வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிர் எடுத்த முப்பெரும் விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 5, 2023

வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிர் எடுத்த முப்பெரும் விழா!

 தந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் - அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழாக்கள்!

பெரம்பூர், மே 5- வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்தநாள், அன்னை மணியம்மையார் அவர்களின் 104ஆவது பிறந்தநாள், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133ஆவது பிறந்தநாள் ஆகியவை முப்பெரும் விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

வடசென்னை பெரம்பூர் செம்பியம் காந்தி சிலை அருகில் ஏப்ரல் மாதம் 21ஆம் நாள் மகளிரின் எழுச்சி மிக்க தெருமுனைக் கூட்டமாக இவ்விழா அரங்கேறியது. மாலை 5.30 மணியிலிருந்து தந்தை பெரியார், அன்னை மணியம் மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரைப் பற்றிய பாடல்கள் ஒலி நாடாக்கள் மூலம் தொடர்ந்து இசைக்கப்பட்டன. 

மாலை 6.30 மணி அளவில் கூட்டம் தொடங்கியது. வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிரணி தலைவர் க.சுமதி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். 

தோள் சீலை போராட்டம்

நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி - தோள் சீலை போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு, வைக்கம் போராட்டத் தின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இன்றைய காலகட்டத்தில் நமது வரலாற்றையும், அந்த வரலாற்றின் நாயகர்க ளையும் இளைய சமுதாயம் அறிய வேண்டியது மிகவும் அவசியம். 

நமது பெண்கள் ரவிக்கை மேலாடை அணிய உரிமையற்று இருந்த காலம் உண்டு. கோவிலுக்குள் நுழைய மட்டுமல்ல, கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்கக் கூட உரிமை மறுக்கப்பட்ட காலம் இருந்தது. இராஜாஜி அவர்கள் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தபோது நமது குழந்தைகள் பாதி நேரம் படிப்பும் மீதி பாதி நேரம் தங்கள் குலத் தொழிலையும் கற்க வேண்டும் என்று சட்டம் இயற்றினார். ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் இக்குலகல்வித் திட்டத்தை திரும்பப் பெறச்செய்து இராஜாஜி அவர்களைப் பதவியை விட்டு ஓடச்செய்த வரலாற்று நாயகர் தந்தை பெரியார் அவர்கள். நாம் போராடி பெற்ற உரிமைகள் தான் ரவிக்கை, மேலாடை அணிவது, அனைத்து தெருக்களிலும் அனைவரும் நடப்பது, கோவில் நுழைவு, கல்வி, வேலை வாய்ப்பு அனைத்துமே. 

வரலாற்றை மறந்தால்...

இவ்வரலாற்றை மறந்தால் மனுதர்மத்தைத் தூக்கிப் பிடிக்கும் இன்றையச் சங்கிகளின் ஆட்சி நம்மை மீண்டும் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிடும். எனவே, அடுத்த ஆண்டு வரவிருக்கும் பொதுத்தேர்தலில் இதை நினைவில் நிறுத்தி வாக்களிப்பது நமது கடமை'' என்று அறிவுறுத்தினார். 

தவிர, "மண்டைச் சுரப்பை உலகு தொழும், மனக்குகையில் சிறுத்தை எழும்" என்று தந்தை பெரியாரையும் "தந்தை பெரியாரின் உடல் நலத்தைப் பேணி பாதுகாக்கத் தன் இளமையைத் தியாகம் செய்த ஒரு பொடிப் பெண்ணை அன்னை என்றல்லாமல் வேறு என்னவென்று அழைப்பது?" என்று அன்னை மணியம்மையாரையும் பாடிய புரட்சிக் கவிஞரின் நினைவு நாளையும் நினைவு கூர்ந்தார்.

ஒப்பற்ற பெண் ஆளுமை

திராவிடர் கழக மகளிரணியின் மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, 'ஒப்பற்ற பெண் ஆளுமை அன்னை மணியம்மையார்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

தன் உரையில் 1938ஆம் ஆண்டு இதே நாளில் தமிழ்நாட்டில் கட்டாய ஹிந்தி திணிக்கப்பட்டது‌. ஹிந்தித் திணிப்பை எதிர்த்து 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு‌........' என்று பாடிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் நினைவு நாளும் இன்றுதான். ஹிந்தித் திணிப்பை கத்தியின்றி ரத்தமின்றி போராட்டம் நடத்தி வென்றவர் தந்தை பெரியார். அவர் மறைந்த போது 'இத்தோடு முடிவுக்கு வந்தது திராவிடர் கழகம்' என்று குதூகலித்த பிரிவினர் இருக்க, அவரது மறைவால் அல்லலுற்ற லட்சக்கணக்கான மக்களுக்கு "தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை அவர் போட்டுத் தந்த பாதையில் செவ்வனே செய்து முடிக்க இதோ நான் இருக் கிறேன்" என்று வந்தவர் தான் அன்னை மணியம்மையார். கட்சியின் தலைவர் மறைந்தவுடன் அவரை மறந்து கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிடும் இக்கால கட்டத்தில், கடும் மிசா கொடுமைகளையும் எதிர்த்து நின்று திராவிடர் கழகத்தை அய்ந்து ஆண்டுகள் திறம்பட வழி நடத்திய ஒப்பற்ற பெண் ஆளுமை தான் அன்னை மணியம்மையார் என்று குறிப்பிட்டார். 

கிறிஸ்தவ இஸ்லாமியர்களான சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் பரந்த உள்ளம் இருந்தவரை மூவர்ணக் கொடி 'வெள்ளை, பச்சை, சிவப்பு' என்ற வரிசையில் இருந்தது என்று 'நாங்கள் பெரும்பான்மையினர்' என்ற ஆதிக்க எண்ணம் எழுந்ததோ அன்று தான் காவி, வெள்ளை, பச்சை என்று மூவர்ணக் கொடி வரிசை மாறியது என்பது தான் தேசியக் கொடியை பற்றிய அன்னையின் உரை. 

சட்ட எரிப்புப் போராட்டம்

'ஒவ்வொருவரும் ஆடு மாடு மேய்த்தாலே இந்தியா விரைவில் தற்சார்பு அடையும்' என்று கூறும் பிற்போக்கு தலைவர்கள் இருக்க, ஆடு மாடு மேய்த்துக் கொண்டி ருந்தவர்களைப் பாடுபட்டுப் போராடி படித்து பட்டம் வாங்க வைத்த ஆளுமை கொண்ட இயக்கம் இது. ஜாதியைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவுகளைத் தந்தை பெரியாரின் கட்டளைக்கிணங்க எரித்து கைதான போது 'மன்னிப்பு கோரி னால் விடுதலை' என்று நீதிபதி உரைக்க, அதற்கு மயங்காமல் சிறை புகுந்தத் தொண்டர்களைக் கொண்ட இயக்கம். 

அத்தொண்டர்களில் இருவர் சிறையில் இறந்து விட, கலவரம் ஏற்படுமோ என்றெண்ணி அவர்களின் உடலைச் சிறைக்குள்ளேயே அதிகாரிகள் புதைத்து விட்ட போது அதை எதிர்த்து அமைதிப் போராட்டம் நடத்தி அவர்களின் உடல்களைப் பெற்று ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்து மரியாதைப் பெற்றுத் தந்தவர் அன்புள்ளம் கொண்ட அன்னையார். 

புரட்சித்தாய் அன்னை மணியம்மையார்

இன்று அறிவிக்கப்படாத அவசரநிலை நாட்டில் உள்ளது. அன்று அறிவிக்கப்பட்ட அவசரநிலையின் போது கைது செய்யப்பட்டு சிறையில் கொடுமைப்படுத்தப்பட்ட ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் அக்கொடுமைகளை அனுபவித்த பலரில் இன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னும் ஒருவர். ஒருமுறை மாதர் சங்க நிகழ்ச்சியில் பேசும் போது, படித்துவிட்டு பெண்கள் மீண்டும் அடுப்பறையில் சமைக்கத்தான் போகிறார்கள் என்றால் அவர்களுக்குக் கல்வி தேவையற்ற ஒன்று. படித்த பெண்கள் வேலைக்குச் சென்று பொருளாதாரத் தன்னிறைவு பெற வேண்டும், இதைப் பெற்றோர்கள் மறுத்தால், வீட்டைவிட்டு வெளியேறப் பெண்கள் தயங்கக் கூடாது என்று கூறிய புரட்சித் தாய் அன்னை மணியம்மையார் அவர்கள்.

இராவண லீலா

அறிஞர் அண்ணா அவர்களின் 'நீதிதேவன் மயக்கம்' நூலின் நோக்கத்தினையும்,  திராவிட அரசர்களை இராட்சஷர்களாக காட்டி, இராம லீலா என்ற பெயரில் அவர்களை எரித்து மகிழும் வடநாட்டு பழக்கத்திற்கு எதிராக இராமன், சீதை, இலக்ஷ்மணன் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்து இராவண லீலா நடத்தி ஒட்டுமொத்த இந்தியாவையும் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்க வைத்த வீரத்தாய் அன்னை மணியம்மையார் என்று எடுத்துரைத்தார். தன்னுடைய தனிப்பட்ட சொத்துகளையும் தந்தை பெரியார் தன் வாழ்வாதாரத்துக்கென அளித்த சொத்துகளையும் 'பெரியார் - மணியம்மை அறக்கட்டளை' மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளித்த புரட்சித் தாய் அன்னை மணியம் மையார் என்று அன்னைக்குப் புகழாரம் சூட்டினார்.

"சனாதனத்தின் எதிரிகள், மாபெரும் புரட்சியாளர்கள், மனிதநேய மாண்பாளர்கள் தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் - ஒரு ஒப்பீடு என்ற தலைப்பில் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறையின் மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி அவர்கள் உரையாற்றினார். தன் உரையைத் தொடங்குமுன் இரண்டு நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார் - ஒன்று - வீடு தொட்டு வெளியுலகம் வரை அனைத்து ஆண்களும் பெண்கள் அடக்க ஒடுக்கமாக வீட்டிலேயே இருக்க வேண்டும், கல்வி கற்கவோ பணி செய்யவோ வெளியே செல்லக்கூடாது என்று கூறிய காலகட்டத்தில் பெண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களாகவும் காவல்துறை அதிகாரி களாகவும் வர வேண்டும் என்று பெண்களுக்காகத் தாயுமாகி சிந்தித்த தந்தை பெரியார். 

தோளில் துண்டுடன் வாசிக்க உரிமை....

மற்றொன்று, கானாடுகாத்தானில் நாதஸ்வர மேதை சிவக்கொழுந்து அவர்களுக்கு தோளில் துண்டுடன் வாசிக்க உரிமை மறுக்கப்பட்ட போது அந்த உரிமையை தந்தை பெரியார் அவர்கள் மூலம் நிலைநாட்டிய தளபதி பட்டுக்கோட்டை அழகிரி. 

இன்று சங்பரிவார் கூட்டம் அண்ணல் அம்பேத்கரைக் கபளீகரம் செய்து அவரை இந்துத்துவ அம்பேத்கராகக் காட்ட எத்தனிக்கிறது. ஆனால் அம்பேத்கர் அவர்கள் இந்து மதத்தை இந்தியாவில் வேறு யாரும் விமர்சிக்காத அளவுக்குக் கிழிகிழியென்று கிழித்துள்ளார். தன்னுடைய 'விசாவுக்குக் காத்திருக்கிறேன்' என்ற நூலில் பணம் கொடுத்து முடி வெட் டிக்கொள்ளும் அளவுக்கு வசதி இருந்தும் முடித்திருத்தும் நிலையங்கள் அவர் ஜாதியினருக்கு முடிவெட்ட மறுத்ததால் அவர் ஓரளவுக்கு வளரும் வரை அவரது சகோதரியே அவருக்கு முடிவெட்டி விட்டதாகச் பதிவு செய்திருக்கிறார். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் கல்வி கற்று பரோடா மன்னரின் அரண்மனையில் வேலை செய்ய சென்றபோது அவருடைய ஜாதியை அறிந்து அவருக்கு வீடு தர மறுத்தனர் பார்ப்பனரும் ஆதிக்க ஜாதியினரும். தங்க இடமின்றி வேலையில் சேராமல் திரும்பினார் அண்ணல் அம்பேத்கர்.

ஜாதியைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ள அம்பேத்கர் 'அது அடையாளம் காட்டக்கூடிய உருவம் கொண்ட பொருள் அல்ல, மாறாக, மூளையில் பதிக்கப்பட்ட உருவமற்ற எண்ணம்' என்று கூறுகிறார். 

எங்களுடைய கிணறு

ஒருமுறை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் கிணறு திறக்க வேண்டும் என்று ஒரு தலைவரை சிலர் அழைத்தனர். அந்தத் தலைவரும் சென்றார். அங்கே இரண்டு பக்கமும் ஒவ்வொரு கிணறு இருந்தது, அதில் ஒன்றை அந்தத் தலைவர் திறக்க வேண்டும். இதென்ன இரண்டு கிணறு என்று கேட்டபோது, 'இது ஆதி திராவிட மக்களாகிய எங்களுடைய கிணறு' என்று பெருமையோடு குறிப்பிட்டனர். 

அப்போது அந்தத் தலைவர் சொல்கிறார்,

'நீங்கள் தண்ணீர் இன்றி நாவறண்டு சாகும் நிலை ஏற் பட்டாலும், பொது கிணற்றில் இருந்துதான் தண்ணீர் அருந்த வேண்டும்'. பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுகிறது. பாலினத்தின் அடிப்படையில் வேற்றுமை-உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுகிறது, அப்படி கற்பிக்கப்பட்டதற்குக் காரணம் கடவுள் என்றால் அந்தக் கடவுளை அழித்தே தீருவேன். அழிக்க முடியவில்லை என்றால் அதை அழிக்கும் வேலையில் என் உயிரைக் கூட கொடுப்பேன்' என்று சொன்ன அந்தத் தலைவர் புரட்சியாளர் தந்தை பெரியார்! 

இந்த வரலாற்றுக்கும் அண்ணல் அம்பேத்கருக்கும் என்ன சம்பந்தம் என்றால், இந்துத்துவ அம்பேத்கராக அவரைக் காட்சிப்படுத்த ஆர்.எஸ்.எஸ். கூட்டம் முனைந்த போது அவர் பிறந்த மகாராட்டிரா மாநிலம் கொதித்து எழவில்லை, மாறாக, அருண்ஷோரியின் புத்தகத்திற்கு மறுப்பு தெரிவித்த மாநிலம் தமிழ்நாடு - மறுப்பு எழுதிய தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர். 

அம்பேத்கரின் பெயரை வைக்க...

அம்பேத்கர் பிறந்த மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள சட்டக் கல்லூரிக்கு இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்த பிறப்பால் அனைவரும் சமம் என்று கூறிய அம்பேத்கரின் பெயரை வைக்க முடியவில்லை. அதைச் சாதித்த மாநிலமும் தமிழ்நாடு, சாதித்த தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். இன்றும் அம்பேத்கர் சட்டக்கல்லூரி தமிழ்நாட்டில் உள்ளது. இதை எல்லாம் சொல்லக் காரணம் - அம்பேத்கரை குறுகிய ஜாதி வட்டத்தில் சுருக்கி இவர் எங்களுக்கான தலைவர் என்று காட்டப் பார்ப்பவர்களும் ஆபத்தானவர்கள். அவர் பொதுவான தலைவர் அல்ல என்று காட்ட முற்படு பவர்களும் ஆபத்தானவர்கள். இந்த இரண்டு ஆபத்துக் களையும் ஒழிக்க அம்பேத்கர் அவர்கள் சனாதனத்தை எப்படி எதிர்த்தார் என்பதை அறிய வேண்டும். 

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 'இந்தியா ஒரு சமூகம் அல்ல, அது பல ஜாதிகளின் தொகுப்பு' என்றார். நம் பணத்தில் நம் உழைப்பில் நாம் கட்டிய கோவிலில் மேலே ஒருவன் அமர்ந்துக் கொண்டு நமக்கு உள்ளே செல்ல உரிமை மறுக்கும் போது நாம் சுயமரியாதை அற்று தானே இருக்கிறோம்? நமக்கு படிப்பு ஏறாது என்ற போதும் அமைதியாகக் தானே இருந்தோம்? எங்களுக்கா படிப்பு வராது என்று வெகுண் டெழுந்து அனைவருக்கும் மேலே படித்து பல முனைவர் பட்டங்களைப் பெற்றவர் அம்பேத்கர்.

 நாம் படித்து விடக்கூடாதாம்....

நாம் நல்ல பெயர் வைக்கக்கூடாது, நல்ல உடை அணியக்கூடாது, தெருவில் நடக்கக் கூடாது, கோவிலுக்குள் நுழையக்கூடாது, படிக்கக் கூடாது, இதை எல்லாம் சாமி தான் சொன்னார், கடவுள் தான் சொன்னார் என்று கூறுவதை வடநாட்டினர் இன்றும் அமைதியாக ஏற்றுக்கொள்ளக் காரணம் தந்தை பெரியாரின் கருத்துகள் இன்னும் அவர்களை முழுமையாகச் சென்றடையவில்லை. முன்பு நம்மைப் படிக்கக் கூடாது என்றவர்கள் நாம் நன்றாகப் படிக்க முற்பட்டவுடன், நீட் தேர்வு, கியூட் தேர்வு என்று அனைத்து கல்லூரிப் படிப்புகளுக்கும் தேசிய தேர்வு கொண்டு வருகிறார்கள். நாம் படித்து விடக்கூடாது என்பதில் அவர்கள் மிகவும் தெளிவாக உள்ளார்கள். 

இவை அனைத்தையும் இந்து மதத்தின் பெயரால் இந்துக் கடவுள்களின் பெயரால் செய்கிறார்கள். அண்ணல் அம்பேத் கர், "நான் கெடு வாய்ப்பாக இந்துவாகப் பிறந்து விட்டேன், ஆனால் இந்துவாகப் சாகமாட்டேன்" என்று கூறி பத்து லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களுடன் பவுத்தம் தழுவினார். "பார்ப்பனர்கள் பார்ப்பதற்குக் துறவிகள் போலிருப்பார்கள், ஆனால், இவர்கள் கபட வேடதாரிகள், நாக்கில் இராமனையும், கக்கத்தில் கொடுவாளையும் வைத்திருப்பவர்கள்" என்று சொன்னார். அவரைச் சிறிதும் வெட்கமின்றி இந்துத்துவ அம்பேத்கராகக் காட்ட முனையும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் பாஜகவும் மட்டும் ஆபத்தானவர்கள் இல்லை, சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் 'நாம் தமிழர்' உட்பட அனைவரும் ஆபத்தா னவர்கள். இதை நாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் 

மறைந்த போது...

தந்தை பெரியார் அவர்கள் மறைந்த போது 'இத்தோடு முடிவுக்கு வந்தது திராவிடர் கழகம்' என்று கனவு கண்டார்கள். ஆனால் அன்னை மணியம்மையார் அவர்கள் வந்தார்கள். அவரோடு முடிந்தது என்று கொள்கை எதிரிகள் நினைத்த போது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வந்தார். 

இன்று தந்தை பெரியாரையும் அன்னை மணியம்மை யாரையும் விட ஆசிரியர் அவர்களைப் பார்த்து அதிகமாக நடுங்குகிறது பார்ப்பனியம். பதினெட்டு ஆண்டுகள் தந்தை பெரியாரைப் பிரிந்திருந்து இராஜாஜியுடன் இணைந்து 1967 தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பேரறிஞர் அண்ணா அவர்கள் சென்று சந்தித்தது தந்தை பெரியார் அவர்களைத் தான்! இராஜாஜியை அல்ல. அரசாங்கத்தில் எந்தப் பதவியும் வகிக்காத தந்தை பெரியார் அவர்கள் மறைந்த போது அவரை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருமுன்னே "எங்களை வழிநடத்துவது பெரியார் திடலும், ஆசிரியர் அவர்களுமே" என்று அறி வித்தவர் இன்றைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.

