விடுதலை 89ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நாளில் 'விடுதலை களஞ்சியம்' வெளியீட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 2, 2023

விடுதலை 89ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நாளில் 'விடுதலை களஞ்சியம்' வெளியீட்டு விழா

 சென்னை, ஜூன் 2 விடுதலை 89ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நாளில் 'விடுதலை களஞ்சியம்' வெளியீட்டு விழா சென்னைப் பெரியார் திடலில் கருத்தாளர்களின் சிந்தனைப் பூங்காவாக மலர்ந்து மணம் வீசியது. விடுதலை 89 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விடுதலை களஞ்சியம் தொகுதி (1) வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் 01.06. 2023 அன்று மாலை நடைபெற்றது. அறிவுக் களஞ்சியமாக, பண்பாட்டுக் களஞ்சியமாக விளங்கும் விடுதலை  களஞ்சியம் தொகுதி(1) வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் உரை ஆற்றினார்.

மூச்சுத் திணறிய நிலையில் எல்லாம் 

பிராண வாயுவாக பெரியார்!

நிகழ்வில் அறிமுக உரை ஆற்றிய துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் ; 

நீதிக்கட்சி திராவிடன் இதழை தொடங்கி அதனை நடத்த முடியாமல் தந்தை பெரியாரிடம் ஒப்படைத்ததை போல், விடுதலை நாளிதழையும் இரண்டு ஆண்டுகள் நடத்தி பின்பு அதனையும் தொடர முடியாமல் தந்தை பெரியாரிடம் ஒப்படைத்த வரலாற்றுகளை சுட்டிக்காட்டி, இப்படியாக மூச்சு திணறிய நேரங்களில் எல்லாம் பிராண வாயுவாக பெரியார் திகழ்ந்திருக்கிறார் என்றார். 

தொடர்ந்து, விடுதலை நாளிதழ் சந்தித்த நெருக்கடி களைப் பட்டியலிட்டார். குறிப்பாக 1962 ஆம் ஆண்டு நீங்கள் பொறுப்பேற்று கொண்டால் விடுதலை நாளிதழாக வரும், இல்லையென்றால் அதனை வார இதழாக நடத்தலாம் என முடிவு செய்து இருக்கிறேன் என்று தந்தை பெரியார் ஆசிரியர் அவர்களுக்கு அழைப்பு விடுத்ததை நினைவு கூர்ந்தார். 

அன்று பொறுப்பேற்ற ஆசிரியர் 89 ஆண்டு காலமாக விடுதலையை தொடர்ந்து நடத்துவது மட்டுமல்லாமல், 89 ஆண்டுகளாக இயங்கி வரும் ஒரு நாளிதழுக்கு 61 ஆண்டுகாலம் ஆசிரியராக இருந்த பெருமை தமிழர் தலைவரை மட்டும் தான் சாரும்; இந்த சிறப்பு உலகத்தில் வேறு எந்த தலைவருக்கும் இல்லை என்பதை எடுத்துரைத்தார். 

எமர்ஜென்சி நேரத்தில் தணிக்கை என்ற பெயரில் விடுதலை சந்தித்த இடர்பாடுகளை விளக்கி, அப்போது அன்னை மணியம்மையார் அவர்கள் எவ்வளவு துணிச்சலோடு அந்த நெருக்கடி நிலையை சந்தித்து, விடுதலையை தடையின்றி நடத்தினார் என்பதை வரலாற்று குறிப்புகளோடு எடுத்துரைத்தார்.  நெருப்பாற்றில் நீந்தி வந்த இந்த விடுதலைக்கு இன்றைக்கு 89 வயது என்பதை நினைவுகூர்ந்து, முதன் முதலில் இணையத்தில் வெளிவரப்பட்ட பத்திரிக்கையும் விடுதலை தான் என்ற சிறப்பையும் கூறினார். 

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் "நான் முதலில் படிக்கும் ஏடு விடுதலை தான்" என்று சொன்னதையும், விடுதலையில் வந்த பெட்டிச் செய்திகள் கூட எத்தகைய மாற்றங்களை இந்த சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் பல்வேறு வரலாற்று குறிப்புகளுடன் விளக்கினார். 

குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்ட மாவட்டத்திற்கு காஞ்சி சங்கராச்சாரியாரின் பெயர் சூட்டப் போகிறார்கள் என்ற செய்தி அறிந்து "விழுப்புரத்தை தலைமை இடமாகக் கொண்ட மாவட்டத்திற்கு காஞ்சி சங்கராச்சாரியாரின் பெயர் என்பது உண்மையா?" என்று வந்த பெட்டிச் செய்தியின் விளைவாக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியிலே அது எப்படி தடுத்து நிறுத்தப்பட்டது என்பதை எல்லாம் எடுத்துரைத்து, விடுதலை நாளிதழ் நூற்றாண்டு விழா காணும் அப்போதும் நம் ஆசிரியர் தான் விடுதலையின் ஆசிரியராக இருப்பார் என்று உணர்வுப்பூர்வமாக பதிவு செய்தார். 

தமிழர்களின் இல்லம் என்பதற்கு அடையாளம் விடுதலை தான் என்று அடிகளார் சொன்னது போல் விடுதலையை அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்ப்போம் விடுதலைக்காக அல்ல , மக்கள் விடுதலைக்காக என்றார்.

'விடுதலை' களஞ்சியம் வெளியீடு

விடுதலை களஞ்சியம் தொகுதி ஒன்றினை கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் வெளியிட, முதல் நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்கள் பெற்றுக் கொண்டார். ஏராளமான தோழர்கள் வரிசையாக மேடைக்கு வந்து நூலினைப் பெற்றுக் கொண்டனர்.

"தமிழர் தலைவர் நம்மோடு இருக்கிறார் என்பதே நமக்கு பாதுகாப்பு!" - எழுச்சித் தமிழர்

விடுதலை களஞ்சியம் முதல் தொகுதியை பெற்றுக்கொண்டு உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்கள் தனது உரையில்:  அறிவுப் பெட்டகமாக 1936 இல் தொடங்கி விடுதலையில் வெளிவந்த தலையங்கங்கள், துணைத் தலையங்கங்கள், கட்டுரைகள், செய்திகள், துணுக்குகள் அனைத்தையும் தொகுத்து இளம் தலைமுறையினருக்கு அருட்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொகுத்து வழங்கி இருக்கிறார் என்றார்.

மேலும்,  இந்த தொகுதியை முதலில் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை வழங்கியமைக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இது போன்ற பணிகளை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் மட்டும்தான் செய்ய முடியும் என்றும், அனைத்தையும் ஆவணப்படுத்துதல், தொலைநோக்கு பார்வையோடு அதனை அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வது என்பது ஆசிரியர் அவர்களது மகத்தான பணிகள் என்றார். 

இளையோர்களே வியக்கும் வண்ணம் துடிப்போடும், முனைப்போடும் ஆசிரியர் அவர்கள் எப்படி இந்த பணியை செய்ய முடிகிறது என்பதே நம்மை சிந்திக்க தூண்டுகிறது; ஊக்கத்தை, உந்துதலை தருகிறது என்றார். பகுத்தறிவுக் கருத்துகளை தாங்கிய இதழை நடத்துவது மிக கடினமான காரியம் என்றும், அதனை தொடர்ந்து நடத்தி வரும் ஆசிரியர் புதிய இளைய தலைமுறையினருக்கு பொறுப்புணர்வோடும், அவர்களை அறிவியல் மனப்பான்மையோடு வளர்த்தெடுக்கும் பணியாக இதை செய்திருக்கிறார் என்றார். 

பழமைவாதத்தில் மூழ்கி அதிலிருந்து வெளியே வராமல் ஏராளமானவர்கள் இருக்கையில், நவீனத்தை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எப்படி விடுதலை இதழை கொண்டு போய் சேர்க்கிறார் என்பதை விளக்கினார். இப்படி செய்வதென்பது மிகப்பெரிய பேராற்றல் என்றும், அத்தகைய பேராற்றலை தமிழர் தலைவர் அவர்களிடம் பார்க்கிறோம் என்றார். 

