ஆளுநர் கூற்றுக்கு டி.ஜி.பி. மறுப்பு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டதே! அவதூறுகள் திராவிட வயலுக்கு உரமாகும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 6, 2023

ஆளுநர் கூற்றுக்கு டி.ஜி.பி. மறுப்பு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டதே! அவதூறுகள் திராவிட வயலுக்கு உரமாகும்!

* ஆளுநராக ரவி வந்தது முதல் தி.மு.க. ஆட்சியின்மீது 'அவதூறுக் குப்பைகளை' அவ்வப்போது அள்ளி வீசுகிறார்!

* சிதம்பரத்தில் தீட்சிதர்கள் மத்தியில் குழந்தைத் திருமணம்- அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலிருந்தே வழக்குகள் உண்டே!

ஆளுநராக ரவி வந்தது முதல் தி.மு.க. ஆட்சியின்மீது 'அவதூறுக் குப்பைகளை' அவ்வப் போது அள்ளி வீசுகிறார்;  சிதம்பரத்தில் தீட்சிதர்கள் மத்தியில் குழந்தைத் திருமணம்- அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலிருந்தே வழக்குகள் உண்டே! ஆளுநர் கூற்றுக்கு டி.ஜி.பி. மறுப்பு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டதே! அவதூறுகள் திராவிட வயலுக்கு உரமாகும் என்று   திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளைப் பின்பற்றாது, அவரது பணியை அதனடிப்படையில் செய்யாமல், மாநில அரசிற்கு எதிரான குற்றச்சாற்றுகளை பகிரங்கப் பேட்டி என்ற பெயரால் கூறுவதன்மூலம் தம்மை ஒரு சார்பானவர் - அரசியல் காழ்ப்புணர்வுடன் ‘திராவிட மாடல்' ஆட்சிமீது நாளும் வெறுப்பையும், எதிர்ப்பையும் திட்டமிட்டே பதிவு செய்து வருகிறார் என்பது நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் புலனாகிறது!

அவர் ஆங்கில நாளேடான ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா'விற்கு அளித்துள்ள ஒரு பக்க விரிவான பேட்டியில், உண்மைக்கு மாறான பல தகவல்களைக் கூறியுள்ளார் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இதோ:

அவர் சிதம்பரம் தீட்சிதர்களிடையே நிலவும் குழந்தை மணக் குற்றங்களை மறைத்து, அவர்களுக்காகக் கசிந்துருகிக் கண்ணீர் விடுகிறார்!

குழந்தைத் திருமணம் என்பது 

சமூக விரோத செயல் இல்லையா?

தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்' ஆட்சிக்கு அவப் பெயர் ஏற்படும்படி கூறிய குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்பதை விளக்க நாம் கடமைப் பட்டுள்ளோம்.

குழந்தைத் திருமணம் (Child Marriage) என்பது எவ்வளவு பெரிய சமூக விரோத - சட்ட விரோதச் செயல் என்பதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப் படாமல், தில்லை தீட்சிதர்களின் குற்றங்களை மறைத்து, எதுவுமே நடக்காததுபோல்,  அபாண்டமாக அவர்கள்மீது வீண்பழி போட்டதுபோல கூறுகிறார்!

அவரது பேட்டியின் ஒரு பகுதியில்,

‘‘இந்த (மாநில) அரசாங்கமானது, கோவில்களை வெகுசிறப்பாக நிர்வகிப்பதாக நான் (ஆளுநர்) பாராட்ட வேண்டுமென விரும்புகிறது; ஆக்கிர மிப்பு செய்யப்பட்ட 3000 ஏக்கருக்கும் அதிகமான கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்கப் பட்டுள்ளன. இது நல்லதுதான். ஆனால், 30,000 ஏக்கருக்கு மேலான கோவில் நிலங்கள் மீட்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. மீட்கப்பட்ட நிலப்பரப்பு மிகக் குறைவு.

2020 ஆம் ஆண்டில் பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டது ஏன்?

2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தை எடுத்துக் கொள்வோம். இந்தக் கோவில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் வராது. அரசின் சமூகநலத்துறையின் அதிகாரிகள், பழிவாங்கிடும் நோக்கத்தில், கோவில் பொது தீட்சிதர்களின் குடும்பங்களில் குழந்தைத் திருமணங்கள் நடை பெற்றதாக எட்டுப் புகார்களைப் பதிவு செய்துள்ளனர். வயதுக்கு வராத குழந்தைகளுக்குத் திருமணம் செய்வதாகக் குற்றச்சாட்டு. ஆனால், உண்மையில் அப்படிப்பட்ட குழந்தைத் திருமணங்கள் நடைபெறவில்லை. குழந்தைத் திருமணம் செய்வித்ததாகப் பெற்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள் வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ‘இரண்டு விரல் பரிசோதனையான' கன்னித்தன்மை குறித்து பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். அந்தப் பெண் பிள்ளைகளில் சிலர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளனர். இதுகுறித்து முதலமைச்சருக்கு நான் கடிதம் எழுதினேன்.

இப்படிப்பட்ட நிகழ்வுகள் பின்னணியாக உள்ள நிலையில், நான் இந்த அரசாங்கத்தைப் பாராட்ட வேண்டுமோ? இது அளவுக்கு அதிகமாக இல்லையா?'' என்று ஆளுநர் பேட்டி கொடுத் துள்ளார்.

இதுபற்றி நாம் திரட்டிய தகவல்களைத் தருகிறோம். வாசகர்கள் பார்வைக்கும், உரிய முடிவுக்கும் வருவார் களாக!

சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார்கள்!

சிதம்பரம் தீட்சிதர்களிடையே நடைபெற்ற குழந் தைத் திருமணங்கள்பற்றி 2022 இல் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுப் பதிவாகி இருக்கிறது.

இதுபோன்ற புகார்கள் தி.மு.க. ஆட்சியில்தான் எழுந்தது என்பதல்ல; அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். ஆட்சியின் போதும் எழுந்துள்ளது.

சிதம்பரம் காவல் நிலையம் Crime No.506/22

அனைத்து மகளிர் காவல் நிலையம் சிதம்பரம் Crime Nos.14/22, 15/22, 17/22

தீட்சிதர் சமுதாயத்தில் 415 பேர் இருக்கிறார்கள். அந்தச் சமுதாயத்தில் பிறந்த பெண்களைத் திருமணம் செய்பவர்கள் மட்டுமே சிதம்பரம் நடராசர் கோவிலின் அறங்காவலராகவும், அர்ச்சகராகவும் உரிமை பெறு கிறார்கள். மற்றவர்கள் பூஜை செய்ய முடியாது. ‘ஸ்மார்த்த பிராமணர்'களைக்கூட திருமணம் செய்யக் கூடாது. வேறு எந்தப் பிராமணப் பிரிவைச் சார்ந்த பெண்களைத் திருமணம் செய்தாலும், கோவிலில் பூஜை செய்யும் உரிமை பறிக்கப்படும்.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும் 

வழக்குப் போடவில்லையா?

குழந்தைத் திருமணம் பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. 2014 உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, அப்போது நடைபெற்ற ஒரு குழந்தைத் திருமணத்தின்மீது அன்றைய (அ.தி.மு.க.) அமைச்சர் வி.வி.சாமிநாதன் அவர்கள் வழக்குத் தொடுத்தார். வழக்கின் நிலை  என்ன வென்று தெரியவில்லை. அதோடு க்ளோஸ் ஆகி விட்டது. பிறகும் குழந்தைத் திருமணங்கள் நடை பெற்றன; ஆனால், வெளியில் தெரியாமல் இருந்தது.

2021 ஆம் ஆண்டு 16 குழந்தைகளுக்குத் திரு மணங்கள் நடைபெற்றன. எல்லா பெண்களுக்கும் வயது 18-க்குகீழ். திருமணம் சிவராம ஸ்திரி கோவிலில் நடைபெற்றது. நேரம் காலை 3 மணிமுதல் 4 மணிக்குள். நடைபெற்ற 16 திருமணங்களில் நான்கு திருமணங்கள்மீது மட்டும் வழக்குப் போடப்பட்டது. திருமணம் நடை பெற்றதற்கான ஆதாரங்கள் காவல்துறையிடம் ஒளிப் படங்களாகவும், காணொலி காட்சியாகவும் இருக்கின்றன. காவல்துறையினர் விசாரித்தார்கள்; ஏற்பாடு செய்தவர் கோவிலின் செயலாளர் சிவராம தீட்சிதர். அவருடன் சேர்ந்து நடராஜ தீட்சிதர், ராஜா செல்லம் தீட்சிதர்.

இவர்கள்தான் நன்கொடை வசூலித்துத் திருமணத்தை நடத்தியவர்கள். மேலும் நடைபெற்ற 12 திருமணங்கள்மீது வழக்குப் பதியாமல் இருக்கிறது. பெற்றோர் மற்றும் 50 பேர் சேர்ந்து வந்து திருமணமே நடக்கவில்லை என்று நீதிமன்றத்தில் பெட்டிஷன் அளித்தனர்.

சிதம்பரத்தில் தொடர்ந்து 

குழந்தைத் திருமண வழக்குகள்

அப்பெட்டிஷனை நீதிமன்றம் நிராகரித்தது. முதல் தகவல் அறிக்கை இல்லை. பயந்துகொண்டார்கள். சென்ற ஆண்டு செயலாளராக இருந்த ஹேமசபேச தீட்சிதர், அவருடைய பெண்ணுக்கும் - வெங்கடேச தீட்சிதர் மகனுக்கும் குழந்தைத் திருமணம் நடைபெற்றது.  இருவரும் கைது செய்யப்பட்டனர். சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் குழந்தைத் திருமணம் தொடர்பாக கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தலா ஒரு வழக்கும், அக்டோபர் மாதம் இரண்டு வழக்குகளும், மொத்தம் நான்கு வழக்குகள் தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தீட்சிதர்கள் மறியல் செய்தனர். அதன்பிறகு எட்டு மாதங்களாகக் கைது நடவடிக்கை இல்லை. இப்போது திடீரென்று அறிக்கை வந்திருக்கிறது. குழந்தைத் திருமணம் நடைபெற்று இருக்கிறது.

குழந்தைத் திருமணம் செய்துகொண்டவர்கள் பூஜைகள் செய்துகொண்டிருக்கிறார்கள். திருமணமே நடக்கவில்லை; எங்களுக்குள் நடந்த ‘‘நிகழ்வு'' என் கிறார்கள். ‘‘நிகழ்வு'' என்றால், பூஜைகள் செய்ய முடியாது. பூஜையில் இருப்பதுபோல, காணொலி காட்சிகள் இருக்கின்றன. 2014-2015 இல் சொர்ண சபேஷ தீட்சிதர் மனைவி திருமணத்திற்குப் பிறகு வேறு ஒருவருடன் ஓடிப் போய்விட்டதால், அவருக்குக் கொடியேற்ற உரிமை பறிக்கப்பட்டது என்பது தொடர்பான வழக்கு சிதம்பரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இங்கு திருமணம் செய்தால்தான் பூஜை செய்ய முடியும். எண்ணற்ற வழக்குகள் இருக்கின்றன.

உண்மை நிலை இப்படி இருக்கையில், ஆளுநர் பேட்டியில் ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

ஆளுநர் கூற்றுக்கு டி.ஜி.பி. மறுப்பு

சிலர் தற்கொலைக்கும் முயற்சி செய்ததாக ஆளுநர் ஒரு விறுவிறுப்பு புதினமே எழுதுவதுபோல பேட்டியில் கூறியுள்ளாரே, அதுபற்றி தமிழ்நாடு அரசின் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சைலேந்திர பாபு, அப்படி ஏதும் நடைபெறவே இல்லை என்று அறிக்கையே (டிஜிபி அறிக்கையை தனியே காண்க) தந்துள்ளாரே -  அதற்கு தமிழ்நாடு ஆளுநர் என்ன விளக்கம் கூறப் போகிறார்?

