ஒடிசா ரயில் விபத்து : 137 தமிழ்நாட்டு பயணிகள் சென்னை திரும்பினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 5, 2023

ஒடிசா ரயில் விபத்து : 137 தமிழ்நாட்டு பயணிகள் சென்னை திரும்பினர்

சென்னை, ஜூன் 5 ரயில்வே முன்பதிவு பட்டியல் மூலமாக ஆய்வு செய்ததில் கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த தமிழ்நாடு பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பது தெரிய வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. ஒடிசா ரயில் விபத்து மீட்புப் பணிகள் குறித்த விவரங்களை பெறுவதற்காகவும், பயணிகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாகவும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு முழுவீச்சில் சென்னை எழிலகத்தில் மாநில அவசர கால செயல்பாட்டு மய்யத்தில் செயல் பட்டு வருகிறது.

இந்த நிலையில் மய்யத்தின் செயல் பாடுகளை கண்காணித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:- ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளின் பட்டியல் தெற்கு ரயில்வே மூலம் பெறப்பட்டு உள்ளது. அதில் தமிழ்ப் பெயர் கொண்டவர்களையும், தமிழ்நாடு முகவரி அளித்துள்ள 127 பயணிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. அவர்களை தொடர்பு கொண்டதில் 119 பேர் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.

எஞ்சிய 8 பேரின் செல்போன் மற்றும் முகவரி இல்லாத நிலையில் அவர்களை தொடர்பு கொள்ள இய லாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரி ழந்த நபர்களது விவரங்கள் ஒடிசாவில் இதுவரை சேகரிக்கப்பட்டது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் உயிரி ழக்கவில்லை என்பது தெரியவருகிறது. விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவரும் நபர்களது விவரங்களை பரிசீலனை செய்ததில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்தநிலையில், இதுவரை சேகரிக்கப்பட்ட விவரத்தின் அடிப்படையில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் உள்ள நாரகணி கோபி (வயது 34), கார்த்திக் (19). ரகுநாத் (21), மீனா (66). எ. ஜெகதீசன் (47). கமல் (26). கல்பனா (19). அருண் (21) ஆகிய 8 பேரின் உறவினர்கள், நண்பர்கள் இவர்கள் குறித்த தகவல் அறிந்திருந்தால் மாநில அவசரகால செயல்பாட்டு மய்யத்திற்கு கட்டணமில்லா தொலை பேசி எண் 1070, செல்பேசி 94458-69843 தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள்

இதற்கிடையே எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மய்யத்திற்கு நேற்று (4.6.2023) மாலை கோவையை சேர்ந்த நாரகணிகோபி மற்றும் சென்னையைச் சேர்ந்த எ.ஜெகதீசன் ஆகியோரின் குடும்பத்தினர் தொடர்பு கொண்டு இவர்கள் பத்திரமாக வீடு திரும்பிய தகவலை தெரிவித்து உள்ளனர். அதேபோல் கமல் என்ற பயணி பயணமே செய்ய வில்லை என்று சக பயணிகள் தெரிவித்து உள்ளனர்.

அதன்படி மீதம் உள்ள கார்த்திக், ரகுநாத், மீனா, கல்பனா, அருண் ஆகிய 5 பேரை மட்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களுடைய குடும்பத்தினரும் விரைவில் தொடர்பு கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.. இதனைத்தொடர்ந்து நேற்று (4.6.2023) இரவு மீதம் உள்ள கார்த்திக், ரகுநாத், மீனா, கல்பனா, அருண் ஆகிய 5 பேரும் பத்திரமாக இருப்பதாக தகவல் வந்து உள்ளது. அதன் அடிப்படையில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எவரும் இறக்கவில்லை, அனைவரும் பத்திரமாக இருப்பதாக மாநில அவசர கட்டுப்பாட்டு மய்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment