மணிப்பூர் - 'இரட்டை என்ஜின்' ஆட்சியில் பற்றி எரிகிறது! தமிழ்நாட்டின் சிறந்த ஆட்சிபற்றி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே பாராட்டியுள்ளாரே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 9, 2023

மணிப்பூர் - 'இரட்டை என்ஜின்' ஆட்சியில் பற்றி எரிகிறது! தமிழ்நாட்டின் சிறந்த ஆட்சிபற்றி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே பாராட்டியுள்ளாரே!

காமாலைக் கண்ணனாக ஆளுநர் ரவி தமிழ்நாட்டைப் பார்க்கவேண்டாம்!

40 ஆயிரம் பெண்கள் காணவில்லை என்பது 'குஜராத் மாடல்'தானே!

மணிப்பூர் - 'இரட்டை என்ஜின்' ஆட்சியில் பற்றி எரிகிறது! தமிழ்நாட்டின் சிறந்த ஆட்சிபற்றி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே பாராட்டியுள்ளாரே! காமாலைக் கண்ணனாக ஆளுநர் ரவி தமிழ் நாட்டைப் பார்க்கவேண்டாம்; 40 ஆயிரம் பெண்கள் காணவில்லை என்பது 'குஜராத் மாடல்' தானே என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

போலி வீடியோ வெளியிட்டு தமிழ்நாடு அரசின்மீது அவதூறு பரப்பிய, பீகாரைச் சேர்ந்த ‘யூடிபர்' மணிஷ் காஷ்யப் என்பவரை கைது செய்து தமிழ்நாடு அரசும், பீகார் அரசும் வழக்கும் போட்டுள்ளன.

தமிழ்நாட்டின் சிறப்பு நிலை குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பாராட்டு!

தமிழ்நாட்டில் பீகார் உள்ளிட்ட வடமாநிலத் தொழி லாளர்கள் தாக்கப்படுவதாக அந்தப் போலி வீடியோ ஆதாரமற்ற விஷமப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடவே அவரால் தயாரிக்கப்பட்டு பரப்பப்பட்டது. (இவர் எந்தக் கட்சி உணர்வாளர்? யாருடைய பின்னணி இதில் உள்ளது? என்பது வெளிப்படையாகவே எவருக்கும் புரியும்).

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அவர்மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதனை எதிர்த்து இந்த நபர் நேரிடையாக உச்சநீதி மன்றத்திலேயே தன்னை விடுவிக்க வேண்டுமென்று வழக்குத் தொடர்ந்து, அவ்வழக்கை தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்துத் தள்ளுபடி செய்தது. மேலும் நீதிபதிகள் ‘‘அவர் உயர்நீதிமன்றத்தை அணுகாமல் ஏன் நேரடியாக உச்சநீதிமன்றத்திற்கு வருகிறார்'' என்று கேட்டதோடு, ‘‘தமிழ்நாடு எப்படிப்பட்ட மாநிலமாகத் திகழ்ந்து வரு கிறது; அமைதியான, நிலையான ஆட்சி நடக்கும் மாநிலத்தில் எதை வேண்டுமானாலும் பரப்பி அமைதியற்ற சூழலை உருவாக்குவதா? இவற்றையெல் லாம் காது கொடுத்துக் கேட்க முடியாது'' என்று ஓங்கி அடித்துக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

காமாலைக் கண்ணோடு ஆளுநர் ரவி அணுகுவதா?

தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருக்கிறது என் பதை உச்சநீதிமன்றம் ஓங்கிய குரலில் முழங்கியுள்ளது.

ஆனால், இங்குள்ள காமாலைக் கண்ணனாகிய ஆர்.என்.ரவி என்ற ஆளுநர் பொறுப்பில் மக்கள் வரிப் பணத்திலிருந்து சம்பளம் வாங்கி பணியாற்றிடும் ஒருவர், அனுதினமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைப் பரப்புச் செயலாளர்போல் பணிபுரிந்து, சனாதனப் பிரச்சாரம், தி.மு.க. ஆட்சிமீது வெறுப்புமிழ் விதண்டா வாதங்களை வைத்து, பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி, ‘‘தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இல்லை; அமளிக் காடாகி உள்ளது; சட்டம் - ஒழுங்கு  சீர்கெட்டுள்ளது'' என்ற ஒரு கற்பனைச் சித்திரத்தை நித்தம் நித்தம் நீரில் வரைந்து காட்டுகிறார்!

இப்போது இந்த ஆளுநர் தன்முகத்தை எங்கே கொண்டு வைப்பாரோ?

தி.மு.க. ஆட்சியாளரின் எல்லை மீறும் பொறுமை யையும், பொறுப்பையும் நாளும் சோதித்து வருகிறார்!

பா.ஜ.க. ஆண்ட கருநாடக மாநிலத்தில் சில வாரங் களுக்குமுன் நடந்த கலவரங்கள் அவரது கண்ணில் படவில்லையா?