தமிழ்நாடு அரசின்மீது சேற்றை வாரி இறைக்கும் உள்நோக்கத்துடனே இப்படி தமிழ்நாட்டுக் காவல்துறை மீதும், பொய்யான குற்றச்சாட்டை ஆளுநர் கூறியுள்ளார் என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரே கூறியது கண்டு, ஆளுநர் ரவி வெட்கித் தலைகுனிந்து, தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வரவேண்டாமா? வேறு எந்த மாநிலத்திலாவது இப்படி அரசியல் அவலமான நிலை ஆளுநர்களால் ஏற்பட்டுள்ளதா?

இந்தப்படி, ‘ ‘பொய் நெல்லைக் குத்தி பொங்கலிடத்'' திட்டமிட்டு தி.மு.க.வின் ‘திராவிட மாடல்' ஆட்சிக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார் ஆளுநர் ரவி. அந்த சிதம்பரம் கோவில் தீட்சிதர்களின் மனிதாபி மானமற்ற குழந்தைத் திருமண நடப்புகளை, ஓர் ஆளுநர், முழுப் பூசணியை சோற்றில் மறைப்பதுபோல, மூடி மறைத்து, தீட்சிதர்களுக்காக வாதாடுவதும், அவர்களும், இவருக்கு உடனே நன்றி தெரிவிப்பதும் பொது நிலையில் உள்ள ஓர் ஆளுநருடைய ஆளுமை யின் நம்பகத்தன்மையைக் கேள்விக் குறியாக்குவதாக இல்லையா?

ஆளுநராக வந்ததுமுதல் தொடர்ந்து 

ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகள்

அவர் தமிழ்நாட்டிற்கு வந்து பொறுப்பேற்றதுமுதல் இன்றுவரை இவ்வாட்சியின் கொள்கை இலட்சியங்கள் இவற்றிற்கு எதிராகத்தானே நாளும் ‘போட்டி அரசு' நடத்துவதுபோல நடத்தி வருகிறார் என்பதற்கு அவரது பேச்சுகளும், நடவடிக்கைகளுமே ஆதாரமாக ஏராள மாக உள்ளனவே!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. ஆட்சிக்கு எதிராக, சில ஊடகங்களின் விளம்பர வெளிச்சத்தையும், சில ‘மடிகன' அரசியல்வாதிகளின் மண்டியிடலையும் நம்பி, இப்படி உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பினால், தமிழ்நாடு காவி மயமாகிவிடும் என்று கனவு காணவேண்டாம்!

எதிர்நீச்சலில் வெற்றி பெற்று பீடுநடை போடுவதுதான் திராவிடம்! அது ஆயிரங்காலத்துப் பயிர்; அசைத்துப் பார்க்கத் துடிப்பதா? ஆயிரம் விழுதுகள் கொண்ட அசையாத ஆணிவேர்கள் கொண்ட ஆலமரம் அது.

காலாவதி ஆவது எது?

வரலாறு என்றும் காலாவதி ஆவதில்லை; கவர்னர் பதவிகள்தான் கால நிர்ணயத்திற்குட்பட்டவைகள் என்ற அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும்!

ஆளுநர் ரவி போன்றவர்கள் வீசும் குப்பைகளும், கூளங்களும், அழுகியவைகளும் - நமது திராவிட வயலின் பயிருக்கான செழுமையான உரங்கள் என்பதை நினைவில் நிறுத்திட, வரலாறு உணர்த்துகிறது.

பாடம் கற்கத் தவறினால் காலமும், திராவிடமும் அவர்களுக்கு உணர்த்தும்.

திராவிடர் இயக்கத்திற்குக் குழிதோண்ட முயற்சித்த வர்களை குழியே மூடியிருக்கிறது! வரலாறு மீட் டெடுத்ததே இல்லை!

(தேவைப்பட்டால் தொடருவோம்!)

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

6.5.2023

No comments:

Post a Comment