அன்னை நாகம்மையாரை எப்படி வார்த்தெடுத்தார் பெரியார்! போராட்டக் களங்களில் பெரியார் சிறைக்குச் சென்ற பின் அதனைத் தொடர்ந்து நடத்தி வெற்றி கண்டவர் நாகம்மையார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 11, 2023

அன்னை நாகம்மையாரை எப்படி வார்த்தெடுத்தார் பெரியார்! போராட்டக் களங்களில் பெரியார் சிறைக்குச் சென்ற பின் அதனைத் தொடர்ந்து நடத்தி வெற்றி கண்டவர் நாகம்மையார்!

பாலியல் கொடுமை - பகட்டு மோகங்களிலிருந்து பெண்களை மீட்க நாகம்மையார் பாடமாகட்டும்!

அவரைப் பின்பற்றி வீறுநடை போட வாரீர், மகளிரே!

 அன்னை நாகம்மையாரின் 90 ஆம் ஆண்டு நினைவு நாளாகிய இன்று (11.5.2023), அவர் ஆற்றிய பணிகள், கண்ட களங்களை நினைவுகூர்ந்து தொண்டாற்ற முன்வரவேண்டும் பெண்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

இன்று (11.5.2023) அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையாரின் 90 ஆம் ஆண்டு நினைவு நாள்!

அன்னை நாகம்மையாரை எப்படிப் பக்குவப்படுத்தினார் பெரியார்?

அன்னை நாகம்மையார் போன்ற ஒரு பெண்ணுரி மைப் போராளியை திராவிடம் தந்து, வரலாறு படைத்தது!

அன்னை நாகம்மையாரை, தந்தை பெரியார் எப்படியெல்லாம் கொள்கைவயப்படுத்திப் போராளியாக, கள்ளுக்கடை மறியல் வீராங்கனையாக உருவாக்கினார் என்பதற்கு, வைக்கத்தில் மனித உரிமைப் போரில் தந்தை பெரியார் கைதான பின், தனது தலைமையில், கேரளப் பெண்களையும் திரட்டி அவர் களம் கண்ட காட்சியே சாட்சியாகும்!

ஈரோட்டு இல்லமான தந்தை பெரியாரது கொள்கைப் பாசறையில், அவரது தலைமையில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கும், ‘திக்கற்ற' எத்தனையோ இளம் கைம்பெண்களுக்கு மறுமண சுயமரியாதைத் திரு மணங்களும் நடைபெற்று, புதுவாழ்வு பெற்று புத்தாக்கம் பெற்றனர் - இது அக்காலப் பழைமைகளின் தோலை உரித்தது. சனாதனத்தை சந்தி சிரிக்க வைத்தது!

அடுப்பூதும் பெண்களை மனித உரிமைப் போராளி களாக ஆக்கும் பட்டறையாகவே அவர் தம் ஈரோட்டுப் பாசறை விளங்கியது - அந்நாளில், அன்னையார் தலைமையில்!

நாகம்மையாரைப்பற்றி காந்தியார்!

‘‘கள்ளுக்கடை மறியலை எப்போது நிறுத்தப் போகி றீர்கள்'' என்று அன்றைய பிரபல காங்கிரஸ் தலைவர்கள் அண்ணல் காந்தியாரைப் பார்த்துக் கேட்கின்றனர் (1922).

‘‘அது என் கையில் இல்லை; திராவிட தேசமான தென்னாட்டில் ஈரோட்டில் உள்ள இரண்டு பெண் மணிகள் முடிவில் இருக்கிறது'' என்று அன்னை நாகம் மையாரையும், அய்யா பெரியாரின் தங்கை எஸ்.ஆர்.கண்ணம்மாளையும் மனதில் நிறுத்திய, காந்தியார் களின் கூற்று அந்நாளில்; அவர் நடத்திய ஏடுகளில் பதிவாகி உள்ளது!

தமது துணைவர்பற்றி நாகம்மையாரின் உருக்கமான அறிக்கை!

தந்தை பெரியார் கேரள  வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு, இரண்டு முறை சிறை சென்று விடுதலை யானபின், ஈரோடு வருவதற்குள் அன்றைய பிரிட்டிஷ் அரசு அவரை முந்தைய பேச்சு ஒன்றிற்காக ராஜத் துரோக - தேச விரோத வழக்கு - இ.பி.கோ.124-ஏ இன்படி பதிந்து கைது செய்ய ஆயத்தமான நிலையில், அந்நாளைய ‘நவசக்தி' - காங்கிரஸ் ஏட்டில் அன்னை நாகம்மையார் அவர்கள், 

‘‘என் கணவர் ஈ.வி.இராமசாமி நாயக்கர் இம்மாதம் முதல் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆனார். 1924, செப்டம்பர் 11 ஆம் தேதி,  காலை 10 மணிக்கு மறுபடியும் இராஜத் துரோகக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இரண்டு வருஷத்திற்குக் குறைவில்லாத காலம் தண்டனை கிடைக்கக் கூடிய பாக்கியம் தமக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்லி, என்னிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டார்!

அவர் திரும்பத் திரும்ப தேச ஊழியத்தின் பொருட்டு சிறைக்குப் போகும் பாக்கியம் பெறவேண்டும் என்றும், அதற்காக அவருக்கு ஆயுள் வளரவேண்டும் என்றும் கடவுளையும், மகாத்மா காந்தியையும் பிரார்த்திக்கிறேன்.

அவர் பாக்கியில் வைத்துவிட்டுப் போனதாக நினைத்துக் கொண்டு போகிற வைக்கம் சத்தியாகிரக விஷயத்தில் வேண்டிய முயற்சிகள் எடுத்து, அதைச் சரிவர அகிம்சா தர்மத்துடன் நடத்தி, அனுகூலமான முடிவிற்குக் கொண்டு வர வேண்டுமாய் என் கணவரிடம் அபிமானமும், அன்பும் உள்ள தலைவர்களையும், தொண்டர் களையும் பக்தியோடு பிரார்த்தித்துக் கொள் கிறேன்.''

‘நவசக்தி', 12, செப்டம்பர் 1924

ஈரோட்டுக் குருகுலத்தில் 

முதல் தாயாக இருந்தவர்

என்னே வீரமும், மனத்திண்மையும், கொள்கை வைரமும் பாய்ந்த நெஞ்சுரத்தாய்!

அன்றைய ஈரோட்டுக் குருகுலத்தில் முதல் தாயாக அவரால் வளர்க்கப்பட்ட எண்ணற்ற சுயமரியாதை இயக்கத்தவர்களின் தனி ஒரு பட்டாளமே உண்டு!

அவர்கள் எல்லாம் அன்னை நாகம்மையார் பெறாத பிள்ளைகள்; பெறற்கரிய பிள்ளைகளும்கூட!

ஈரோடு என்ற சுயமரியாதை இயக்கப் பேரேடு காட்டும் காலக் கணக்கு அது!

அப்படிப்பட்ட கொள்கை வீரத் தாயின் நினைவுகள் நமது மகளிரிடையே நிலைத்து - ஏராளமான நாகம்மை யார்களையும், பழிக்கஞ்சா பதப்பட்ட பண்புடை மணியம்மையார்களையும் ‘‘இந்தக் கொள்கைப் பாசறைக்குத் தருபவர்களாக'' உழையுங்கள் மகளிர் தோழர்களே!

அவர்களால் நடத்தப்பட்ட அந்த சுயமரியாதைக் கொள்கைப் பண்ணையத்தை மீண்டும் புதுப்பித்து, அந்த நாளும் இதோ வந்து களமாடுகிறது என்று காட்ட, உழைக்க, சூளுரை ஏற்க வாரீர், சுயமரியாதை வீரர்களே!

அன்னை நாகம்மையார் வெறும் படமல்ல!

பாலியல் கொடுமைகளும், பகட்டு மோகங்களும் மகளிரைப் பலி கொள்ளவிடாமல் தடுப்புச் சேனைகளாக ஆக்கிக் கொள்ள இந்த வரலாற்றுச் சுவட்டில் நடைபோட கற்றுக் கொள்ளுங்கள் மகளிர் தோழர்களே!

எனவே, அன்னை நாகம்மையார் ஒரு வெறும் படம் அல்ல; கொள்கைப் பாடம் - லட்சிய விளக்கு - நம் எல்லோருக்கும்! 

ஏந்தி பீடுநடை போட முன்வாருங்கள், மகளிர் தோழர்களே!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

11.5.2023

No comments:

Post a Comment