வரலாற்றில் பல திரிபுகளை, அவதூறுகளை, வதந்திகளை எதிர் தரப்பினர் பரப்பக்கூடிய சூழ்நிலையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நம்மோடு இருக்கிறார் என்பதே நமக்கு பாதுகாப்பு; மிகப்பெரிய நல்வாய்ப்பு என்றார். 

89 ஆண்டுகால விடுதலைக்கு 61 ஆண்டு ஆசிரியராக இருந்து உலக சாதனையை ஆசிரியர் படைத்திருக்கிறார் என்றும், இந்த சாதனைக்காகவே தனியாக ஆசிரியருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்.எப்படி இவரால் இப்படி இருக்க முடிகிறது என்று ஆய்வரங்கமே நடத்த வேண்டும் என்று வியந்து பாராட்டினார். 

சனாதனமும், பாசிசமும் எப்படி இந்தியாவை ஆட்டிப் படைக்கிறது என்பதை விளக்கி, அதற்கான நிகழ்கால சாட்சியமாக தான் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்பட்டார் என்பதை எடுத்துரைத்து, 888 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அமையும் என்றால் அது எவ்வளவு பெரிய ஜனநாயக விரோத போக்காக அமையும் என்பதை விளக்கினார். 

எங்கும் பெரியார் தேவைப்படுகிறார்

இந்திய அரசமைப்புச் சட்டம் எவ்வளவு முக்கியமானது என்றும், மக்களவை தலைவர்கள் முன் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையை நிச்சயம் வைக்க வேண்டும் என்றும், செங்கோல் வைக்க வேண்டிய இடத்தில் அரசமைப்புச் சட்ட முகவுரை இருக்க வேண்டும் என்றார். தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக தமிழர் தலைவரும், தளபதி அவர்களும், ஜனநாயக சக்திகளும் இருக்கிறார்கள். 

2024 ஆம் ஆண்டு தேர்தலில் பிஜேபியை வீழ்த்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் நாம் பாதுகாக்க வேண்டும் என்றால் பெரியார் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் தேவைப்படுகிறார் என்றார். இந்தியா முழுவதும் பரவ வேண்டிய கருத்து பெரியார் கருத்தாக இருக்கிறது என்பதை எடுத்துரைத்து, பிஜேபி கட்டியமைக்க நினைப்பது இந்து ராஷ்டிரமல்ல பிராமண ராஷ்டிரா (ஙிக்ஷீணீலீனீணீஸீணீ ஸிணீsலீtக்ஷீணீ) என்ற அரசியலை விளக்கி, தமிழர் தலைவர் அவர்கள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டக் களத்திலும் மூன்றாவது குழலாக விடுதலைச் சிறுத்தைகள் உடன் இருக்கும் என்று கூறி நிறைவு செய்தார்.

"அவரின் பழுதடையாத விரலுக்கு        

எப்போதும் வயது 16 தான்"

"விடுதலை களஞ்சியம்" தொகுதி ஒன்றை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள். அவரது உரையில் : 

ஒரு நாளில் தமிழ்நாட்டில் எத்தனைக் குழந்தைகள் பிறக்கும் என்பது எனக்கு தெரியாது, ஆனால் ஒரு நாளில் எத்தனை குழந்தைகள் பிறக்கிறதோ அத்தனை நூல்கள் இந்த மண்ணில் தோன்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார். 

"விடுதலை களஞ்சியம்" கையடக்க புத்தகமாக மட்டுமல்லாமல், கருத்தடக்கப் புத்தகமாக இருக்கிறது என்பதை அவருக்கே உரிய கவிதை நடையில் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் தன்னை இந்த களஞ்சியத்தை வெளியிட அழைத்ததை, தந்தை பெரியாரே தன்னை அழைத்தது போல் எண்ணி மகிழ்கிறேன் என்றார். 

