'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 19, 2023

'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை, மே 19  நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட் டத்தை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் நேற்று (18.5.2023)  தொடங்கி வைத் தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 

'நீட்' தேர்வு எழுதி மன அழுத்தம் ஏற்பட்ட மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்கும் முயற்சி 2020-2021-இல் தொடங்கப்பட்டது. சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் ஆலோசனை மய்யம் அமைக்கப்பட்டு, நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்களை தவிர்ப்பதற்கான ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு 1 லட்சத்து 47 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இந்த பணி நடைபெறும். அத்துடன் பிளஸ்-2 எழுதி தேர்ச்சி பெறாத 46,932 மாணவ, மாணவிகளுக்கும் மனநல ஆலோச னைகள் வழங்கப்படுகிறது. 

'நீட்' தேர்விலிருந்து விலக்கு பெற தொடர் முயற்சி

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான தொடர் முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. நீட் தேர்வில் விலக்கு கிடைக்காது என யாரும் கருத வேண்டும். கடந்த மார்ச் 27-ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்து நீட் தேர்வு விலக்கு தொடர்பாக கேள்விஅடங்கிய குறிப்பாணை வந்தது. அந்தகேள்விகளுக்கு கடந்த 10-ஆம் தேதி சட்டத்துறை மூலம் பதில் அளிக்கப்பட்டு, உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கான முயற்சி இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது. 4 முறை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக ஆட்சேபனைகள் வரப்பெற்று, அதற்கான பதில்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்கியதுபோல, நீட் தேர்வுக்கும் விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. விலக்கு பெறும் வரை நீட் தேர்வு நடக்கத்தான் செய்யும். அதற்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment