“இது மக்களவைத் தேர்தலுக்கான படிக்கல்" சித்தராமையா பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 14, 2023

“இது மக்களவைத் தேர்தலுக்கான படிக்கல்" சித்தராமையா பேட்டி

பெங்களூரு, மே 14- "கருநாடக மாநிலத் தேர்தல் முடிவு என்பது பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான மக்களின் ஆணை என்றும், இந்த வெற்றி அடுத்தாண்டு மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய ஊக்கமளிக்கும்" என்றும் கருநாடக மாநில மேனாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கருநாடக மாநில எதிர்க்கட்சி தலைவரும், மேனாள் முதலமைச்சருமான சித்தராமையா செய்தியளர்களிடம்  கூறும்போது, "இது நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஜெ.பி. நட்டாவுக்கான மக்களின் ஆணை. ஆபரேஷன் கமலாவுக்காக மிக அதிகமான அளவு பணத்தை செலவளித்தனர். ஆனால் அவர்களால் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை. மாநிலத்தின் மதச்சார்பற்றத் தன்மைக்கு பாஜகவால் அச்சுறுத்தல் இருந்தது. மாநிலத்தில் வெறுப்பு அரசியல் இருந்தது. கருநாடகா அதனைப் பொறுத்துக்கொள்ளவில்லை.

 இது மிகப்பெரிய வெற்றி. பாஜக ஆட்சியால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். பாஜகவினர் எப்படி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார்கள் என்பதை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.

இந்த தேர்தல் முடிவு என்பது அடுத்த ஆண்டு நடக்க இருக்கிற மக்களவைத் தேர்தலுக்கான படிக்கல். பாஜக அல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவைத் தோற்கடிப்பதை நான் பார்ப்பேன் என்று நம்புகிறேன். மத்தியில் மதச்சார்பற்ற ஜனநாயகமான அரசு அமையவேண்டிய தேவை இருக்கிறது.

ராகுல்காந்தியின் நடைப் பயணம் (இந்திய ஒற்றுமை யாத்திரை) மிகவும் உதவியாக இருந்தது. அவர் பெரும்பாலான மாவட்டங்களுக்குச் சென்று முக்கியமான பிரச்சினைகளை எடுத்துக் கூறினார். நான், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்க்கே ஆகியோருக்கு அவர் களின் தீவிரமான பிரச்சாரத்திற்காக நன்றி 

தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

இதற்கிடையில் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் கூறுகையில்,"கருநாடகாவை மீட்டெடுப்போம் என்று நான், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு, மல்லிகார்ஜுன கார்கேவுக்கு உறுதி அளித்திருந்தேன். நான் திகார் சிறையில் இருந்தபோது, சோனியா காந்தி என்னைச் சிறையில் வந்து சந்தித்ததை மறக்க முடியாது. காங்கிரஸ் கட்சி அலுவலகம் எங்களது கோயில், அடுத்த கட்ட நடவடிக்கையை அங்கு வைத்து முடிவு செய்வோம்.

எங்களின் தலைவர் சோனியா காந்திக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் என்மீது நம்பிக்கை வைத்து இதனை ஒப்படைத்தார். அப்போதிருந்து நான் தூங்கவே இல்லை. இது தனிப்பட்ட வெற்றியல்ல. சித்தராமையா உள்ளிட்ட அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.


No comments:

Post a Comment