நாகாலந்து மாநிலத்தில் ஆளுநர் பதவி வகித்து ஏன் அவர் பிரிவு உபச்சாரம்கூட இன்றி விடைபெற்றுள்ளார்? வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் திடீரென எரிமலை வெடித்துப் பற்றி எரிவதுபோல் எரிந்து, எப்படியெல்லாம் பல்லுயிர் பலிகளும், இடம் பெயர்தலும் ஏற்பட்டுள்ளனவே!

மணிப்பூர் பற்றி எரிகிறதே!

‘‘மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரங்களினால் 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் 600-க்கும் அதிகமானவர்கள் அண்டை மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளார்கள்.

பலர் வெளியேறி, தங்கள் உயிர் காக்கத் துடிக்கிறார் கள். இதில் தமிழ்நாட்டவரும் உண்டு. மணிப்பூர் கலவரத்தில் 54 பேர் வரை கொலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தகவல்! இம்பால் போன்ற நகரங்களில் தீ வைக்கப்பட்ட கடைகள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள்பற்றிய கணக்கெடுப்பும் நடந்துள்ளது!

‘‘மணிப்பூரில் வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளில் 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு, பாதுகாப்பு மய்யங்களுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.

குக்கி போர் நினைவுச் சின்னம்  எரிக்கப்பட்டது; பதவியிலிருந்த டி.ஜி.பி.யை நீக்கி (அவர் சமூகத்தவர்) வேறு காவல்துறை டி.ஜி.பி. பொறுப்பு மாற்றப்பட்டுள்ளார்.

3,200 மத்திய ரிசர்வ் படையினர் மற்றும் இராணு வத்தின் விமானப் படையினர் அங்கு முகாமிட்டு அமைதி திரும்பிட அல்லற்பட்டு உழைக்கின்றனர்!

வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் வன்முறை யாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்!''

''டபுள் என்ஜின்'' ஆட்சி என்பது இதுதானா?

தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே, இது உங்களது ‘நெற்றிக் கண்'ணுக்குப் புலப்படவில்லையா?

பூங்காவின் மெல்லியப் பூங்காற்றைப் புயல் என்று புரட்டுரைக்கின்றீர்களே, உங்களைப் போன்றவர்களுக் கும் உரைக்கும் வகையில்தான் உச்சநீதிமன்றத்தின் கருத்துரைகள் பளிச்சிடுகின்றன!

அதுமட்டுமா?

மணிப்பூர் ‘டபுள் என்ஜின்' ஆட்சி! 

பிரதமரும், உள்துறை அமைச்சரும் அடிக்கடி கூறும் ‘டபுள் எஞ்ஜின்' ஆட்சியில்தானே இப்படிப்பட்ட வரலாறு காணாத வன்முறை வெறியாட்டம்; சட்டம் - ஒழுங்கு சமாதியை நோக்கிச் செல்லும் விரும்பத்தகாத விசித்திரம்!

40 ஆயிரம் பெண்களைக் காணவில்லையே - இதுதான் குஜராத் மாடலா?

‘சப்கா சாத்; சப்கா விகாஸ், சப்கா விசுவாஸ்' முழக்க மிட்டு வரும் குஜராத் மாடல் ஆட்சியும் ‘டபுள் என்ஜின்' ஆட்சிதானே!

அந்த குஜராத் பற்றிய அதிர்ச்சித் தகவல் ஒன்று வந்துள்ளதே, அதற்கென்ன பதில்?

‘‘41,621 ஆயிரம் பெண்களைக் காணவில்லை'' எங்கே? குஜராத்தில், பிரதமர், உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலத்தில்.

குஜராத்தில்,

2016 ஆம் ஆண்டில் 7,105 பேர்

2017 ஆம் ஆண்டில் 7,712 பேர்

2018 ஆம் ஆண்டில் 9,246 பேர்

2019 ஆம் ஆண்டில் 9,268

2020 ஆம் ஆண்டில் 8,290 பேர்

காணாமற்போய் ‘நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்' இணைய தளம் குறிப்பிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவையில் மாநில அரசு வெளியிட்ட அறிக்கைபடி, அகமதாபாத் மற்றும் வதோதராவில் ஓராண்டில் (2019-2020 இல்) 4,722 பெண்கள் காணாமற்போனார்கள் என்று கூறுகிறது!

இதுபற்றி போட்டி அரசு நடத்தி, பொல்லாங்கிழைக்க முனையும்  தமிழ்நாட்டு ஆளுநரே, அரை வேக்காட்டு அண்ணாமலைகளே ‘மூச்'சு விட்டிருக்கிறீர்களா?

கொடுத்த வேலையை ஒழுங்காகப் பார்க்கட்டும் ஆளுநர் ரவி?

தமிழ்நாடுதான் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வட நாட்டுப் பெண்ணே கூறியது மறந்து போயிற்றா, மறந்தார்களா?

இனியாவது கொடுத்த வேலையை ஒழுங்குடன் செய்ய ஆளுநர் போன்றோர் முன்வரட்டும்!!

பொய்யுரைகளைப் பரப்பிடும் பொறுப்பற்ற வேலைகளில் ஈடுபடக் கூடாது!


தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

9.5.2023

No comments:

Post a Comment