இந்த புத்தகத்தை பார்த்ததும் பல நினைவுகள் தனக்கு வருவதாகவும், முழு நூலையும் படிக்கவில்லை என்றாலும் முன்னுரையை அவசியம் படிக்க வேண்டும் என்றார். காரணம், முன்னுரையை படிக்காமல் புத்தகத்தை படிப்பது என்பது 'குன்று முட்டிய குருவி போல் ஆகிவிடும்' என்றும் அதற்கு உதாரணமாக பெர்னாட்ஷாவின் முன்னுரைகளை எடுத்துரைத்தார். 

பெர்னாட்சாவின் அனைத்து நூல்களிலும் முன்னுரை இருக்கும். அவர் எழுதிய முன்னுரைகளை மட்டுமே தொகுத்து அதற்காக ஒரு நூல் வெளியீட்டு அந்த நூலுக்கு முன்னுரை எழுதினார் என்பதை பதிவு செய்தார். 

ஒரு ஆராய்ச்சி மாணவர் போல் இந்த நூலுக்கான முன்னுரையை ஆசிரியர் எழுதியிருக்கிறார் என்றும், உண்மையாக முனைவர் பட்டம் பெறுவது அவ்வளவு எளிதல்ல ஆனால் இன்றைய சூழலில் எப்படியெல்லாம் முனைவர் பட்டம் பெறுகிறார்கள் என்பதை விளக்கினார். அந்த வகையில் ஒரு பொறுப்பான ஆராய்ச்சி மாணவர் போல் ஆசிரியர் இந்த முன்னுரையை எழுதி இருப்பதை எண்ணி வியந்தார். 

நீதிக்கட்சியிடமிருந்து விடுதலை பெரியாரிடம் வந்தது தொடங்கி, பல்வேறு செய்திகளை சாறு போல் ஆசிரியர் பிழிந்து தந்திருக்கிறார் என்றும், பெரியாரின் வார்த்தைகள் அனைத்துமே தர்க்கத்துக்கு உட்பட்டவை என்றார். அதற்கு உதாரணமாக விடுதலை களஞ்சியம் தொகுதி ஒன்றில் இருக்கக்கூடிய செய்தியையே குறிப்பிடுகிறேன் என்று கூறி, நீதிக்கட்சி தோற்றபோது அய்யா எழுதிய செய்தியை வாசித்து விளக்கினார். தோற்றதும் ஒருவகையில் நல்லது என்று அய்யா பெரியார் அவர்கள் எழுதிய செய்தியை வாசித்து வியந்து , வெற்றி பெறுவதைவிட தோல்வி பெறுவது நல்லது போல என்ற தோல்வி பெற்றவரே எண்ணும் அளவிற்கு அவர் எழுதி இருப்பதை எடுத்துரைத்தார். அதேபோல் அய்யாவின் வார்த்தைகள் எவ்வளவு வலிமை வாய்ந்தவை என்பதற்கு பல்வேறு சான்றுகளை எடுத்துரைத்தார். 

அறிவின் பிம்பம் பெரியார்; அறிவின் வடிவம் பெரியார் என்றார். இந்தியாவின் அறிவு முகமாக திகழ்ந்தார் பெரியார் என்று ஒரு கவிஞர் எழுதியதை நினைவுகூர்ந்து, விடுதலைக்கு 50,000, 60,000 சந்தாக்கள் சேர்ந்ததையும், அதிலும் சலுகைகள் எதுவும் கொடுக்காமல் இவ்வளவு சந்தாக்கள் சேர்க்க முடிகிறது என்றால் அது தந்தை பெரியார் வழங்கிய அறிவுப் பாடசாலையின் பணி என்றார். 

புத்தகத்தை முதல் எழுபது பக்கங்கள் தன்னை கட்டிப் போட்டுவிட்டது என்றும், படிக்கப் படிக்க தந்தை பெரியார் வாழ்ந்த காலம், அவரது குடும்பம் எல்லாம் தனக்கு நினைவுக்கு வருவதாகவும், மகத்தான நினைவுகளை இந்த நூல் நினைவுபடுத்துகிறது என்றார். தொடர்ந்து, விடுதலை களஞ்சியம் வெளியீட்டு விழாவுக்காக அவர் எழுதிய 'நடிகவேள் மன்றம் நிரம்பப் பூக்கள்' என்ற கவிதையை வாழ்த்து செய்தியாய் பதிவு செய்தார்.   

கவிதையின் ஒவ்வொரு வரிகளும் அரங்கத்தினரை உற்சாகம் கொள்ள செய்தது. குறிப்பாக,

"அவரின் பழுதடையாத விரலுக்கு        

எப்போதும் வயது 16 தான்"  

போன்ற வரிகளைக் கேட்டபோது, அரங்கமே கைத்தட்டலில் நிறைந்திருந்தது.

"திராவிடப் பல்கலைக் கழகத்தின் நிரந்தரமான வேந்தர் ஆசிரியர்!" - ப. திருமாவேலன்

நிகழ்வில் எழுத்தாளர் திருமாவேலன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினார். அவரது உரையில்: திராவிட பல்கலைக்கழகத்தின் நிரந்தரமான வேந்தர் ஆசிரியர் என்று தொடங்கி, ஒரே ஒரு சாதனையை மட்டும் தான் ஆசிரியர் பாக்கி வைத்திருந்தார் அதுவும் இன்றைக்கு நிறைவேறி இருக்கிறது. அதுதான் விடுதலை களஞ்சியம் என்றார்.

தமிழர் தலைவர் ஆசிரியருடைய சாதனை என்பது பெரியாருக்கு பின் விடுதலையை விடாமல் நடத்தியது என்றார். மேலும்,  எனக்கு பின்னால் என் வாரிசு என் புத்தகங்கள் தான் என்றார் பெரியார். இன்று, பெரியாருக்கு பிறகு அதிக அளவில் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதிலும் பெரியாரின் புத்தகங்களை பதிப்பிக்காமல் பதிப்பகம் நடத்த முடியாது என்று நினைக்கக் கூடிய அளவில் பெரியாரை sமீறீறீவீஸீரீ ஜீஷீவீஸீt ஆக மாற்றியது ஆசிரியருடைய அடுத்த சாதனை என்றார். 

பெரியாருக்கு பிறகு திராவிடம் இருக்காது, இந்த இயக்கம் இருக்காது என்று நினைத்தபோது பெரியாரே பரவாயில்லை என்று எதிரிகளை சொல்ல வைத்ததும் ஆசிரியரின் சாதனை என்றார். ஒவ்வொரு செய்தியையும் தனித்தனியாக தொகுத்து பல்வேறு நூல்களை ஆசிரியர் வெளியிட்ட விதத்தை அடுக்கடுக்காக விளக்கி, ஆசிரியர் அவர்கள் பொதுச்செயலாளராக ஆனதிலிருந்து சாதனையை மட்டுமே செய்கிறார் என்றார். 

அதிலும் குறிப்பாக குடிஅரசு, பகுத்தறிவு போன்ற வார இதழ்களை தொகுப்பது என்பது கொஞ்சம் எளிமையான காரியம். ஆனால், விடுதலை போன்ற நாளிதழை தொகுத்திருக்கிறார் என்றால் இது யாரும் செய்ய முடியாத மகத்தான சாதனை என்றார். தமிழர், தமிழினம் பற்றிய செய்திகளை மட்டும்  விடுதலையில் திருப்பிப் பார்ப்பதற்கே தனக்கு அய்ந்து ஆண்டுகள் ஆனது என்றும் , ஆனால் இன்றைக்கு விடுதலை தொகுதியாக வருகிறது என்றால் அது மிகப் பெரிய சாதனையின் தொடக்கம் என்றார். நீதிக்கட்சியால் திராவிடன் நாளிதழ் தொடங்கப்பட்ட நாள் 01.06.1917,  ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடன் என்று சொல்லை பயன்படுத்துவது இன எதிரிகளை அச்சுறுத்தும் என்று நம் மூதாதையர்கள் எப்படி சிந்தித்தார்கள்  என்பதை விளக்கினார். 

