050 விஙிஙிஷி இடங்களுடன் தமிழ்நாடு முதலிடத்தில் திகழ்கிறது. 

1999-ஆம் ஆண்டு ‘வருமுன் காப்போம்’ என்ற திட்டத்தை தலைவர் கலைஞர் அவர்கள்தான் தொடங்கினார். ‘கலை ஞரின் வருமுன் காப்போம்’ திட்டமாக இன்றுவரை அது செயல்பாட்டில் உள்ளது. 

'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தில் இதுவரை 1 கோடியே 46 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளார்கள். தேசிய நல திட்டங்களை செயல்படுத்துவ தில் குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந் தைகள்  நலத்திட்டங்களைச் செயல்படுத் துவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. 

இன்று திறக்கப்பட்டுள்ள மருத்துவ மனையாக இருந்தாலும் - அடுத்த மாதம் திறக்கப்படும் நூலகமாக இருந்தாலும் இத்தகைய தாயுள்ளம் கொண்ட கலை ஞரின் பேரால் அமைவதே பொருத்த மானது. இதனைத் திறந்து வைக்கும் வாய்ப்பு என்பது என் வாழ்நாளில் கிடைத்த மாபெரும் பேறாக நான் கருதுகிறேன்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல - கலைஞரின் மகன் என்ற பூரிப்பு உணர்வோடு இதனைத் திறந்து வைத்திருக்கிறேன். 

இந்த மகிழ்ச்சியான தருணத்தில், இன்னும் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். இதை சொன்னால் நமது நீர்வளத்துறை அமைச்சருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அவர் பலமுறை இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் சி.எம்.சி போன்ற பல்வேறு பெரிய மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியா முழுவதிலும்  இருந்து மக்கள் வருகிறார்கள்.  இவர்களில் பொருளாதார ரீதியாக அதிக வசதியில்லாத பலரும் சிகிச்சைக்காக வருவதாலும் அவர்களுடன் வருபவர்கள் வேலூரில் தங்குவதற்கு, குறைந்த கட்டணத்தில் அறைகள் வாடகைக்கு கிடைப்பதில்லை என்பது அரசின் கவனத் திற்கு பலமுறை கொண்டுவரப்பட்டது.  

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற மனிதநேய பண்பாட்டு விழுமியத்தினை கடைப்பிடிக்கும் நமது அரசு, இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வேலூர் அருகே சத்துவாச்சாரி உள்வட்டத்தில் உள்ள பெருமுகை என்ற கிராமத்தில் 2 எக்டேர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அதில் 250 படுக்கை வசதி கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டப்படும், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திராவிட மாடல் அரசின் அங்கங் களாக உள்ள எங்கள் அனைவரையும் இன்றும் இயக்கிக் கொண்டிருக்கும் இயங்கு சக்தியாக தலைவர் கலைஞர் தான் இருக்கிறார். அவர் பெயரை உச்சரிக்கும் போதே ஓராயிரம் மடங்கு பலம் பெறுகிறோம். அந்த பலத்தில் எங்களது பயணத்தைத் தொடர்வோம்!

தமிழ் மக்களை வாழ வைத்துக் கொண் டிருக்கக்கூடிய நூற்றாண்டு காணும் தலை வர் கலைஞர் புகழ் வாழ்க! வாழ்க! வாழ்க! 

-இவ்வாறு முதலமைச்சர் உரையில் குறிபிட்டார்.


No comments:

Post a Comment