ஜூன் 27இல் சென்னை சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் "90இல் 80" - அவர்தான் வீரமணி! வாழ்த்து அரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 26, 2023

ஜூன் 27இல் சென்னை சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் "90இல் 80" - அவர்தான் வீரமணி! வாழ்த்து அரங்கம்

சென்னை, ஜூன் 26 - "90இல் 80" - "அவர்தான் வீரமணி!" எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் சென்னை தியாகராய நகர் கோபதி நாராயணா சாலையில் அமைந்துள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில்  நாளை (27.6.2023 செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.

தமிழர் தலைவர், தந்தைபெரியார் கொள்கை களை செயல்படுத்தி, அவர்தம்பணியை முடித்திட உறுதியேற்று அயராது பாடுபட்டு, இயக்கத்தை வழிநடத்தி வருகிறார். உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழான  89 ஆண்டு கால 'விடுதலை' நாளித ழின் 60 ஆண்டு காலம் ஆசிரியர் பொறுப்பேற்று சாதனைச் சரித்திரத்தை தொடர்ந்து கொண்டி ருக்கிறார். 

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுதலை இதழின் ஆசிரியராக பொறுப்பேற்று 60 ஆண்டுகள் ஆனதையொட்டி, கட்சிகள் பேதமின்றி, தமிழர் அனைவரும் ஜாதி, மதத்தைக் கடந்து ஒத்துழைப்பு வழங்கி, ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவிக் கும் விழாவாக 60ஆயிரம் விடுதலை சந்தாக்கள் வழங்கும் விழாவை  கழக செயல்மறவர்கள் எழுச்சி யுடன் நடத்தி சிறப்புறக் கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமுதாயத்தைப் பீடித்துள்ள மூடநம்பிக்கைகள், கடவுள், மதங்களின் பெயரால் ஜாதி ஏற்றத் தாழ்வுகளைக் களைந்திட, சாஸ்திரங்கள், சடங் குகள், புராணங்கள் பெயரால் மக்களிடையே திணிக்கப்பட்ட கற்பனைகளைத் தோலுரித்து, அறியாமையை அகற்றி அறிவுலகை அமைத்திட தந்தை பெரியார் கொள்கைகளை, பகுத்தறிவுக் கொள்கைகளை 10 வயதில் தொடங்கி ஊர்தோறும், மேடைதோறும் பரப்புரை மேற்கொண்டு சமுதாயத் தில் மாற்றங்களுக்கு வித்திட்டுவருபவர் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் 

கி.வீரமணி அவர்கள் ஆவார். எப் போதும் தன்னு டைய உரைக்கான ஆதாரங்களை எடுத்துக்காட்டி பேசுபவர் என்கிற அடையாளம் ஆசிரியருக்கே உரியது.

தந்தைபெரியார், அன்னை மணியம்மையாருக் குப்பின் இயக்கத்தைக் கட்டிக்காத்து ஒப்பற்ற தலைமை என்பதைப் பறைசாற்றி வருபவர், 60 ஆண்டு கால பத்திரிகை ஆசிரியர் பணி, ஆய்வு ரைகள், எழுத்தாக்கங்கள்-புத்தகங்கள் வெளியீடு என பன்முக ஆற்றல்கொண்ட நிகரற்ற அறிஞர் பெருந்தகையாக தமிழர் வாழ்வு தழைத்திட 52 முறை சிறை வாசம் பெற்று தொண்டாற்றி வருபவர் ஆசிரியர் ஆவார்.

90 வயதிலும் ஓய்வின்றி, சலிப்பின்றி காலநேரம் பாராமல் தொண்டாற்றி வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமல் லாமல், நாடுமுழுமைக்கும் சமூக நீதிக் கொடியை பட்டொளிவீசிப் பறக்கச்செய்திட அடித்தளம் அமைத்து வருகிறார். 

மதச் சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், மனித நேயத்தைக் காப்பாற்றிட அயராது பாடுபட்டு, அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் உற்ற தோழராய், வழிகாட்டியாய் செயலாற்றி வருகிறார் என்றால் மிகையாகாது. 

