கேரளாவில் டெங்கு பாதிப்பு தமிழ்நாட்டின் எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 26, 2023

கேரளாவில் டெங்கு பாதிப்பு தமிழ்நாட்டின் எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

சென்னை, ஜூன் 26 -  கேரளாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழ்நாடு எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், அந்த மாநிலம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் சிறப்பு முகாம்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அம்மா வட்டங்களில் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்புப் பணிகளில் 18 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் வடிவேலன் கூறியதாவது:

கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அம்மாநில டெங்கு பாதிப்பு குறித்த விவரங்களை மாவட்ட துணை சுகாதார இயக்குநருக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

எல்லை மாவட்டங்களான கோவை, தேனி, கன்னி யாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப் புகளை கண்காணித்து, தகவல்களை அளிக்குமாறு சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகள், பள்ளிகள், பூங்காக்கள், கல்லூரிகள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் தனித்தனியே விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளில் 18 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேவையான இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகித்தல், தனி நபர் சுகாதாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment