அமித்ஷா பேச்சுக்கு பதிலடி தோற்றங்கள் முக்கியமல்ல - திட்டங்கள் தான் முக்கியம் ஒன்றிய அரசுக்கு டி.ஆர். பாலு கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 12, 2023

அமித்ஷா பேச்சுக்கு பதிலடி தோற்றங்கள் முக்கியமல்ல - திட்டங்கள் தான் முக்கியம் ஒன்றிய அரசுக்கு டி.ஆர். பாலு கண்டனம்

சென்னை ஜூன் 12 வேலூர் பொதுக்கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே செய்யவில்லை என வெளிப்படையாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார் என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒன்றியத்தில் 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு என்ன செய்திருக்கிறீர்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வியெழுப்பியதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் ஆக்கப்பூர்வமாக பதில் சொல்ல முடியவல்லை. இதனால் கற்பனைக் கதையை உருவாக்கி, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு என்னவோ பல திட்டங்களை அள்ளி வீசியது போல கானல் நீர் தோற்றத்தை ஏற்படுத்த அமித்ஷா முயற்சி செய்துள்ளார். ஒன்றியத்தில்  காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக் குக் கூட்டணியில் திமுக இருந்த போது, தமிழ்நாட்டிற்கு சாதித்த திட்டங்களை முதலமைச்சர் ம.க.  ஸ்டாலின் அழகாக பட்டியலிட்டார். ஆனால், வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா அப்படி எந்த சிறப்புத் திட்டத்தையும் சுட்டிக்காட்ட முடியாமல் திணறிப் போனார். எனவே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனப் பேசி, "தமிழ்நாட்டுக்கு பாஜக ஆட்சியில் ஒரு சிறப்புத் திட்டமும் நிறைவேற்றவில்லை" என வெளிப்படையாக பேசி கைவிரித்துவிட்டார்.

 அமித் ஷா சுட்டிக்காட்டியுள்ள நிதி ஒதுக்கீடுகள், மானியங்கள் ஆகியவை ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். எந்த அரசு ஒன்றியத்தில் இருந்தாலும் இதை தடுக்க முடியாது. ஜிஎஸ்டி மூலம் தமிழ்நாட்டில் இருந்து அதிக வருவாய் ஒன்றிய அரசுக்கு கிடைத்த போது, தமிழ்நாட்டை அவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அந்த வருவாயை, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் தாராளமாக செலவழிப்பதுதான் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி.

தமிழ்நாட்டை ஒன்றிய அரசு எப்படி வஞ்சித்துள்ளது என்பதற்கு சில உதாரணங்களை கூற வேண்டியது அவசியம். ஒன்றிய வரிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஆணையம் பகிர்ந்தளிப்பது குறைக்கப்பட்டுள்ளது பாஜக தலைமையிலான ஆட்சியில்தான். ஒன்றிய வரி வருவாய்க்கு தமிழ்நாடு அளிப்பது 1.6 லட்சம் கோடி ரூபாய். ஆனால், அந்த வருவாயில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு கொடுப்பது வெறும் 41 ஆயிரம் கோடி ரூபாய். அதாவது, ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு 100 ரூபாய் கொடுத்தால் அது பதிலுக்கு 20 ரூபாயை அளிக்கிறது. தமிழ்நாட்டிற்கு கடந்த 9 ஆண்டுகளில் 2.47 லட்சம் கோடி ரூபாயை பிரதமர் அளித்ததாக கூறும் போது, அதே காலக்கட்டத்தில் உத்தரப்பிர தேசத்துக்கு 10 லட்சத்து 73 ஆயிரம் கோடியை அள்ளித் தந்ததை அமித் ஷா ஏன் மறைக்க வேண்டும்? தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களை ஹிந்தியமயமாக்கி, அங்கு தமிழ்நாட்டு இளைஞர்களே வேலைக்கு செல்ல முடியாத நிலையை உருவாக்கிய மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் தான் என்பதை அமித் ஷா மறுக்க முடியுமா? என டி.ஆர். பாலு கேள்வியெழுப்பியுள்ளார்.


No comments:

Post a Comment