அருங்காட்சியக பெயர் மாற்றம் - ஆயிரம் மோடிகள் வந்தாலும் நேருவின் புகழை அழிக்க முடியாது கே.எஸ்.அழகிரி கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 18, 2023

அருங்காட்சியக பெயர் மாற்றம் - ஆயிரம் மோடிகள் வந்தாலும் நேருவின் புகழை அழிக்க முடியாது கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை, ஜூன் 18 நேருவின் புகழை ஆயிரம் மோடிகள் வந்தாலும் அழிக்க முடியாது. டில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கேற்று 3,259 நாட்கள் சிறைவாசம் புகுந்து விடுதலை பெற்ற பிறகு 17 ஆண்டுகாலம் இந்தியாவின் பிரதமராக இருந்து, நவீன இந்தியாவிற்கு அடித்தளமிட்ட முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு வாழ்ந்த இல்லம் தான் தீன்மூர்த்தி பவன்.

அவரது மறைவிற்கு பிறகு அவரது 75ஆவது பிறந்தநாளில் 1966, நவம்பர் 14ஆம் தேதி நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை அப்போதைய குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் நாட்டுக்கு அர்ப் பணித்தார். இந்த நூலகத்தில் ஆயிரக்கணக் கான ஆராய்ச்சி மாணவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத் தாளர்கள் நாள்தோறும் பயன் படுத்துகிற வகையில் மிகமிக அற்புதமாக வடிவமைக்கப்பட் டிருந்தது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நேருவின் புகழை மழுங்கடித்து விடலாம் என்ற நினைப்புடன் இத்தகைய இழிவான செயலை மோடி அரசு செய்திருக்கிறது. இதன் மூலம் பிரதமர் மோடியின் பெயர் தான் தரம்தாழ்ந்து விட்டது. இந்தியாவையே கட்டமைத்த மாபெரும் தலைவரின் பெயரை மாற்றி கீழ்த்தரமாக செயல்படும் பா.ஜ. அரசை வன்மையாக கண்டிக்கிறேன். அதனால் தியாக வரலாறு படைத்தவர்களின் நினைவுச் சின்னங்களை அழிக்கிற முயற்சியில் பாஜ ஈடுபட்டிருக்கிறது. இத்தகைய முயற்சிகளின் மூலம் நவீன இந்தியாவின் சிற்பியாக அழைக்கப்பட்ட  நேருவின் புகழை ஆயிரம் மோடிகள் வந்தாலும் அழிக்க முடியாது. இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment