திராவிடர் தொன்மையை மீட்ட ஆட்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 9, 2023

திராவிடர் தொன்மையை மீட்ட ஆட்சி!

தமிழர்களின் தொன்மையை போற்றும் கீழடி உள்ளிட்ட பழம்பெரும் பாரம்பரியத்தை கட்டிக் காப்பதில் முதன்மையான அரசாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

 உலகின் தொன்மை இனமான தமிழ் மக்களுக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. வளர்ச்சி அடைந்த சமூகமாக நாம் தற்போது பயன்படுத்தும் அனைத்தையும் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து, அதைப் பயன்படுத்தி இருக்கிறது இந்த மண். அதற்கு கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை போன்ற பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களே சான்று. இவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தி.மு.க. அரசு உறுதியாக இருந்து வருகிறது. அதற்கு உதாரணமாக கீழடி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் செயல்பாடுகளை சுட்டிக் காட்டலாம். இதன் தொடக்கப் புள்ளி என்பது 2016இல் முத்தமிழறிஞர் கலைஞர் வெளியிட்ட அறிக்கை.

கீழடி அகழாய்வை ஒன்றிய அரசு பாதியிலேயே கைவிட்ட போது, தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார். "வைகைக் கரையில் கீழடி கிராமத்தில் நடந்த அகழாய்வில் அழிந்து போன ஒரு பெரிய நகரம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிந்து சமவெளி நாகரிகத்தைப் போல் இங்கும் ஒரு நகர்ப்புற நாகரிகம் இருந்ததற்கான தடயங்கள் ஏராளமாக கிடைத்துள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கீழடியில் நடந்தது தான் மிகச் சிறப்பானது. புதிய தமிழ் சொற்களும் இங்கு தான் கிடைத்துள்ளன. கீழடியில் கிடைத்த அரிய பொருட்களைப் பாதுகாத்து வைக்க அருங்காட்சியகம் ஒன்றை  மைசூரில் உருவாக்க ஒன்றிய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.

அதற்கு அரசு நிலம் கொடுத்து பெரும் தொல் பொருட்களை மைசூருக்கு கொண்டு சென்று கிடப்பில் போட்டு வைக்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹரப்பாவை ஒத்த தமிழர் நாகரிகத்தின் கீழடி சான்றுகளை உடனடியாக காப்பாற்றவும், பாதுகாக்கவும் தவறினால் அவை முடங்கிப் போகும் பேராபத்து உருவாகும். தமிழர் நாகரிகத்தின் வரலாற்றுக் கடமையை செம்மையாக ஆற்றிட வேண்டும்" என்று முத்தமிழறிஞர் குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக பல்வேறு  கட்சித் தலைவர்களும் கீழடிக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தனர். கீழடி விஷயத்தில் கடந்த ஆட்சியில் டில்லியின் பேச்சைக்கேட்டு அவர்களின் மனதைக் குளிர்விக்க, கீழடி அகழாய்வு அப்படியே கிடப்பில் போடப்பட்டது மட்டுமல்லாமல் அதைப் பாரத கலாச்சாரம் என்று அழைக்கவேண்டும் என்றும் அங்குள்ள பொருட்களை எல்லாம் வட இந்தியாவிற்குக் கொண்டு செல்லவும் ஆணை வெளியிட்டார்கள். மேலும் ஆய்வறிக்கையை வெளியிடாமலும் மறைத்துவைத்தனர். 

கீழடி அகழாய்வை தலைமை ஏற்று வெற்றிகரமாக நடத்திய இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் வட இந்தியாவிற்கு மாற்றப்பட்டார். தமிழர் தொன்மை மீண்டும் உயிர் பெற்றுவிடக் கூடாது எனக் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்தனர். இதற்குத் தமிழ்நாட்டில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அடுத்தகட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்காமல் அப்படியே கிடப்பில் போட்டனர். நிதி இல்லை என்று கைவிரித்தனர். இவ்வாறு நமது தொன்மையை வெளிக்கொண்டு வரும் முயற்சிக்கு தொடர் முட்டுக்கட்டைகள் விழுந்தன. இந்தச் சூழலில் தான் 2021 சட்டமன்றத் தேர்தல் வந்தது. 

திமுக தனது தேர்தல் அறிக்கையில், பழம்பெரும் பாரம் பரியத்தின் அடையாளமாகத் திகழும் அரிய பொருட்களைப் பாதுகாக்க அந்தந்தப் பகுதிகளில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். மைசூருவில் உள்ள இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகளை தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவற்றை உரிய முறையில் பதிப் பிக்கவும், பாதுகாக்கவும் வசதிகள் செய்யப்படும் என்று அறிவித்தது; ஆட்சிக்கு வந்ததும் கீழடிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அடுத்தகட்ட அகழாய்வுப் பணிகளுக்கு அச்சாரம் போட்டார். 

கீழடியில் (சிவகங்கை) 8ஆவது கட்டம், சிவகளையில் (தூத்துக்குடி) 3ஆம் கட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் (அரியலூர்) 2ஆம் கட்டம், மயிலாடும்பாறையில் (கிருஷ்ணகிரி) 2ஆம் கட்டம், வெம்பக்கோட்டையில் (விருதுநகர்) முதல் கட்டம், துலுக்கர்பட்டியில் (திருநெல்வேலி) முதல் கட்டம், பெரும்பாலையில் (தருமபுரி) முதல் கட்டம் என 7 இடங்களில் அகழாய்வுகள் தொடங்கி வைக்கப்பட்டன. இவை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, அள்ள அள்ளக் குறையாத சுரபி போல கீழடி அகழாய்வில் பொருட்கள் கிடைத்துக் கொண்டே இருந்தன. இவற்றைப் பத்திரப்படுத்தி தற்கால சமூகம் கண்டு வியக்கும் வகையில் அருங்காட்சியகக் கட்டுமானப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கொந்தகையில் செட்டிநாடு கலை நயத்துடன் கீழடி அகழாய்வு தளத்தின் அருகில் வேலைகள் நடைபெற்றன. இதற்காக தொல்லியல் துறை மூலம் 18.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த மார்ச் 6, 2023இல் சிறப்புமிக்க கீழடி அருங்காட்சியகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 6 காட்சிக் கூடங்களில் பழங்கால மனிதர்களின் வாழ்வியலை விளக்கும் ஓவியங்கள், வைகைக் கரையில் வாழ்ந்த மக்களின் வேளாண்மை, நீர் மேலாண்மை குறித்த தொல்பொருட்கள், பழங்கால தமிழ் சமூகத்தின் எழுத்தறிவு, கடல் வணிகம் செய்ததற்கான சான்றுகள், கலை சார்ந்த தொல்பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று வெளிநாட்டுத் தொல்லியல் நிபுணர்கள், தமிழ்நாட்டில் அய்ராவதம் மகாதேவன் போன்றவர்கள் உறுதிப்படுத்திய நிலையில், அதை ஆரிய நாகரிகம் என்று உருமாற்ற, அங்குக் கண்டுபிடிக்கப்பட்ட திராவிடர்களின் காளை உருவத்தை ஆரியர்களின் குதிரையாக மார்பிங் செய்தது ஒன்றியத்தில் இருந்த பிஜேபி ஆட்சி - அதன் துறையைச் சார்ந்த முரளி மனோகர் ஜோஷி. 

வாராது வந்த மாமணியாம் திமுக ஆட்சி - மானமிகு மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நம் இனத்தின் பண்பாடு  மீட்கப்பட்டதானது, ஈராண்டு சாதனையின் மணி மகுடமாகும்.

No comments:

Post a Comment