திராவிடன் என்ற சொல்லை பெரியார் பயன்படுத்திய போது, திராவிடன் என்ற சொல்லைப் பார்த்தால் பார்ப்பனருக்கு எவ்வளவு எரிச்சல் வருகிறதோ, தமிழன் என்று சொல்லும் போதும் அவ்வளவு எரிச்சல் வருகின்ற வரை திராவிடன் என்ற சொல்லை தான் பயன்படுத்துவேன் என்று பெரியார் சொன்னதை நினைவு கூர்ந்தார். தமிழினத்தின் மானத்தைக் காக்க உருவாக்கப்பட்ட இந்த விடுதலை 89 ஆண்டுகள் நடந்திருக்கிறது. அதில் 61 ஆண்டுகாலம் ஆசிரியராக நம் மானமிகு ஆசிரியர் இருந்திருக்கிறார். 

இது இந்த இயக்கத்தின் வரலாற்றில் மட்டுமல்ல, இதழியல் வரலாற்றில், உலகளாவிய அளவில் அனைவரும் பாராட்டிப் போற்ற வேண்டிய காரியமாக அமையும் என்றார். 

ஆளுநர்பற்றி அப்பொழுதே!

இந்த தொகுதியில் முதல் செய்தியாக தனது கண்ணில் பட்டது குழந்தை திருமணங்களை பற்றியது என்றும், அது ஆளுநர் ரவி அவர்களை தனக்கு நினைவுபடுத்துவதாகவும், 1936 இல் சாரதா சட்டத்தின்படி குழந்தை திருமணங்களை பற்றி விடுதலையில் வந்திருக்கக்கூடிய செய்தியை வாசித்தார். அன்று இருந்த சனாதனத்தின் புத்தி 2023 ஆம் ஆண்டிலும் அப்படியே இருக்கிறது என்பதை விளக்கினார். எனவே இந்த நூலின் தேவை என்பது இன்னும் நூறு ஆண்டுகளுக்கு தேவை என்றார். 

தந்தை பெரியாரின் தொலைநோக்கு, அவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதை நமக்கு காட்டும் என்று கூறி, அய்யாவின் தொலைநோக்குக்கு அடுக்கடுக்காக சான்றினை வழங்கினார். குறிப்பாக 1927ல் பார்ப்பனர்களுக்கு விரோதமாக நீங்கள் பேசத் தொடங்கினால் உங்களை உயிரோடு விட்டு வைக்க மாட்டார்கள் என்று காந்தியிடம் பெரியார் சொன்னதும், 1947 இல் அதுவே நடந்ததையும் நினைவுப்படுத்தினார்.  

1945-இல் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார் ஆனால் அதற்கு முன்பாகவே விடுதலையில் ஹிட்லர் தற்கொலை தான் செய்து கொள்வார் என்று வந்த தலைப்பு செய்தியை நினைவு கூர்ந்தார். இப்படியாக தொடர்ந்து தந்தை பெரியார் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசியாக இருந்தார் என்ற தரிசனத்தை பெற விடுதலையின் ஒவ்வொரு தொகுதியும் வெளிவர வேண்டும் என்றும், மிகப்பெரிய போர்வாளாய் மட்டுமல்லாமல், கேடயத்தையும் சேர்த்து நமக்காக வழங்கி இருக்கக்கூடிய ஆசிரியருக்கு நன்றி என்று நிறைவு செய்தார்.

விடுதலையால் விடுதலை பெறுவோம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தி தொடர்புக் குழு தலைவரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் தனது வாழ்த்துரையில்:

1936-இல் விடுதலையில் வெளிவந்த செய்திகள் இன்றும் தொடர்கிறது என்பது வியப்பாக இருக்கிறது என்றும், இன்றும் எதிரிகளின் மோதல் போக்கு தொடர்கிறது ஆனால் ஒளிந்து மறைந்து எப்படி வருகிறார்கள் என்பதை விளக்கினார். 