சிறப்பான 'திராவிட மாடல்' ஆட்சி

சிறப்பான 'திராவிட மாடல்' ஆட்சியைத் தருவதும் அல்லாமல் தந்தை பெரியாரின் பிறந்தநாளை 'சமூகநீதி நாள்' எனவும் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை 'சமத்துவ நாள்' எனவும் அறிவித்ததோடல்லாமல் எந்தக் கூட்டம் இத்தலைவர்களைச் சாடியதோ அவர்களையும் 'சமூகநீதி நாள்', 'சமத்துவ நாள்' உறுதிமொழிகளை ஆண்டுதோறும் எடுக்க வைக்கிறார்! அடுத்து வரவிருக்கும் 2024 பொதுத்தேர்தல் நமக்கு 'வாழ்வா சாவா' என்பதை இறுதி செய்யும் தேர்தல். இதில் 'இந்துக்களே ஒன்று சேருங்கள்' என்று நம்மை மயக்க வரும் சங்கிகளைப் பார்த்து "ஒன்று சேருகிறோம், எங்கள் கல்விக்கும் வேலை வாய்ப்புக்கும் எங்களோடு சேர்ந்து போராட வருகிறீர்களா" என்று கேளுங்கள். சிந்தித்து கருப்பு சிவப்புக்கும், தோழமை கட்சிகளுக்கும் பெருமளவில் ஆதரவு தாருங்கள் என்று எடுத்துரைத்து தன் உரையை முடிவு செய்தார்.

நிகழ்ச்சிக்குச் சிறப்பான இணைப்புரை வழங்கிய சென்னை மண்டல திராவிட மகளிர் பாசறையின் செயலாளர் த.மரகதமணி அனைவருக்கும் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.

நிகழ்ச்சி நடைபெற்ற முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதிக்கு அன்று மாலை வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திரும்பிச் செல்கையில் நிகழ்ச்சி நடைபெற்ற காந்தி சிலையருகில் கருப்புடை அணிந்த கழகத் தோழர்கள் அனைவரும் வரிசையாக நின்று கையசைத்து முதலமைச்சருக்கு மரியாதை செய்தோம். கழகத் தோழர் புரசை சு.அன்புச்செல்வன்  அன்றைய 'விடுதலை' நாளிதழை முதலமைச்சருக்கு அளித்து மகிழ்ந்தார்.

பங்கேற்றோர் 

சு.வெங்கடேசன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), பிரின்ஸ் என்னாரசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), தே.செ.கோபால் (சென்னை மண்டல தலைவர்), இறைவி இறையன் (சென்னை மண்டல செயலாளர், கழக மகளிரணி), வெ.மு.மோகன் (வடசென்னை மாவட்ட தலைவர்), தி.செ.கணேசன் (வடசென்னை மாவட்ட செயலாளர்), பசும்பொன் செந்தில்குமாரி (இயக்குநர், பெரியார் சுயமரியாதை திருமண நிலையம்), கி.இராமலிங்கம், நா.பார்த்திபன்,  வை.கலையரசன், தங்க.தனலட்சுமி, பா.கோபாலகிருஷ்ணன், கோ.தங்கமணி, முத்தழகு, உடுமலை வடிவேல், சத்தீஷ், தொண்டறம், வெண்ணிலா, சசிமேகலா, மற்றும் பலர் வந்திருந்தனர். ஏராளமான பொதுமக்களும் வணிகப் பெருமக்களும் சுற்றி நின்று அனைவரின் பேச்சுகளையும் ஊன்றி கவனித்து உற்சாகம் அளித்தனர். இருவர் நன்கொடையாக ரூ.300/- அளித்து மகிழ்ந்தனர்.


No comments:

Post a Comment