வெறுப்புகளை, தூற்றுதல்களை பல நேரங்களில் எதிர்கொண்டவர், ஜாதி, மத வெறிக் கூலிகளால் உயிருக்கே குறிவைக்கப்பட்டவர். ஆனாலும், தன்னுயிர் பற்றி கிஞ்சித்தும் பொருட் படுத்தாமல் தந்தைபெரியார் இலட்சியங்களை, கொள்கை களைப் பரப்புவதையே தம்முடைய இலக்காகக் கொண்டு செயலாற்றி வருகிறார். 

பெரியார் பன்னாட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை உருவாக்கி பன்னாட் டளவில் தந்தைபெரியார் கொள்கைகளை முன் னெடுத்துச் செல்கிறார்.

விடுதலை நாளிதழ், உண்மை மாதமிருமுறை, தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆங்கில மாத இதழ், பெரியார் பிஞ்சு சிறுவர் மாத இதழ், தமிழ், ஆங்கிலம் இரு மொழியில் காலாண்டு ஆய் விதழாக திராவிடப்பொழில் ஏடுகளைக் கரோனா காலம் உள்ளிட்ட எந்தத் தடைகளையும் பொருட் படுத்தாமல் இடைநிறுத்தம் செய்யாமல் தொடர்ந்து நடத்தி வரும் பாங்கு பத்திரிகை உலகில் முன் னோடியாகப் பறைசாற்றும். 

இணையத்தில் முதலில் 'விடுதலை' நாளித ழைக் கொண்டு வந்ததுடன், இன்றளவும் எவ்வித கட்டணமுமின்றி இணையவழியில் விடுதலையை படிக்க முடிகிறது என்றால், ஆசிரியர் அவர்களின் வழிநடத்தலேயாகும்.

அண்மைக்காலமாக ஒன்றிய பாஜக அரசு அமைந்து அரசமைப்பு சட்டத்துக்கே அறைகூவல் விடுகின்ற ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களின் சித்து விளையாட்டுகளை அவ்வப்போது அம்பலப் படுத்தி மக்களுக்கு எச்சரிக்கைமணி அடித்து வருகிறார். போராட்டக் களங்களில் முன்னிற்பவர். பாராட்டு, புகழுரைகளுக்கு மயங்காதவர். நெருக்கடி காலத்தை சந்தித்து அடக்குமுறைக்கும், தொல்லை களுக்கும் உள்ளாக்கப்பட்டவர். கொள்கை ரீதியான எதிர்ப்பு வரும் போது வீறு கொண்டு எழுவார். அடக்குமுறைக்கு அஞ்சாதவர். ஆட் சியில் யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதுபற்றி கவலை கொள்ளாமல் கொள்கையைச் செயலாக்கம் கொண்டுவருவதில் முனைப்பு காட்டிவருபவர். 

இடஒதுக்கீடு, சமூகநீதி, மதச்சார்பின்மை, சமத்துவ நிலைகளுக்கு அறைகூவல் விடப்படு கின்ற போதெல்லாம் முதல் குரலாய் ஒலிப்பது ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் குரல்தான்.  

90 வயதில் 80 ஆண்டு கால பொதுவாழ்வு என்ற உலகச் சாதனைக்குரிய ஒருவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மட்டுமே! 

27.6.1943ஆம் ஆண்டு கடலூர் செட்டிக் கோவில் மைதானத்தில் நடைபெற்ற திராவிட நாடு நிதியளிப்புக் கூட்டத்தில், அறிஞர் அண்ணாவின் மேடையில் இவரது முதல்  மேடைப் பேச்சு அமைந்தது. அன்று தொடங்கி 80 ஆண்டுகள் நிறைவு பெறும் 27.6.2023 அன்று "90இல் 80" என்னும் இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை ஏற்று உரையாற்றுகிறார்.

கழகப் பொருளாளர் வீ.குமரேசன் வரவேற்புரை ஆற்றுகிறார்.

திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், திமுக மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான எழுச்சித் தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி ஆகியோர் வாழ்த்துரை ஆற்று கின்றனர்.

நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரை ஆற்றுகிறார். தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூறுகிறார்.

No comments:

Post a Comment