'தி கேரளா ஸ்டோரி' விவகாரம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 3, 2023

'தி கேரளா ஸ்டோரி' விவகாரம்!

 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பி உள்ளது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மீது மிகவும் மோசமான வன்முறைக் கருத்தை தூவி உள்ளது.  

நீதிமன்றத்தில் திரைப்படதயாரிப்பாளர்கள் சார்பில் இது கற்பனைக்கதை, என்று கூறிய பிறகும் அதன் தயாரிப்பாளர் தமிழ்நாடு அரசு பயங்கர வாதிகளுக்கு துணைபோகிறது என்று அறிக்கை விட்டுள்ளார்

'கேரளா ஸ்டோரி' திரைப்படத்தயாரிப்பாளரான விபுல் ஷா   தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளை  கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அப்பேட்டியில் அவர் பேசியதாவது: "உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் முற்றிலுமாக நிராகரித்துள்ளன. ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையிடக் கூடாது என திரையரங்க உரிமை யாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். மீறி படத்தை வெளியிட்டால் திரையரங்க உரிமம் புதுப்பிக்கப் படாது என்றும் தாக்குதல் ஏதேனும் நடந்தால் பாதுகாப்பு கிடைக்காது என்றும் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த இரண்டு மாநில அரசுகளும்தான் ஜனநாயகம் நசுக்கப்படுவதாக எப்போதும் குற்றம்சாட்டி வந்துள்ளன. ஆனால் அவர்களே உச்சநீதிமன்ற உத்தரவை நிராகரித்து இப்படத்தை திரையிட அனுமதி மறுப்பது முரண். காங்கிரஸ் வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று ஜனநாயகத் துக்காக குரல் கொடுக்கிறது. ஆனால் அவர்களது சொந்த மாநிலங்களில் அவர்கள் செய்வது இதைத்தான். இந்த இரண்டு மாநில மக்களும், பாதிக்கப்பட்ட பெண்களுடன் நிற்கத் தயாராக இல்லாத அரசாங்கங்களை ஆதரிக்க வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும். உண்மையில் அவர்கள் இந்த பயங்கரவாத வலைப்பின்னலை அம்பலப்படுத்துவதை மூடி மறைக்க உதவுகின்றனர்." இவ்வாறு விபு ஷா கூறியுள்ளார்.

முழுக்க முழுக்க 'தி கேரள ஸ்டோரி' திரைப் படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்யவும் இல்லை, இது தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்கவும் இல்லை, மேலும் இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு தெளிவு படுத்திவிட்டது.

 தமிழ்நாட்டில் இந்த திரைப்படத்தை ஆளுநரும் பார்த்து புகழாரம் சூட்டியுள்ளார். இது ஒன்று போதாதா தமிழ்நாட்டில் இந்த திரைப்படம் திரை யிடப்பட்டுள்ளது என்பதற்கு? ஆனால் தமிழ் நாட்டின் ஆட்சியாளர்கள் மீது மோசமான கருத்தைப் பரப்ப வேண்டும் என்று - அரசியல் தலைவர்கள் போர்வையில் திரியும் ஹிந்துத்துவ மதவெறியர்களின்  - பல்வேறு திட்டங்களில் இதுவும் ஒன்று. கருத்து சுதந்திரம் பேசும் பிஜேபி - ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் பி.பி.சி. இந்தியாவில் வெளியிட்ட "மோடிக்கான கேள்விகள்" (India: The Modi Question) (வெளியிடப்பட்ட நாள் 17.1.2023) என்ற திரைப்படத்தைத் தடை செய்தது ஏன்? சமூக வலை தளங்களில் தொழில் நுட்ப ரீதியாக யாரையும் பார்க்க விடாமல்  (Block) செய்தது ஏன்?

மோடி முதல் அமைச்சராக இருந்தபோது குஜராத்தில்  நடைபெற்ற  மத ரீதியான மனிதப் படுகொலையை வரலாறு மறக்குமா - மன்னிக்குமா?

"நான் எந்த முகத்தோடு வெளிநாடு செல்லுவேன்?" என்று அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி புலம்பியதேன்?

உண்மையைச் சொன்னால் எரிச்சலா? கற்பனை என்ற பெயரால் சிறுபான்மையினர்மீது வெறுப்பு நஞ்சைக் கொட்டும் "தி கேரளா ஸ்டோரி"க்காக வக்காலத்து வாங்குவோர் கடைந்தெடுத்த பாசிஸ் டுகள் என்று சொன்னால், அதில் என்ன தவறு?

No comments:

Post a Comment