அன்று எப்படி வேதத்தை தமிழர் மரபோடு இணைத்து பேசினார்களோ, இன்றும் அதுவே தொடர்கிறது என்றும், நம் பண்பாடு தமிழர் பண்பாடு. தமிழர் பண்பாடு என்பது வேறு, மனுதர்ம பண்பாடு என்பது வேறு என்றார். மனுதர்மம் மட்டும் இருந்திருந்தால் நாம் அதை எதிர்த்து நின்றிருப்போம். ஆனால் சதுர்வர்ணம் மயா சிருஸ்டம் என்று கடவுளே சொன்னார் என்று சொன்னபோது, அந்த கடவுளை எதிர்த்து நிற்க முடியாமல், இங்கே என்ன நடந்தது, அது எவ்வளவு பெரிய பாதுகாப்பின்மையை நமக்கு ஏற்படுத்தியது என்பதை விளக்கினார். 

கடவுளின் பெயரால் நடக்கும் அனைத்து ஏமாற்றங்களிலிருந்தும் விடுதலை பெற இந்த 'விடுதலை' தேவை என்றார். அரசமைப்புச் சட்டம் பிரிவு 25 மதத்தை பின்பற்றுவது அடிப்படை உரிமை என்று சொல்கிறது. ஆனால் அதற்கு முன்பு மனசாட்சிப்படி நடக்கும் உரிமையும் இருக்கிறது. அதனுடைய அர்த்தம் என்பது கடவுளை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் உரிமையும் அரசியல் சட்டத்தில் இருக்கிறது. மதம் அடிப்படை உரிமையோ, மனசாட்சி உரிமையோ எதிலும் அரசு தலையிட முடியாது என்கிறது. ஆனால் இன்றைக்கு இருக்கும் ஒன்றிய அரசு எப்படி அனைத்து நிலையிலும் இந்த உரிமைகளில் தலையிடுகிறது என்பதை எடுத்துரைத்தார். 

இத்தகைய அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கு, 'விடுதலை'யால் விடுதலை பெறுவோம் என்றார். தொடர்ந்து, செங்கோல் மன்னர் ஆட்சியின் வடிவம் என்றும் அன்றைக்கு நீதிபதி, நிர்வாகி, சட்டம் அனைத்தும் மன்னனாக இருந்தார். அவர் தவறு செய்தால் செங்கோல் வளைந்து விடும் என்றார்கள். ஆனால் இன்றைக்கு ஒரு ஜனநாயக நாட்டில் செங்கோலின் தேவை எங்கிருந்து வருகிறது என்று கேள்வி எழுப்பினார். ஏதாவது சட்டத்தை தவறாக கொண்டு வந்தால் பிரதமர் மோடி பாண்டிய மன்னனை போல் உயிர் துறப்பாரா? என்று நியாயபூர்வமான கேள்வியை எழுப்பினார். 

குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்பட்டது மிகப்பெரிய நோக்கத்துடன் நடந்தது என்றும் , அந்த நோக்கம் தவறானது என்றார். முதல் தொகுதி வந்துவிட்டது, இன்னும் பல தொகுதிகள் வர வேண்டும் என்றும், அதனை நாம் படிக்க தயாராக வேண்டும் என்றார். அதனை படித்து, இன்று நாம் சிக்கித் தவிக்கும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவோம் என்றும், இந்த பெரிய முயற்சி எடுத்த ஆசிரியருக்கு நன்றி கூறி நிறைவு செய்தார்.

விடுதலை என்பது வெறும் காகிதம் அல்ல ; நமக்கான ஆயுதம், பேராயுதம்!

வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்விற்கு தலைமை ஏற்று உரை நிகழ்த்திய கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் : மேடையில் பேசிய அனைவரும் தன்னை பாராட்டினார்கள் என்றால் அது தனி மனிதனாக தனக்கு மட்டும் வர வேண்டிய பாராட்டு இல்லை என்று, விடுதலையில் பணி செய்யக்கூடிய அனைத்துப் பணி தோழர்களுக்கும் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்து, பல்வேறு செய்திகளை விடுதலை களஞ்சியம் தொகுதி ஒன்றிலிருந்து குறிப்பிட்டு, இன்றைய இளைஞர்களுக்கு தேவையான செய்திகளை அடுக்கடுக்காக பதிவு செய்து, "விடுதலை என்பது வெறும் காகிதம் அல்ல ; நமக்கான ஆயுதம், பேராயுதம்" என்றார். 

இன்று இன்னும் விடுதலையின் தேவை அதிகமாக இருக்கிறது அதனை இல்லந்தோறும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற உணர்வை கழகத் தோழர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் உரை நிகழ்த்தினார். 

(தமிழர் தலைவரின் ஆசிரியர் அவர்களின்  முழு உரை முதல் பக்கம்)

இறுதியாக நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் வடசென்னை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மரகதமணி  நன்றி கூறினார்.

‘விடுதலை களஞ்சியம்’ முதல் தொகுதி வெளியீட்டு விழா

‘விடுதலை’ 89ஆம் ஆண்டு தொடக்க விழா

  ‘விடுதலை’ களஞ்சியம் முதல் தொகுதி வெளியீட்டு விழா மற்றும் விடுதலை 89ஆம் ஆண்டு தொடக்க விழா நேற்று (1.6.2023) மாலை 6 மணிக்கு சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில்  பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன் விடுதலை களஞ்சியம் முதல் தொகுதியை வெளியிட்டும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன்  நூலைப் பெற்றுக்கொண்டும் சிறப்புரை ஆற்றினார்கள். ஏராளமானவர்கள் வரிசையில் சென்று புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர்.

எழுத்தாளர் ப. திருமாவேலன் ஆய்வுரை வழங்கினார்.

விழாவில் திமுக செய்தி தொடர்புக்குழுத் தலைவர் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்று வாழ்த்துரை ஆற்றினார்.

நிறைவாக விழாத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வரவேற்புரை இணைப்புரை வழங்கினார்.

வட சென்னை மாவட்ட திராவிட மகளிர் பாசறை  த.மரகதமணி நன்றி கூறினார்.

விடுதலை களஞ்சியம் முதல் தொகுதி நூலின் நன்கொடை மதிப்பு ரூ.500. விழாவையொட்டி ரூ.400க்கு வழங்கப்பட்டது. மேலும் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கத்தையொட்டி, விடுதலை களஞ்சியம் முதல் தொகுதி இம்மாதம் முழுவதும் சலுகை விலையில் ரூ.400க்கு வழங்கப்படுகிறது.

வெளியீட்டு விழாவில் உரிய நன்கொடை அளித்து புத்தகங்களைப் பெற்றுக்கொண்டவர்கள்

வழக்குரைஞர் சு.குமாரதேவன் 25 புத்தகங்களை பெற்றுக்கொண்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு, மேனாள் நீதிபதி பரஞ்சோதி,  இதழாளர் விஜயசங்கர், வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், பொருளாளர் வீ.குமரேசன், துணைப்பொதுச்செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, சே.மெ.மதிவதனி, தலைமைக்கழக அமைப்பாளரகள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் வேண்மாள் நன்னன், விழிகள் பதிப்பகம் வேணுகோபால், சி.வெற்றிசெல்வி, கொடுங்கையூர் தங்க.தனலட்சுமி, தாம்பரம் கோ.நாத்திகன், சைதை மு.ந.மதியழகன், மயிலாடுதுறை  கி.தளபதிராஜ், தென்சென்னை பகுத்தறிவாளர் கழகம் மு.இரா.மாணிக்கம், பழ.சேரலாதன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், விழுப்புரம் ச.பழனிவேல், மாணவர் கழக மாநில துணை செயலாளர் செ.பெ.தொண்டறம், அமுதரசன், வழக்குரைஞர் சண்முகப்பிரியன், தாம்பரம் சீ.இலட்சுமிபதி, ஆவடி தமிழ்மணி, அரும்பாக்கம் சா.தாமோதரன், கு.சோமசுந்தரம், அயனாவரம் துரைராஜ், த.மரகதமணி, வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புசெல்வன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் வரிசையில் சென்று புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர். 

விழாவில், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், புலவர் பா.வீரமணி, சந்திரசேகரன், புதுமை இலக்கிய தென்றல் தலைவர் மீனாட்சி சுந்தரம். திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள், பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள்  உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

தொகுப்பு: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி



No comments:

Post a Comment